Vrihannala! | Virata Parva - Section 11 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 11)
இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : அலியின் வடிவத்தில் விராடனிடம் சென்ற அர்ஜுனன்; தோற்றத்தைக் கண்டு சந்தேகித்த விராடன், பெண்களைக் கொண்டு பிருஹந்நளை என்ற அர்ஜுனனைச் சோதித்தது; பின்பு அந்தப்புரத்திற்குள் அனுமதிப்பது; உத்தரைக்கும், அவளது தோழிகளுக்கும் பிருஹந்நளை நர்த்தனம் பயிற்றுவிப்பது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அடுத்ததாக, மிகப் பெரிய உருவம் கொண்டவனும், பெண்களின் ஆபரணங்களையும், பெரிய காது வளையங்களையும், தங்கத்தால் தீட்டப்பட்ட அழகான சங்கு கடகங்களையும் {#} அணிந்தவனுமான மற்றொருவன் மதில்சுவர்களின் வாயிலில் தோன்றினான். கழுத்தில் மிதக்கும் நீண்ட அபரிமிதமான முடியுடன் அந்தப் பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவன் நடந்த நடை யானையின் நடையைப் போன்று இருந்தது. தனது நடையால் பூமியைக் குலுக்கிய வண்ணம் விராடனை அணுகிய அவன் {அர்ஜுனன்}, அவனின் {விராடனின்} சபையில் நின்றான்.
தனது உண்மை உருவை மறைத்து, வேடம் தரித்து வந்த அந்த எதிரிகளை வதைப்பவன் {அர்ஜுனன்}, சபா மண்டபத்தில் நுழைந்து, அந்த ஏகாதிபதியை {விராடனை} அணுகிய போது, பெரும் காந்தியும், யானை நடையும் கொண்ட அந்தப் பெரும் இந்திரனின் மகனைக் {அர்ஜுனனைக்} கண்ட மன்னன் {விராடன்} தனது சபை உறுப்பினர்களிடம், “இந்த மனிதன் எங்கிருந்து வருகிறான்? இவனைக் குறித்து நான் இதற்குமுன் கேள்விப்பட்டதில்லையே" என்று கேட்டான்.
அங்கிருந்தவர்கள் புதிதாக வந்தவன் {அர்ஜுனன்} தாங்கள் அறியாதவன் என்று பேசிக்கொண்டிருந்தபோது மன்னன் {விராடன்} ஆச்சரியத்துடன், “பெரும் பலம் கொண்ட நீ தேவனைப் போல இருக்கிறாய். இளமையும் கரிய நிறமும் கொண்ட நீ யானைக்கூட்டத்தின் தலைவனைப் போல இருக்கிறாய். தங்கத்தால் இழைக்கப்பட்ட சங்கு கடகங்களையும், பின்னலையும், காது வளையங்களையும் அணிந்திருக்கும் நீ, கவசமும், வில்லும், கணைகளும் தரித்தும், மலர்மாலை அணிந்தும் மெல்லிய கேசத்துடன் தேரை ஓட்டிச் செல்பவர்களில் ஒருவன் போலப் பிரகாசிக்கிறாய்.சுமைகளை ஒப்படைத்துவிட விரும்பும் முதிர்ந்த வயதினன் நான். நீ எனக்கு மகனாக இருந்து, அனைத்து மத்ஸ்யர்களையும் {Matsyas} என்னைப் போலவே ஆட்சி செய்வாயாக. உன்னைப் போன்ற ஒருவன் நிச்சயம் அலியாக இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது" என்றான் {விராடன்}.
அர்ஜுனன் {மன்னன் விராடனிம்}, “நான் பாடுவேன், ஆடுவேன், இசைக்கருவிகளை வாசிப்பேன். நான் நடனத்தில் கைதேர்ந்திருக்கிறேன். பாடலில் திறமை பெற்றிருக்கிறேன். ஓ! மனிதர்களின் தலைவா {விராடரே}, என்னை (இளவரசி) உத்தரைக்கு நியமியும். நான் அந்த அரச கன்னிக்கு நர்த்தனகுருவாக {ஆடல் கலை புகட்டும் ஆசிரியர்} இருப்பேன். நான் இந்த வடிவம் கொண்ட காரணத்தைக் கேட்பது, எனது வலியை மட்டுமே அதிகரிக்கும் எனும்போது, அதைக் குறித்துக் கேட்பது உமக்கு என்ன பலனைக் கொடுத்துவிடும்? ஓ! மனிதர்களின் மன்னா {விராடரே}, தந்தையோ தாயோ இல்லாத மகனான, அல்லது மகளான என்னைப் பிருஹந்நளை {Vrihannala} என்று அறிந்து கொள்ளும்" என்றான் {அர்ஜுனன்}.
விராடன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பிருஹந்நளை, நீ விரும்பியதை நான் கொடுக்கிறேன். எனது மகளுக்கும் {உத்தரைக்கும்}, அவளைப் போன்றோருக்கும் ஆடல்கலையைக் கற்பி. எனினும், இந்த அலுவல் உனக்குத் தகாது என்றே தோன்றுகிறது. கடல்சூழ்ந்த முழு உலகத்திற்கும் {முழு உலகத்தின் ஆட்சிக்கும்} நீ தகுந்தவன்" என்றான் {மன்னன் விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு மத்ஸ்யர்களின் {Matsyas} மன்னன் {விராடன்}, தனது பல்வேறு அமைச்சர்களுடன் ஆலோசித்து, பிருஹந்நளையை ஆடலிலும், பாடலிலும், பிற நுண்கலைகளிலும் சோதித்த பிறகு, பெண்களைக் கொண்டு அவனை {அர்ஜுனனை} முழுமையாகச் சோதித்தான். அவனது அலித்தன்மை நிரந்தர இயல்பு கொண்டது என்பதை அறிந்த பிறகு, அவன் {விராடன்} அவனை {பிருஹந்நளையான அர்ஜுனனை} கன்னியரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைத்தான். அங்கே அந்த வலிமைமிக்க அர்ஜுனன், விராடனின் மகளுக்கும், அவளது தோழிகளுக்கும், அவளது பணிப்பெண்களுக்கும் பாட்டும், கருவி இசையும் கற்பித்து விரைவில் அவர்களிடம் நல்ல பெயரை வென்றெடுத்தான். இப்படியே கவலையற்றவனாக அர்ஜுனன் அங்கே மாறுவேடத்தில் வாழ்ந்து, அவர்களின் துணையில் இன்பம் கொண்டு, அரண்மனைக்குள்ளும், வெளியேயும் மக்களால் அறியப்படாது இருந்தான்”{என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.