Description of weapons! | Virata Parva - Section 43 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 18)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : ஒவ்வொரு ஆயுதமும் யாருடையவை என்று உத்தரனுக்குப் பிருஹந்நளையான அர்ஜுனன் சொன்னது...
பிருஹந்நளை {அர்ஜுனன் உத்தரனிடம்} சொன்னாள், “நீ முதலில் விசரித்தது, எதிரிகள் படையைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் திறன் கொண்டதும், உலகம் பரந்த புகழ் கொண்டதுமான அர்ஜுனனின் வில்லான காண்டீவமாகும். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்தக் காண்டீவம் அர்ஜுனனுக்குச் சொந்தமான அனைத்து ஆயுதங்களிலும் உயர்ந்ததும் பெரியதுமாகும். தனியாகவே இது நூறாயிரம் ஆயுதங்களுக்குச் சமமானதாகும். நாடுகளின் எல்லைகளை விரிவு படுத்தும் ஆற்றல் இதற்குண்டு. மனிதர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய இருவரையும் இதைக் கொண்டே பார்த்தன் {அர்ஜுனன்} வெற்றிகொண்டான். தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரால் எப்போதும் வழிபடப்படுவதும், அற்புதமான வண்ணங்கள் பல கொண்டதும், பெரியதும், மிருதுவானதுமான இந்த வில்லில் ஒரு முடிச்சோ கறையோ எங்கும் இருக்காது.
சிவன், இதை {காண்டீவத்தை} ஆயிரம் {1000) வருடங்கள் வைத்திருந்தான். அதன்பிறகு பிரஜாபதி, இதை ஐநூற்றுமூன்று வருடங்கள் {503} வைத்திருந்தான். அதன் பிறகு, சக்ரன் {இந்திரன்}, இதை எண்பத்தைந்து {85} வருடங்கள் வைத்திருந்தான். அதன் பிறகு சோமன் {சந்திரன்}, இதை ஐநூறு {500} வருடங்கள் வைத்திருந்தான். அதன் பிறகு வருணன், இதை, நூறு {100} வருடங்கள் வைத்திருந்தான். கடைசியாக ஸ்வேதவாஹனன் [1] என்ற பட்டப் பெயர் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} இதை அறுபத்தைந்து {65} வருடங்கள் [2] வைத்திருந்தான். பெரும் சக்தியும், உயர்ந்த தெய்வீகப் பிறப்பும் கொண்ட இது {காண்டீவம்}, விற்கள் அனைத்திலும் சிறந்ததாகும். தேவர்களாலும் மனிதர்களாலும் கொண்டாடப்படும் இது {காண்டீவம்} அழகிய வடிவம் கொண்டதாகும். பார்த்தன் {அர்ஜுனன்}, இந்த அழகிய வில்லை வருணனிடம் இருந்து பெற்றான்.
[1] தான் கொண்டிருக்கும் குதிரைகளின் நிறத்தால் அவன் {அர்ஜுனன்} இப்பெயரைப் பெற்றான்” என்கிறார் கங்குலி.[2] “இது தொடர்பாக நீலகண்டர், அறுபத்தைந்து ஆண்டுகள் என்பதைச் சாதாரண மனித கணீப்பீட்டின்படி முப்பத்திரண்டு ஆண்டுகள் என்று பொருள் கூற பெரும் கல்விஞானத்தையும், புத்திக்கூர்மையையும் செலவழித்திருக்கிறார்” என்கிறார் கங்குலி. இந்தச் சம்பவத்தைச் சொல்லும் வேறு பதிப்புகளில் “இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகாலங்கள் பார்த்தன் காண்டீவத்தைப் பிடிப்பான்” என்று சொன்னதாக இருக்கின்றன.
அழகிய மேற்புறங்கள் கொண்டதும், தங்கப்பிடி கொண்டதுமான இந்த மற்றொரு வில்லைக் கொண்டுதான் எதிரிகளைத் தண்டிப்பவரும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பீமர் கிழக்குப் பகுதிகள் முழுமையையும் வென்றார். அழகிய வடிவமும், இந்திரகோபக இலச்சனைகள் கொண்டதுமான இந்த மற்றொரு வில், ஓ! விராடனின் மகனே {உத்தரா}, மன்னர் யுதிஷ்டிரருக்குச் சொந்தமானது. சுடர்விடும் பிரகாசத்துடன் அனைத்துப் புறங்களிலும் கதிரை அள்ளி வீசும் தங்கச் சூரியன்களைக் கொண்ட இந்த மற்றொரு வில் நகுலனுக்குச் சொந்தமானது. வண்டுகளின் வடிவத்தில் தங்கத்தாலான படங்கள், ரத்தினங்கள் மற்றும் கற்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இந்த வில் சகாதேவன் என்று அழைக்கப்படும் மாத்ரியின் மகனுடையது.
கத்தி போன்று கூர்மையானவையும், பாம்புகளின் நஞ்சு போல அழிவை உண்டாக்குபவையும், இறகுகள் கொண்டவையுமான இந்த ஆயிரம் {1000} கணைகளும், ஓ! விராடனின் மகனே {உத்தரா}, அர்ஜுனனுடையவையாகும். போர்க்களத்தில் இவற்றை எதிரிகள் மீது ஏவும்போது, இந்த வேகமான கணைகள் இன்னும் அதிகமாகப் பிரகாசித்து {எதிரிகளை அழித்த பிறகு} அழிவடையாமல் திரும்பும். கூரிய முனைகள் கொண்டவையும், எதிரி தலைவர்களை {அவர்களின் எண்ணிக்கையைக்} குறைப்பவையும், சந்திரப்பிறை போன்ற வடிவம் கொண்டவையுமான இந்த நீண்ட, தடித்த கணைகள் பீமருடையவை. புலிகளின் ஐந்து படங்களைச் சுமந்து, கல்லில் கூராக்கப்பட்டு, தங்க இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, மஞ்சள் நிறக் கணைகளைக் கொண்டிருக்கும் இந்த அம்பறாத்தூணி நகுலனுடையது. மாத்ரியின் புத்திசாலி மகன் {நகுலன்}, மேற்குப் பகுதிகள் முழுவதையும் இந்த அம்பறாத்தூணியைக் கொண்டுதான் வென்றான். சூரியப் பிரகாசம் கொண்டவையும், பல வண்ணங்களால் பூசப்பட்டவையும், எதிரிகளை ஆயிரக்கணக்கில் அழிக்கவல்லவையுமான இந்தக் கணைகள் சகாதேவனுடையவை.
நீண்ட இறகுகள் மற்றும் தங்கத் தலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், மூன்று முடிச்சுகள் கொண்டதுமான நீளம் குறைந்தவையும் நன்கு கடினமாக்கப்பட்டவையுமான இந்தத் தடித்த கணைகள் மன்னர் யுதிஷ்டிரருடையவை. தவளைப் படம் செதுக்கப்பட்டு, தவளையின் வாயைப் போன்ற தலை வடிவமைப்பு செய்யப்பட்டு, பலமானதாகவும், தாங்கமுடியாததாகவும் இருக்கும் இந்த நீண்ட வாள் அர்ஜுனனுடையது. புலித்தோலுறையில் இருப்பதும், நீண்டதும், தாங்கமுடியாததும், எதிரிகளுக்குப் பயங்கரமானதுமான இந்த வாள் பீமசேனருடையது. நல்ல வண்ணம் பூசப்பட்ட உறையில், தங்கக் கைப்பிடியுடன் இருக்கும் இந்த அழகிய வாள், கௌரவர்களில் விவேகியான நீதிமானான யுதிஷ்டிரருடையது. ஆட்டுத்தோலுறையில் இருப்பதும், பல அற்புதப் போர்முறைகளுக்கு உகந்ததும், தாங்கமுடியாததும், பலமிக்கதுமான இந்த வாள் நகுலனுடையது. மாட்டுத் தோலுறையில் இருப்பதும், பலமிக்கதும், தாங்கமுடியாததுமான இந்தப் பெரும் கூன்வாள் சகாதேவனுடையது” என்றாள் {பிருஹந்நளை}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.