I am Arjuna! | Virata Parva - Section 44 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 19)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : பிருஹந்நளை, தானே அர்ஜுனன் என்பதை உத்தரனுக்குச் சொல்வது; விராடனின் அலுவல்களில் ஈடுபட்டிருந்த பிற பாண்டவர்களின் அடையாளங்களையும் பிருஹந்நளை சொன்னது; உத்தரன் அர்ஜுனனின் பத்து பெயர்களையும் அதற்கான காரணங்களையும் சொன்னால்தான், இவையாவையும் தன்னால் உண்மை என்று நம்ப முடியும் என்று பிருஹந்நளையிடம் சொன்னது; அர்ஜுனன் தனது பெயர்களையும், அதற்கான காரணங்களையும் உத்தரனிடம் சொன்னது; உத்தரனின் அச்சம் விலகியது...
உத்தரன் {பிருஹந்நளையான அர்ஜுனனிடம்} சொன்னான், “வேகமான கரங்களும், உயர் ஆன்மாவும் கொண்ட பார்த்தனின் {அர்ஜுனனின்}, இந்த ஆயுதங்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையாகக் காண்பதற்கு அழகு மிகுந்தவையாக இருக்கின்றன என்பது நிச்சயம். ஆனால், பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன், குரு குலத்தின் யுதிஷ்டிரன், பாண்டுவின் {பிற} மகன்களான நகுலன், சகாதேவன், பீமசேனன் ஆகியோர் {இப்போது} எங்கே இருக்கின்றனர்? பகடையால் நாடிழந்தவர்களும், எதிரிகளை அழிப்பவர்களுமான அந்த உயர் ஆன்ம பாண்டவர்களைக் குறித்து ஒன்றும் கேள்விப்பட முடியவில்லையே. பகடைத் தோல்விக்குப் பிறகு பாண்டு மகன்களைக் காட்டுக்குத் தொடர்ந்து சென்றவளும், பாஞ்சால இளவரசியும், மங்கையரில் ரத்தினமுமான திரௌபதி {இப்போது} எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டான் {உத்தரன்}.
அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “பார்த்தன் என்றும் அழைக்கப்படும் நானே அர்ஜுனன். உனது தந்தையின் அரசவை {தலைமை} உறுப்பினராக இருப்பது யுதிஷ்டிரர் என்றும்; உனது தந்தையின் சமையற்காரனான வல்லவனே பீமர் என்றும்; குதிரை கண்காணிப்பாளனே நகுலன் என்றும்; மாட்டுக் கொட்டகையில் இருப்பவனே சகாதேவன் என்றும்; யார் பொருட்டுக் கீசகர்கள் கொல்லப்பட்டார்களோ, அந்தச் சைரந்திரியே திரௌபதி என்றும் அறிந்து கொள்” என்றான் {அர்ஜுனன்}.
உத்தரன் {அர்ஜுனனிடம்}, “நான் முன்பு கேள்விப்பட்டிருக்கும், பார்த்தனின் {அர்ஜுனனின்} பத்துப் பெயர்களை நீ கணக்கிட்டுச் சொல்லிவிட்டால், நான் இவை யாவையும் {உண்மையென} நம்புவேன்!” என்றான்.
அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! விராடனின் மகனே {உத்தரா}, நான் எனது பத்துப் பெயர்களை உனக்குச் சொல்கிறேன். அவற்றைக் கேட்டு, நீ ஏற்கனவே கேள்விப்பட்டதோடு ஒப்பீடு செய்து கொள். அவற்றைக் குவிந்த மனத்துடனும், நெருக்கமான கவனத்துடனும் கேள். அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்சு, விஜயன், கிருஷ்ணன் [1], சவ்யசச்சின், தனஞ்சயன் என்பவையே அவை” என்றான்.
[1] இந்த இடத்தில் “கிருஷ்ணன்” என்று இல்லாமல் “பார்த்தன்” என்ற பெயரையே வேறு பதிப்புகள் கூறுகின்றன.
உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “நீ விஜயன் என்றும் ஸ்வேதவாகனன் என்றும் எதனால் அழைக்கப்படுகிறாய் என்பதை உண்மையாகச் சொல். கிருஷ்ணன், அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, பீபத்சு என்றெல்லாம் உனக்கு ஏன் பெயர்கள் ஏற்பட்டன. எதற்காக நீ தனஞ்சயன் என்றும் சவ்யசச்சின் என்று அழைக்கப்படுகிறாய்? அந்த வீரனின் {அர்ஜுனனின்} பல்வேறு பெயர்களின் மூலத்தைக் குறித்து நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் உன்னால் சொல்ல முடிந்தால்தான் நான் உனது சொற்களில் நம்பிக்கை கொள்ள முடியும்” என்றான்.
அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்},
“செல்வத்தின் மத்தியில் நான் வாழ்ந்ததாலும், அனைத்து நாடுகளையும் அடக்கி, அவர்களது செல்வங்களைக் கொள்ளை கொண்டதாலும், என்னைத் தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.
ஒப்பற்ற மன்னர்களுடன் போர்புரியச் சென்று, அவர்களை வீழ்த்தாமல் (களத்தைவிட்டு) நான் திரும்பியதில்லை என்பதால், என்னை விஜயன் என்று அழைக்கிறார்கள்.
எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், என்னை ஸ்வேதவாஹனன் என்று அழைக்கிறார்கள்.
அடிவானில் உத்திர நட்சத்திரக்கூட்டம் {உத்தரப் பல்குனி} தோன்றிய நாளில் {உத்திரம் நட்சத்திரம் கொண்ட நாளில்} இமயத்தின் மார்பில் நான் பிறந்ததால், என்னைப் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.
முன்னர், வலிமைமிக்கத் தானவர்களுடன் நான் மோதும்போது, சூரியப்பிரகாசம் கொண்ட ஒரு மணிமுடியை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், நான் கிரீடி என்று பெயர் பெற்றேன்.
போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் பீபத்சு என்று நான் அறியப்படுகிறேன்.
காண்டீவத்தை எனது இருகரங்களாலும் இழுக்கவல்லவனாக நான் இருப்பதால், சவ்யசச்சின் {சவ்யசாசி} என்று தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் நான் அறியப்படுகிறேன்.
பூமியின் நான்கு எல்லைகளுக்குள் எனது நிறம் மிக அரிதானதாலும், எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.
அணுகமுடியாதவனாகவும், அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், பகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகனாகவும் இருப்பதால் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில், நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.
எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் [2] என்பது, கரிய தோலும் {நிறமும்} பெரும் தூய்மையும் கொண்ட சிறுவனான என் மீது பாசம் கொண்ட எனது தந்தையால் {பாண்டுவால்} எனக்கு வழங்கப்பட்டதாகும்.
[2] இங்கே பல பதிப்புகளில் பார்த்தன் என்ற பெயருக்கான காரணம்தான் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அர்ஜுனன், பிருதையின் மகன் என்பதால் பார்த்தன் என்று அழைக்கப்பட்டான் என்ற விளக்கமும் இங்குக் கொடுக்கப்படுகிறது. அந்த விளக்கத்தைத் தொடர்ந்து, “கிருஷ்ணன்” என்ற பெயருக்கான விளக்கமும் கொடுக்கப்படுகிறது. ஆனால் அஃது அர்ஜுனனின் பதினோராவது பெயர் என்று சொல்லப்படுகிறது. காண்டவ வனப் போரில் அர்ஜுனன் மூர்ச்சையடைந்தபோது, அவனைக் காண சிவனும், பிரம்மனும் வந்ததாகவும். அவர்களைக் கண்டதும் உணர்வு பெற்று எழுந்த அர்ஜுனன், தரையில் தலை பதித்து அவர்களை வணங்கியதாகவும். அவனுடைய {அர்ஜுனனுடைய} வீரத்தைக் கண்ட சிவனும் பிரம்மனும், அவனுக்கு, “கிருஷ்ணன்” என்ற பதினோராவது பெயரை வைத்ததாகவும், அர்ஜுனன் உத்தரனிடம் சொல்வதாகக் கும்பகோணம் பதிப்பில் வருகிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு பார்த்தனை {அர்ஜுனனை} நெருக்கமாக அணுகி, வணங்கிய விராடனின் மகன் {உத்தரன்}, “என் பெயர் பூமிஞ்சயன். நான் உத்தரன் என்றும் அழைக்கப்படுகிறேன். ஓ! பார்த்தரே, நற்பேறாலேயே நான் உம்மைக் காணும்படி நேர்ந்தது. ஓ! தனஞ்சயரே, உமக்கு நல்வரவு. ஓ! சிவந்த கண்கள் கொண்டவரே, யானையின் துதிக்கையைப் போன்ற இரு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {அர்ஜுனரே}, அறியாமையால் நான் சொன்ன யாவற்றையும் பொருத்தருள்வதே உமக்குத் தகும். மேலும், இதற்கு முன்பு, உம்மால் சாதிக்கப்பட்ட அற்புதமானவையும், கடினமானவையுமான செயல்களால், எனது அச்சங்கள் விலகிவிட்டன. உண்மையில், எனக்கு உம்மிடம் அதிகமான அன்பு உண்டாகியிருக்கிறது” என்றான் {உத்தரன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.