Aswatthama censured Karna! | Virata Parva - Section 50 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 25)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் :தற்பெருமை பேசும் கர்ணனை அஸ்வத்தாமன் கண்டித்தது; துரியோதனன் பாண்டவர்களை ஏமாற்றியதைச் சுட்டிக் காட்டுவது; தான் அர்ஜுனனுடன் போரிட மாட்டேன் என்று சொன்னது...…...
அஸ்வத்தாமன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, இந்தப் பசுக்கள் இன்னும் வெல்லப்படவில்லை. அல்லது அவை (தங்கள் உரிமையாளரின் ஆட்சிக்குட்பட்ட) எல்லையைக் கடக்கவில்லை. அல்லது அவை இன்னும் ஹஸ்தினாபுரத்தை அடையவில்லை. எனவே, ஏன் நீ தற்பெருமை பேசுகிறாய்? எண்ணிலடங்கா போர்களை வென்று, அபரிமிதமான செல்வத்தை அடைந்து, எதிரிப்படைகளை வீழ்த்திய உண்மையான வீரர்கள் தங்கள் பராக்கிரமம் குறித்து ஒரு வார்த்தையும் பேசமாட்டார்கள். நெருப்புப் பேசாமல் எரிகிறது. பேசாமல்தான் சூரியனும் ஒளிர்கிறான். பேசாமல்தான் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களை இந்தப் பூமி சுமக்கிறது. கண்டனம் இல்லாமல் ஒவ்வொருவரும் செல்வத்தை அடைய நான்கு வகையினருக்குமான அலுவல்கள் சுயம்புவால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
வேதங்களைக் கற்கும் ஓர் அந்தணன், தானே வேள்விகள் செய்து கொண்டு, பிறரது வேள்விகளையும் நடத்திக் கொடுக்க வேண்டும். ஒரு க்ஷத்திரியன், தனது வில்லை நம்பி, தனது வேள்விகளை மட்டும் செய்ய வேண்டும். அவன் மற்றவர்களுக்காக வேள்விகளை நடத்தக்கூடாது. செல்வங்களை ஈட்டும் ஒரு வைசியன், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்குகளைத் தனக்காக மட்டும் செய்து கொள்ள வேண்டும். ஒரு சூத்திரன் பிற மூன்று வகையினருக்கும் சேவை செய்து அவர்களுக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும். மலர்கள் மற்றும் இறைச்சி விற்பதைத் தொழிலாகக் கொண்டு தங்கள் வாழ்வை நடத்துபவர்களைப் பொறுத்தவரை, ஏமாற்றியும் மோசடியும் செய்து அவர்கள் தங்கள் செல்வத்தை ஈட்டிக் கொள்ளலாம்.
எப்போதும் சாத்திரங்களின் விதிப்படி நடந்து கொள்ளும் மேன்மிக்கப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} இந்த முழு உலகத்தின் ஆட்சியையும் பெற்றார்கள். பெரியவர்கள் அவர்களிடம் பகைகொண்டாலும், அவர்களிடம் {அந்தப் பெரியவர்களிடம்} எப்போதும் மரியாதையுடனே அவர்கள் {பாண்டவர்கள்} நடந்து கொள்கிறார்கள். வெட்கங்கெட்ட இந்தத் தீய திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} பகடையாட்டத்தின் மூலம் அடைந்த நாட்டைப் பார்த்து எந்த க்ஷத்திரியன் மகிழ்ச்சி கொள்வான்? இறைச்சி விற்பவன் போல ஏமாற்றுத்தனத்தாலும், மோசடியாலும் செல்வத்தை அடைந்தால், எந்த விவேகியால் அது குறித்துத் தற்பெருமையாகப் பேசிக் கொள்ள முடியும்? {[அதாவது] நீ விவேகி இல்லை என்று கர்ணனிடம் சொல்கிறான் அஸ்வத்தாமன்}
{இதுவரை அஸ்வத்தாமன் கர்ணனிடம் பேசுவது போல இருந்தாலும், இதன்பிறகு துரியோதனன் மற்றும் கர்ணனிடம் மாறி மாறிப் பேசுவதாகத் தெரிகிறது}
அவர்களது செல்வத்தைத் திருடிக் கொண்டாலும், தனஞ்சயனையோ {அர்ஜுனனையோ}, நகுலனையோ, சகாதேவனையோ எந்தத் தனிப்போரில் {ஒற்றைக்கு ஒற்றையான எந்த மோதலில்} நீ வென்றாய்? யுதிஷ்டிரனையோ, பலசாலிகளில் முதன்மையான பீமனையோ எந்தப் போரில் நீ வென்றாய்? இந்திரப்பிரஸ்தத்தை எந்தப் போரில் நீ வென்றாய்? ஓ! இழிந்த செய்கைகள் செய்பவனே, நீ செய்ததெல்லாம், நோய்வாய்ப்பட்டு ஒற்றையாடையுடன் இருந்த இளவரசியை {திரௌபதியைச்} சபை நடுவே இழுத்து வந்ததுதான். சந்தனம் போன்று மென்மையான பாண்டவ மரத்தின் வேரை நீ வெட்டிவிட்டாய்.
செல்வத்தின் மீது கொண்ட ஆசையால் செயல்பட்டு, பாண்டவர்களை அடிமைகளைப் போல நீ நடத்திய போது, விதுரர் என்ன சொன்னார் என்பதை நினைத்துப் பார்! மனிதர்களும் பிறரும், ஏன் பூச்சிகளும் எறும்புகளும் கூடத் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி பொறுத்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம். {[அதாவது] ஒரு கட்டத்திற்கு மேல் அவையும் தங்கள் சக்திக்கேற்ற கோபத்தை வெளிப்படுத்தும் என்பதைப் பார்க்கிறோம்}. எனினும், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} திரௌபதியின் துன்பங்களைப் பொறுக்க இயலாது. திருதராஷ்டிரன் மகன்களின் அழிவுக்காகவே தனஞ்சயன் {அர்ஜுனன்} இங்கு வந்திருக்கிறான் என்பது நிச்சயம். பெருஞானம் பாதிப்படையும் வகையில் உரையாற்றுவதற்கே நீ தகுந்தவன். ஆனால் எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, நம் அனைவரையும் நிர்மூலமாக்கிவிடுவான் என்பதே உண்மை. தேவர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, ராட்சசர்களோ, {வந்திருப்பது} எவராக இருப்பினும் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} பீதியடைந்து போரில் இருந்து விலகிவிடுவானா?
கோபத்துடன் அவன் யார் மீது விழுகிறானோ, கருடனின் பாரத்தில் அழுந்தும் மரத்தைப் போல அவனை வீழச் செய்வான். பராக்கிரமத்தில் உன்னைவிட மேன்மையானவனும், தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} நிகரான வில்லாளியும், போரில் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நிகரானவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} யார் தான் புகழ மாட்டார்கள்? தெய்வீக ஆயுதங்களை தெய்வீக ஆயுதங்களாலும், மனித ஆயுதங்களை மனித ஆயுதங்களாலும் முறியடிக்கும் அர்ஜுனனுக்கு எந்த மனிதன் இணையாக முடியும்? மகன் என்ற ஸ்தானத்திற்குச் சீடன் எவ்வகையிலும் குறைவில்லாதவன் என்று சாத்திரங்களை அறிந்தவர்கள் தீர்மானிக்கின்றனர். {ஒரு மகனைக் காட்டிலும் சீடன் குறைந்தவனல்ல என்று சாத்திரங்கள் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்}. அதனால்தான் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} துரோணருக்குப் பிடித்தமானவனாக {மகனைப் போன்று பிடித்தமான சீடனாக} இருக்கிறான்.
பகடையாட்டத்தின் போது கைக்கொண்ட அதே வழிகளை இப்போது கைக்கொள். இந்திரப்பிரஸ்தத்தைக் கவர்ந்ததைப் போல, திரௌபதியை சபைக்கு நீ இழுத்து வந்ததைப் போல அதே வழிகளைக் கைக்கொள்! க்ஷத்திரிய வகைக் கடமைகளை நன்கு அறிந்தவனும் விவேகம் நிறைந்தவனும், காந்தார இளவரசனும், ஏமாற்றுகரச் சூதாடியுமான இந்த உனது மாமன் சகுனி இப்போது போரிடட்டும்! எனினும், காண்டீவம், கிருதம் {பகடைக்காயின் நான்கு எண்ணுள்ள பக்கம்} என்றும், துவாபரம் {பகடைக்காயின் இரண்டு எண்ணுள்ள பக்கம்} என்றும் பகடைக்காய்களை வீசாது. ஆனால் அது {காண்டீவம்} சுடர்விட்டெரியும் கூரிய முனை கொண்ட எண்ணற்ற கணைகளை அடிக்கும்.
காண்டீவத்தில் இருந்து அடிக்கப்படும் கழுகு இறகு கொண்டதும் சக்திமிக்கதுமான கடும் கணைகள் மலைகளைக் கூடத் துளைக்கும். யமன் என்ற பெயரைக் கொண்ட அனைத்தையும் அழிப்பவனும், வாயுவும், குதிரை முகம் கொண்ட அக்னியும் கூடச் சில மிச்சங்களை விட்டுச் செல்வார்கள். ஆனால் கோபம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} அதைக் கூட விடமாட்டான் {மிச்சமில்லாமல் அழிப்பான்}. உனது மாமனின் {சகுனியின்} துணை கொண்டு, எப்படிச் சபையில் பகடை விளையாடினாயோ, அதே போல அந்தச் சுபலனின் மகனால் {சகுனியால்} பாதுகாக்கப்பட்டு இந்தப் போரில் நீ போரிட்டுக் கொள். போரிடுவதாகத் தீர்மானித்தால் ஆசான் {கிருபர்} போரிட்டுக் கொள்ளட்டும். எனினும், நான் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} போரிட மாட்டேன். பசுக்களின் பாதையைப் பற்றிக் கொண்டு மத்ஸ்ய மன்னன் வந்தால், அவனுடன் போர் புரிய வேண்டும் என்பதற்காகவே உண்மையில் நாம் வந்தோம்” என்றான் {அஸ்வத்தாமன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.