Arjuna saluted Drona! | Virata Parva - Section 53 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 28)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : உத்தரனுக்குத் துரோணரையும், பிற கௌரவத் தலைவர்களையும் அர்ஜுனன் காட்டியது; அம்புகள் இரண்டை துரோணரின் பாதத்தில் விழச் செய்து, அர்ஜுனன் துரோணரை வணங்கியது; அங்கே துரியோதனன் இல்லாததைக் கண்டு உத்தரனிடம் தேரைத் திருப்பச் சொன்னது; அர்ஜுனனின் நோக்கத்தை அறிந்த கிருபர் அவனைப் பக்கவாட்டில் தாக்கலாம் என்றது; அர்ஜுனனின் சரமாரி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, வரிசைப்படி தங்கள் நிலைகளில் கௌரவர்கள் நின்ற பிறகு, அர்ஜுனன் தனது தேர் சடசடப்பின் எதிரொலி காற்றில் நிரம்பும் வகையில் அவர்களை நோக்கி விரைந்து வந்தான். குருக்கள் {கௌரவர்கள்} அவனது கொடியைக் கண்டனர்; தேர் சடசடப்பின் எதிரொலியையும் நீட்டிவிரிக்கப்பட்ட காண்டீவத்தின் நாணொலியையும் தொடர்ச்சியாகக் கேட்டனர். இவை யாவையும் கவனித்து, அந்தப் பெரும் தேர்வீரனான காண்டீவந்தாங்கியைக் {அர்ஜுனனைக்} கண்ட துரோணர், “தூரத்தில் ஒளிர்ந்து வருவது பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடியாகும். இஃது அவனது தேரின் ஒலி, பயங்கரமாகக் கர்ஜனை செய்வது {அவனது கொடியிலிருக்கும்} அந்தக் குரங்காகும். உண்மையில் அந்தக் குரங்கு நமது துருப்புகளைப் பயத்தில் பீடிக்கச் செய்கிறது. இடியொலி போல நாணொலியெழுப்பிவரும் விற்களில் சிறந்த வில்லான காண்டீவத்தை இழுக்கும் தேர்வீர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} அந்த அற்புதமான தேரில்தான் இருக்கிறான்.
எனது பாதங்களில் வந்து விழும் இவ்விரு கணைகளை இதோ பாருங்கள். மற்றும் இரண்டு கணைகள் வெறுமனே எனது காதுகளைத் தொட்டுச் செல்கின்றன. வனவாச காலத்தை நிறைவு செய்து, பல அற்புத சாதனைகளை அடைந்திருக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்னை வணங்கி, எனது காதுகளில் மெதுவாகப் பேசுகிறான் [1]. ஞானம் கொண்டவனும், உறவினர்களால் விரும்பப்படுபவனும், நீண்ட காலம் கழித்து நம்மால் பார்க்கப்படுபவனும் பாண்டுவின் மகனுமான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, உண்மையில் அழகாலும், அருளாலும் சுடர்விடுகிறான். தேர், கணைகள், கையுறைகள், அம்பறாத்தூணி, சங்கு, கொடி, கவசம், கிரீடம், கூன்வாள், வில் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பிருதையின் மகன் {son of Pritha - குந்தியின் மகன் அர்ஜுனன்}, வேள்விக்கரண்டிகள் சூழ, தெளிந்த நெய்யை உண்ணும் (ஹோம) நெருப்பு போலச் சுடர்விட்டு ஒளிர்கிறான்.” என்றார் {துரோணர்}.
[1] இம்முறைக்கு அபிவாதனம் என்று சொல்வார்கள். பெயர் முதலியன கூறி பெரியோரை வணங்கும் முறை இஃது. இதையே இங்கு அர்ஜுனன் செய்கிறான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “போருக்குத் தயாராக இருக்கும் குருக்களை {கௌரவர்களைக்} கண்ட அர்ஜுனன், மத்ஸ்யன் மகனிடம் {உத்தரனிடம்} அச்சூழ்நிலைக்கு ஏற்ற சொற்களில், “ஓ! தேரோட்டி {உத்தரா}, எனது கணைகள் எதிரியைச் சென்றடையும் தூரத்தில் குதிரைகளை நிறுத்து. அதேவேளையில், இந்தப் படையின் மத்தியில் அந்தக் குருகுலத்தின் இழிந்த பாவி {துரியோதனன்} எங்கிருக்கிறான் என்பதை நான் காணும்படி செய். இவர்கள் அனைவரையும் கருத்தில் கொள்ளாமல், அந்த இளவரசர்களில் வீணனைத் {துரியோதனனைத்} தனித்திருக்கச் செய்து, அவன் தலையில் விழுவேன். அந்தப் பாவியை {துரியோதனனை} வீழ்த்திவிட்டால், தாங்கள் வீழ்ந்துவிட்டதாகவே பிறர் கருதுவார்கள்.
துரோணர் அதோ நிற்கிறார், அவருக்கு அடுத்து அவரது மகன் {அஸ்வத்தாமன்} நிற்கிறார். அங்கே பெரும் வில்லாளிகளான பீஷ்மர், கிருபர் மற்றும் கர்ணன் ஆகியோர் இருக்கின்றனர். எனினும், நான் மன்னனைக் {துரியோதனனைக்} காணவில்லை. தனது உயிரைக் காத்துக்கொள்ள அவன் {துரியோதனன்}, தெற்கு சாலையின் வழியே, கவர்ந்த பசுக்களை அழைத்துக் கொண்டு பின்வாங்கிக் கொண்டிருக்கிறான் என்று சந்தேகிக்கிறேன். இந்தத் தேர்வீரர்களின் வரிசையைத் தவிர்த்து, சுயோதனன் {Suyodhana _ துரியோதனன்} இருக்கும் இடத்திற்குச் செல். போர் பலனற்றதாகிவிடும் என்பதால், ஓ! விராடனின் மகனே {உத்தரா}, அங்கே அவனிடம் போரிட்டு, அவனை வீழ்த்திய பிறகு, பசுக்களை அழைத்துக் கொண்டு திரும்பி வரலாம்” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட விராடனனின் மகன் {உத்தரன்}, சற்று முயன்று குதிரைகளை நிறுத்தி, குரு குல காளையர் இருக்கும் இடத்தில் இருந்து கடிவாளத்தை ஓர் இழு இழுத்து, அவற்றைத் துரியோதனன் இருக்கும் இடம் நோக்கிச் செலுத்தினான். அப்படி அர்ஜுனன் அந்தப் படையின் அடர்த்தியான வரிசையைத் தவிர்த்து விட்டுச் சென்ற போது, அவனது நோக்கத்தை அறிந்த கிருபர், தனது தோழர்களிடம், “பீபத்சு {அர்ஜுனன்}, மன்னனைத் {துரியோதனனைத்} தவரித்து வேறு யாரிடமும் நிற்க விரும்பமாட்டான். முன்னேறிச் செல்லும் அந்த வீரனின் {அர்ஜுனனின்} பக்கவாட்டுப் பகுதியை நாம் தாக்குவோம். கோபத்தால் எரிந்து கொண்டு, எவர் துணையும் அற்று வரும் அவனிடம்{அர்ஜுனனிடம்} ஆயிரம் கண் தெய்வத்தையோ {இந்திரனையோ} அல்லது தேவகியின் மகனான கிருஷ்ணனையோ தவிர வேறு யாரும் {தனியாக} மோத முடியாது. பார்த்தன் {அர்ஜுனன்} என்ற பெருங்கடலில் வீழும் படகைப் போலத் துரியோதனன் மூழ்கிவிட்டால் இந்தப் பசுக்களாலோ, இந்த அபரிமிதமான செல்வத்தாலோ நமக்கு என்ன பயன்?” என்றார் {கிருபர்}.
அதேவேளையில், அந்தக் குறிப்பிட்ட படைப்பிரிவை நோக்கி முன்னேறிய பீபத்சு {அர்ஜுனன்}, தனது பெயரை விரைந்து அறிவித்துக் கொண்டு, வெட்டுக்கிளிகள் போலத் தடித்திருந்த அவனது அம்புகளால் அத்துருப்புகளை மூடினான். பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட எண்ணற்ற கணைகளால் மூடப்பட்ட எதிரி வீரர்களால் எதையும் காணமுடியவில்லை. பூமியும், வானமும் கூட அதனால் {அம்புகளால்} மறைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. போருக்குத் தயாராக இருந்த வீரர்கள் குழம்பிப் போனதால் யாராலும் களத்தை விட்டு ஓடிப்போகவும் முடியவில்லை. பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} கரங்களின் இலகுத்தன்மையைக் கண்ட அவர்கள் {கௌரவப் படையினர்} அனைவரும் மனதுக்குள் {அச்செயலைப்} பாராட்டினார்கள்.
பிறகு அர்ஜுனன், எதிரிகளை எப்போதுமே மயிர்ச்சிலிர்க்கச்செய்யும் தனது சங்கை எடுத்து ஊதினான். விற்களில் சிறந்த தனது வில்லில் நாணொலி எழுப்பி, தனது கொடியில் இருந்து உயிரினங்களை மேலும் பயங்கரமாகக் கர்ஜிக்கச் செய்தான். அந்தச் சங்கொலியாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும், காண்டீவத்தின் நாணொலியாலும், கொடியில் இருந்த மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயிரினங்களின் கர்ஜனையாலும், பூமியே நடுங்கத் தொடங்கியது. பிறகு தெற்கு சாலையில் சென்று கொண்டிருந்த பசுக்கள் உயர்ந்த தங்கள் வால்களை அசைத்து, ஒன்றாக இறங்கித் திரும்பின” என்றார் {வைசம்பாயனர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.