The prudent speech of Krishna! - Udyoga Parva - Section 001 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வம்)
பதிவின் சுருக்கம் : விராடனின் அவைக்கு மன்னர்கள் வந்தது; பாண்டவர்கள் அனுபவித்த துயரையும், அவர்களுக்கு நேர்ந்த அநீதியையும் குறித்துக் கிருஷ்ணன் அந்த மன்னர்களுக்கு எடுத்துக் கூறி, ஒரு தூதுவரை அனுப்ப வேண்டும் என்று சொன்னது...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, அந்தக் குருவின் வழித்தோன்றல்கள் {பாண்டவர்கள்}, தங்களைச் சேர்ந்தவர்களுடன் (விராடன் குடும்பத்தினருடன்), அபிமன்யுவின் திருமண விழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடி, இரவில் இளைப்பாறி, விடியற்காலையில் விராடனின் அவைக்கு மகிழ்ச்சியாக வந்து சேர்ந்தனர். பல வண்ணங்களிலான ரத்தினங்களாலும், பெரும் மதிப்புடைய கற்களாலும், வரிசையாக இருந்த இருக்கைகளாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, நறுமணம் நிறைந்ததாக இருந்த அந்த மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} அவை {அரசவை}, எல்லா வளங்களாலும் நிறைந்திருந்தது. மனிதர்களில் வலிமைமிக்க ஏகாதிபதிகளான அவர்கள் {அந்த மன்னர்கள்} அனைவரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
முகப்பில் இருந்த இருக்கைகளில் விராடன் மற்றும் துருபதன் ஆகிய இரு மன்னர்கள் அமர்ந்திருந்தனர். பூமியின் முதிர்ந்த அந்த ஆட்சியாளர்களும் {விராடனும், துருபதனும்}, தங்கள் தந்தையுடன் கூடிய பலராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரும், {மற்றும்} அனைவரும் அங்கே அமர்ந்திருந்தனர். பாஞ்சாலத்தின் மன்னனுக்கு {துருபதனுக்கு} அருகில் சினி குலத்தின் பெரும் வீரன் {சாத்யகி}, ரோகிணியின் மகனுடன் {பலராமனுடன்} அமர்ந்திருந்தான். மத்ஸ்ய மன்னனுக்கு {விராடனுக்கு} அருகருகே கிருஷ்ணன், யுதிஷ்டிரன், துருபத மன்னனின் அனைத்து மகன்கள், பீமன், அர்ஜுனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, போரில் வீரமிக்கப் பிரத்யும்னன், சாம்பன் ஆகிய இருவர், அபிமன்யு, விராடனின் மகன்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர். வீரம், வலிமை, கருணை, பராக்கிரமம் ஆகியவற்றில் தங்கள் தந்தையருக்குப் போட்டியாக இருந்த இளவரசர்களான திரௌபதியின் மகன்கள், தங்கத்தாலான அற்புத இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
ஒளிரும் ஆபரணங்கள் மற்றும் ஆடைகளை அணிந்திருந்த அந்த வலிமைமிக்க வீரர்கள் அனைவரும் அமர்ந்ததும், அரசர்கள் நிறைந்த அந்தச் சபை, மின்னும் நட்சத்திரங்களால் நிறைந்த ஆகாயவிரிவைப் போன்று இருந்தது. அப்படி ஒன்றாகக் கூடியிருந்த வலிமை மிக்கவர்களான அவர்கள், ஒருவருடன் ஒருவர் பல்வேறு தலைப்புகளில் உரையாடி, கிருஷ்ணன் மீது தங்கள் நிலைத்த கண்களை வைத்து, சிந்தனையிலாழ்ந்த மனநிலையில் சிறிது நேரம் இருந்தனர். அவர்களது பேச்சின் முடிவில், பாண்டவர்கள் குறித்த காரியங்களில் அவர்களது கவனத்தைக் கிருஷ்ணன் ஈர்த்தான். அந்த வலிமைமிக்க மன்னர்கள் அனைவரும், கிருஷ்ணனின் பயனுள்ள, பொருள் பொதிந்த பேச்சைக் கேட்டனர்.
கிருஷ்ணன், “சுபலனின் மகனால் {சகுனியால்}, யுதிஷ்டிரர் எப்படி வஞ்சனையாக வெல்லப்பட்டார் என்பதையும், அவரது நாடு எப்படிப் பறிக்கப்பட்டது என்பதையும், காட்டில் தனது வனவாசம் குறித்த நிபந்தனை எப்படி அவரால் ஏற்கப்பட்டது என்பதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தங்கள் சக்தியால் உலகை வெல்லும் திறனிருந்தும், அந்த அவலநிலையிலும் நம்பிக்கையில் உறுதியுடன் அவர்கள் {பாண்டவர்கள்} நீடித்தனர். அதன்படி, இந்த ஒப்பற்ற மனிதர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் மீது திணிக்கப்பட்ட அந்தக் கொடூரமான காரியத்தை, இந்தப் பதிமூன்று {13} ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டனர். இறுதியான இந்தப் பதிமூன்றாவது வருடத்தைக் கழிப்பது இவர்களுக்கு மிகக் கடுமையானதாக இருந்தது. எனினும், நீங்கள் அறிந்தவாறே, தாங்கிக்கொள்ள முடியாத பல்வேறு கடினங்களையும் அனுபவித்து, ஒருவராலும் கண்டறியப்படாமல் இருந்தனர். இதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தச் சிறப்புமிக்க மனிதர்கள் {பாண்டவர்கள்}, பிறருக்கு அடிமைச்சேவகம் செய்யும் பணியில் இந்தப் பதிமூன்றாவது வருடத்தைக் கழித்தனர்.
இது இப்படி இருக்கையில், யுதிஷ்டிரன் மற்றும் துரியோதனன் ஆகிய இருவருக்கும் எது நன்மையானது என்பது குறித்தும், குருக்களையும் {கௌரவர்களையும்}, பாண்டவர்களையும் பொருத்தமட்டில், எது நீதியாகவும், பொருத்தமாகவும், அனைவருக்கும் இசைவானதாகவும் இருக்கும் என்பதைக் குறித்தும் நீங்கள் {இந்தச் சபை} கருத்தில் கொள்ள வேண்டும் {ஆலோசிக்க வேண்டும்}. அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரர், வானரசையும் {தேவலோக அரசையும்} அநீதியாக அடைய விரும்பமாட்டார். ஆனால், நீதியுடன் கிடைக்கும் ஒரு கிராமத்தின் ஆட்சியைக் கூட ஏற்றுக் கொள்வார். அவரது தந்தை {பாண்டுவின்} வழி அரசை, திருதராஷ்டிரன் மகன்கள் எவ்வாறு மோசடியான முறையில் கவர்ந்தார்கள் என்பதையும், தாங்க முடியாத கடின வாழ்வை அவர் எப்படி மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதையும், இங்கே கூடியிருக்கும் மன்னர்கள் அனைவரும் அறிவார்கள்.
பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனனை, பலத்தால் வெல்ல இயலாதவர்களாகத் திருதராஷ்டிரன் மகன்கள் இருக்கிறார்கள். {தங்கள் பலத்தால் இவர்களது நாட்டை அவர்கள் அடையவில்லை}. எனினும் மன்னன் யுதிஷ்டிரரும் அவரது நண்பர்களும், திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} நன்மையையே விரும்புகின்றனர். குந்தியின் வீரமிக்க மகன்களும், மாத்ரியின் இரு மகன்களும், மன்னர்களை வீழ்த்தி, போரில் தாங்கள் வென்று அடைந்தவற்றை {தாங்கள் ஈட்டியவற்றை} மட்டுமே கேட்கின்றனர். பாண்டவர்களுடைய அந்த எதிரிகள் {கௌரவர்கள்}, நாட்டைத் தாங்களே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இவர்கள் {பாண்டவர்கள்} சிறுவர்களாக இருந்த போதே, இவர்களை அழிக்கப் பல்வேறு வகைகளில் முயன்றதை நீங்கள் அறிவீர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் இவ்வளவு தீயவர்களாகவும், வெறுப்புணர்ச்சி கொண்டவர்களாகவுமே இருந்தனர்.
அவர்கள் எப்படித் தன்னலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், யுதிஷ்டிரர் எப்படி அறம் சார்ந்தவராக இருக்கிறார் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். அவர்களுக்குள் {கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்குள்} நீடிக்கும் உறவின்முறையையும் கருத்தில் கொள்ளுங்கள். {இது குறித்து}, தனித்தனியாகவும், ஒன்றாகச் சேர்ந்தும் ஆலோசிக்கும்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
பாண்டவர்கள் எப்போதும் உண்மையைக் கருத்தில் கொள்பவர்கள். வாக்குறுதியில் உள்ள எழுத்துகள் முழுவதையும் இவர்கள் நிறைவேற்றிவிட்டனர். இப்போது திருதராஷ்டிரன் மகன்களால் அநீதி இழைக்கப்பட்டால், அவர்கள் அனைவரையும் இவர்கள் {பாண்டவர்கள்} மொத்தமாகக் கொல்வார்கள். பிறர் கைகளில் இவர்கள் {பாண்டவர்கள்} அடைந்த தீமை அறிவிக்கப்பட்டால், இவர்களின் அருகில் நின்று, இவர்களைத் துன்புறுத்தியவர்களுடன் போரிட்டு, தங்கள் உயிரே போனாலும் அவர்களைக் கொல்ல விரும்பும் நண்பர்களை இவர்கள் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மிகச் சிலராக இருக்கிறார்கள்; இவர்களால் தங்கள் எதிரிகளை வெல்ல முடியாது என்று நீங்கள் நினைத்தால், நண்பர்களால் தொடரப்படும் இவர்கள் ஒற்றுமையாக இணைந்து, சந்தேகமற, தங்களால் முடிந்த வரை {பெருமுயற்சியைசெய்து} தங்கள் எதிரிகளை அழிக்கவே முயல்வார்கள் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.
துரியோதனன் என்ன நினைக்கிறான், அல்லது அவன் என்ன செய்வான் என்பது {உள்ளபடி} சரியாகத் தெரியவில்லை. சிறந்ததே செய்யப்பட வேண்டும் எனும்போது, மறுபக்கத்தில் இருப்பவனின் எண்ணத்தை அறியாமல், உங்களால் என்ன கருத {ஆலோசிக்க} முடியும்? எனவே, யுதிஷ்டிரருக்கு பாதி நாட்டைக் கொடுக்கும்படி அவர்களை மென்மையாகத் தூண்ட {வேண்டிக்கொள்ள}, அறம், நேர்மை, மதிப்புக்குரிய பிறப்பு, எச்சரிக்கை {எச்சரைக்கையுணர்வு} ஆகியவற்றைக் கொண்ட தகுதி வாய்ந்த தூதர் ஒருவரைப் {இங்கிருந்து அங்கு} புறப்படச் செய்வீராக!” என்றான் {கிருஷ்ணன்}.
பிறகு, அமைதி மற்றும் பாரபட்சமற்ற உணர்வுடன் கூடிய கிருஷ்ணனின், மதிநுட்பமும், அறச்சார்பும் நிறைந்த பேச்சைக் கேட்ட அவனது அண்ணன் {பலராமன்}, தனது தம்பியின் {கிருஷ்ணனின்} சொற்களுக்கு அந்தச் சபையில் உயர்ந்த புகழுரை வழங்கினார்.