“என்னங்க.. நல்ல மழையா?” என்று நண்பர் திரு.ஜெயவேலன் அவர்களிடம் தொலைபேசியில் கேட்டேன். “ஓ… விராடபர்வம் முடிச்சிட்டீங்களாக்கும்…” என்றார். “ஆமாங்க முடிஞ்சிடுச்சு” என்றேன். “அதான் மழை பெய்யுதா? ஏற்கனவே மழைக்கும் விராட பர்வத்துக்கும் உள்ள சம்பந்தம்னு, வழக்கத்தில் உள்ள நம்பிக்கையான விராடபர்வம் வாசித்தால் மழைவரும் என்று ஒரு பதிவு போட்டோமே!” என்றார். “அட நீங்க வேற… கடைசிப் பதிவு போட்டவுடன சொல்லுங்க, திருத்தணும்னு சொன்னீங்களே! அதான் ஃபோன் பண்னேன்!” என்றேன். “காலைலேயே திருத்தியாச்சுங்க. இப்ப அங்கதான் வந்துட்டிருக்கேன்!” என்றார். “மழை பெய்யுதே” என்று நான் சொல்வதற்குள், “நான் சிக்னல்ல இருக்கேங்க!” என்றார். “சரி வாங்க” என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்தேன்.
அடுத்த அரைமணிநேரத்தில் என் வீட்டுக்கு வந்தார். வந்ததும் வராததுமாகக் கையில் வைத்திருந்த கவரைக் கொடுத்தார். என் தம்பி மனைவி திருமதி.ஜெயா அருண் அவர்களிடம், ஜெயவேலன் அவர்கள் என்னிடம் கவரைத்தரும் போது அலைபேசியில் ஒரு புகைப்படம் எடுக்குமாறு கூறினேன். “ஏங்க இப்படிலாம் செய்யக்கூடாதுங்க” என்றார். “அதெல்லாம் செய்யலாம். நீங்க கொடுக்குறீங்க… நான் வாங்குறேன்றது வெளிப்படையா இருக்கணுங்க!” என்று சொல்லி புகைப்படத்தை எடுத்துக்கொண்டேன். பிறகு, கவரை வாங்கிக் கிருஷ்ணன் காலடியில் வைத்தேன்…
“ஏங்க… நாம போடுற வீடியோ புக்குங்கள யாரும் பாக்குறது மாறியே தெரியல… விராட பர்வம் வீடியோக்கள மொத்தமாவே 2000 பேர்தான் பாத்துருக்காங்க. நீங்க ஃபேஸ்புக்குல வீடியோ லிங்குகளையும் ஷேர் செஞ்சு பாருங்க. வியூஸ் கூடுதானு பாப்போம்” என்றார். “மகாபாரதம் மொழிபெயர்ப்ப ஆரம்பிச்ச போது, அஞ்சு மாசத்துக்கு மொத்தமா 3000 பேர்தான் பாத்திருந்தாங்க. இப்போ… அது ஒரு நாளைலேயே நடக்குது… காணொளி கொடுக்க இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம்… பாப்போம்.. ஃபேஸ்புக்குலயும் போடுறேன். வேற ஏதாவது செய்ய முடியுமானும் பாப்போம்… இது கண்டிப்பா வயதானவங்களுக்குப் பயன்படுங்க…” என்று சொன்னேன்.
தீபா நடராஜன் அவர்கள் ஆதிபர்வம் ஒலிக்கோப்புகளைச் செய்கிறார். திருமதி.ஜெயலட்சுமி அருண் சபா பர்வம் ஒலிக்கோப்புகளைச் செய்கிறார். தீபா அவர்கள் ஒலிக்கோப்புகள் செய்வதற்கு முன்னரே, திரு.ஜெயவேலன் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு முயற்சியைச் செய்து பார்க்க வேண்டும் என்று ஆலோசித்திருந்தார். ஆனால் குரல்வளம் மிக்க நண்பர்கள் யாரும் எங்களில் இல்லை. நானேகூட படிக்க சிறு முயற்சி செய்து பார்த்து, தோற்றிருந்தேன். பிறகுதான் தீபா தன்னார்வமாகப் படித்து ஒலிக்கோப்புகள் செய்ய ஆரம்பித்தார். அதன் பிறகு ஜெயலட்சுமி வந்தார். இந்தச் செப்டம்பர் மாதம்தான் ஜெயவேலன் அவர்களுக்குத் திருமணம் முடிந்தது. இதோ டிசம்பருக்குள் அவரது மனைவி திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் விராட பர்வத்தில் அனைத்துப் பதிவுகளையும், வன பர்வத்தில் நூறு பதிவுகளையும் ஒலிக்கோப்புகளாக்கி எனக்கு அனுப்பிவிட்டார். நான் அவற்றைக் காணொளியாக மாற்றி, யூடியூபில் பதிவேற்றி, வலைப்பூவில் இணைப்பு கொடுத்து வருகிறேன். இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று முதன் முதலாகக் கனவு கண்ட நண்பரே “காணொளிகளைப் பலர் பார்க்கவில்லையே” என்று சொன்னது வருத்தமாகவே இருந்தது.
விராட பர்வத்தை மொழிபெயர்த்ததற்கிடையில் மனதில் ஆழமாகப் பதிந்த நிகழ்வுகள் என்றால், குறிப்பாக மூன்றைச் சொல்லலாம். ஒன்று சென்னையில் நடந்த வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா, மற்றொன்று மலேசியாவில் இருந்து வந்த நண்பர் திரு.காளிதாஸ் மணியம் அவர்களைச் சந்தித்தது. மூன்றாவது நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்களின் தொலைபேசி உரையாடல்.
வெண்முரசு விழாவில் சற்றும் எதிர்பாராமல் மேடையில் அழைத்து, பல பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு நினைவுப்பரிசை வழங்கிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. முழுமஹாபார மொழிபெயர்ப்பைச் செழுமையாக்க நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவருக்குச் செலுத்தும் எனது நன்றியாக அமைய வேண்டும் என்று பரமனை வேண்டுகிறேன். ஜெயமோகன் அவர்களது பிரயாகை அருமையாக வந்து கொண்டிருக்கிறது.
மலேசியாவில் இருந்து வந்த நண்பர் திரு.காளிதாஸ் மணியம் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது.
மலேசியாவில் இருந்து வந்த நண்பர் திரு.காளிதாஸ் மணியம் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது.
ஒரு வாரத்திற்கு முன்பு என நினைக்கிறேன். நாமக்கல் திரு.ரவிக்குமார் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்தார். நமது முழுமஹாபாரதம் குறித்துப் பாராட்டினார். ஏன் இன்னும் முழுமஹாபாரதம் புத்தக வடிவில் வரவில்லை என்று கேட்டார். நான் "புத்தக வடிவமைப்பு தயாராக இருக்கிறது. நண்பரின் அச்சகமும் தயாராக இருக்கிறது. மூலதனம்தான் இல்லை. தற்போதைய நிலையில் ஆதிபர்வம் மட்டும் 1000 புத்தகங்கள் அச்சிடவேண்டுமென்றால் 2 1/2 லட்சம் வரை ஆகும்” என்றும் சொன்னேன். அதற்கு நாமக்கல் திரு.ரவிக்குமார் அவ்ர்கள்,“எழுத்துகள் சிறியதாக இருக்கக்கூடாது. முதியவர்களும் படிக்கும் வண்ணம் இருக்க வேண்டும்” என்று சொன்னார். “அப்படியென்றால் 900 முதல் 1000 பக்கங்கள் வரை வரும். செலவு இன்னும் அதிகமாகும்” என்றேன். “இப்படி ஒரு நல்ல காரியம் செய்வதற்கு, முழுத் தொகையையும் நானே தருகிறேன். இருப்பினும் மற்ற வாசகர்களிடமும் சொல்லுங்கள். அவர்கள் தரும் சிறு நன்கொடையைக் கூடப் பெற்றுக் கொண்டு வேலையை ஆரம்பித்துவிடலாம்” என்றார். அறிமுகம் இல்லாத நபர் இப்படி ஒரு பெருந்தொகை தர முன்வருவதை என் வாழ்வில் நான் கண்டதில்லை. அவருக்கு என் நன்றி.
இது சம்பந்தமாக ஜெயவேலன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். “அவர் சொல்ற மாதிரி, நம்ம பிளாக்ல ஒரு கோரிக்கை வச்சுப் பாருங்க. தப்பில்லைங்க” என்றார். வலைப்பூவில் பதிவிட்டு முகநூலில் பகிர்ந்ததில், மொத்தம் பதினைந்து நண்பர்கள் எனது வங்கிக் கணக்கெண்ணைக் கேட்டுப் பணம் தர முன்வந்தனர். நான் அவற்றை மறுத்து, நண்பர்களின் முடிவான கருத்து என்ன என்பதைக் கேட்டு முடிவெடுத்த பிறகு தருகிறேன் என்று சொன்னேன். அப்படிக் கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என் மீது அக்கறை கொண்ட நெருக்கமான நண்பர்கள் சிலர், “இப்போதைக்கு இது வேண்டாம். முதலில் முழு மஹாபாரதத்தையும் முடியுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம். தொண்டு என்பது போய், வணிகத்திற்காகவும் நடைபெறும் செயல் என்று முழுமஹாபாரத மொழிபெயர்ப்பு பழிக்கு ஆளாகக்கூடாது” என்று தொலைபேசியிலும், முகநூல் அகப்பேழையிலும் கருத்து தெரிவித்தனர். ஜெயவேலன் அவர்களிடம் இந்தக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டேன். “சரி. அப்ப நாம பிறகு பாத்துக்கலாங்க. முதலில் மொழிபெயர்ப்பை மட்டும் கருத்தா பாப்போம்!” என்றார்.
புத்தகம் அச்சிடுவது சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்த போது, திரு.ஹரன்பிரசன்னா அவர்களிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் புத்தகம் அச்சிடுவது குறித்துச் சில தகவல்களையும், வழிமுறைகளையும், சாத்தியக்கூறுகளையும் சொல்லி விட்டு, “உங்க பதிவுகள்ல டெக்ஸ்ட {Text} கலர் கலரா போடுறீங்களே. அதனால படிக்கிறது சிரமமாயிடுது. நார்மலாவே போடலாமே” என்று ஒரு கருத்தைச் சொன்னார். “பதிவ திருத்தும்போது நண்பர் ஜெயவேல் கலர்கலரா எழுத்துங்கள மாத்துறாரு. நான் உங்க கருத்த அவர்கிட்ட சொல்றேன்” என்று சொன்னேன். பிறகு ஜெயவேலன் அவர்களிடம் இது குறித்து இன்றுதான் அதுகுறித்துப் பேசினேன். “ஏங்க… படிக்கிறது கஷ்டமாயிருக்கும்னுதான் நானும் நினைச்சேன்…. ஆனா… நான் என்ன செய்றேன் தெரியுமா…? ஒவ்வொரு பதிவுலயும் உள்ள பெயர்ச்சொற்கள்ல மனிதர்களைக் குறிப்பதை ஒரு கலர்லயும், இடங்களைக் குறிப்பதை ஒரு கலர்லயும், உவமைகளை ஒரு கலர்லயும், நீதிகள ஒரு கலர்லயும், முக்கியமான வரிகள ஒரு கலர்லயும், சாத்தியக்கூறுகள்ல சந்தேகம் வர்ற மாதிரி உள்ள வரிகள ஒரு கலர்லயும் மாத்துறேன். நாளைக்குப் பின்ன இது குறிச்சுத் தேடுறவங்களுக்கு, ஈசீயா இருக்கும்… நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார். “சரிதான். செய்யுங்க! ஆனா எழுத்துக்குப் பின்னாடி வர்ற {Background} கலர் வேண்டாமே” என்றேன் நான். அவர், “சரி!” என்றார்.
“அப்புறம், உத்யோக பர்வம் எப்போ ஆரம்பிக்கிறீங்க?” என்று கேட்டார். “ஜனவரி 1, வைகுண்ட ஏகாதசி அன்று ஆரம்பிக்கப் போறேன்” என்றேன். “அதுவரை!” என்றார். “விராட பர்வத்துக்கான “சுவடுகளைத் தேடி” பதிவு எழுதணும். உங்க வைஃப் தேவகி அனுப்பி வச்சிருக்கும், விராட பர்வ ஆடியோ பதிவுகள் பகுதி 56 முதல் 72 வரை வீடியோ புக்கா மாத்தாமலேயே இருக்கு. அதை மாத்தி யூடியூபில போடணும். வனபர்வம் 100 பதிவுங்க ஆடியோ அனுப்பியிருக்காங்க அது இப்ப முடியலனாலும், பின்னயாவது வீடியோ புக்கா மாத்தணும். ஆதிபர்வ பதிவுங்க எதுக்குமே “பதிவின் சுருக்கம்” இல்ல. அதப் போடணும். இது வரை உள்ள நாலு பர்வத்தையும் பிரிண்ட் எடுத்து எங்கப்பாக்கிட்ட கொடுத்துப் படிக்கச் சொல்லிருந்தேன். நிறையப் பிழை சுட்டிக்காட்டியிருக்காங்க. அதையெல்லாம் திருத்தணும். நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் விராடபர்வப் பதிவுகள எல்லாம் திரட்டி இமெயில் அனுப்பிச்சிருக்காரு. அதுக்கு ஒரு ராப்பர் {முகப்பு அட்டை} டிசைன் செய்து, விராட பர்வ பிடிஎஃப்க்கான வேலைய ஆரம்பிக்கணும். வேலையாங்க இல்ல. நிறைய இருக்கு. ஆனா இதையெல்லாம் மூணு நாள்ல செஞ்சுட முடியாது. பொறுமையாத்தான் செய்யணும். பாப்போம்” என்றேன்.
ஜெயவேலன் அவர்களுக்கு இன்று நிறைய வேலைகள் உண்டு என்பதை நான் அறிவேன். இருந்தும், எனக்காக நேரத்தை ஒதுக்கி வந்திருந்தார். அதனால், அதிகம் பேசமுடியவில்லை. உடனே கிளம்பிவிட்டார். ஒவ்வொரு பர்வம் முடிந்தவுடனும் என்னை உற்சாகபடுத்தும் விதமாக மகாபாரதப் பர்வத்தில் வரும் பகுதிகளின் எண்ணிக்கைக்கேற்ப பணம் கொடுத்து வருகிறார்.மாலை வரை அவர் தந்த கவர் கிருஷ்ணன் காலடியிலேயே இருந்தது. என் மனைவி, “கவரை இன்னும் பிரிச்சுக் கூடப் பாக்கல” என்றாள். “இல்ல... சாமிகிட்ட வச்சேன், பிறகு வேலைல மறந்துட்டேன். நீ பாத்திருக்கலாமே” என்றேன். “நீங்க வந்து எடுத்துக் கொடுப்பீங்கனு நினைச்சேன்” என்றாள். “சரி… பிரி” என்று சொல்லி கவரை எடுத்துக் கொடுத்தேன். ரூ.7,200 இருந்தது. “அவரு குடுக்குறார்னு, நீங்களே வாங்கிட்டே இருக்கீங்களே! தப்பில்லையா” என்றாள். “தப்புதான். வாங்கலேனா அவர் மனசு புண்படும். நான் வேற யாருகிட்டயும் வாங்கல. என் நண்பர் நமக்கு மகிழ்ச்சியா கொடுக்கிறார். வாங்கிக்கிறேன்” என்றேன். “ஏங்க… நாம இதுவரை யாருக்காவது இப்படிப் பணம் கொடுத்திருக்கோமா… இல்ல கொடுக்கத்தான் செய்வோமா… இவருக்கு எப்படிங்க மனசு வருது” என்றாள். “அதுதான் ஜெயவேல்” என்றேன். இதையேதான் என் சித்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் வனபர்வம் 313 பகுதிகள் முடிந்தபோதும் கேட்டார். ஜெயவேலன் பணம் தருவது பெரிதல்ல. முழுமஹாபாரதத்திற்கும் அவர் செலுத்தி வரும் உழைப்பே பெரிது. இன்னும் பெரிதினும் பெரிது, அவருடன் அவருடைய மனைவியும் சேர்ந்து ஈடுபாட்டுடன் உதவுவது.
அக்டோபர் மாதம் 22ந்தேதி, தீபாவளி அன்று விராட பர்வ மொழி பெயர்ப்பை ஆரம்பித்தேன். டிசம்பர் மாதம் 28ந்தேதி நிறைவடைந்திருக்கிறது. 68 நாட்களில் 72 பகுதிகளின் மொழிபெயர்ப்பு முடிந்திருக்கிறது. அடுத்து உத்யோக பர்வம் மொழிபெயர்க்க ஆரம்பிக்க வேண்டும். பிழை சுட்டிக்காட்டி முழுமஹாபாரதம் செழுமையடைய வழக்கம் போலவே நண்பர்களான உங்கள் துணை நாடி நிற்கிறேன்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்.
29.12.2014
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.