Satyaki, the dauntless lion! | Udyoga Parva - Section 48b | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வ தொடர்ச்சி – 8) {யானசந்தி பர்வம் - 2}
பதிவின் சுருக்கம் : திரௌபதியின் மகன்கள், சுபத்திரையின் மகன் அபிமன்யு, பிரபத்ரகர்கள், விராடன், துருபதன் ஆகியோரது வீரம் வெளிப்படும்போதும், பீஷ்மரை நோக்கிச் சிகண்டி விரையும்போதும், துரோணரை நோக்கித் திருஷ்டத்யும்னன் விரையும்போதும் துரியோதனன் வருந்த நேரிடும் என்றும், கிருஷ்ணனையும், திருஷ்டத்யும்னனையும் படையின் முன்னணியில் கொண்டோரை எதிரிகளால் எப்படி வீழ்த்த முடியும்? என்றும், எனவே, அரசாட்சியில் துரியோதனன் பேராசை கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்குமாறு சஞ்சயனிடம் அர்ஜுனன் சொன்னது; மேலும் சாத்யகியின் திறன்களைச் சொல்லி, சிங்கத்தைக் கண்ட பசுக்களைப் போல, சாத்யகியைக் கண்ட எதிரிகள் போர்க்களத்தை விட்டு ஓடிவிடுவார்கள் என்றும் அர்ஜுனன் எச்சரித்தது...
{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “கடும் நஞ்சு கொண்ட பாம்புகள் போல, பெரும் வில்லாளிகளும், ஆயுதங்களில் திறன்மிக்கவர்களும், தேர்ச்சண்டைகளின் முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான திரௌபதியின் மகன்கள், எதிரிகளைத் தாக்குவதை எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பகை வீரர்களைக் கொல்பவனும், கிருஷ்ணனைப் போன்றே ஆயுதங்களில் திறன்மிக்கவனுமான அபிமன்யு, எதிரிகள் மீது அடர்த்தியான கணைகளை மேகங்களைப் போலப் பொழிந்து, எப்போது அவர்களை வீழ்த்துவானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
ஆயுதங்களில் திறன்மிக்கவனும், இந்திரனைப் போன்றவனும், வயதில் குழந்தையானாலும் சக்தியில் அப்படியல்லாதவனுமான {குழந்தையல்லாதவனுமான} சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, எதிரிகளின் மீது மரணத்தைப் போல விழுவதை எப்போது காண்பானோ, உண்மையில், அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பெரும் சுறுசுறுப்புடையவர்களும், போர்க்களத்தை நன்கு அறிந்தவர்களும்,சிங்கங்களின் சக்தியை உடையவர்களுமான பிரபத்ரகர்கள் {Prabhadrakas}, படைகளுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்களை எப்போது வீழ்த்துவார்களோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
மூத்த தேர்வீரர்களான விராடரும், துருபதரும், தங்கள் தங்களின் படைப்பிரிவுகளுக்குத் தலைமையேற்று, திருதராஷ்டிரர் மகன்களையும், அவர்களது படையணிகளையும் எப்போது தாக்குவார்களோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
தனது தேரில் அமர்ந்திருக்கும் ஆயுதங்களில் திறன்மிக்கத் துருபதர், இளம் போர்வீரர்களின் தலைகளைக் கொய்ய விரும்பி, தனது வில்லில் இருந்து அம்புகளை அவர்கள் {எதிரணிப் போர்வீரர்கள்} மீது கோபத்துடன் எப்போது அடிப்பாரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பகைவீரர்களைக் கொல்பவரான விராடர், வீரமிக்கத் தனது மத்ஸ்ய போர்வீரர்களின் துணை கொண்டு, எதிரியின் அணிகளுக்குள் ஊடுருவி, அவர்களை {எதிரணிப் போர்வீரர்களை} எப்போது கலங்கடிப்பாரோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
சிறந்த முகம் கொண்டவனும், பெரும் வீரனுமான மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} மூத்த மகன் {உத்தரன்}, தனது தேரில் அமர்ந்து கொண்டு, பாண்டவர்களின் சார்பாகக் கவசம் பூண்டு, {எங்கள்} படையின் முன்னணியில் வருவதை எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
கௌரவ வீரர்களில் முதன்மையானவரான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, போர்க்களத்தில் சிகண்டியால் கொல்லப்படும்போது, எங்கள் எதிரிகள் அனைவரும் அழிந்து போவார்கள் என்பதில் ஐயமில்லை என்று நான் உமக்கு உண்மையாகச் சொல்கிறேன்.
நன்றாகப் பாதுகாக்கப்பட்ட தன் தேரில் அமர்ந்தபடி, எண்ணற்ற தேர்வீரர்களை வீழ்த்தி, வலிமைமிக்கத் தனது குதிரைகளைக் கொண்டு (பகையாளிகளின்) தேர்க்கூட்டங்களை நொறுக்கிபடி, பீஷ்மரை நோக்கி எப்போது சிகண்டி முன்னேறுவானோ, உண்மையில், அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
ஆயுத அறிவியலின் புதிர்களை யாருக்குத் துரோணர் அளித்தாரோ, அந்தத் திருஷ்டத்யும்னன், ஸ்ரீன்ஜயர் {ஸ்ருஞ்சயர்} படையணியின் முன்னணியில் பிரகாசத்துடன் இருப்பதை எப்போது காண்பானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
பாண்டவப் படையின் தலைவனும் {சேனாதிபதியும்}, அளவிலா ஆற்றல் கொண்டவனும், விரைந்து வரும் எத்தகு சக்தியையும் தாக்குப்பிடிக்கக்கூடிய திறன் கொண்டவனுமான அவன் {திருஷ்டத்யும்னன்}, தனது கணைகளால் திருதராஷ்டிரர் படையணிகளை நொறுக்கியபடி, போர்க்களத்தில் துரோணரை நோக்கி எப்போது விரைவானோ, உண்மையில், அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
“எளிமையானவனும், அறிவார்ந்தவனும், வலிமை கொண்டவனும், பெரும் சக்தி கொண்டவனும், அனைத்து வகைச் செழிப்புகளால் அருளப்பட்டவனுமான அந்தச் சோமகர்களின் தலைவனையும் {திருஷ்டத்யும்னனையும்}, விருஷ்ணி குலத்தின் சிங்கத்தையும் {சாத்யகியையும்}, தனது படையின் முன்னணியில் போரிடக்கூடியவர்களாகக் கொண்டிருக்கும் ஒருவனை எந்த எதிரியால் தாங்கிக் கொள்ளமுடியும்? என்பதையும், {எனவே}, (ஆட்சியின் மீது) பேராசை கொள்ளாதே” என்பதையும் (துரியோதனனுக்குச்) சொல்லும்.
ஆயுதங்களில் திறன் பெற்றவனும், உலகத்தில் தனக்கு நிகரற்றவனும், அச்சமற்றவனும், பெரும் பலமிக்கத் தேர்வீரனும், சினியின் பேரனுமான சாத்யகியை நாங்கள் எங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
அகன்ற மார்பு மற்றும் நீண்ட கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனும், போர்க்களத்தில் ஒப்பற்றவனும், சிறந்த ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனும், அவற்றில் திறன்பெற்றவனும், அச்சமற்றவனுமான {மிகுந்த துணிச்சல் கொண்டவனுமான} அந்தச் சினியின் பேரன் {சாத்யகி}, முழுதாக நான்கு முழ நீளம் கொண்ட வில்லைக் கொண்டிருக்கும் வலிமைமிக்கத் தேர்வீரனாவான்.
எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சினிகளின் தலைவன் {சாத்யகி}, என்னால் தூண்டப்பட்டு, எதிரியின் மீது தனது கணைகளை மேகம் போலப் பொழிந்து, அந்தப் பொழிவால் அவர்களது {எதிரிகளது} தலைவர்களை முழுவதுமாக எப்போது வீழ்த்துவானோ, அப்போது திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
நீண்ட கரங்களுடையவனும், வில்லை உறுதியாகப் பிடிப்பவனுமான அந்த ஒப்பற்ற போர் வீரன் {சாத்யகி}, போருக்கான தீர்மானத்தை எப்போது திரட்டுவானோ, அப்போது, சிங்கத்தின் மணத்தை நுகர்ந்த பசுக்களைப் போல, போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே எதிரிகள் அவனிடம் {சாத்யகியிடம்} இருந்து ஓடிவிடுவார்கள். நீண்ட கரங்களையுடையவனும், வில்லை உறுதியாகப் பிடிப்பவனுமான அந்த ஒப்பற்ற போர்வீரன் {சாத்யகி}, மலைகளைப் பிளக்கவும், மொத்த அண்டத்தை அழிக்கவும் வல்லவனாவான்.
ஆயுதங்களைப் பயின்று, (போர்களத்தில்) திறன்பெற்று, மிகுந்த இலகுவான {வேகமான} கரங்களைக் கொண்ட அவன் {சாத்யகி}, வானத்தில் சூரியன் போல, போர்க்களத்தில் ஒளிர்பவனாவான். மேன்மையான பயிற்சி பெற்றவனும், யது பரம்பரையின் கொழுந்தும், விருஷ்ணி குலத்தின் சிங்கமுமான அவன் {சாத்யகி}, மாறுபட்ட, அற்புதமான மற்றும் சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருக்கிறான்.
உண்மையில், ஆயுதங்களைப் பயன்படுத்துவோரில் உயர்ந்த அற்புத நிலையை அடைந்திருப்போர் கொண்டிருக்கும் அறிவு அத்தனையையும் சாத்யகி கொண்டிருக்கிறான். நான்கு வெள்ளைக் குதிரைகளால் இழுக்கப்படும் தங்கத் தேரில் மது குலத்தின் சாத்யகி வருவதை எப்போது பார்ப்பானோ, அப்போது, கட்டுப்பாடற்ற உணர்வுகளைக் கொண்ட இழிந்தவனான திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} வருந்துவான்.