Vasudeva is my ally! | Udyoga Parva - Section 48c | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வ தொடர்ச்சி – 8) {யானசந்தி பர்வம் - 2}
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனால் வழிநடத்தப்படும் தேரைக் காணும்போதும், காண்டீவத்தின் நாணொலியைக் கேட்கும்போதும், தன்னால் கணைகள் அடிக்கப்படும்போதும், தனது தம்பிகள் வீழ்வதைக் காணும்போதும் , கிருஷ்ணன், பாஞ்சஜன்யம், அர்ஜுனன், அம்பாறத்தூனிகள், தேவதத்தம், வெண்குதிரைகள் ஆகியவற்றைத் தனது தேரில் காணும்போதும் துரியோதனன் இந்தப் போருக்காக வருந்துவான் என்று அர்ஜுனன் சொன்னது...
{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “தங்கம் மற்றும் ஒளி பொருந்திய ரத்தினங்களின் பிரகாசத்துடன் கூடியதும், வெள்ளைக் குதிரைகளால் இழுக்கப்படுவதும், குரங்கு {அனுமன்} இலச்சனை பொறித்த பதாகை {கொடி} தாங்கியதும், கேசவனால் {கிருஷ்ணனால்} வழிநடத்தப்படுவதுமான எனது பயங்கரத் தேரை எப்போது காண்பானோ, அப்போது, கட்டுப்பாடற்ற உணர்வுகளைக் கொண்ட அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.
தோலுறைகளால் பாதுகாக்கப்படும் விரல்களைக் கொண்டு, எப்போதும் வளைத்தே வைக்கப்பட்டிருக்கும் எனது வில்லான காண்டீவத்தின் நாண் கயிற்றில் இடி உருளுவது போன்று உரத்து உண்டாக்கும் பயங்கர ஒலியை எப்போது கேட்பானோ, பசுக்களைப் போலப் போர்க்களத்தின் எல்லாப்புறங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் தனது துருப்புகளால் தான் கைவிடப்பட்டதை எப்போது காண்பானோ, அப்போது எனது அம்பு மழையால் உண்டாகும் இருளில் மூழ்கும் அந்த இழிந்த துன்மார்க்கான அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} வருந்துவான்.
அழகிய இறகுகள் படைத்தவையும், உயிர்நிலையையே துளைக்கவல்லவையும், காண்டீவத்தின் நாணில் இருந்து அடிக்கப்படுபவையும், மேங்களில் இருந்து உமிழப்படும் பயங்கரமான கடுமையான மின்னல்க்கீற்றுகளைப் போன்றவையுமான எண்ணிலடங்கா கூரிய கணைகள், எதிரிகளை ஆயிரக்கணக்கில் அழித்தபடி, கவசம் பூண்ட யானைகளையும், எண்ணிலடங்கா குதிரைகளையும் விழுங்கியபடி செல்வதை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
எதிரியால் அடிக்கப்படும் கணைகள், எனது கணைகளால் அணைக்கப்பட்டோ, திருப்பப்பட்டோ, அல்லது எனது கணைகளால் குறுக்கு வெட்டாக வெட்டப்பட்டுத் துண்டுகளாக்கப்பட்டோ போவதை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது மூடனான அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
எனது கைகளால் அடிக்கப்படும் அகன்ற தலை கொண்ட கணைகள், மர உச்சிகளில் இருக்கும் கனிகளைப் பறவைகள் கொய்வதைப் போல, இளம் போர்வீரர்களின் தலைகளை எப்போது கொய்யுமோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
தங்கள் தேர்களில் இருந்தும், யானைகளில் இருந்தும், குதிரைகளில் இருந்தும் எனது அம்புகளால், களத்தில் உயிரற்று உருளும் அற்புத போர்வீரர்களை எப்போது அவன் {துரியோதனன்} காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
போரில் எதையும் சாதிக்காமலே, பகைவனின் {என்னுடைய} ஆயுத எல்லைக்குள் வரும் முன்பாகவே, சுற்றிலும் தனது தம்பிகள் இறந்து விழுவதை எப்போது காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
விரிந்த வாயுடைய மரணத்தைப் {காலனைப்} போன்ற எனது சுடர்மிகும் கணைகளைத் தடையில்லாமல் பொழிந்து, அனைத்துப் புறங்களிலும் உள்ள தேர்க்கூட்டங்களையும், காலாட்படை வீரர்களையும் எப்போது நான் அழிப்பேனோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.
அனைத்துப்புறங்களிலும் உலவும் எனது தேர் எழுப்பும் புழுதியால் மூடப்பட்டும், எனது காண்டீவத்தால் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டும், தன் படைகள் மதிமயங்கி நிற்பதை எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.
உறுப்புகள் சிதைக்கப்பட்டும், உணர்வுகள் இழந்தும், அச்சத்தால் தனது படைகள் எல்லாப்புறங்களிலும் ஓடுவதை அவன் {துரியோதனன்} எப்போது காண்பானோ; தனது குதிரைகள், யானைகள் மற்றும் தனது வீரர்களில் முதன்மையானோர் கொல்லப்படுவதை அவன் {துரியோதனன்} எப்போது காண்பானோ; தங்கள் விலங்குகள் அழிந்ததும், தாகத்துடன் பீதியடைந்தும், உரக்க அழுது, இறந்தும், இறந்து கொண்டும் இருக்கும் தனது படைகள், படைப்பாளனின் {பிரம்மனின்} முடிவடையாத வேலைகளைப் [1] போல, மயிர், எலும்புகள், மண்டையோடுகள் ஆகியன சுற்றிலும் குவியலாகக் கிடப்பதை எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்த இழிந்தவன் {துரியோதனன்} வருந்துவான்.
[1] பிரஜாபதியைத் தேவதையாகக் கொண்ட வாஜபேய வேள்வியில் பதினேழு பசுக்கள் [அதாவது குதிரை, மான் போன்ற வேள்வி விலங்குகள். இங்கே பசு என்பது விலங்கு என்றே பொருள்படும்] கொல்லப்பட்டுச் சிதறிக் கிடப்பதைப் போல.
காண்டீவம், வாசுதேவன் {கிருஷ்ணன்}, தெய்வீகச் சங்கான பஞ்சஜன்யம், {அர்ஜுனனாகிய} நான், எனது இரு வற்றாத அம்பறாத்தூணிகள், தேவதத்தம் என்றழைக்கப்படும் எனது சங்கு, எனது வெண்குதிரைகள் ஆகியவற்றை என் தேரில் எப்போது அவன் காண்பானோ, அப்போது அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} இந்தப் போருக்காக வருந்துவான்.
யுகமுடிவில், மற்றொரு யுகத்தின் ஆரம்பத்தில், கூடியிருக்கும் எண்ணிலடங்கா தீய ஆன்மாக்களை எரிக்கும் அக்னி போல, கௌரவர்களை நான் எப்போது எரிப்பேனோ, அப்போது திருதராஷ்டிரர் தனது மகன்கள் அனைவருடனும் வருந்துவார்.
தனது தம்பிகளுடனும், படைகளுடனும், தொண்டர்களுடனும் கூடியவனும், கோபம் நிறைந்த தீய இதயம் கொண்டவனுமான திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, எப்போது செழிப்பை இழப்பானோ, அப்போது கர்வத்தை இழந்து, இதயம் {உற்சாகம்} இழந்து, மேனி முழுதும் நடுக்கம் கொள்ளும் அந்த மூடன் {துரியோதனன்} வருந்துவான்.
எனது நீர்ச்சடங்குகளையும், துதிகளையும் {பிரார்த்தனைகளையும்} முடித்த ஒரு காலைப்பொழுதில், ஓர் அந்தணர் என்னிடம் இந்த இனிமையான வார்த்தைகளில், “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ மிகக் கடினமான ஒரு பணியை நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, நீ உன் எதிரிகளுடன் போராட வேண்டியிருக்கும். போர்க்களத்தில் உனக்கு முன்பாக, வஜ்ரத்தைக் கையில் கொண்டு குதிரையில் வரும் இந்திரனோ, அல்லது சுக்ரீவத்தின் தலைமை கொண்ட குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் வரும் வசுதேவரின் மகனான கிருஷ்ணன், உனக்குப் பின்னால் இருந்தோ காப்பார்கள்” என்றான்.
அந்த வார்த்தைகளை நம்பிய {அர்ஜுனனாகிய} நான், இந்தப் போர்க்களத்தில் வஜ்ரதாங்கியான இந்திரனை விட்டுக் கடந்து, வாசுதேவனையே {கிருஷ்ணனையே} எனது கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்தேன். தீயோரை அழிக்கவே நான் கிருஷ்ணனை அடைந்தேன். இவை அனைத்திலும் தேவர்களின் கையை நான் காண்கிறேன். ஒரு மனிதனின் வெற்றிக் கிருஷ்ணனால் விரும்பப்பட்டால், பின்னவன் {அந்த கிருஷ்ணன்} உண்மையில் தன் சார்பாக ஆயுதத்தை எடுக்கவில்லையெனினும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாவே அந்த எதிரிகள் இருந்தாலும் கூட, அவர்கள் அனைவரையும் விட அவன் {அந்த மனிதன்} விஞ்சியே நிற்பான். அப்படியிருக்கையில், மனிதர்கள் காரியத்தில் கவலையே கிடையாது”