This Karna is a wretch | Udyoga Parva - Section 49 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 9) {யானசந்தி பர்வம் - 3}
பதிவின் சுருக்கம் : பீஷ்மர் சொன்ன நர நாராயணர்களின் கதை; நர நாராயணர்களே அர்ஜுனனும் கிருஷ்ணனும் என்றது; கர்ணன், சகுனி, துச்சாசனன் ஆகிய மூவரின் கருத்தை மட்டுமே உண்மையெனத் துரியோதனன் ஏற்பதாகப் பீஷ்மர் குற்றஞ்சாட்டுவது; தன்னை இழிவாகப் பேசுவது தகாது என கர்ணன் பீஷ்மரிடம் கேட்பது; கர்ணன் தற்பெருமைக்காரன் என்றும்; பாண்டவர்களில் பதினாறில் ஒரு பங்குக்குக்கூட அவன் ஒப்பாக மாட்டான் என்று பீஷ்மர் சொல்வது; பீஷ்மரின் சொல்லை ஏற்கும்படி துரோணர் திருதராஷ்டிரனிடம் சொல்வது; திருதராஷ்டிரன் துரோணரையும், பீஷ்மரையும் அலட்சியம் செய்து சஞ்சயனிடம் பாண்டவர்களைக் குறித்து மீண்டும் விசாரித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கு மத்தியில் சந்தனுவின் மகனான பீஷ்மர், துரியோதனனிடம், “ஒரு காலத்தில், பிருஹஸ்பதியும் சுக்ரனும் {சுக்ராச்சாரியரும்} [1] பிரம்மனிடம் சென்றார்கள். இந்திரனோடு சேர்ந்து மருதர்களும், அக்னியோடு சேர்ந்து வசுக்களும், ஆதித்தியர்களும், சத்யஸ்களும் {சாத்தியர்களும்}, ஏழு தெய்வீக முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, கந்தர்வர்களும், விஸ்வவசு மற்றும் அப்சரஸ்சுகளின் அழகிய குலமும் அந்தப் பழமையான பெரும்பாட்டனை {பிரம்மனை} அணுகினார்கள். அந்த அண்டத்தின் தலைவனை {பிரம்மனை} வணங்கிய சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, அவனை {பிரம்மனைச்} சுற்றி அமர்ந்தனர். அதே நேரத்தில், தங்கள் மனங்களால் தங்கள் சக்தியை தங்களுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல, பழமையான இரு தெய்வங்களான முனிவர்கள் நரனும், நாராயணனும், அங்கே இருந்த அனைவரின் சக்திகளையும் இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
[1] இங்கே கங்குலியில் Sakra என்று இருக்கிறது. ஆனால் உடனே அதைத் தொடர்ந்து, The Maruts also with Indra என்ற சொற்களும் தொடர்வதால், அது Sukra என்றிருக்க வேண்டும் என்று கருதியே இங்கே சுக்ராச்சாரியர் என்று இட்டிருக்கிறேன். வேறு பதிப்புகளில் இங்கே சுக்கிராச்சாரியர் என்றே இருக்கிறது.
அதன்பேரில், பிருஹஸ்பதி பிரம்மனிடம், “உம்மை வழிபடாமல் இந்த இடத்தை விட்டுச் செல்லும் இந்த இருவரும் யார்? ஓ பெரும்பாட்டனே {பிரம்மனே}, எங்களுக்குச் சொல்லும். இவர்கள் யார்?” என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்ட பிரம்மன், “தவத்தகுதியுடையவர்களும், தங்கள் பேரொளி மற்றும் அழகால் சுடர்விட்டு, பூமி, சொர்க்கம் ஆகிய இரண்டுக்கும் ஒளியூட்டுபவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், அனைத்திலும் ஊடுருவி, அனைத்தையும் கடந்திருப்பவர்களுமான இந்த இருவரும், வேறு உலகத்தில் இருந்து வந்து, தற்போது இங்கே வசித்து வரும் நரனும், நாராயணனும் ஆவார்கள். பெரும் வலிமையும் ஆற்றலும் உடைய அவர்கள், தங்கள் சொந்த தவத்தின் விளைவால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் செயல்களால் அவர்கள் உலகத்தின் மகிழ்ச்சிக்கு எப்போதும் பங்களித்து வருகிறார்கள். தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடப்படும் அவர்கள் {நரனும் நாராயணனும்}, அசுரர்களின் அழிவுக்காக மட்டுமே நிலைத்திருக்கிறார்கள்” என்றான் {பிரம்மன்}”
பீஷ்மர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைக் கேட்ட சக்ரன் {இந்திரன்}, அவ்விருவரும் {நரனும், நாராயணனும்} தவம்பயின்று கொண்டிருந்த இடத்திற்கு, பிருஹஸ்பதி முதலான அனைத்துத் தேவர்களுடன் சென்றான். அந்நேரத்தில், சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, தங்களுக்கும், அசுரர்களும் இடையில் ஏற்பட்டிருந்த போரின் விளைவை எண்ணி மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.
ஒப்பற்றிருந்த அந்த இருவரிடமும், இந்திரன் ஒரு வரத்தைத் தருமாறு வேண்டினான். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {துரியோதனா}, இப்படிக் கேட்கப்பட்டதும், அந்த இருவரும், “வரத்தைக் கேள்?” என்றனர். அதற்குச் சக்ரன் {இந்திரன்} அவர்களிடம் {நரன் மற்றும் நாராயணனிடம்}, “எங்களுக்கு உங்கள் உதவியைக் கொடும்” என்றான். அதற்கு அவர்கள் சக்ரனிடம் {இந்திரனிடம்}, “நீ விரும்பியதை நாங்கள் செய்வோம்” என்றனர். பிறகு, அவர்களது உதவியைக் கொண்ட சக்ரன் {இந்திரன்}, அதன் தொடர்ச்சியாகத் தைத்தியர்களையும், தானவர்களையும் [2] வீழ்த்தினான். எதிரிகளைத் தண்டிப்பவனான நரன், பௌலோமர்கள் மற்றும் காலகஞ்சர்கள் மத்தியில் இருந்த இந்திரனின் எதிரிகளை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் போர்க்களத்தில் கொன்றான்.
[2] திதியின் மகன் தைத்தியர்கள், தானுவின் மகன்கள் தானவர்கள். திதியும், தானுவும் தக்ஷனின் மகள்களாவர்.
அசுரன் ஜம்பன் தன்னை விழுங்க வந்த போது, சுழன்று வரும் தேரை நடத்தி, அகன்ற தலை கொண்ட கணைகளைக் கொண்டு அவனது {ஜம்பனுடைய} தலையைக் கொய்தவன் இந்த அர்ஜுனனே. அறுபதாயிரம் நிவாதகவசர்களை வீழ்த்தி, கடலுக்கு அக்கரையைத் (ஹிரண்யபுரம் எனும் தைத்தியர் நகரைத்) துன்புறுத்தியவன் {அழித்தவன்} அவனே {இந்த அர்ஜுனனே}. வலிய கரங்களைக் கொண்டவனும், பகை நகரங்களை வெல்பவனுமான அவனே {இந்த அர்ஜுனனே}, இந்திரன் தலைமையிலான தேவர்களையே வீழ்த்தி {காண்டவ வனத்தில்} அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்தவன் ஆவான்.
இதே போல, இவ்வுலகில், எண்ணிலடங்கா பிற தைத்தியர்களையும், தானவர்களையும் நாராயணனும் கொன்றான். வலிமைமிக்க சக்தியைக் கொண்ட அந்த இருவரை {நரனையும் நாராயணனையும்} போன்றவர்களே, இப்போது ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகக் காணப்படுபவர்கள் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்} ஆவர். ஒருவருக்கொருவர் இப்போது ஒற்றுமையாகக் காணப்படும் இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், அந்தப் பழங்கால தெய்வங்களான அதே தெய்வீக நரனும், நாராயணனுமே ஆவர்.
இவ்வுலகத்திலுள்ளோர் அனைவரைக் காட்டிலும், அசுரர்களாலும், இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவர்கள் அவர்களே {அர்ஜுனனும் கிருஷ்ணனுமே}. கிருஷ்ணனே அந்த நாராயணன். பல்குனனே {அர்ஜுனனே} அந்த நரன். உண்மையில், அவர்கள் ஈருடலில் இருக்கும் ஒரே ஆன்மா. அவர்கள் தங்கள் செயல்களால் {கர்மத்தால்}, அழிவடையாத நித்திய உலகங்களை அனுபவிக்கின்றனர். இவ்வுலகில் அழிவை ஏற்படுத்தக்கூடிய போர்களுக்கான அவசியம் ஏற்படும்போது, அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். இதன் காரணமாகவே, போரே அவர்களது நோக்கமாக இருக்கிறது.
வேதங்களை அறிந்தவரான நாரதர், இதையே விருஷ்ணிகளிடம் சொல்லியிருக்கிறார். ஓ! துரியோதனா, கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதத்துடன் கேசவனையும் {கிருஷ்ணனையும்}, பயங்கர வில்லையும் {காண்டீவத்தையும்}, ஆயுதங்களையும் தாங்கியிருக்கும் அர்ஜுனனையும் எப்போது காண்பாயோ, நித்தியமான, ஒப்பற்றவர்களான அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்கள் என்று பொருளும் இங்கே வரும்} ஒரே தேரில் அமர்ந்திருப்பதை எப்போது காண்பாயோ, ஓ! குழந்தாய் {துரியோதனா}, அப்போது, எனது இந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வாய்.
ஓ! குழந்தாய் {துரியோதனா}, பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டில் இருந்தும் உனது அறிவு வீழ்ந்து விட்ட பிறகு, இத்தகு ஆபத்து, குருக்களை {கௌரவர்களை} ஏன் அச்சுறுத்தாது? எனது வார்த்தைகளுக்கு நீ செவிசாய்க்கவில்லையெனில், பலரின் படுகொலைகளை நீ கேள்விப்பட வேண்டியிருக்கும். ஏனெனில், குருக்கள் அனைவரும் உனது கருத்தையே ஏற்கின்றனர். {உன்னுடைய கொள்கையையே கௌரவர்கள் அனைவரும் பின்பற்றுகின்றனர்}. ஓ! பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, ராமரால் {பரசுராமரால்} சபிக்கப்பட்டவனும், இழிபிறப்பு கொண்டவனும், சூதனின் மகனுமான கர்ணன், சுபலனின் மகன் சகுனி, அற்பனும், பாவியுமான உனது தம்பி துச்சாசனன் ஆகிய மூவரின் கருத்தே உண்மை என நீ மட்டுமே ஏற்கிறாய்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் {பீஷ்மர்}.
கர்ணன் {பீஷ்மரிடம்}, “ஓ! அருளப்பட்டவரே! பாட்டா, என்னிடம் இத்தகு வார்த்தைகளைப் பயன்படுத்துவது உமக்குத் தகாது. ஏனெனில், சொந்த வகையின் {சுயதர்மத்தின்} கடமைகளில் இருந்தும் வீழாமல், க்ஷத்திரிய வகைக்கான {க்ஷத்திரிய தர்மத்தின்} கடமைகளையும் நான் பின்பற்றி வருகிறேன். அதுதவிர, வேறு என்ன பொல்லாப்பு {துர்க்குணம்} என்னிடம் இருக்கிறது? திருதராஷ்டிரரின் மக்கள் யாரும் அறிய வண்ணம் பாவம் எதையும் நான் செய்யவில்லை. திருதராஷ்டிரரின் மகனுக்கு {துரியோதனனுக்கு} எந்தக் காயத்தையும் {தீங்கையும்} நான் செய்தவனில்லை; மறுபுறம், போரில் நான் பாண்டவர்கள் அனைவரையும் கொல்வேன். முன்பே {நம்மால்} காயம் பட்டவர்களிடம், அறிவுடையோர், எப்படி அமைதியை {சமாதானத்தை} மீண்டும் ஏற்படுத்த முடியும்? மன்னர் திருதராஷ்டிரருக்கும், பேரரசைக் கொண்டவனாதலால், குறிப்பாகத் துரியோதனனுக்கும் ஏற்புடைய அனைத்தையும் எப்போதும் செய்ய வேண்டியது எனது கடமையாகும்” என்றான் {கர்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கர்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், மீண்டும் திருதராஷ்டிரனிடம், ““நான் பாண்டவர்களைக் கொல்வேன்” என்று இவன் {கர்ணன்}, அடிக்கடி தற்பெருமை பேசி வந்தாலும், உயர் ஆன்மா கொண்ட {மகாத்மாக்களான} பாண்டவர்களின் பதினாறில் ஒரு பங்குக்கும் இவன் {கர்ணன்} ஈடாக மாட்டான். தீய ஆன்மாக்கள் கொண்ட உன் மகன்களுக்கு நேரப்போகும் பெரும் ஆபத்து, சூதனின் கேடுகட்ட மகனான இவனது {கர்ணனின்} செயல்களாலேயே ஏற்படப்போகிறது என்று அறிந்து கொள்வாயாக.
இவனை {கர்ணனை} நம்பி, தெய்வீக வழித்தோன்றல்களும் {வம்சாவளியினரும்}, எதிரிகள் அனைவரையும் தண்டிப்பவர்களுமான அந்த வீரர்களை {பாண்டவர்களை} உன் முட்டாள் மகனாகிய சுயோதனன் {துரியோதனன்} அவமதித்தான். எனினும், பாண்டவர்கள் ஒவ்வொருவராலும் பழங்காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளில் ஏதாவது ஒன்றுக்கு இணையாகவாவது இந்த இழிந்தவனால் முன்னர்ச் செய்யப்பட்ட கடினமான சாதனை என்ன? {பாண்டவர்களில் ஒருவர் சாதித்த ஏதேனும் ஒரு சாதனைக்கு இணையாகவாவது இந்த இழிந்தவன் என்ன செய்திருக்கிறான்?}
விராடனின் நகரத்தில், பெரும் ஆற்றலை வெளிப்படுத்திய தனஞ்சயனால் {அர்ஜுனனால்}, இவனது அன்பிற்குரிய தம்பி கொல்லப்பட்டதைக் கண்ட பிறகும் இவன் என்ன செய்தான்?
பசுமந்தையைக் காணச் சென்ற {கோஷ யாத்திரை சென்ற} உனது மகன் {துரியோதனன்}, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட போது, காளை போல இப்போது முழங்கும் இந்தச் சூத மகன் {கர்ணன்} எங்கே இருந்தான்?
பீமனும், ஒப்பற்ற பார்த்தனும் {அர்ஜுனனும்}, இரட்டையர்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்} தான் அங்கேயும் கந்தர்வர்களுடன் மோதி அவர்களை {கந்தர்வர்களை} வீழ்த்தினர்.
ஓ! பாரதகுலத்தின் காளையே, நீ அருளப்பட்டிருப்பாயாக. எப்போதும் அழகாகவும், எப்போதும் அறம் பொருள் ஆகிய இரண்டையும் கொண்டிராத இவை, இவனால் {கர்ணனால்} சொல்லப்படும் பல தவறான {பொய்} வார்த்தைகளே” என்றார் {பீஷ்மர்}.
பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பரத்வாஜரின் உயர் ஆன்ம மகன் {துரோணர்}, திருதராஷ்டிரனுக்கும், அங்கே கூடியிருந்த மன்னர்களுக்கும் உரிய மரியாதைகளைச் செலுத்திவிட்டு “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, பாரதர்களில் சிறந்தவரான பீஷ்மர் சொல்வதைச் செய். செல்வத்தில் பேராசை கொண்டோரின் வார்த்தைகளின்படி செயல்படுவது உனக்குத் தகாது. போர் ஏற்படுவதற்கு முன்னரே பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதே சிறந்ததாகத் தெரிகிறது. அர்ஜுனனால் சொல்லப்பட்டு, சஞ்சயனால் மீண்டும் உரைக்கப்பட்ட அனைத்தையும், பாண்டுவின் அந்த மகனால் {அர்ஜுனனால்} சாதிக்க இயலும் என்பதை நான் அறிவேன். ஏனெனில், மூவுலகிலும் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} நிகரான வில்லாளி யாரும் கிடையாது” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் {துரோணர்}.
எனினும், துரோணர் மற்றும் பீஷ்மர் ஆகிய இருவராலும் பேசப்பட்ட வார்த்தைகளை அலட்சியம் செய்த மன்னன் {திருதராஷ்டிரன்}, மீண்டும் பாண்டவர்கள் குறித்துச் சஞ்சயனிடம் கேட்டான். பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோருக்கு உரிய பதிலை மன்னன் {திருதராஷ்டிரன்} தெரிவிக்காத அந்தக் கணமே, வாழ்வின் அனைத்து நம்பிக்கைகளையும் கௌரவர்கள் கைவிட்டனர் {உயிரில் ஆசையற்றவர்களானார்கள்}” என்றார் {வைசம்பாயனர்}.