The rebirth of Amba? | Udyoga Parva - Section 50 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 10) {யானசந்தி பர்வம் - 4}
பதிவின் சுருக்கம் : பாண்டவர் தரப்பில் யாரெல்லாம் போருக்கு ஆவலாக இருப்பதாகத் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்டது; பாஞ்சாலர்களும் பாண்டவர்களும் ஆவலாக இருப்பதாகச் சஞ்சயன் சொன்னது; யுதிஷ்டிரனுக்கு உதவப் போகும் படைகளைக் குறித்துத் திருதராஷ்டிரன் கேட்டது; சஞ்சயன் காரணமேதுமில்லாமல் மயங்கி விழுந்தது; மீண்டும் உணர்வு பெற்ற சஞ்சயன், யாரெல்லாம் பாண்டவர்களுக்கு உதவுவார்கள், அவர்களது தகுதிகள் என்ன என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது...
சிகண்டினி(பெண் பால்) _ சிகண்டி(ஆண் பால்) காசி மன்னனின் மகள் அம்பையின் மறுபிறவி |
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, நமக்கு மகிழ்வூட்டும்படி இங்கே கூடியிருக்கும் பெரும்படையைக் குறித்துக் கேள்விப்பட்ட பிறகு, பாண்டவ மன்னனான தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} என்ன சொன்னான்? வரப்போகும் மோதலைக் கருத்தில் கொண்டு யுதிஷ்டிரன் எப்படிச் செயல்படுகிறான்? ஓ! சூதா {சஞ்சயா}, அவனது உத்தரவைப் பெற விரும்பி, அவனின் {யுதிஷ்டிரனின்} சகோதரர்களிலும், மகன்களிலும் யாரெல்லாம் அவனது {யுதிஷ்டிரனது} முகத்தைப் பார்க்கிறார்கள்? அதே போல, எனது தீய மகன்களால் ஏமாற்றப்பட்டவனும் அறநெறி அறிந்தவனும், அறம்சார்ந்த நடத்தை கொண்டவனுமான அந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்}, யாரெல்லாம், “அமைதியை ஏற்றுக் கொள்ளும்” என்று அறிவுரைசொல்லித் தடுக்கிறார்கள்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “பாண்டுவின் {யுதிஷ்டிரனைத் தவிர்த்த} பிற மகன்களுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரும் யுதிஷ்டிரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். நீர் அருளப்பட்டிரும். அவனும் {யுதிஷ்டிரனும்} அவர்கள் அனைவரையும் தடுத்துக் கொண்டிருக்கிறான். குந்தி மகனான யுதிஷ்டிரனை மகிழ்விப்பதற்காக, பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களுக்குச் சொந்தமான தேர்க்கூட்டங்கள் போர்க்களத்தில் அணிவகுக்கத் தயாராகத் தனித்தனி அணிகளாக வந்து கொண்டிருக்கின்றன.
சூரியன் உதிக்கும்போது பிரகாசிக்கும் வானத்தைப் போன்றதும், ஒளிவெள்ளம் எழுந்தது போன்றதுமான சுடர்மிகும் பிரகாசத்தைக் கொண்ட குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} தாங்கள் கொண்ட கூட்டணியால் பாஞ்சாலர்கள் மகிழ்கிறார்கள். பாஞ்சாலர்கள், கேகயர்கள், ஆடுமாடுகளைக் கவனித்துக் கொள்ளும் பசுமந்தையாளர்களுடன் கூடிய மத்ஸ்யர்கள் ஆகியோர் தாங்களும் மகிழ்ந்து, பாண்டு மகனான யுதிஷ்டிரனையும் மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள். விளையாட்டு மனநிலையுடன் கூடிய பிராமண மற்றும் க்ஷத்திரியப் பெண்களும், வைசியர்களின் மகள்களும், கவசம் தரித்த பார்த்தனை {அர்ஜுனனைக்} காண பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கின்றனர்” என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, நம்முடன் போரிடும் முனைப்புடைய, திருஷ்டத்யும்னன், சோமகர்கள் மற்றும் பிறர் ஆகியோரின் படைகள் அனைத்தையும் குறித்து எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “குருக்களின் மத்தியில் இப்படிக் கேட்கப்பட்ட கவல்கணன் மகன் {சஞ்சயன்}, ஒருக்கணம் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் நீண்ட ஆழமான பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விடுவதாகத் தெரிந்தது. திடீரென எந்த வெளிப்படையான காரணமுமின்றி, அவன் {சஞ்சயன்} மூர்ச்சையாகிக் கீழே விழுந்தான்.
பிறகு அந்த மன்னர்கள் கூட்டத்தில் விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, சஞ்சயன் உணர்வற்றுத் தரையில் விழுந்துவிட்டான். தன் அறிவு மறைக்கப்பட்டு, உணர்வற்றிருக்கும் அவனால் ஒரு வார்த்தையும் உச்சரிக்க இயலவில்லை” என்று உரக்கச் சொன்னான் {விதுரன்}.
திருதராஷ்டிரன், “பெரும் வலிமைமிக்கத் தேர்வீரர்களான குந்தியின் மகன்களைச் சஞ்சயன் கண்டிருக்கிறான். மனிதர்களில் புலிகளான அவர்களின் {பாண்டவர்களைக் கண்டதன்} விளைவாகவே அவனது மனம் பெரும் கவலையால் நிறைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மீண்டும் உணர்வையும் தேறுதலையும் அடைந்த சஞ்சயன், அந்தச் சபையில் கூடியிருந்த குருக்களின் கூட்டத்திற்கு மத்தியில் இருந்த மன்னன் திருதராஷ்டிரனிடம், “ஓ! மன்னர்களுக்கு மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில், மத்ஸ்ய மன்னனின் இடத்தில் வாழ்ந்து, அங்கே இருந்த கட்டுப்பாடுகளின் விளைவாக உடல் மெலிந்திருந்த பெரும் போர்வீரர்களான குந்தியின் மகன்களை நான் கண்டேன்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யார் யாருடன் சேர்ந்து பாண்டவர்கள் உமக்கு எதிராகப் போரிடுவார்கள் என்பதைக் கேட்பீராக.
வீரனான அந்தத் திருஷ்டத்யும்னனைத் தங்கள் கூட்டாளியாகக் கொண்டு, அவர்கள் {பாண்டவர்கள்} உம்மை எதிர்த்து போரிடுவார்கள். அறம்சார்ந்த ஆன்மாவைக் கொண்டவனும் {தர்மாத்மாவும்}, கோபத்தாலோ, அச்சத்தாலோ, மயக்கத்தாலோ, செல்வத்துக்காகவோ, வீண் தர்க்கத்திற்காகவோ ஒருபோதும் உண்மையை {சத்தியத்தைக்} கைவிடாதவனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறம்சார்ந்த விவகாரங்களில் அனைத்து அதிகாரத்தையும் பெற்றவனும், அறம்பயில்வோரில் சிறந்தவனும், ஒருபோதும் யாரையும் எதிரியாக்காதவனாக இருப்பவனுடன் {யுதிஷ்டிரனுடன்} சேர்ந்து பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவர்.
கரங்களின் வலிமையால் இவ்வுலகில் தனக்கு இணையில்லாதவனும், தனது வில்லைக் கொண்டு அனைத்து மன்னர்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தவனும், காசி, அங்கம், மகதம், கலிங்கம் ஆகிய அனைத்து மக்களையும் பழங்காலத்தில் வீழ்த்தியவனுமான பீமசேனனோடு சேர்ந்து பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவர்.
உண்மையில், எவனது வலிமையால் பாண்டுவின் நான்கு மகன்களும் (எரிந்து கொண்டிருந்த) அரக்கு மாளிகையில் இருந்து வெளிப்பட்டு, விரைந்து பூமியில் இறங்கினார்களோ, அவனுடன் {பீமனுடன்}; மனித ஊனுண்ணியான ஹிடிம்பனிடம் இருந்து அவர்களை மீட்பற்கு காரணமாக இருந்த அந்தக் குந்தியின் மகனான விருகோதரனுடன் {பீமனுடன்}; யக்ஞசேனன் மகள் {துருபதன் மகள் திரௌபதி}, ஜெயத்ரதனால் கடத்தப்பட்ட போது அவர்களின் {பாண்டவர்களின்} புகலிடமான அந்தக் குந்தியின் மகனான விருகோதரனுடன் {பீமனுடன்}; உண்மையில், வாரணாவதத்தின் நெருப்பில் இருந்து அங்கே கூடியிருந்த பாண்டவர்களை மீட்ட அந்தப் பீமனுடன் சேர்ந்து அவர்கள் {பாண்டவர்கள்} உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
கிருஷ்ணையை {திரௌபதியை} மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, மேடு பள்ளம் நிறைந்த, பயங்கரமான கந்தமாதன மலையில் ஊடுருவி எவன் குரோதவசர்களைக் கொன்றனோ, எவனுடைய கரங்களுக்குப் பத்தாயிரம் {10,000} யானைகளின் பலம் கொடுக்கப்பட்டதோ அந்தப் பீமசேனனோடு சேர்ந்து (அவனைத் துணையாகக் கொண்டு) பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
அக்னியை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, பழங்காலத்தில் போரில் புரந்தரனையே {இந்திரனையே} எந்த வீரன் வென்றானோ; தேவர்களின் தேவனும் {தேவாதி தேவனும்}, திரிசூலம் தாங்குபவனும், உமையின் கணவனும், மலைகளைத் தனது வசிப்பிடமாகக் கொண்டவனுமான மகாதேவனையே {சிவனையே} போரில் எவன் மனநிறைவு கொள்ளச் செய்தானோ, பூமியின் மன்னர்கள் அனைவரையும் அடக்கிய போர்வீரர்களில் முதன்மையான அந்த விஜயனுடன் {அர்ஜுனனுடன்} சேர்ந்து (அவனைத் துணையாகக் கொண்டு) பாண்டவர்கள் உம்மோடு போரில் மோதுவார்கள்.
மிலேச்சர்கள் நெருக்கமாகவுள்ள மேற்கு உலகம் முழுமையையும் எவன் வீழ்த்தினானோ அந்த அற்புத வீரனான நகுலன், பாண்டவர்கள் கூடாரத்தில் தற்போது உள்ளான். அழகிய வீரனும், நிகரற்ற வில்லாளியுமான அந்த மாத்ரியின் மகனைக் {நகுலனைக்} கொண்டு, ஓ! கௌரவ்யா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
காசி, அங்கம், கலிங்கம் ஆகியவற்றில் உள்ள போர்வீரர்களைப் போரில் வீழ்த்திய அந்தச் சகாதேவனைக் கொண்டு பாண்டவர்கள் உம்மோடு மோதுவார்கள். இந்தப் பூமியில், அஸ்வத்தாமன், திருஷ்டக்கேது, ருக்மி மற்றும் பிரத்யும்னன் ஆகிய நான்கு மனிதர்களை மட்டுமே தனது சக்திக்கு நிகராகக் கொண்டவனும், வயதில் இளையவனும், மனிதர்களில் வீரனும், மாத்ரியின் இதயத்தை மகிழ்விப்பவனுமான அந்தச் சகாதேவனிடம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழிவைத் தரும் போரில் நீர் ஈடுபட வேண்டியிருக்கும்.
எவள் பழங்காலத்தில் காசி மன்னனின் மகளாக {அம்பையாக} வாழ்ந்து, தவநோன்புகள் பயின்றாளோ; ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, எவள் அடுத்தப் பிறவியில் பீஷ்மரின் அழிவை நிர்ணயிக்க விரும்பினாளோ, அவள் {அம்பை}, பாஞ்சாலனின் {துருபதனின்} மகளாக {சிகண்டினியாகப்} பிறவி எடுத்து, பிறகு தற்செயலாக ஆணாக {சிகண்டியாக} மாறியிருக்கிறாள். ஓ மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, இப்படி, எவன் இரு பாலினங்களின் நன்மை தீமைகளை அறிந்திருக்கிறானோ, அவனே கலிங்கர்களிடம் போரில் மோதிய பாஞ்சால இளவரசன் {சிகண்டி} ஆவான். அனைத்து ஆயுதங்களிலும் திறன்பெற்ற அந்தச் சிகண்டியைக் கொண்டு, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள். பீஷ்மரின் அழிவுக்காக, ஒரு யக்ஷனால் எவள் ஆணாக {சிகண்டினியாக இருந்து சிகண்டியாக} மாற்றப்பட்டாளோ, அந்த வல்லமை மிக்க வில்லாளியைச் {சிகண்டியைக்} கொண்டு பாண்டவர்கள் உம்மோடு போரிடுவார்கள்.
வலிமைமிக்க வில்லாளிகளும், சகோதரர்களும், ஐந்து கேகய இளவரசர்களுமான அந்தக் கவசம் பூண்ட வீரர்கள் அனைவரையும் கொண்டு பாண்டவர்கள் உம்மோடு போரிடுவார்கள்.
நீண்ட கரங்கள் கொண்ட போர்வீரனும்; ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பெரும் வேகம், புத்திசாலித்தனம் ஆகியவற்றையும், கலங்கடிக்க முடியா ஆற்றலைக் கொண்டவனும், விருஷ்ணி குலத்தின் சிங்கமுமான யுயுதானனிடம் {சாத்யகியிடம்} நீர் போரிட வேண்டியிருக்கும்.
உயர் ஆன்மா கொண்ட பாண்டவர்களுக்கு ஒரு காலத்தில் புகலிடமாக இருந்த விராடனுடன் நீர் போரில் மோத வேண்டியிருக்கும்.
காசியின் தலைவனும், வாராணசியை ஆள்பவனுமாக இருப்பவன் அவர்களது நண்பனாகியிருக்கிறான்; அவனோடு சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
வயதில் இளையோரானாலும், போரில் ஒப்பற்றவர்களும், கடும் நஞ்சு கொண்ட பாம்புகளைப் போல அணுகப்பட முடியாதவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான {மகாத்மாக்களுமான} திரௌபதியின் மகன்களோடு சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
சக்தியில் கிருஷ்ணனைப் போன்றவனும், சுயக்கட்டுப்பாட்டில் யுதிஷ்டிரனைப் போன்றவனுமான அந்த அபிமன்யுவுடன் சேர்ந்து பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
போர்க்குணமிக்கவனும், பெரும் புகழைக் கொண்டவனும், ஒப்பீடுக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்டவனும், போர்க்களத்தில் சீறும்போது தாக்குப்படிக்கப்பட முடியாதவனும், சேதிகளின் {சேதிநாட்டு} மன்னனும், ஓர் *அக்ஷௌஹிணி படையுடன் பாண்டவர்களுடன் சேர்ந்திருப்பவனும், சிசுபாலனின் மகனுமான திருஷ்டகேதுவுடன் சேர்ந்து பாண்டுவின் மகன்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
*அக்ஷௌஹிணிக்கான குறிப்பு:
http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2a.html
தேவர்களுக்கு வாசவனைப் {இந்திரனைப்} போல, பாண்டவர்களின் புகலிடமாக இருக்கும் வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} சேர்ந்து, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2a.html
முனிவர்கள், ``'ஓ! சூதரின் குமாரனே {சௌதியே}, அக்ஷௌஹிணி என்பது என்ன? அதில் எத்தனை குதிரைகள், காலாட்கள், தேர்கள், யானைகள் இருக்கும். முழுவதும் கூறு,” என்றனர்.சௌதி சொன்னார், 'ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள், மூன்று குதிரைகள் அடங்கியது ஒரு பத்தி, மூன்று பட்டிகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகங்கள் ஒரு குல்மம் என்றழைக்கப்படும். மூன்று குல்மாக்கள் ஒரு கணம், மூன்று கணங்கள் ஒரு வாகினி, மூன்று வாகினிகள் சேர்ந்தது ஒரு பிருதனை என்றழைக்கப்படும். மூன்று பிருதனாக்கள் சேர்ந்தது ஒரு சம்மு, மூன்று சம்முக்கள் ஒரு அனீகினி, பத்து அனீகினிக்கள் சேர்ந்ததுதான் ஒரு அக்ஷௌஹிணி. ஓ அந்தணர்களே, கணிதவியலாளர்கள், ஒரு அக்ஷௌஹிணியில் இருபத்து ஓராயிரத்து எண்ணூற்று எழுபது {21870} தேர்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும் {21870}, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்றி ஐம்பது {109350} காலாட்படைவீரர்களும், அறுபத்தைந்து ஆயிரத்து அறுநூற்று பத்தும் {65610} குதிரைகளும் ஆகும். ஓ அந்தணர்களே! இதுதான் ஒரு அக்ஷௌஹிணியின் கணக்காகும் என்று எண்களின் இலக்கணப்படிச் சொல்கிறார்கள். இந்தக் கணக்குப்படி கௌரவர்களும் பாண்டவர்களுமாக பதினெட்டு{18} அக்ஷௌஹிணி படைகள் இருந்தன.
18 அக்ஷௌஹிணி படைகள்
தேவர்களுக்கு வாசவனைப் {இந்திரனைப்} போல, பாண்டவர்களின் புகலிடமாக இருக்கும் வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} சேர்ந்து, பாண்டவர்கள் உமக்கெதிராகப் போரிடுவார்கள்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சேதிகள் {சேதி நாட்டு} மன்னனுடைய {திருஷ்டகேதுவின்} சகோதரனான சரபன், அவனோடு கூடிய {மற்றுமொரு சகோதரன்} கரகார்ஷன் [1] ஆகிய இருவரைக் கொண்டும் பாண்டவர்கள் உமக்கு எதிராகப் போரிடுவார்கள்.
[1] சகோதரர்களான திருஷ்டகேது, சுகேது, சரபன், கரகார்ஷன் ஆகியோர் சிசுபாலனின் மகன்களாவர். சிசுபாலன், வசுதேவரின் தங்கை சுரூதகீர்த்தியின் மகனாவான். குந்தியும், சிசுபாலனின் அன்னையும் உடன் பிறந்தோராவார்.
போரில் நிகரற்றவர்களும், ஜராசந்தனின் மகன்களுமான சகாதேவன், ஜயத்சேனன் ஆகிய இருவரும் பாண்டவர்களுக்காகப் போரிடுவது எனத் தீர்மானித்துள்ளனர்.
பெரும் படை பின்தொடர வரும் பெரும் வலிமை கொண்ட துருபதனும், தனது உயிரைத் துச்சமாக மதித்துப் பாண்டவர்களுக்காகப் போரிடத் தீர்மானித்திருக்கிறான்.
கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய இருதிசை நாடுகளில் இருந்து வந்திருக்கும் இவர்களையும், பிற நூற்றுக்கணக்கான மன்னர்களையும் நம்பியே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் போருக்குத் தயாராக இருக்கிறான்” என்றான் {சஞ்சயன்}.