The yawn of Gandiva! | Udyoga Parva - Section 48e | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 8) {யானசந்தி பர்வம் - 2}
பதிவின் சுருக்கம் : தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை நினைத்து அர்ஜுனன் சூளுரைப்பது; கற்றோரின் துணை தங்களுக்கு இருப்பதாகவும், அவர்கள் துரியனின் வீழ்ச்சியை முன்னறிவிப்பதகாவும் அர்ஜுனன் சொல்வது; அனைத்துச் சகுனங்களும் தங்களுக்குச் சாதகமாகவே இருப்பதை அர்ஜுனன் எடுத்துரைப்பது; துரியோதனனின் மடமையைச் சஞ்சயனிடம் எடுத்துச் சொல்லி, தங்கள் நாட்டு முதியோர் சொல்வது போலக் கௌரவர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழட்டும் என்று அர்ஜுனன் வாழ்த்தியது...
{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “சந்தனுவின் மகனையும் {பீஷ்மரையும்}, துரோணரையும், அவரது மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சரத்வானின் ஒப்பற்ற மகனையும் {கிருபரையும்} வணங்கி, எங்கள் நாட்டை மீட்க நான் போரிடுவேன். பாண்டவர்களுடன் போரிடும் பாவிக்கு, நீதித்தேவனே {தர்மதேவனே} அழிவைக் கொண்டு வருவான் என்று நான் நம்புகிறேன்.
அந்த இழிந்தவர்களால் {கௌரவர்களால்} ஏமாற்றுகரமாகப் பகடையில் வீழ்த்தப்பட்ட அரச பிறப்புடைய {பாண்டவர்களாகிய} நாங்கள், காட்டில் பெருந்துன்பத்துடன் பனிரெண்டு {12} ஆண்டுகளையும், நீண்ட ஒரு வருட மறைந்த நிலை வாழ்வையும் {அஞ்ஞாதவாசம்} கழித்தோம்.
அந்தப் பாண்டவர்கள் உயிரோடு இருக்கையில், திருதராஷ்டிரரின் மகன்கள், தாங்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தாலும் செல்வச்செழிப்பாலும் எப்படி மகிழ்ச்சியடைய முடியும்? இந்திரனின் தலைமையைக் கொண்ட தேவர்களைக் கொண்டு அவர்கள் {துரியோதனாதிபதிகள்} எங்களைப் போரில் வீழ்த்திவிட்டால், அறப்பயிற்சிகளைவிட {தர்மத்தைவிட} மறமே {அதர்மமே} சிறந்ததென்று ஆகிவிடும். மேலும் இந்தப் பூமியில் நீதி போன்ற எதுவும் நிச்சயமாக இருக்காது. மனிதன் அவன் செய்யும் செயல்களால் பாதிப்பை அடைகிறான் என்றால், நாங்கள் {பாண்டவர்கள்} துரியோதனனைவிட மேன்மையானவர்கள் என்றால், வாசுதேவனை {கிருஷ்ணனை} எனக்கு அடுத்தவனாகக் கொண்டு {எனது துணைவனாகக் கொண்டு} {with Vasudeva as my second}, துரியோதனனை அவனது இரத்த உறவுகளோடு சேர்த்து நான் கொல்வேன் என்றே நம்புகிறேன்.
ஓ! மனிதர்களின் தலைவா {சஞ்சயா}, எங்கள் நாட்டைத் திருடியது தீமை என்றால், எங்களது இந்த நற்செயல்கள் கனியற்றதாகாது {பலனற்றதாகாது} என்றால், இதுவும் அதுவும் ஆகிய இரண்டையும் நோக்குகையில் {ஆலோசிக்கையில்}, துரியோதனனின் வீழ்ச்சி உறுதி என்றே எனக்குப் படுகிறது.
கௌரவர்களே, அவர்கள் {துரியோதனாதிபதிகள்} எங்களுடன் போரிட்டால், திருதராஷ்டிரர் மகன்கள் நிச்சயம் அழிவார்கள் என்பதை உங்கள் கண்ணால் நீங்களே காண்பீர்கள். போரிடுவதைத் தவிர்த்து வேறுமாதிரியாகச் செயல்பட்டால் அவர்கள் வாழ்வார்கள்; ஆனால் வரப்போகும் போரினால் அவர்களில் எவரும் உயிருடன் எஞ்சமாட்டார்கள். கர்ணனுடன் சேர்த்து திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் கொன்று, அவர்களது முழு நாட்டையும் நான் வெல்வேன். அதே வேளையில், நீங்கள் எதையெல்லாம் சிறந்ததாக நினைப்பீர்களோ அவற்றையெல்லாம் செய்யுங்கள், உங்கள் மனைவியரையும், வாழ்வின் பிற இனிமையான பொருட்களையும் அனுபவியுங்கள் {அனுபவித்துவிடுங்கள்}.
படத்தை பெரிதாக்க சொடுக்கவும் |
கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்தின் அறிவை {ஞானத்தைக்} கொண்டிருக்கும் விருஷ்ணிகளில் சிங்கமான ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, இவையனைத்தையும் ஐயமறக் காண்கிறான். தவறாத தொலைநோக்குப் பார்வை கொண்ட நானும், அந்த எதிர்காலத்தையே காண்கிறேன். பழங்காலத்தில் அடையப்பட்ட எனது தொலை நோக்குப் பார்வை தடைசெய்யப்படவில்லை. திருதராஷ்டிரர் மகன்கள் போரிட்டால், அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்.
கையாளப்படாமல் இருக்கும் எனது வில்லான காண்டீவம் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறது; நீட்டி இழுக்கப்படாமல் இருக்கும் எனது வில்லின் நாண்கயிறு நடுங்கிக் கொண்டிருக்கிறது; எனது அம்பறாத்தூணியின் வாயில் இருந்து வெளிப்படும் அம்புகளும், மீண்டும் மீண்டும் பறக்க எத்தனிக்கின்றன. தனது சட்டையைவிட்டு அகலும் பாம்பைப் போல, எனது பிரகாசமான கூன்வாள் உறையைவிட்டு வெளியே வருகின்றது; எனது கொடிக்கம்பத்துக்கு மேலே, “ஓ! கிரீடி, எப்போது உனது தேர் பூட்டப்படும்?” என்று பயங்கரக் குரல்கள் கேட்கின்றன. இரவில் எண்ணிலடங்கா நரிகள் பயங்கரமாக ஊளையிடுகின்றன, மேலும் அடிக்கடி வானத்தில் இருந்து ராட்சசர்கள் கீழே இறங்குகின்றனர்; எனது வெண்குதிரைகளை எனது தேரில் பூட்டும்போது, மான்கள், நரிகள், மயில்கள், காகங்கள், கழுகுகள், கொக்குகள், ஓநாய்கள் மற்றும் தங்கச் சிறகு கொண்ட பறவைகள் அதைப் {அந்தத் தேரைப்} பின்தொடர்கின்றன.
எனது அம்பு மழையால், தனி மனிதனான என்னால், போர்குணமிக்க அனைத்து மன்னர்களையும் இறந்தவர்களின் உலகத்திற்கு {யமனுலகுக்கு} அனுப்ப முடியும். வெப்ப காலத்தில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பு, ஒரு காட்டையே எரித்துவிடுவதைப் போல, பல்வேறு வழிமுறைகளை வெளிப்படுத்தி, அந்தப் பெரும் ஆயுதங்களான, ஸ்தூர்-கர்ணம் {ஸ்தூணாகர்ணம்}, பாசுபதம் {பாசுபதாஸ்திரம்} மற்றும் பிரம்மம் {பிரம்மாஸ்திரம்} ஆகியவற்றையும், சக்ரன் {இந்திரன்} எனக்குக் கொடுத்தவையான கடும் மூர்க்கம் கொண்ட {ஐந்திரம் உள்ளிட்ட} அந்த அனைத்து ஆயுதங்களையும் நான் வீசுவேன் {பயன்படுத்துவேன்}.
அவற்றின் துணை கொண்டு, அந்த ஏகாதிபதிகளின் அழிவை எனது இதயத்தில் நிறுத்தி, போர்க்களத்திற்கு வருவோர் யாரையும் நான் எஞ்சவிடமாட்டேன். இவை யாவற்றையும் செய்த பிறகே நான் ஓய்வேன். இதுவே நான் முடிவெடுத்திருக்கும் எனது தலைமையான தீர்மானமாகும்.
ஓ! கவல்கணர் மகனே {சஞ்சயரே}, இவற்றை அவர்களுக்குச் {கௌரவர்களுக்குச்} சொல்லும். துரியோதனனின் மடமையைப் பாரும்! ஓ! சூதரே, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களையே தங்கள் துணையாகக் கொண்டு, போரில் வல்லவர்களாய் இருப்பவர்களிடம் கூட அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} போரையே விரும்புகிறான். ஆனால், “கௌரவர்கள் அனைவரும் நீண்ட காலம் வாழட்டும்” என்று சந்தனுவின் மகனான முதிர்ந்த பீஷ்மரும், கிருபரும், மகனுடன் {அசுவத்தாமனுடன்} கூடிய துரோணரும், பேரறிவு கொண்ட விதுரரும் சொல்வது போலவே, அப்படியே ஆகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.