Heedless Karna and defeatless Arjuna! | Udyoga Parva - Section 52 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வ தொடர்ச்சி – 12) {யானசந்தி பர்வம் - 6}
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனைக் கொண்டவன் வெற்றிப் பெறுவான் என்று திருதராஷ்டிரன் சொல்வது; அர்ஜுனனின் ஆயுத வலிமை, போர்த்திறமை ; கர்ணனும், துரோணரும் ஏன் அர்ஜுனனை வெல்ல மாட்டார்கள்? இது வரை தோற்காத அர்ஜுனன்; அர்ஜுனன், கிருஷ்ணன், காண்டீவம் ஆகிய மூன்று சக்திகள்; அர்ஜுனனின் ஆற்றலால் பீதியடையப்போகும் கௌரவப்படை ஆகியவற்றைப் பற்றித் திருதராஷ்டிரன் சொல்வது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “எவன் எப்போதுமே பொய்பேசாதவன் {யுதிஷ்டிரன்} என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோமோ, எவன் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தனக்காகப் போரிடக் கொண்டிருக்கிறானோ, அவனால் {யுதிஷ்டிரனால்} மூன்று உலகங்களின் ஆட்சியையும் பெற முடியும்.
நாளுக்கு நாள் சிந்தித்தாலும், போர்க்களத்தில் தனது தேரில் முன்னேறி, காண்டீவந்தாங்கியை {அர்ஜுனனை} எதிர்க்கக்கூடிய எந்தப் போர்வீரனையும் என்னால் காணமுடியவில்லை. அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, இறகு படைத்த கணைகளையும், நாளீகங்களையும் {Nalikas}, போர்வீரர்களின் மார்பைத் துளைக்கவல்ல காணிகளையும் அடித்தால், அந்தப் போரில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிரி ஒருவனும் அங்கே இருக்கமாட்டான்.
ஆயுதங்களை அறிந்த வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவர்களும், போரில் ஒப்பற்றவர்களும், மனிதர்களில் காளைகளுமான துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய வீரர்கள், அவனை {அர்ஜுனனைத்} தாக்குப் பிடித்தாலும், அதன் முடிவு ஐயத்திற்கிடமானதே. ஆனால் வெற்றி எனதாகாது என்பதை நான் உறுதியாக நினைக்கிறேன்.
கருணை மற்றும் கவனமற்ற தன்மை ஆகிய இரண்டையும் கர்ணன் கொண்டிருக்கிறான். முதிர்ந்தவராகவும், இந்த மாணவனிடம் {அர்ஜுனனிடம்} பாசம் கொண்டவராகவும் ஆசான் {துரோணர்} இருக்கிறார். அதேவேளையில், திறன் மற்றும் பலம் கொண்டவனாகவும், (வில்லில்) உறுதியான பிடியைக் கொண்டவனாகவும் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கிறான். அவர்களுக்குள் ஏற்படும் மோதல், யாருக்கும் தோல்வி என்ற முடிவை எட்டாத {முடிவை எட்டவே முடியாத} வகையில் பயங்கரமானதாக இருக்கும். ஆயுதங்களின் அறிவையும், வீரத்தையும் கொண்ட அவர்கள் அனைவரும் {கர்ணன், துரோணர் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} பெரும் புகழைப் பெற்றவர்களாவர். தேவர்களின் ஆட்சியையே விட்டாலும் விடுவார்களேயன்றி, தாங்கள் வெற்றி அடையும் வாய்ப்பை அவர்கள் விட மாட்டார்கள். இந்த இருவர் (துரோணரும், கர்ணனும்} அல்லது பல்குனன் {அர்ஜுணன்} ஆகியோரில் எவர் வீழ்ந்தாலும் அமைதி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. எனினும், பல்குனனைக் கொல்லவோ, வீழ்த்தவோ இயன்றவர்கள் எவனும் இல்லை.
ஐயோ, எனது மூட மகன்களின் மீது அவன் {அர்ஜுனன்} கொண்டிருக்கும் கோபத்தை எப்படித் தணிப்பது? ஆயுதங்களை அறிந்தவர்களில் வெல்பவர்களும், வெல்லப்படுபவர்களுமாகவே பிறர் அறியப்படுகிறார்கள்; ஆனால், இந்தப் பல்குனன் {அர்ஜுனன்} எப்போதும் வெல்பவன் என்றே கேள்விப்படப்படுகிறான்.
**காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} அக்னியை அழைத்து, தேவர்கள் அனைவரையும் வீழ்த்தி, அவனை {அக்னியை} அர்ஜுனன் மனநிறைவு கொள்ளச்செய்தது முதல் முப்பத்தைந்து {35} வருடங்கள் கடந்துவிட்டன. ஓ! குழந்தாய், இவனது {அர்ஜுனனின்} தோல்வியை நாம் எங்கும் கேள்விப்பட்டதில்லை.
குணத்தாலும், மனநிலையாலும் தன்னை {அர்ஜுனனான தன்னைப்} போன்ற ரிஷிகேசனை {கிருஷ்ணனை} சாரதியாகக் கொண்ட அர்ஜுனனுக்கு, வெற்றி, இந்திரனைப் போன்று எப்போதும் உரியதாகிறது. ஒரே தேரில் இருக்கும் இரண்டு கிருஷ்ணர்களும் {கருப்பர்களான_அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணனும்}, நாணேற்றப்பட்ட காண்டீவமும் என மூன்று சக்திகளும் ஒன்றுசேர்ந்துவிட்டன என்று நாம் கேள்விப்படுகிறோம். நம்மைப் பொறுத்தவரை, அது போன்ற வகையிலான வில்லையோ, அர்ஜுனனைப் போன்ற போர்வீரனையோ, கிருஷ்ணனைப் போன்ற சாரதியையோ {தேரோட்டியையோ} நாம் கொண்டிருக்கவில்லை.
துரியோதனனின் மூடத் தொண்டர்கள், இது குறித்த விழிப்புணர்வுடன் இல்லை. ஓ! சஞ்சயா, சுடர்விட்டுத் தலையில் இறங்கும் இடியாவது ஏதேனும் ஒன்றைக் அழிக்காமல் விட்டுச்செல்லும், ஆனால், ஓ! குழந்தாய் {சஞ்சயா}, கிரீடியால் {அர்ஜுனனால்} அடிக்கப்படும் கணைகள் எதையும் அழிக்காமல் விடுவதில்லை.
அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} தனது அம்புகளை அடித்தபடி, தனது கணை மழையால் உடல்களில் இருந்து தலைகளைக் கொய்ந்தபடி, சுற்றிலும் அழிவை ஏற்படுத்துவதை நான் இப்போதுகூட {மனதால்} காண்கிறேன். காண்டீவத்தில் இருந்து புறப்பட்டு, சுற்றிலும் சுடர்விட்டுச்செல்லும் நெருப்பைப் போன்ற அம்புகள், எனது மகன்களின் படையணிகளைப் போர்களத்தில் எரிப்பதை நான் இப்போதுகூட {மனதால்} காண்கிறேன். பல்வேறு படையணிகளைக் கொண்ட எனது பரந்த படை, சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தேர்ச்சடசடப்பால் {தேரொலியால்} பீதியடைந்து எல்லாப்புறங்களிலும் தப்பியோடுவதை நான் இப்போது கூட {மனதால்} காண்கிறேன்.
பெருகும் சுடர்களுடன் எல்லாப்புறங்களிலும் உலவும் மிகப்பெரிய நெருப்பு, காற்றால் உந்தப்பட்டு, காய்ந்த இலைகளையும் புற்களையும் எரிப்பதைப் போல, அர்ஜுனனுடைய ஆயுதங்கள் கொண்டிருக்கும் பெரும் புகழ், எனது துருப்புகள் அனைத்தையும் எரித்துவிடும் {அழித்துவிடும்}. பிரம்மனால் கட்டளையிடப்பட்ட அனைத்தையும் அழிப்பவனுமான காலனைப் போல, போரில் எதிரியாகத் தோன்றி, எண்ணிலடங்கா கணைகளை உமிழும் கிரீடி {அர்ஜுனன்}, தடுக்கப்பட முடியாதவனாக இருப்பான். குருக்களின் {கௌரவர்களின்} வீடுகளிலும், அவர்களைச் சுற்றியும், போர்க்களத்திலும் ஏற்படும் பல்வேறு வகையான தீய சகுனங்களைக் குறித்து நான் எப்போது தொடர்ச்சியாகக் கேட்பேனோ, அப்போது, பாரதர்களுக்கு அழிவேற்படும் என்பதில் ஐயமில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}.