The wrath of Yudhishthira threatens! | Udyoga Parva - Section 53 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 13) {யானசந்தி பர்வம் - 7}
பதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், மகதர்கள், கிருஷ்ணன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், ஆகியோரது துணை பாண்டவர்களுக்கு வலிமை சேர்க்கிறது என்றும், யுதிஷ்டிரனின் கோபம் மற்றும் பிற பாண்டவர்களின் ஆற்றல் தனக்கு அச்சமூட்டுகிறது என்றும் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது; பாண்டவர்களுடன் அமைதியேற்படுத்திக் கொள்ளுமாறு கௌரவர்களுக்குச் சொல்வது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பெரும் ஆற்றலும், வெற்றியில் ஆர்வமும் கொண்ட பாண்டுவின் மகன்களைப் {பாண்டவர்களைப்} போலவே, அவர்களது தொண்டர்களும், தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தீர்மானித்து, வெற்றியை வென்றெடுப்பதில் குறியாக இருக்கிறார்கள். ஓ! மகனே {சஞ்சயா}, பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், மகதர்கள் ஆகியோரின் பெரும்பலமிக்க மன்னர்கள் எனது எதிரிகளாவர் என்று நீயே சொல்லியிருக்கிறாய்.
மேலும், தான் விரும்பினால், இந்திரனின் தலைமையைக் கொண்ட மூவுலகங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் எவனால் கொண்டுவரமுடியுமோ, இந்த அண்டத்தையே எவன் படைத்தானோ, அந்தப் பெரும்பலமிக்கக் கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு வெற்றியளிக்க உறுதியுடன் இருக்கிறான்.
சாத்யகியைப் பொறுத்தவரை, அவன் அர்ஜுனனிடம் இருந்து முழு ஆயுத அறிவியலையும் விரைவில் அடைந்தவனாவான். அந்தச் சினி குலக் கொழுந்து, விதைகளை விதைக்கும் உழவனைப் போல, தனது கணைகளை அடித்தபடி போர்க்களத்தில் நிற்பான்.
கருணையற்ற செயல்கள் புரியும் வலிமைமிக்கத் தேர்வீரனும், மேன்மையான அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனும், பாஞ்சால இளவரசனுமான திருஷ்டத்யும்னன் எனது படையுடன் போரிடுவான்.
ஓ! குழந்தாய் {சஞ்சயா}, யுதிஷ்டிரனின் கோபம், அர்ஜுனன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} மற்றும் பீமசேனனின் ஆற்றல் ஆகியவற்றால் நான் கொள்ளும் அச்சம் பெரிதாக இருக்கிறது. அந்த மனிதர்களின் தலைவர்கள், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட தங்கள் கணைவலையை எனது படைக்கு மத்தியில் விரிக்கும்போது, அதிலிருந்து எனது துருப்புகள் மீளாது என்றே நான் அஞ்சுகிறேன். ஓ! சஞ்சயா, இதற்காகவே நான் அழுகிறேன்.
பாண்டுவின் மகனான அந்த யுதிஷ்டிரன், அழகானவனாகவும், பெரும் சக்தி படைத்தவனாகவும், உயர்ந்த அருள், பிரம்ம சக்தி, புத்திக்கூர்மை, பெரும் அறிவு {ஞானம்}, அறம்சார்ந்த ஆன்மா ஆகியவற்றைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.
கூட்டாளிகள் மற்றும் ஆலோசகர்களோடும், போருக்குத் தயாராக இருக்கும் நபர்களுடன் ஒன்றிணைந்தும், வீரர்களாக இருக்கும் தம்பிகள், மாமனார் ஆகியோரைக் கொண்டும் இருக்கும் மனிதர்களில் புலியான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பொறுமைசாலியாக, தனது ஆலோசனைகளைக் கமுக்கமாக {இரகசியமாக} வைத்திருக்கும் திறன் கொண்டவனாக, கருணை மற்றும் பணிவு கொண்டவனாக, கலங்கடிக்கப்பட முடியாத சக்திகளைக் கொண்டவனாக, பெரும் கல்வி கொண்டவனாக, முறையான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஆன்மா கொண்டவனாக, எப்போதும் வயது முதிர்ந்தோருக்குக் காத்திருப்பவனாக {பணிவிடை செய்பவனாக}, புலன்களை அடக்கியவனாக, என இப்படி அனைத்து சாதனைகளையும் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்} எரியும் நெருப்பு போலல்லவா இருக்கிறான். அழிவுக்கு விதிக்கப்பட்டு, அறிவை இழந்து, தடுக்கப்பட முடியாததும், எரிந்து கொண்டிருப்பதுமான அந்தப் பாண்டவ நெருப்பில் விட்டில் பூச்சியைப் போல எந்த மூடன் விழுவான்.
ஐயோ, நான் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} வஞ்சகமாக நடந்து கொண்டேனே. உயர்ந்து எரியும் நெருப்பைப் போல, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, போர்க்களத்தில், எனது மூட மகன்கள் அனைவரில் ஒருவனையும் உயிரோடு விடாமல் அழித்துவிடுவான். எனவே, அவர்களுடன் போரிடுவது சரியல்ல என்றே நான் நினைக்கிறேன்.
கௌரவர்களே, நீங்களும் அதே மனம் கொள்ளுங்கள் {அதை அறிந்து கொள்ளுங்கள்}. பகைமை பாராட்டினால், குருக்களின் {கௌரவர்களின்} இனம் முற்றாக அழியும் என்பதில் ஐயமில்லை. இஃது எனக்குத் தெரிவாகத் தோன்றுகிறது. இதன்படி நாம் செயல்பட்டால், எனது மனம் அமைதியடையும். அவர்களுடன் போரிடுவது உங்களுக்கு நன்மையாகத் தெரியவில்லை என்றால், நாம் அமைதியை நிலைநாட்டுவதற்குப் பாடுபடுவோம். நாம் துன்பப்பட்டால் யுதிஷ்டிரன் அலட்சியம் செய்ய மாட்டான். ஏனெனில், அவன் {யுதிஷ்டிரன்} இந்த அநீதியான போருக்கு {திருதராஷ்டிரனான} நான்தான் காரணம் என்றே கண்டித்துவருகிறான்” என்றான் {திருதராஷ்டிரன்}.