The censure of Sanjaya! | Udyoga Parva - Section 54 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 14) {யானசந்தி பர்வம் - 8}
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் ஏன் வெல்வார்கள் என்றும்; துரியோதனன் ஏன் தோற்பான் என்றும் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னது; பகடையாட்டத்தின் போது திருதராஷ்டிரன் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டதாகச் சஞ்சயன் திருதராஷ்டிரனை நிந்திப்பது; துரியோதனன் தடுக்கப்படாவிட்டால், கௌரவர்களின் அழிவு நிச்சயம் என்று சஞ்சயன் எச்சரிப்பது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பெரும் மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் சொல்வது போலத்தான் இஃது இருக்கிறது. போர் நிகழும்போது, காண்டீவத்தால் க்ஷத்திரியர்களின் அழிவு நிச்சயம் ஏற்படும். எனினும், எப்போதும் ஞானியாக இருக்கும் உம்மால், குறிப்பாகச் சவ்யசச்சினுடைய {அர்ஜுனனுடைய} ஆற்றலை அறிந்த உம்மால் எப்படி உமது மகன்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற முடிகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஆரம்பத்திலிருந்தே காயமேற்படுத்தி, உண்மையில், அப்பாவத்தை மீண்டும் மீண்டும் செய்த பின்பு, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி வருந்துவதற்கு) இது நேரமில்லை.
தந்தை அல்லது நண்பன் என்ற நிலையை அடைந்த ஒருவன், எப்போதும் கண்காணிப்புடனும், நல்ல இதயத்துடனும் இருந்தால், (தன் பிள்ளைகளுக்கு) நன்மையை நாடுவான்; ஆனால் காயமேற்படுத்துபவனைத் தந்தை என்று அழைக்கலாகாது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையில் பாண்டவர்களின் தோல்வியைக் கேட்டு “இது வெல்லப்பட்டது, இஃது அடையப்பட்டது” என்று சிறுபிள்ளையைப் போல நீர் சிரித்தீர். பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} நோக்கி கடுஞ்சொல் பேசப்பட்டபோதோ, உம் மகன்கள் முழு நாட்டையும் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ந்தீர். எனினும், உமக்கு முன்னால் இருந்த தவிர்க்கப்பட முடியாத வீழ்ச்சியை நீர் காணவில்லை.
ஜாங்கலம் என்று அழைக்கப்படும் பகுதியோடு கூடிய குருக்களின் நாடே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தந்தைவழி நாடாகும். எனினும், அவ்வீரர்களால் {பாண்டவர்களால்} முழுப் பூமியையும் நீர் அடைந்தீர். தங்கள் கரங்களின் வலிமையால் வென்ற பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, இந்த விரிந்த பேரரசை உமக்காகச் செய்தார்கள் {உம்மிடம் ஒப்படைத்தார்கள்}. எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இவை யாவும் உம்மால் அடையப்பட்டது என்று நீர் நினைத்துக் கொள்கிறீர்.
கந்தர்வர்களால் உமது மகன்கள் பிடித்துச் செல்லப்பட்ட போது, கரைகளற்ற கடலில், தங்களைக் காக்க ஒரு படகு கூட இல்லாமல் மூழ்கும் நிலையில் இருந்தவர்களை {உமது மகன்களை}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனே {அர்ஜுனனே} மீட்டு அழைத்து வந்தான்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீரோ, பகடையில் பாண்டவர்கள் தோற்று வனவாசம் சென்ற போது சிறுபிள்ளையைப் போல திரும்பத் திரும்பச் சிரித்தீர். முனைப்புள்ள கணைகளை அர்ஜுனன் மாரியாகப் பொழிகையில், கடல்களே கூட வற்றிவிடும் எனும்போது சதையும் இரத்தமும் எம்மாத்திரம்.
அடிப்பவர்கள் அனைவரிலும் பல்குனனே {அர்ஜுனனே} முதன்மையானவன்; விற்கள் அனைத்திலும் காண்டீவமே முதன்மையானது; அனைத்து உயிரினங்களிலும் கேசவனே {கிருஷ்ணனே} முதன்மையானவன்; ஆயுதங்கள் அனைத்திலும் சுதர்சனமே முதன்மையானது; தேர்களில், சுடர்மிகும் குரங்குக் {அனுமன்} கொடி கொண்ட அந்தத் தேரே முதன்மையானது. இவை யாவையும் தன்னில் கொண்டு, வெண்குதிரைகளால் இழுக்கப்படும் அவனது {அர்ஜுனனின்} தேர், உயர்ந்த காலச்சக்கரம் போலப் போரில் நம் அனைவரையும் எரித்துவிடும்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தனக்காகப் போரிட, பீமனையும், அர்ஜுனனையும் கொண்டவனுக்குத்தான் இந்த முழுப் பூமி இப்போதும் சொந்தம். அவனே {பீமனையும் அர்ஜுனனையும் கொண்டவனே = யுதிஷ்டிரனே} மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவன். பீமனால் தாக்கப்படும்போது, நம்பிக்கையிழந்து மூழ்கும் துரியோதனன் தலைமையிலான படையால் வெற்றியை அடைய இயலாது.
மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சால்வர்கள், சூரசேனர்கள் ஆகிய அனைவரும் உம்மை மதிக்காமல் இப்போது அவமதிக்கிறார்கள். எனினும், அந்த அறிவுள்ள மன்னனின் {யுதிஷ்டிரனின்} சக்தியை அறிந்த அவர்கள் அனைவரும், அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனுடன் {யுதிஷ்டிரனுடன்} சேர்ந்துள்ளனர். அவனிடம் தாங்கள் கொண்ட அர்ப்பணிப்பின் காரணமாக எப்போதும் உமது மகன்களை அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.
அறம்சார்ந்தவர்களும், அழியத்தகாதவர்களுமான பாண்டுவின் மகன்களைத் தன் தீச்செயல்களால் துன்புறுத்தியவனும், அவர்களை {பாண்டவர்களை} இப்போதும் கூட வெறுப்பவனுமான அந்தப் பாவி, வேறு யாருமல்ல உமது மகனைத்தான் {துரியோதனனைத்தான்} சொல்கிறேன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனும் {துரியோதனனும்}, அவனைப் பின்பற்றுபவர்களும் எல்லாவகையிலும் தடுக்கப்பட {அடக்கப்பட} வேண்டும்.
இந்தச் சோர்வான நேரத்தில் {இந்த அழுத்தத்தில்} நீர் புலம்பியழுவது உமக்குத் தகாது. பகடையாட்டம் நடைபெற்ற நேரத்திலேயே ஞானியான விதுரராலும், என்னாலும் இதுவே {கௌரவர்கள் அடக்கப்பட வேண்டும் என்று} சொல்லப்பட்டது. ஏதோ நீர் ஓர் ஆதரவற்ற நபர் போல, பாண்டவர்கள் தொடர்பாகச் செய்யும் இந்த உமது புலம்பல்கள் அனைத்தும் பயனற்றவையே” என்றான் {சஞ்சயன்}.