Duryodhana said “Fear Not”! | Udyoga Parva - Section 55 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வ தொடர்ச்சி – 15) {யானசந்தி பர்வம் - 9}
பதிவின் சுருக்கம் : தங்களுக்காக திருதராஷ்டிரன் வருந்த வேண்டாம் என்று துரியோதனன் சொன்னது; பகடையாட்டம் முடிந்து பாண்டவர்கள் வனவாசம் சென்ற பிறகு, பாண்டவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட படையைக் கண்டு அஞ்சி பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபரிடம் தான் பேசியவற்றைத் துரியோதனன் நினைவு கூர்வது; பலராமனிடத்தில் தான் பயின்ற கதாயுதத்தை நினைவுகூர்வது; கதாயுதத்தில் தனக்கு நிகர் இவ்வுலகில் எவனும் இல்லை என்று சொன்னது; படை எண்ணிக்கையிலும், தலைவர்களின் எண்ணிக்கையிலும் கௌரவப்படையே பெரிதாக இருக்கிறது என்று சொல்வது; திருதராஷ்டிரனிடம் துரியோதனன் மதியிழக்க வேண்டாம் என்று கண்டிப்பது...
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அஞ்சாதீர். எங்களுக்காக வருந்தவும் செய்யாதீர். ஓ !ஏகாதிபதி, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, நாங்கள் போரில் எதிரிகளை வீழ்த்த வல்லவர்களே. பார்த்தர்கள் {பாண்டவர்கள்} நாடுகடத்தப்பட்டு {காட்டிற்கு} அனுப்பப்பட்ட போது, பகை நாடுகளை நசுக்க வல்லவனான, மதுவைக் கொன்றவன் {கிருஷ்ணன்} பரந்திருக்கும் தனது படையுடன் அங்கே வந்தான்; மேலும் அங்கே கேகயர்களும், திருஷ்டகேதுவும், பிரஷத [1] குலத்தின் திருஷ்டத்யும்னன் மற்றும் எண்ணிலடங்கா பிற மன்னர்களும் தொடர்ந்து வந்தனர்; அந்தப் பெரும் தேர்வீரர்களான அனைவரும் இந்திரப்பிரஸ்தத்திற்கு மிக அருகில் கூடினர்; அங்கே கூடிய அவர்கள் உம்மையும், குருக்கள் {கௌரவர்கள்} அனைவரையும் நிந்தித்தனர்.
[1] பிரஷதன் = துருபதனின் தந்தை.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனைத் தலைமையாகக் கொண்ட அவ்வீரர்கள் அனைவரும், மான்தோலுடுத்தி தங்கள் மத்தியில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனுக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தினர். பிறகு அந்த மன்னர்கள் அனைவரும் யுதிஷ்டிரன் தனது நாட்டை மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைத்தனர். அவர்கள் அனைவரும் உம்மையும், உமது தொண்டர்கள் அனைவரையும் கொல்ல விரும்பினர்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட நான், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நம் குடும்பத்தின் அழிவைக் கருதி ஏற்பட்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டு பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபரிடம் பேசினேன். நான் அவர்களிடம், “தாங்கள் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு பாண்டவர்கள் கட்டுப்பட மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்; நமது முழுமையான அழிவை வாசுதேவன் {கிருஷ்ணன்} விரும்புகிறான். அப்படுகொலையில், குருக்களின் தலைவரும், அறநெறி அறிந்தவருமான திருதராஷ்டிரர் சேர்க்கப்படாவிட்டாலும், விதுரரைத் தவிர்த்து உங்கள் அனைவரையும் கொன்று, ஓ! ஐயா, நமது முழுமையான அழிவைத் தோற்றுவித்து, யுதிஷ்டிரனுக்கு குருக்களின் {கௌரவர்களின்} முழு நாட்டையும் அளிக்க ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விரும்புகிறான் என்று நான் நினைக்கிறேன்.
{இப்போது} நாம் என்ன செய்வது? சரணடைவதா? தப்பியோடுவதா? அல்லது உயிரை விட்டாவது பகைவருடன் போரிடுவதா? உண்மையில், அவர்களுக்கு எதிராக நாம் நிற்போமெனில், நமது தோல்வி உறுதியானது. ஏனெனில், பூமியின் மன்னர்கள் அனைவரும் யுதிஷ்டிரனின் கட்டளைக்குக் கீழ் {கட்டளையை எதிர்பார்த்து} இருக்கிறார்கள். நாட்டின் மக்கள் அனைவரும் நம்மிடம் எரிச்சலடைந்திருக்கின்றனர், மற்றும் நமது நண்பர்கள் அனைவரும் கூட நம்மிடம் கோபத்திலிருக்கின்றனர். பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரும், அதிலும் குறிப்பாக நமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் நம்மைக் குறித்துத் தவறாகப் பேசுகின்றனர். நினைவுக்கெட்டாத காலம் முதல், பலமற்ற கட்சியே சமாதானம் கொள்ளும் என்பது அறியப்பட்டதே. எனவே, நாம் சரணடைந்தால், அதில் தவறு ஒன்றும் இருக்க முடியாது.
எனினும், என் நிமித்தமாக, முடிவிலா துன்ப துயரங்களால் பீடிக்கப்படும் அந்த மனிதர்களின் தலைவரான. பார்வையற்ற என் தந்தையைக் {திருதராஷ்டிரரைக்} குறித்தே நான் கவலைகொள்கிறேன். [ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மற்ற மகன்கள் அனைவரும் என்னை மகிழ்விப்பதற்காக மட்டுமே, பகைவரை எதிர்த்தார்கள் {பாண்டவர்களுக்குக் கெடுதல் செய்தார்கள்} என்பது இதற்கு முன்பே உமக்குத் தெரியும்]. அந்தப் பலமிக்க தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள், ஆலோசகர்களோடு {அமைச்சர்களோடு} கூடிய மன்னர் திருதராஷ்டிரரின் குலத்தை முற்றாக அழித்து, தங்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்காகப் {அநீதிகளுக்காகப்} பழிதீர்ப்பார்கள் என்பது நிச்சயம்.” என்று ({துரியோதனனான} நான் அவர்களிடம் {பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபரிடம்} {அப்போது} இப்படியே பேசினேன்).
பெரும் கவலையால் நான் பாதிக்கப்படுவதையும், உணர்வுகளால் நான் அடைந்த சித்திரவதையையும் கண்ட துரோணர், பீஷ்மர், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் என்னிடம், “ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, அஞ்சாதே. நாங்கள் களங்காணும்போது, நம்மிடம் பகை கொள்ளும் எதிரிகளால் எங்களை வீழ்த்த இயலாது. நாங்கள் ஒவ்வொருவரும் பூமியின் மன்னர்கள் அனைவரையும் தனியாகவே வீழ்த்தும் வல்லமை பெற்றிருக்கிறோம். அவர்கள் வரட்டும். கூர்முனை கொண்ட கணைகளால் நாம் அவர்களது ஆணவத்தைத் தடுப்போம்.
பழங்காலத்தில் {முற்காலத்தில்}, தனது தந்தையின் மரணத்தால் கோபத்தில் அழற்சியுற்ற (நம் மத்தியில் இருக்கும்) இந்தப் பீஷ்மர், ஒரே தேரில் {தனியாகச்} சென்று பூமியின் மன்னர்கள் அனைவரையும் வெற்றி கொண்டார். ஓ! பாரதா {துரியோதனா}, கோபத்தால் தூண்டப்பட்ட அந்தக் குருக்களில் சிறந்தவர் {பீஷ்மர்}, அவர்களில் எண்ணற்றோரை அடித்தார். அதனால் அச்சமுற்ற அவர்கள், தங்கள் பாதுகாப்பைக் கோரி இந்தத் தேவவிரதனிடம் {பீஷ்மரிடம்} சரணடைந்தனர். நம்முடன் இருக்கும் அந்தப் பீஷ்மர், இப்போதும் போரில் எதிரியை வீழ்த்தவல்லராவார். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது அச்சங்கள் அனைத்தும் அகலட்டும்” என்றனர்” என்றான் {துரியோதனன்}.
துரியோதனன் தொடர்ந்தான், “அளவிலா சக்தி கொண்ட இந்த வீரர்களால் {துரோணர், பீஷ்மர், கிருபர் மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோரால்} அன்று செய்யப்பட்ட உறுதி இதுவே. முன்பு, இந்த முழு பூமியும் எதிரியின் {யுதிஷ்டிரனின்} அதிகாரத்திற்குள்ளேயே இருந்தது. எனினும், இப்போது, அவர்கள் {பாண்டவர்கள்} நம்மைப் போரில் வீழ்த்தவல்லவர்களாக இல்லை. எனெனில், நமது எதிரிகளான பாண்டுவின் மகன்கள் இப்போது கூட்டாளிகள் இன்றி, சக்தி இன்றி உள்ளனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பூமியின் ஆட்சியதிகாரம் இப்போது என்னிடமே குடிகொண்டிருக்கிறது.
என்னால் கூட்டப்பட்டிருக்கும் இந்த மன்னர்கள் செழிப்பிலும், துக்கத்திலும் நான் கொண்டிருக்கும் அதே மனமுடையவர்களாக இருக்கிறார்கள். ஓ! குருக் {கௌரவக்} குலத்தில் சிறந்தவரே, ஓ! எதிரிகளைக் கொல்பவரே {திருதராஷ்டிரரே}, இந்த மன்னர்கள் அனைவரும் எனக்காக நெருப்பிலோ, கடலிலோ நுழையவல்லவர்கள் என்பதை அறிந்து கொள்ளும். பகைவரின் தற்புகழ்ச்சியைக் கண்டு அஞ்சி, கவலையில் நிறைந்து, மதியிழந்தவர் போலப் புலம்பிக் கொண்டிருக்கும் உம்மைக் கண்டு இப்போது இவர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். இம்மன்னர்களில் ஒவ்வொருவரும் பாண்டவர்களைத் தனியாகவே எதிர்க்கவல்லவர்கள். உண்மையில், அனைவரும் அவ்வாறே தங்களைக் கருதுகின்றனர். எனவே, உமது அச்சங்கள் அகலட்டும்.
பரந்திருக்கும் எனது படையை வீழ்த்த வாசவனாலும் {இந்திரனாலும்} இயலாது. அந்தப் படையை அழிக்க சுயம்புவான பிரம்மனே நினைத்தாலும் முடியாது. நான் கூட்டியிருக்கும் படைக்கும், எனது சக்திக்கும் அஞ்சியே, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, நகரத்திற்கான நம்பிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு, {ஒரு நகரத்தைக் கூடக் கேட்காமல்} ஐந்து கிராமங்களை மட்டுமே யுதிஷ்டிரன் கெஞ்சிக் கேட்கிறான்.
குந்தியின் மகனான விருகோதரனின் {பீமனின்} ஆற்றல், நீர் பாராட்டும்படி எங்குமே காணப்படவில்லை. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் எனது ஆற்றலின் அளவை அறியவில்லை. கதாயுத மோதலில் எனக்கு நிகரானவர் பூமியில் எவரும் இல்லை. இத்தகைய மோதலில் எவரும் எப்போதும் என்னை விஞ்சியதில்லை, {இனிமேல்} யாரும் என்னை விஞ்சவும் மாட்டார்கள்.
பல இடர்பாடுகளை அனுபவித்து, அர்ப்பணிப்போடு கூடிய முயற்சியுடன் எனது ஆசானின் {பலராமரின்} வசிப்பிடத்தில் வாழ்ந்தவன் நான். எனது அறிவு மற்றும் பயிற்சிகள் அங்கேயே நிறைவுபெற்றன. இதன் காரணமாகவே நான், பீமனிடமோ பிறரிடமோ அச்சங்கொள்வதில்லை. நான் (எனது ஆசானான) சங்கர்ஷணருக்காகப் {பலராமருக்காகப்} பணிவுடன் காத்திருந்தபோது {அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தபோது}, கதாயுதத்தில், துரியோதனனுக்கு நிகர் எவனும் இல்லை என்பதே அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. போர்க்களத்தில் சங்கர்ஷணருக்கு {பலராமருக்கு} நிகரானவன் நான். பலத்தில் எனக்கு மேலானவன் எவனும் இப்பூமியில் இல்லை.
போரில் எனது கதாயுதத்தின் வீச்சை பீமனால் தாங்கிக் கொள்ள இயலாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் பீமனை நோக்கி நான் வீசும் ஒரே வீச்சு, ஓ! வீரரே {திருதராஷ்டிரரே}, அவனை {பீமனைத்} தாமதமின்றி யமனுலகிற்கு அழைத்துச் செல்லும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கையில் கதாயுதத்துடன் இருக்கும் பீமனைக் காண நான் விரும்புகிறேன். இதுவே எனது நீண்ட கால ஆசையாக இருந்திருக்கிறது. போரில் எனது கதாயுதத்தால் தாக்கப்படும் பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமன்}, தன் அங்கங்கள் சிதற, தரையில் செத்து விழுவான்.
எனது கதாயுத வீச்சில் அடிபட்டால், இமயத்தின் மலைகளே கூட நூறாயிரம் துண்டுகளாகச் சிதறிப் போகும். கதாயுதத்தைப் பயன்படுத்துவதில் துரியோதனனுக்கு யாரும் நிகரில்லை என்று வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் போலவே விருகோதரனும் {பீமனும்} அறிவான். எனவே, விருகோதரன் நிமித்தமாக உண்டான உமது அச்சங்கள் விலகட்டும். ஏனெனில் கடுமையான ஒரு மோதலில் நான் நிச்சயம் அவனை {பீமனைக்} கொல்வேன்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனக் கவலைக்கு வழி கொடுக்காதீர் {இடமளிக்காதீர்}. நான் அவனை {பீமனைக்} கொன்ற பிறகு, ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுக்குச் சமமான அல்லது மேன்மையான சக்தி படைத்த எண்ணற்ற தேர்வீரர்கள் அவனை {அர்ஜுனனை} விரைவாக வீழ்த்துவார்கள். பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், பூரிஸ்ரவஸ், சல்யன், பிராக்ஜோதிஷத்தின் மன்னன் {பகதத்தன்}, சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தனியொருவராகவே பாண்டவர்களைக் கொல்லவல்லவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்றிணையும்போது, நொடிப்பொழுதில் அவர்கள் அர்ஜுனனை யமனுலகுக்கு அனுப்புவார்கள்.
உண்மையில், இம்மன்னர்கள் அனைவரின் ஒன்றிணைந்த படைகளால், தனஞ்சயன் என்ற ஒருவனை {அர்ஜுனனை} வீழ்த்த இயலாது என்பதற்கு {என்ற உமது எண்ணத்திற்கு} எந்தக் காரணமும் இல்லை. பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் ஆகியோரால் அடிக்கப்படும் அளவிலாக் கணைகளால் நூறு முறை மறைக்கப்பட்டும், தன் பலத்தையெல்லாம் இழக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} யமனுலகு செல்ல வேண்டியிருக்கும்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கங்கைக்குப் பிறந்தவரும் {கங்காதரரும்}, சந்தனுவுக்கும் மேலானவரும், இருபிறப்பாள {பிராமண} முனிவனைப் போன்றவரும், தேவர்களாலும் எதிர்க்கப்பட முடியாதவருமான நமது பாட்டன் {பிதாமகன் பீஷ்மர்}, மனிதர்களுக்கு மத்தியில் தனது பிறப்பை எடுத்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைக் கொல்ல இப்பூமியில் எவருமில்லை. ஏனெனில், இவர் {பீஷ்மர்}, “உனது விருப்பமில்லாமல் நீ இறக்கமாட்டாய்” என்று {தன்னிடம்} நிறைவடைந்த தன் தந்தையிடம்{சந்தனுவிடம்} வரம் பெற்றவர்.
துரோணர், இருபிறப்பாளரான {பிராமணரான} தவசி {பிரம்மரிஷி} பரத்வாஜர் மூலம் நீர்க்குடத்தில் {கலசத்தில்} பிறந்தவர். துரோணருக்குப் பிறந்த மகன் {அஸ்வத்தாமன்}, உயர்ந்த ஆயுதங்களின் அறிவனைத்தையும் அடைந்திருக்கிறார். ஆசான்களில் முதன்மையானவரான இந்தக் கிருபர் பெரும் முனிவரான கௌதமருக்குப் பிறந்தவராவார். நாணற்கட்டில் பிறந்தவரான இந்த ஒப்பற்றவர் கொல்லப்பட இயலாதவர் என்று நான் நினைக்கிறேன். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமனின் தந்தை, தாய், தாய்மாமன் ஆகிய மூவரும் பெண்ணின் கருவறையில் பிறவாதவர்களாவர் {என்பதை நினைவில் கொள்ளும்}. அந்த வீரரையும் {அஸ்வத்தாமனையும்}, நான் என் கட்சியில் கொண்டுள்ளேன்.
தேவர்களைப் போன்ற இந்தப் பலமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} வலியை உண்டாக்கக் கூடியவர்கள். இவர்களில் ஒருவரைக் காணக் கூட அர்ஜுனன் சக்தி படைத்தவனல்ல. மனிதர்களில் புலிகளான இவர்கள் ஒன்றாக இணைந்திருக்கும்போது, தனஞ்சயனை {அர்ஜுனனை} நிச்சயம் கொல்வார்கள்.
கர்ணனும், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோருக்கு நிகரானவனே என நான் கருதுகிறேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, “நீ எனக்கு நிகரானவன்” என்று ராமரே {பரசுராமரே}, அவனிடம் {கர்ணனிடம்} சொல்லியிருக்கிறார். பெரும் பிரகாசமும் அழகும் உடைய இரு காது குண்டலங்களுடன் கர்ணன் பிறந்தான்; சச்சியை {இந்திராணியை} மனநிறைவு கொள்ளச் செய்ய, பொய்க்காத, பயங்கரமான ஒரு கணைக்கு மாற்றாக, எதிரிகளை ஒடுக்கும் அவனிடம் {கர்ணனிடம்} அவற்றை {அந்தக் காதணிகளை} இந்திரன் இரந்து பெற்றான். எனவே, அந்தக் கணையால் பாதுகாக்கப்படும் கர்ணனிடம் இருந்து தனஞ்சயனால் {அர்ஜுனனால்} எப்படி உயிரோடு தப்ப முடியும்?
எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கைப்பிடிக்குள் உறுதியாகப் பற்றப்பட்டிருக்கும் கனியைப் போல {உள்ளங்கை நெல்லிக்கனி போல}, எனது வெற்றி உறுதியானது. எனது எதிரிகளின் அப்பட்டமான தோல்வி, பூமியில் ஏற்கனவே பேசப்படுகிறது.
இந்தப் பீஷ்மர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் படை வீரர்களையேனும் கொல்வார். துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் ஆகியோர் அவருக்கு நிகரான வில்லாளிகளே.
மேலும், ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {திருதராஷ்டிரரே}, “ஒன்று, நாங்கள் அர்ஜுனனைக் கொல்வோம், அல்லது குரங்குக் கொடி கொண்ட அந்த வீரன் {வானரக் கொடியோன் அர்ஜுனன்} எங்களைக் கொல்லட்டும்” என்று சம்சப்தக வீரர்களின் கூட்டம் தீர்மானித்திருக்கிறது. சவ்யசச்சின் {அர்ஜுனன்} தங்களுக்கு நிகரானவன் அல்ல என்று கருதும் பிற மன்னர்களும் அவனை {அர்ஜுனனைக்} கொல்ல உறுதியாகத் தீர்மானித்திருக்கிறார்கள். பாண்டவர்களால் ஏற்படும் ஆபத்துக்காக இனியும் நீர் ஏன் வருந்துகிறீர்?
பீமசேனனே கொல்லப்படும்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (அவர்களில்) எவன் போரிட முடியும்? எதிரிகளின் மத்தியில் அப்படி எவரேனும் உண்டெனில், ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {திருதராஷ்டிரரே}, அதை எனக்குச் சொல்லும்.
ஐந்து சகோதரர்கள் {பாண்டவர்கள்}, திருஷ்டத்யும்னன், சாத்யகி ஆகிய ஏழு போர்வீரர்களே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியின் முக்கிய பலம் எனக் கருதப்படுகிறார்கள். எனினும், பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், சோமதத்தன், பாஹ்லீகன், சல்யன், பிராக்ஜோதிஷத்தின் மன்னன் {பகதத்தன்}, அவந்தியின் இரு மன்னர்கள் {விந்தன் மற்றும் அனுவிந்தன்}, ஜெயத்ரதன், மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களான துச்சாசனன், துர்முகன், துஸ்ஸகன், ஸ்ருதாயு ஆகியோரும், சித்ரசேனன், புருமித்ரன், விவிம்சதி, சலன், பூரிஸ்ரவஸ், விகர்ணன் ஆகியோரும் நமது முக்கிய போர்வீரர்களாக இருக்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் பதினோரு{11} அக்ஷௌஹிணிகளைக் கூட்டியிருக்கிறேன். ஏழு{7} அக்ஷௌஹிணிகளை மட்டுமே கொண்ட எதிரியின் படை எனதை விட அளவில் சிறியதே. பிறகு நான் எப்படித் தோற்பேன்? மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கும் ஓர் படையுடன் மோதலாம் என பிருஹஸ்பதியே சொல்லியிருக்கிறார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியை விட எனது படை, மூன்றில் ஒரு பங்குக்குப் பெரியதாக இருக்கிறது. [2]
[2] கௌரவர்களின் பதினோரு அக்ஷொஹிணியில் மூன்றில் ஒரு பங்கு என்பது 3.66 ஆகும். பாண்டவர்களின் படையோ ஏழு அக்ஷௌஹிணி ஆகும். எனவே தன் படையில் மூன்றில் ஒரு பங்கை நீக்கினாலும் {11 – 3.66 = 7.33}, அதைவிட எதிரிகளின் படை {7} குறைவாகவே இருக்கிறது என்று துரியோதனன் சொல்வதாகக் கருதுகிறேன்.இதையே வேறுவிதமாக, பாண்டவர்களில் ஏழு{7} முக்கிய வீரர்கள், கௌரவர்களில் தன்னையும் சேர்த்து இருபத்தோரு{21} {மேலே துரியோதனனைச் சேர்க்காமல் இருபத்திரண்டு பேர் இருக்கின்றனர்} முக்கிய வீரர்கள். எனவே, பாண்டவப்படையை விட கௌரவப்படை மூன்று மடங்கு பெரியது என்று துரியோதனன் சொல்வதாகவும் சொல்லப்படுகிறது.
இதுதவிர, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளின் பல குறைகளை நான் அறிவேன், அதே வேளையில், நான் பல குணநிறைவுகளுடன் இருக்கிறேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவையாவற்றையும், எனது படையின் மேன்மையையும், பாண்டவர்களின் தாழ்வையும் அறிந்தும், உமது மதியை நீர் இழப்பது உமக்குத் தகாது” என்றான் {துரியோதனன்}.
{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம்} “ஓ! பாரதா {ஜனமேஜயா}, பகை தலைவர்களை வெல்பவனான துரியோதனன், இதைச் சொன்ன பிறகு, பாண்டவர்களின் செயல்பாடுகளை அறியும் ஆவலில், மீண்டும் சஞ்சயனிடம் கேட்கலானான் ”.