The steeds of Pandavas! | Udyoga Parva - Section 56 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 16) {யானசந்தி பர்வம் - 10}
பதிவின் சுருக்கம் : போரில் பாண்டவர்கள் கொண்டிருக்கும் விருப்பத்தையும், அவர்கள் கொண்டிருக்கும் தேர் மற்றும் குதிரைகளைக் குறித்தும் சஞ்சயன் துரியோதனனுக்குச் சொன்னது…
துரியோதனன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயரே, ஏழு{7} அக்ஷௌஹிணி எண்ணிக்கையிலான படையைத் திரட்டிய பிறகு, பிற மன்னர்களின் துணையுடன், குந்தியின் மகனான யுதிஷ்டிரன் என்ன செய்ய நினைக்கிறான்?”
சஞ்சயன் {துரியோதனிடம்}, “ஓ! மன்னா {துரியோதனா}, போரைப்பொறுத்தவரை யுதிஷ்டிரன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். பீமசேனனும், அர்ஜுனனும் அதே போலவே இருக்கின்றனர். இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்} முற்றிலும் அச்சமற்றிருக்கின்றனர். (தான் பெற்ற) மந்திரங்களைச் சோதித்துப் பார்க்கும் நோக்கத்தில், குந்தியின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, அனைத்துப் புறங்களையும் ஒளியூட்டியபடி தனது தெய்வீகத் தேரைப் பூட்டினான். கவசம் தரித்த அவன் {அர்ஜுனன்}, மின்னல்களால் சக்தியூட்டப்பட்ட மேகக்குவியல் போலத் தெரிந்தான். சிறிது நேரம் சிந்தித்த அவன் {அர்ஜுனன்}, என்னிடம் மகிழ்ச்சியாக, “ஓ! சஞ்சயரே, இதோ இந்தத் தொடக்க நிலை அறிகுறிகளைப் பாரும். நாங்கள் நிச்சயம் வெல்வோம்” என்றான். உண்மையில், பீபத்சு {அர்ஜுனன்} என்ன சொன்னானோ, அஃது எனக்கு உண்மையாகவே தோன்றியது.” என்றான் {சஞ்சயன்}.
துரியோதனன் {சஞ்சயனிடம்}, “பகடையில் தோற்ற பிருதையின் {குந்தியின்} மகன்களைப் புகழ்வதில் நீர் மகிழ்ச்சியடைகிறீர். இப்போது, அர்ஜுனனின் தேரில் எவ்வகைக் குதிரைகள் பூட்டப்படுகின்றன என்றும், எவ்வகைக் கொடிகள் {துவஜங்கள் [dhvajaḥ]} அதில் நிறுவப்பட்டுள்ளன என்றும் எங்களுக்குச் சொல்லும்” என்றான்.
சஞ்சயன் {துரியோதனனிடம்}, “ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, தஷ்டிரி என்றும், பௌமானன் என்றும் அழைக்கப்படும் தெய்வீகத் தச்சன், சக்ரன் {இந்திரன்} மற்றும் தத்ரி {ஆதித்யர்களில் ஒருவர், ஆரோக்கியம் மற்றும் உள்நாட்டு அமைதிக்கான தெய்வம்} ஆகியோரின் உதவியுடன், பல்வேறு வகை உருவங்களை அமைத்து அர்ஜுனனின் தேருக்கு பெரும் அழகூட்டினான். மேலும், பீமசேனனின் வேண்டுகோளுக்கிணங்க, காற்று தேவனின் {வாயுவின்} மகனான ஹனுமனும் தனது உருவத்தை அதில் {அத்தேரில்} நிறுவினார்.
செங்குத்தாகவும் {நெடுக்கிலும்}, பக்கவாட்டாகவும் {குறுக்கிலும்}, ஒரு யோஜனை பரப்பை ஏற்கும் அக்கொடியை {துவஜம் [dhvajaḥ]}, மாயையால் பௌமானன் உருவாக்கியிருக்கிறான். {தன்னொளியாலான} அதன் வழியில் மரங்கள் குறுக்கே நின்றாலும் கூட, அவற்றால் அதன் போக்கைத் தடுக்க முடியாது. வானில் காட்சியளிக்கும், பல்வேறு நிறங்களாலான சக்ரனின் வில் {வானவில் [அ] இந்திரவில்] எதனாலானது என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அது போல, உண்மையில், பௌமானனால் திட்டமிடப்பட்ட அதன் வடிவம் மாறுபட்டதாகவும், எப்போதும் மாறுவதாகவும் இருக்கிறது.
விண்ணை முட்டி எழும் புகையோட கூடிய நெருப்பு, பல்வேறு பிரகாசமான நிறங்களையும் வடிவங்களையும் காட்டுவது போல, பௌமானனால் வடிவமைக்கப்பட்ட அந்தக் கொடி இருக்கிறது. உண்மையில் அதற்கென்று ஓர் எடையும் {பாரம்} கிடையாது. அது தடுக்கப்படக்கூடியதும் அல்ல. அத்தேரில், (கந்தர்வ மன்னன்) சித்திரசேனனால் அளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வெண்ணிற தெய்வீகக் குதிரைகள் இருக்கின்றன. ஓ! மன்னா {துரியோதனா}, பூமியிலோ, வானத்திலோ, சொர்க்கத்திலோ கூட அவற்றின் {அந்தக் குதிரைகளின்} போக்கைத் தடுக்க முடியாது. எத்தனை முறை கொல்லப்பட்டாலும், அவற்றின் {அக்குதிரைகளின்} எண்ணிக்கை எப்போதும் முழுமையாக {நூறு என்று} நிறைந்திருக்கும்படி முன்னரே வரமருளப்பட்டிருக்கிறது.
யுதிஷ்டிரனின் தேரில், தந்தம் போன்ற வெண்ணிறத்தில், சம ஆற்றல் படைத்த பெரிய குதிரைகள் பூட்டப்பட்டிருக்கின்றன. பீமசேனனின் தேரில், காற்றின் வேகமும், ஏழு முனிவர்களின் [1] பிரகாசமும் கொண்ட சிறப்புமிக்கவை {சிறப்புமிக்கக் குதிரைகள்} பூட்டப்பட்டிருக்கின்றன. கருநிற மேனியும், தித்திரி பறவை {சதுப்புநிலக் கௌதாரி} போன்று பல வண்ணங்களிலான முதுகு கொண்டதும், மனநிறைவு கொண்ட தன் சகோதரன் பல்குனனால் {அர்ஜுனனால்} கொடுக்கப்பட்டதும், பல்குனனின் {அர்ஜுனனின்} குதிரைகளை விட மேன்மையானதுமான குதிரைகள் சகாதேவனை மகிழ்ச்சியாகச் சுமக்கின்றன. விருத்திரனைக் கொன்ற இந்திரனைத் தாங்கும் அற்புதக் குதிரைகளைப் போன்றிருப்பவையும், பலமிக்கக் காற்றைப் போலப் பெரும் வேகம் கொண்டவை மாத்ரியின் மகனான, அஜமீட குலத்து நகுலனைச் சுமக்கின்றன. அளவில் பெரியவையும், வயதிலும், பலத்திலும் பாண்டவர்களின் குதிரைகளுக்கு நிகரானவையும், பெரும் வேகம் கொண்டவையும், அழகானவையும், தேவர்களால் கொடுக்கப்பட்டவையுமான அற்புத குதிரைகள், இளம் இளவரசர்களான சுபத்திரை மற்றும் திரௌபதியின் மகன்களைச் சுமக்கின்றன” என்றான் {சஞ்சயன்}.
[1] ஏழு முனிவர்கள் என்பது ஏழு நட்சத்திர மண்டலங்கள் என்ற பொருளைக் கொள்ளும். “ரிஷ்யப்ரக்யா” “ṛśya prakhyā” என்பது மூலச் சொல். ரிக்ஷப்ரக்யா என்பதற்கு “கரடிகள் போன்றவை” என்ற பொருளும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து பிரகாசம் என்ற சொல்லும் வருவதால், அது நட்சத்திரக்கூட்டங்களைக் குறிப்பதாகவே நாம் கொள்ளலாம்.