Who is a friend of this Universe! | Udyoga Parva - Section 63 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 23) {யானசந்தி பர்வம் - 17}
பதிவின் சுருக்கம் : கௌரவர்களும் பாண்டவர்களும் சமமானவர்களே என்றும், தானும், கர்ணனும், துச்சாசனனும் சேர்ந்து பாண்டவர்களைக் கொன்று விட முடியும் என்றும் பீஷ்மரிடம் துரியோதனன் சொன்னது; அப்படிப் பாண்டவர்களை வென்று அவர்களைத் தங்கள் வீரர்கள் இழுத்து வரும்போது, பாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணனின் செருக்கு அழியும் என்று திருதராஷ்டிரனிடம் துரியோதனன் சொன்னது; இதைக் கேட்டுக் கொண்டிருந்த விதுரன் சுயக்கட்டுப்பாடு குறித்த விளத்தைச் சொல்வது...
துரியோதனன் {பீஷ்மரிடம்} சொன்னான், “பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} அனைவரும் பிற மனிதர்களைப் போன்றோரே. உண்மையில், அவர்கள் {பாண்டவர்கள்} பிற மனிதர்களைப் போலப் பூலோகப் பிறப்புக் கொண்டவர்களே. பிறகு ஏன் அவர்களது வெற்றி உறுதி என்று நீர் நினைக்கிறீர்? சக்தி, ஆற்றல், வயது, புத்திக்கூர்மை, சாத்திர அறிவு, ஆயுதங்கள், போர்க்கலை, கரங்களின் வேகம், திறன் ஆகிய அனைத்திலும் நாங்களும் {கௌரவர்களும்}, அவர்களும் {பாண்டவர்களும்} சமமானவர்களே. அனைவரும் மனிதராய் இருப்பதால், நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே. பிறகு, ஓ! பாட்டா {பீஷ்மரே}, வெற்றி அவர்களுடையது என்று எப்படி நீர் அறிகிறீர்? எனது குறிக்கோளை அடைய நான் {பீஷ்மரான} உம்மையோ, துரோணர், கிருபர், பாஹ்லீகர் {சோமதத்தன்} அல்லது பிற மன்னர்களையோ நம்பி இருக்கவில்லை. {என்று பீஷ்மரிடம் சொன்ன துரியோதனன், திருதராஷ்டிரன் பக்கம் திரும்பி}
போர்க்களத்தில் {துரியோதனனான} நான், விகர்த்தனன் மகனான கர்ணன், என் தம்பி துச்சாசனன் ஆகியோர் சேர்ந்து எங்கள் கூரிய கணைகளால் பாண்டுவின் ஐந்து மகன்களையும் கொல்வோம். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, பல்வேறு வகையான பெரும் வேள்விகளைச் செய்து, அபரிமிதமான தட்சணைகளையும், பசு, குதிரை, செல்வம் ஆகிய தானங்களையும் கொடுத்து அந்தணர்களை மனம் நிறையச் செய்வோம்.
வேடர்களால் வலையில் இழுத்துவரப்படும் மான்கூட்டம் போலவோ, நீழ்ச்சுழியால் இழுக்கப்படும் படகோட்டிகளில்லா படகைப் போலவோ, போர்க்களத்தில் எனது வலிய கரங்களின் உதவியைப் பெற்ற என் படையால் அந்தப் பாண்டவர்கள் இழுத்து வரப்படும்போது, மக்கள் திரள், தேர்கள் மற்றும் யானைகளால் ஆதரிக்கப்படும். அவர்களது எதிரியான எங்களைக் கண்டதும், {பாண்டவர்கள்} தங்கள் செருக்கைக் கைவிடுவார்கள். அவர்கள் {பாண்டவர்கள்} மட்டுமல்ல கேசவனும் {கிருஷ்ணனும்} {தனது செருக்கைக்} கைவிடுவான்" என்றான் {துரியோதனன்}.
இதைக் கேட்ட விதுரன், "பிழையற்ற அறிவு கொண்ட மதிப்புமிக்க மனிதர்கள், 'சுயக்கட்டுப்பாடே' இவ்வுலகில் மிகவும் நன்மையானது என்று சொல்கிறார்கள். குறிப்பாக அந்தணர்கள் வழக்கில், இது {சுயக்கட்டுப்பாடே} அவர்களது கடமையாகிறது. சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒருவன், ஈகை, தவம், அறிவு, வேத கல்வி ஆகியவற்றைப் பின்பற்றி, வெற்றி, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, தன் தானங்களுக்கான கனி {பலன்} ஆகியவற்றை வெல்கிறான் {அடைகிறான்}. சுயக்கட்டுப்பாடு, சக்தியைப் பெருக்குகிறது. அது {சுயக்கட்டுப்பாடு என்பது} அற்புதமான புனிதமான ஒரு பண்பாகும். பாவத்தில் இருந்து விடுபட்டு, சுயக்கட்டுப்பாட்டால் சக்தியை அதிகரித்துக் கொள்ளும் ஒருவன், பிரம்மத்தையும் அதன்மூலமே {சுயக்கட்டுப்பாட்டின் மூலமே} அடைந்துவிடுகிறான்.
ராட்சசர்களைக் கண்டது போல, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களைக் கண்டு, எப்போதும் மக்கள் அஞ்சுவார்கள். இவர்களைப் போன்றோருக்காகத்தான் {சுயக்கட்டுப்பாடு இல்லாதோருக்காகத்தான்}, க்ஷத்திரியர்களைச் சுயம்பு படைத்தான். வாழ்வுமுறைகள் நான்கிலும் சுயக்கட்டுப்பாடே சிறந்த நோன்பாகும் எனச் சொல்லப்படுகிறது. சுயக்கட்டுப்பாட்டின் மூலமாக {பிறப்பிடமாக} இருக்கும் பண்புகளை அதன் {சுயக்கட்டுப்பாட்டை நோக்கிச் செல்லும்} அறிகுறிகளாக நான் கருதுகிறேன். மன்னிக்கும் தன்மை, மன உறுதி, ஊறிழையாமை {அஹிம்சை}, அனைத்தையும் சமமாகக் கருதல், உண்மை நிறைந்த பேச்சு, எளிமை, புலனடக்கம், பொறுமை, பேச்சில் மென்மை, பணிவு, உறுதி, பரந்த {தாராள} மனம், மென்மை, மனநிறைவு, நம்பிக்கை ஆகியவையே {இந்தப் பண்புகளே} அந்த அறிகுறிகள். சுயக்கட்டுப்பாடு உடையவன் இச்சை, பேராசை, செருக்கு, சினம், உறக்கம், தற்புகழ்ச்சி, அகங்காரம், கெட்ட எண்ணம் மற்றும் கவலை ஆகியவற்றைக் கைவிடுவான்.
தூய்மை, கோணல் புத்தியின்மை, வஞ்சமின்மை ஆகியவையே சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதனின் தனித்துவமான அறிகுறிகள். பேராசையின்றி எவன் இருக்கிறானோ, கொஞ்சம் வைத்திருந்தாலும் மனநிறைவுடன் எவன் இருக்கிறானோ, கடலைப் போன்று பயங்கரமான காமத்தைத் தூண்டும் பொருட்களை எவன் விரும்பவில்லையோ, அவனே சுயக்கட்டுப்பாடுடைய மனிதன் என்று அறியப்படுகிறான். நன்னடத்தையும், நல்ல மனநிலையும், நிறைவான ஆன்மாவும் கொண்டு, அறிவுடையவனாகத் தன்னை அறியும் ஒருவன் இங்கே {இவ்வுலகத்தில்} பெரும் மரியாதையைப் பெறுகிறான். இதற்குப் பிறகு {அடுத்த உலகத்தில்} அருள் நிலையை அடைகிறான்.
முதிர்ச்சி கொண்ட அறிவுடன், பிற உயிர்களிடம் அச்சம் கொள்ளாதவன் எவனோ, பிற உயிர்களுக்கு அச்சத்தைத் தராதவன் எவனோ அவனே மனிதர்களில் முதன்மையானவனாகச் சொல்லப்படுகிறான். அனைவருக்கும் நன்மையை விரும்பும் அவன் {பிற உயிர்களுக்கு அச்சம் தராதவன்} இந்த அண்டத்திற்கே நண்பனாகக் கருதப்படுகிறான். யாரும் அவனால் மகிழ்வின்மையை {துயரை} அடைவதில்லை. கடல் போன்ற ஈர்ப்புடன் இருக்கும் ஒரு மனிதன், அறிவின் விளைவால் கிடைத்த மனநிறைவுடன் எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான்.
நீதிமிக்கப் பழங்காலங்களிலும், தங்கள் கண்களுக்கு முன்னிலையிலும் {தற்காலத்திலும்} பயிலப்படும் செயல்களின் படி தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்ளும் சுயக்கட்டுப்பாடு உடைய ஒருவன், அமைதிக்குத் தன்னை அர்ப்பணித்து, இவ்வுலகில் இன்புற்று இருக்கிறான். அல்லது, அறிவின் விளைவால் ஏற்பட்ட மனநிறைவால் செயலைத் துறக்கும் அத்தகு மனிதன், தனது புலன்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து இவ்வுலகில் விரைந்து நகர்ந்து, பிரம்மத்திற்குள் தான் கரைந்து போகும் அந்தத் தவிர்க்க முடியாத நேரத்திற்காகக் காத்திருக்கிறான்.
இறகு படைத்த உயிரினங்கள் {பறவைகள் பறந்து} செல்லும் பாதை காணப்படாததுபோல, அறிவின் விளைவால் மனநிறைவில் மகிழ்ந்திருக்கும் ஒரு துறவியின் பாதையும் கண்களுக்குத் தெரியாது. உலகைத் துறக்கும் அவன், விடுதலையைப் பெறும் நோக்கில் சந்நியாச வகை வாழ்வு முறையை ஏற்று, சொர்க்கத்தில் தனக்காகப் பிரகாசமான நித்தியமான உலகங்களை ஒதுக்கிக் கொள்கிறான்.