The import of Krishna's names | Udyoga Parva - Section 70 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 30) {யானசந்தி பர்வம் - 24}
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் பெயர்களையும் அதற்கான பொருள்களையும் உரைக்குமாறு சஞ்சயனைத் திருதராஷ்டிரன் வேண்டுவது; சஞ்சயன் அவற்றையும் கிருஷ்ணனின் பெருமைகளையும் சொல்லி, கௌரவர்களின் அழிவைத் தடுக்கக் கிருஷ்ணன் அங்கே வரப்போகிறான் என்பதையும் சொன்னது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, தாமரைக்கண் கிருஷ்ணனைக் குறித்து மீண்டும் எனக்குச் சொல்லுமாறு நான் உன்னை வேண்டிக் கொள்கிறேன்; ஏனெனில், ஓ! ஐயா {சஞ்சயா}, அவனது {கிருஷ்ணனுடைய} பெயர்களின் பொருளை அறிந்தாலாவது, நான் அந்த ஆண்மகன்களில் மேன்மையானவனை {புருஷோத்தமனை} அடையக்கூடும்" என்றான் {திருதராஷ்டிரன்}.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "(கேசவனின் {கிருஷ்ணனின்}) அந்த மங்கலகரமான பெயர்களை நான் முன்பே கேட்டிருக்கிறேன். அவற்றில் நான் அறிந்தவற்றை மட்டும் உமக்குச் சொல்கிறேன். எனினும், கேசவன் {கிருஷ்ணன்}, அளவிடப்பட முடியாதவனும், பேச்சின் சக்தியால் விவரிக்கப்பட முடியாதவனும் ஆவான் {என்பதை அறிந்து கொள்ளும்}.
தனது மாயத்திரையால் அனைத்து உயிர்களையும் ஆக்கிரமிப்பதாலோ , தனது மகிமைமிக்கப் பிரகாசத்தாலோ, தேவர்களின் ஓய்விடமாகவும் ஆதரவாகவும் இருப்பதாலோ {எல்லா உயிர்களிலும் வசிப்பதாலோ} அவன் வாசுதேவன் என்று அழைக்கப்படுகிறான்.
எங்கும் பரந்திருக்கும் தனது இயல்பினால் {எங்கும் வியாபித்துள்ளதால்} அவன் விஷ்ணு என்று அழைக்கப்படுகிறான்.
யோக உட்கவர்தலிலும், உண்மையிலும் மனதைக் குவித்து முனிவனாகப் பயிற்சி செய்வதால், அவன் மாதவன் {பெரும் தவம் செய்பவன்} என்று அழைக்கப்படுகிறான்.
அசுரன் மதுவைக் கொன்றதனாலும், அறிவுக்கான இருபத்து நான்கு பொருட்களின் [1] {ஆத்ம தத்துவங்களின்} சாரமாக அவன் இருப்பதாலும் மதுசூதனன் என்று அழைக்கப்படுகிறான்.
[1] அந்தக்கரணங்கள் நான்கு {மனம், அறிவு, நினைவு, முனைப்பு}, அறிபொறிகள் ஐந்து {ஞானேந்திரியங்கள் - மெய், வாய், கண், மூக்கு, செவி}, செயற்பொறிகள் ஐந்து {கர்மேந்திரியங்கள் - வாக்கு, கை, கால், மலவாய், கருவாய்} , தன்மாத்திரைகள் ஐந்து {சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்}, பூதங்கள் ஐந்து {நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு} ஆகியவை சேர்ந்த இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள்
சாத்வத குலத்தில் பிறந்த அவன், "ஏற்கனவே இருக்கிறது" என்பதைக் குறிக்கும் "கிருஷி" மற்றும் "நித்திய அமைதி" என்பதைக் குறிக்கும் "ண" ஆகிய இரண்டு வார்த்தைகளுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் {ஏற்கனவே நிலைத்து இருக்கும் நித்திய அமைதியாக [சமாதானமாக] அவனே இருப்பதால்} அவன் கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறான். [2]
[2] "க்ருஷ்" என்றால் கீறுதல் என்று பொருள். "கருஷ்" என்றால் பூமி என்று பொருள், "ண" என்றால் சுகம் என்று பொருள். "கிருஷ்ண" என்றால் கலப்பையினால் பூமி கீறப்படுவதால் {நிலத்தை உழுவதால்} விளையும் நன்மையைக் குறிப்பதாகும் என்றும் சொல்கிறார்கள்.
"உயர்ந்ததும், நிரந்தரமானதுமான அவனது வசிப்பிடத்தை" குறிக்கும் "புண்டரீகம்" {ஹ்ருதயக் கமலம் = இதயத்தாமரை} மற்றும் "அழிவற்றதைக்" குறிக்கும் "அக்ஷம்" ஆகியவற்றில் இருந்து அவன் புண்டரீகாக்ஷன் என்று அழைக்கப்படுகிறான்;
மேலும் தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவிப்பதால் அவன் ஜனார்த்தனன் என்று அழைக்கப்படுகிறான்.
சத்வ குணம் அவனை விட்டு எப்போதும் விலகாததாலும், அவனும் அதைவிட்டு எப்போதும் விலகாமல் இருப்பதாலும் அவன் சாத்வதன் என்று அழைக்கப்படுகிறான்;
"விருஷபம்" என்பது "வேதங்களைக்" குறிக்கும், "இக்ஷணம்" என்பது "கண்ணைக்" குறிக்கும். அந்த இரண்டும் இணைந்து வேதங்களே அவனது கண்கள் என்றோ, வேதங்களே அவனைக் காண்பதற்கான கண்கள் என்றோ குறிக்கின்றன என்பதால், அவன் விருஷபாக்ஷணன் என்று அழைக்கப்படுகிறான்,
எதிரி படைகளை வெற்றிக் கொள்ளும் அவன், எந்த உயிரிலிருந்தும் சாதாரண வழியில் தனது பிறப்பை எடுக்காததால், "பிறக்காதவன்" அல்லது அஜா என்று அழைக்கப்படுகிறான்.
தேவர்களைப் போலல்லாமல் அவனது பிரகாசமும், அவனது சுயமும் படைக்கப்படாததாக இருப்பதாலும், சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும் கொண்டிருப்பதாலும் அந்தப் பரமாத்மா தாமோதரன் [3] என்று அழைக்கப்படுகிறான்.
[3] புலன்களுக்கு மத்தியில் தானே பிரகாசித்து அமைதியாக இருப்பவன் என்றும் அப்பெயர் விளக்கப்படுகிறது.
"நித்திய மகிழ்ச்சி" என்பதற்கு "ஹ்ரிஷிகா" என்றும் "ஈசா" என்பதற்கு "ஆறு தெய்வீகப் பண்புகள்" என்றும் பொருள், இவற்றின் இணைப்பு இன்பம், மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக் குறிப்பதால் அவன் ரிஷிகேசன் {ஹ்ரிஷிகேசன்} என்று அழைக்கப்படுகிறான்.
தனது இரு கரங்களால் பூமியையும், வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால், அவன் மஹாபாஹு என்று அழைக்கப்படுகிறான்.
எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும், எந்தக் குறைவும் அற்று இருப்பதனாலும் அவன் அதாக்ஷஜன் {அதோக்ஷஜன்} என்று அழைக்கப்படுகிறான்,
மேலும், மனிதர்கள் {நரர்கள்} அனைவருக்கும் புகலிடமாக இருப்பதால் {அயனமாக இருப்பதால்} அவன் நாராயணன் என்று அழைக்கப்படுகிறான்.
"படைத்துப் பாதுகாப்பவன்" என்பதையும், "அண்டத்தைப் படைத்து, பாதுகாத்து, அழிப்பவனைக் குறிக்கும் ஒருமையை அழிப்பவன்" என்பதையும் குறிக்கும் "புரு" என்பதில் இருந்து அவன் புருஷோத்தமன் {ஆண்மகன்களில் மேன்மையானவன்} என்று அழைக்கப்படுகிறான்.
அனைத்துப் பொருட்களின் அறிவையும் கொண்டிருப்பதால் அவன் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.
கிருஷ்ணன் எப்போதும் உண்மையில் இருக்கிறான், உண்மையும் எப்போதும் அவனில் இருக்கிறது, மேலும் கோவிந்தனே உண்மையின் உண்மையாவான். எனவே, அவன் சத்யன் என்று அழைக்கப்படுகிறான்.
தனது {வியாபிக்கும் தன்மை கொண்ட} ஆற்றலுக்காக விஷ்ணு என்றும், தனது வெற்றிகாக ஜிஷ்ணு என்றும் அவன் அழைக்கப்படுகிறான்.
நித்தியமானவனாக {அழிவில்லாதவனாக} இருப்பதால் அனந்தன் என்றும், அனைத்து வகைப் பேச்சுகளின் அறிவையும் கொண்டிருப்பதால் கோவிந்தன் என்றும் அவன் அழைக்கப்படுகிறான்.
உண்மையற்றவற்றை உண்மையாகத் தோன்றச் செய்து அனைத்து உயிர்களையும் அவன் ஏமாற்றுகிறான். இத்தகு குணங்களைக் கொண்டவனும், அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், தெய்வீகமானவனும், சிதையும் திறனற்ற வலிய கரங்கள் கொண்டவனும் மதுவைக்கொன்றவனுமான, அவன் {மதுசூதனன் = கிருஷ்ணன்}, குருக்களின் {கௌரவர்களின்} படுகொலையைத் தடுக்கும்பொருட்டு இங்கே வருவான்" என்றான் {சஞ்சயன்}.