Dhritarashtra's devotion! | Udyoga Parva - Section 71 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 31) {யானசந்தி பர்வம் - 25}
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் வருவதைக் கேட்ட திருதராஷ்டிரன், கிருஷ்ணனைப் புகழ்ந்து, அவனைக் காணும் கண் படைத்தவர்கள் அனைவரையும் கண்டு தான் பொறாமை படுவதாகச் சொல்வது; சிறப்புமிக்க அந்தக் கிருஷ்ணனிடம் தான் தஞ்சம் அடைவதாகவும் தெரிவிப்பது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, பெரும் அழகும் பிரகாசமும் கொண்ட உடலைப் படைத்தவனும், முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளைப் பிரகாசிக்கச் செய்பவனும், பாரதர்களால் மரியாதையாகக் கேட்கத்தக்கதும், ஸ்ருஞ்சயர்களுக்கு மங்கலகரமானதும், செழிப்பை விரும்புகிறவர்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கதும், அனைத்து வகையிலும் குறைகளற்றதும், மரணமடைய விதிக்கப்பட்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததுமான வார்த்தைகளைச் சொல்பவனும், உயர்ந்த தீர்மானங்களை நிறைவாகக் கொண்டவனும், நித்தியமானவனும், ஒப்பற்ற வீரம் படைத்தவனும், யாதவர்களில் காளையும், {யாதவர்களுக்குத்} தலைவனும், பகைவரைக் கொல்பவனும், அவர்களுக்குப் பிரமிப்பையும் ஊக்கத்தையும் அளிப்பவனும், பகைவர்கள் அனைவரின் புகழை அழிப்பவனுமான வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தங்கள் முன்னால் காண்பதற்குப் பார்வையைக் கொடையாகக் கொண்டவர்களைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன்.
உயர்ந்த ஆன்மா கொண்டவனும், வணங்கத்தக்கவனும், எதிரிகளைக் கொல்பவனும், விருஷ்ணிகளின் தலைவனும், அன்பு நிறைந்த வார்த்தைகளைப் பேசுபவனும், என் தரப்பில் உள்ளோரை கவர்பவனுமான {மயங்கச் செய்பவனுமான} அவனை {கிருஷ்ணனை} இங்கே கூடியிருக்கும் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரும் காண்பார்கள்.
தன்னறிவு கொண்ட {சுயத்தை அறிந்த} முனிவனும், சொல் திறனின் கடல் ஆனவனும், துறவிகளால் எளிதாக அடையப்படக்கூடியவனும், அழகிய சிறகுகள் கொண்ட அரிஷ்டா {கருடன்} என்றழைக்கப்படும் பறவையானவனும், உயிரினங்களை அழிப்பவனும், அண்டத்தின் புகலிடமானவனும், ஆயிரம் தலைகளைக் கொண்டவனும், அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவனும், புராதானமானவனும், தொடக்கமும், நடுவும், முடிவும் அற்றவனும், முடிவிலா சாதனைகள் கொண்டவனும், முதன்மை வித்துக்குக் காரணமானவனும், பிறப்பற்றவனும், நித்தியத்தைச் சுயமாகக் கொண்டவனும், உயர்ந்தவற்றில் எல்லாம் உயர்ந்தவனும், மூவுலகங்களையும் படைத்தவனும், தேவர்கள், அசுரர்கள், நாகர்கள், ராட்சசர்கள், கல்விமான்களில் முதன்மையானவர்கள் அனைவர், மனிதர்களின் ஆட்சியாளர்கள் ஆகியோருக்கு ஆசிரியனும், இந்திரனின் தம்பியுமான அந்த நித்தியமானவனின் {கிருஷ்ணனின்} கைகளில் நான் என்னைக் கொடுக்கிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}.
சனத்சுஜாத பர்வம் {யானசந்தி பர்வம்} முற்றும்