Kunti dispelled from darkness! | Udyoga Parva - Section 90c | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –19)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனிடம் குந்தி தனது சோகங்களைப் பகிர்ந்து கொண்டு தனது மகன்களுக்குச் சொல்ல வேண்டியதைக் கிருஷ்ணனிடம் சொன்னது; குந்திக்கு ஆறுதலைச் சொன்ன கிருஷ்ணன், பாண்டவர்களின் நலத்தையும் மகிழ்ச்சியையும் சொன்னது; கிருஷ்ணனைப் புரிந்து கொண்ட குந்தி இருள் விலகி கிருஷ்ணனைப் புகழ்ந்தது...
{குந்தி கிருஷ்ணனிடம் தொடர்ந்தாள்}, "ஓ! மாதவா {கிருஷ்ணா}, அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரனிடம், "ஓ! மகனே {யுதிஷ்டிரனே} உனது அறம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே, அறத்தகுதி அழிந்து போகாத வகையில் செயல்படுவாயாக" என்று {நான் சொன்னதாகச்} சொல்வாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பிறரைச் சார்ந்து வாழ்வது இழிவே. அற்பத்தனம் மூலம் {கெஞ்சி வாழ்வதன் மூலம்} வாழ்வாதாரத்தைப் பெறுவதைவிட மரணமே மேலானது.
தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்}, எப்போதும் தயாராக இருக்கும் விருகோதரனிடமும் {பீமனிடமும்}, "ஒரு க்ஷத்திரியப் பெண் எதை நோக்கமாகக் கொண்டு ஒரு மகனைப் பெறுகிறாளோ, அந்நிகழ்வுக்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் எதையும் சாதிக்காமல் நேரத்தை நழுவ விட்டீர்களேயானால், இப்போது உலகமனைத்தாலும் மதிக்கப்படும் நீங்கள், பின்பு, இழிந்ததாகக் கருதப்படும் ஒன்றையே செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் இகழ்ச்சியை அடைந்தால், நான் உங்களை என்றென்றைக்கும் கைவிட்டுவிடுவேன். நேரம் வரும்போது, அன்பிற்குரிய {தனது} உயிர்கூட விடப்பட வேண்டும்" என்று சொல்வாயாக.
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, க்ஷத்திரிய வழக்கங்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் மாத்ரியின் மகன்களிடம் {நகுல சகாதேவனிடம்}, "க்ஷத்திரிய வழக்கங்களின் படி வாழ விரும்பும் மனிதனின் இதயத்தை, தன் ஆற்றலால் வெல்லப்பட்ட பொருட்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும். எனவே, ஆற்றலால் {வீரத்தால்} அடையத்தக்க இன்ப {மகிழ்ச்சியைத் தரக்கூடிய} பொருட்களை வெல்ல முயலுங்கள்" என்று சொல்வாயாக.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, அங்கே சென்று, ஆயுதம் தாங்கியோர் அனைவரிலும் முதன்மையானவனும், பாண்டுவின் வீரமகனுமான அர்ஜுனனிடம், "திரௌபதி சுட்டிக்காட்டும் பாதையில் நீ நடப்பாயாக" என்று சொல்வாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, அண்டத்தை அழிப்பவனைப் போன்ற பீமனும் அர்ஜுனனும், கோபத்தால் தூண்டப்படும்போது, தேவர்களையே கூட அவர்களால் கொல்ல இயலும் என்பது நீ அறிந்ததே. அவர்களது மனைவியான கிருஷ்ணையை {திரௌபதியை} துச்சாசனனும், கர்ணனும் சபைக்கு இழுத்து வந்து அவமதித்துப் பேசியது, அவர்களுக்கு {பீமனுக்கும் அர்ஜுனனுக்கும்} இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகும்.
குரு {கௌரவத்} தலைவர்களின் முன்னிலையிலேயே பெரும்பலமிக்க சக்தி கொண்ட பீமனை துரியோதனனே அவமதித்திருக்கிறான். அந்த நடத்தைக்கான கனியை {பலனை} அவன் {துரியோதனனே} அறுவடை செய்வான் {அடைவான்} என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், எதிரியால் தூண்டப்பட்டால், விருகோதரன் {பீமன்} அமைதியை அறியமாட்டான். உண்மையில், ஒரு முறை தூண்டப்பட்டுவிட்டால், நீண்டகாலத்துக்கு அதைப் பீமன் மறக்க மாட்டான். அந்த எதிரியும், அவனது கூட்டாளிகளும் அழியும் வரை அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்} மறக்க மாட்டான். நாட்டை இழந்தது என்னைத் துயர்கொள்ளச் செய்யவில்லை; பகடையில் தோற்றதும் என்னைத் துயர்கொள்ளச் செய்யவில்லை. ஒற்றையாடை உடுத்தியிருந்தவளும், ஒப்பற்றவளும், அழகானவளுமான பாஞ்சால இளவரசி {திரௌபதி} சபைக்கு இழுத்துவரப்பட்டு, கசப்பான வார்த்தைகளைக் {அவள்} கேட்குமாறு செய்யப்பட்டதே என்னை மிகவும் துன்புறுத்தியது. ஓ! கிருஷ்ணா, இதைவிட எனக்குப் பெரிய வருத்தத்தை அளிக்கக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்?
ஐயோ, க்ஷத்திரிய வழக்கங்களுக்கு என்றும் அர்ப்பணிப்புடன் இருந்தவளும், பெரும் அழகுடையவளுமான அந்த இளவரசி {திரௌபதி}, மேனி சுகமில்லாத போது {மாதவிலக்காய் இருந்த போது}, இப்படிக் கொடூரமாக நடத்தப்பட்டாளே. வலிமைமிக்கப் பாதுகாவலர்களைக் கொண்டவளாய் இருந்தாலும், யாருமற்றவளைப் போல, அப்போது ஆதரவற்று இருந்தாளே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, உன்னையும், பலமிக்க மனிதர்களில் முதன்மையான அந்த ராமனையும் {பலராமனையும்}, வலிமைமிக்கத் தேர் வீரனான பிரத்யும்னனையும் எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் பாதுகாவலர்களாய்க் கொண்டிருந்தும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, எனது மகன்களான யாரும் வெல்லமுடியாத பீமன், புறமுதுகிடாத விஜயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் உயிரோடு இருந்தும், நான் இத்தகு துயரைத் தாங்க வேண்டியிருப்பது நிச்சயம் விசித்திரமாகவே இருக்கிறது!" என்றாள் {குந்தி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படி அவளால் {குந்தியால்} சொல்லப்பட்டதும், பார்த்தனின் {அர்ஜுனனின்} நண்பனான சௌரி {கிருஷ்ணன்}, தன் மகன்களைக் குறித்த துயரில் பாதிக்கப்பட்டிருந்த தனது அத்தை {தந்தையின் சகோதரி} பிருதையைத் {குந்தியைத்} தேற்றினான். மேலும் அந்த வாசுதேவன் {கிருஷ்ணன் - குந்தியிடம்}, "ஓ! அத்தை {குந்தி}, உன்னைப் போன்ற எந்தப் பெண் இந்த உலகில் இருக்கிறாள்? மன்னன் சூரசேனருக்கு மகளான நீ, திருமணத்தால் அஜமீட குலத்தை {குருகுலத்தை} அடைந்தாய். உயர்ந்த பிறப்பும், உயர்ந்த மணமும் கொண்ட நீ, ஒரு பெரிய தடாகத்தில் இருந்து மற்றொரு பெரிய தடாகத்திற்கு மாற்றப்பட்ட தாமரையைப் போன்றவளாவாய்.
செழிப்புகள் அனைத்தையும், பெரும் நற்பேறையும் பெற்ற நீ, உனது கணவரால் {பாண்டுவால்} வணங்கப்பட்டாய். அறங்கள் அனைத்தையும், பெரும் அறிவையும் உடைய நீ, இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் பொறுமையுடன் தாங்கிக் கொள்வதே உனக்குத் தகும். உறக்கம், தளர்வு, கோபம், மகிழ்ச்சி, பசி, தாகம், குளிர்ச்சி, வெப்பம் ஆகியவற்றில் இருந்து மீண்ட உனது பிள்ளைகள், வீரர்களுக்குத் தகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். பெரும் முயற்சியும், பெரும் பலமும் கொண்ட உனது மகன்கள், தாழ்ந்த மற்றும் சராசரியானவர்களுக்கு மட்டுமே மனநிறைவைத் தருகின்றதும், புலன்களால் பெறப்படுவதுமான வசதிகளால் பாதிக்கப்படாமல், வீரர்களுக்குத் தகுந்த இன்பத்தை எப்போதும் தொடர்ந்து செல்கிறார்கள். அதே போலச் சராசரி ஆசைகளைக் கொண்ட சிறிய மனிதர்களைப் போல, அவர்கள் மனநிறைவை அடைவதில்லை.
மகிழ்ச்சிகரமானதையும், துன்பகரமானதையும், அறிவுடையோர், அதே இன்பத்துடனோ துன்பத்துடனோ பெற்றுக் கொள்கிறார்கள். உண்மையில், குறைந்த அல்லது சராசரி மனிதர்களை மனநிறைவு கொள்ளச் செய்யும் வசதிகளால் பாதிக்கப்பட்டு, எந்த வகையான உற்சாகமும் அற்ற மந்த நிலைக்கு இணையான நிலையையே சாதாரண மனிதர்கள் விரும்புகின்றனர். எனினும், மேன்மையானவர்களோ, மனித துயரங்களில் தீவிரமானதையோ, அல்லது, மனிதனுக்கு அளிக்கப்படும் மகிழ்ச்சிகள் அனைத்திலும் உயர்ந்ததையோ தான் விரும்புகிறார்கள். அறிவுடையோர் எல்லை கடந்தவற்றிலேயே {அதீத [தீவிர] நிலைகளிலே} இன்புறுகின்றனர். இடைநிலைகளில் அவர்கள் இன்பத்தைக் காண்பதில்லை; எல்லை கடந்தவற்றையே {அதீதமான இரு நிலைகளையே} அவர்கள் இன்பமாகக் கருதுகிறார்கள். அதே வேளையில், {இரு நிலைகளுக்கும்} இடைநிலையைத் {அதீத நிலை இரண்டுக்கும் நடுவில் இருப்பதைத்} துயரமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள் என் மூலமாக உன்னை வணங்குகிறார்கள். தாங்கள் நன்றாக இருப்பதாகச் சொல்லி, உனது நலத்தை விசாரிக்கிறார்கள். தங்கள் எதிரியைக் கொன்று, செழிப்பை முதலீடாக்கிக் கொண்டு, முழு உலகத்தின் தலைவர்களாக அவர்களை {பாண்டவர்களை} நீ விரைவில் காண்பாய்", என்றான் {கிருஷ்ணன்}.
இப்படிக் கிருஷ்ணனால் தேற்றப்பட்டவளும், தன் மகன்கள் குறித்த துயரத்தால் பாதிக்கப்பட்டவளுமான குந்தி, தனது புரிதலை தற்காலிகமாக இழந்திருந்ததால் விளைந்த இருளை விரைவாக அகற்றி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எதைச் செய்வது முறையானது என்று நீ கருதுகிறாயோ, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, சிறு கபடமும் இல்லாமல், நீதியைத் தியாகம் செய்யாமல் அது செய்யப்படட்டும். ஓ! கிருஷ்ணா, உனது உண்மை {சத்தியம்} மற்றும் உனது பரம்பரையின் பலம் என்ன என்பதை நான் அறிவேன். உனது நண்பர்கள் சம்பந்தமானவற்றைச் செய்து முடிக்க, என்ன தீர்ப்பையும், என்ன ஆற்றலையும் நீ வெளிப்படுத்துவாய் என்பதையும் நான் அறிவேன். எங்கள் குலத்தில், நீயே அறம் {தர்மம்}, நீயே உண்மை {சத்தியம்}, நீயே தவத்துறவுகளின் உருவகமும் ஆவாய். நீயே அந்தப் பெரும் பிரம்மம், அனைத்தும் உன் மீதே இருக்கின்றன. எனவே, நீ சொன்னது அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்" என்றாள் {குந்தி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவளை {குந்தியை} வலம் வந்து, அவளிடம் பிரியாவிடை பெற்றவனும் வலிய கரங்களைக் கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, {அங்கிருந்து} துரியோதனனின் மாளிகைக்குப் புறப்பட்டான்" என்றார் {வைசம்பாயனர்}.