The love of Vidura! | Udyoga Parva - Section 92 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –21)
பதிவின் சுருக்கம் : திரண்டிருக்கும் படைகளால் செருக்குற்றிருக்கும் துரியோதனன் கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்க மாட்டான் என்றும்; கிருஷ்ணனின் வருகையைத் திட்டமிடப்படாத ஒன்றாகத் தான் கருதுவதாகவும், கௌரவர்களுக்கு மத்தியில் கிருஷ்ணன் செல்லாதிருப்பதே நலம் என்றும் விதுரன் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கேசவன் {கிருஷ்ணன்} (உணவு)உண்டு புத்துணர்ச்சி பெற்றதும், இரவில், விதுரன் அவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, இந்த உனது வருகை நன்கு தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இல்லை. ஏனெனில், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டின் விதிகளையும் மீறுபவனாவான். புகழை விரும்புபவனாக இருப்பினும், தீயவனாகவும், கோபம் நிறைந்தவனாகவும் இருந்து கொண்டு, பிறரை அவமித்து வருகிறான். முதியோர் கட்டளைகளுக்கு அவன் {துரியோதனன்} கீழ்ப்படிவதில்லை.
ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவன் {துரியோதனன்}, சாத்திரங்களை மீறுபவனும், அறியாமை கொண்ட தீய ஆன்மா கொண்டவனும், ஏற்கனவே விதியில் மூழ்கியவனும், எளிதில் வசப்படுத்த முடியாதவனும், அவனுக்கு நன்மை செய்ய முயல்பவர்களுக்குத் தீமை செய்யும் மனநிலை கொண்டவனும் ஆவான். அவனின் {துரியோதனனின்} ஆன்மா, ஆசையாலும் காமத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது. அவன் {துரியோதனன்} தன்னைத்தானே அறிஞன் என மூடத்தனத்தால் கருதிக் கொள்கிறான். உண்மையான தனது நண்பர்கள் அனைவருக்கும் அவன் எதிரியாக இருக்கிறான். எப்போதும் சந்தேகத்துடன், தனது ஆன்மா மீது எவ்விதக் கட்டுபாடுமின்றி, நன்றி கெட்டவனாகி, அறம் அனைத்தையும் கைவிட்ட அவன் {துரியோதனன்}, இப்போது பாவத்துடன் காதலில் இருக்கிறான்.
பண்படுத்தப்படாத புரிதலைக் கொண்ட மூடனான அவன் {துரியோதனன்}, புலன்களுக்கு அடிமையாய், காமம் மற்றும் பேராசையின் தூண்டுதலுக்கு எப்போதும் அடிபணிந்தவனாய், செய்யப்பட வேண்டிய ஒவ்வொரு செயலிலும் தயக்கம் உள்ளவனாய் இருக்கிறான். இவற்றையும், இன்னும் பல தீமைகளையும் அவன் {துரியோதனன்} கொண்டிருக்கிறான். அவனுக்கு நன்மை யாதென நீ சுட்டிக் காட்டினாலும், செருக்காலும் கோபத்தாலும் அவன் அவற்றை அலட்சியப்படுத்துவான்.
பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஜெயத்ரதன் ஆகியோரிடம் அவன் {துரியோதனன்} பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறான். எனவே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சமாதானத்தில் தன் இதயத்தை அவன் செலுத்தவில்லை. கர்ணனுடன் கூடிய திருதராஷ்டிரர் மகன்கள் {கௌரவர்கள்}, 'பீஷ்மர், துரோணர் மற்றும் பிற வீரர்களைப் பாண்டவர்களால் {எதிர்த்துப்} பார்க்கக்கூட இயலாது எனும் போது, அவர்களுடன் {இந்த கௌரவர்களுடன்} அவர்கள் {அந்த பாண்டவர்கள்} போரிடுவதைக் குறித்து என்ன சொல்வது' என்ற உறுதியான நம்பிக்கையில் இருக்கிறார்கள். மட்டுப்பட்ட பார்வை கொண்டவனான முட்டாள் துரியோதனன், ஒரு பெரிய படையைக் கூட்டிவிட்டதால், தனது நோக்கங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுகிறான்.
அவனது {துரியோதனனின்} எதிரிகளை, கர்ணன், தனியாளவே வெல்லத் தகுந்தவன் என்ற தீர்மானத்திற்குத் திருதராஷ்டிரரின் முட்டாள் மகன் {துரியோதனன்} வந்திருக்கிறான். எனவே, அவன் {துரியோதனன்} சமாதானத்திற்கு உடன்படமாட்டான்.
ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீயோ இருதரப்புக்கும் இடையில் சமாதானத்தையும், சகோதர உணர்வுகளையும் நிறுவ விரும்புகிறாய். உண்மையில், பாண்டவர்களுக்கு உரிமையிருந்தாலும் கூட, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு அவர்களது பங்கைக்} கொடுப்பதில்லை என்ற முடிவுக்குத் திருதராஷ்டிரரின் மகன்கள் அனைவரும் வந்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வாயாக. அப்படிப்பட்ட தீர்மானத்துடன் இருக்கும் அவர்களிடம் {கௌரவர்களிடம்} உனது வார்த்தைகள் வீணாவது நிச்சயம். ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எங்கே நல்ல வார்த்தைகளுக்கும், தீய வார்த்தைகளுக்கும் ஒரே விளைவு இருக்கிறதோ, அங்கே, காது கேளாதவன் முன்பு பாடுபவன் போல, அறிவுள்ள ஒரு மனிதன், தனது மூச்சைக்கூட வீணாக்க மாட்டான்.
சண்டாளர்கள் கூட்டத்திற்கு முன்பான ஓர் அந்தணன் போல, ஓ! மாதவா {கிருஷ்ணா}, அறியாமைகொண்டவர்களும், இழிந்தவர்களும், தீயவர்களும், மதிப்புக்குரிய அனைவரையும் மதிக்காதவர்களுமான அவர்களுக்கு மத்தியில் உனது வார்த்தைகளுக்கு மரியாதை இருக்காது. அவனிடம் நீ எந்த வார்த்தைகளைப் பேசினாலும் அது முற்றிலும் பலனற்றதாகவே இருக்கும். ஓ! கிருஷ்ணா, தீய மனம் கொண்ட இந்த இழிந்தவர்களுக்கு மத்தியில் அவர்களுடன் ஒன்றாக நீ அமர்வது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. ஓ! கிருஷ்ணா, எண்ணிக்கையில் வலுவாக, நீதியற்றவர்களாக, மூடர்களாக, தீய ஆன்மா கொண்டவர்களாக இருக்கும் அவர்களை {கௌரவர்களை} எதிர்த்து அங்கே நீ பேசப்போவது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை.
அவர்கள் முதியோரை வழிபடாததன் விளைவாகவும், செழிப்பு, செருக்கு ஆகியவற்றால் குருடானதன் விளைவாகவும், இளமையின் செருக்கு மற்றும் கோபத்தாலும், அவர்களுக்கு முன்னிலையில் நீ வைக்கப் போகும் நல்ல அறிவுரையை அவர்கள் ஏற்கவே மாட்டார்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவன் {துரியோதனன்} பலமான படையைத் திரட்டியிருக்கிறான். மேலும், அவன் {துரியோதனன்} உன்மீது சந்தேகம் கொண்டிருக்கிறான். எனவே, அவன் உனது எந்த ஆலோசனைக்கும் கீழ்ப்படியவே மாட்டான்.
ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தற்போதைய நிலையில், இந்திரன் தலைமையிலான தேவர்களே வந்தாலும், போர்க்களத்தில் தங்களை வீழ்த்த முடியாது என்ற உறுதியான நம்பிக்கையில் திருதராஷ்டிரர் மகன்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். எப்போதும் விளைவுகளை உண்டாக்கும் உனது வார்த்தைகள், இது போன்ற நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டவர்களிடமும், காமம் மற்றும் கோபத்தின் தூண்டுதல்களை எப்போதும் பின்பற்றுபவர்களிடமும் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. தனது யானைப் படை, தேர்ப்படை மற்றும் வீரமிகுந்த காலாட்படை ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் மூடனான தீய துரியோதனன், அச்சங்கள் அனைத்தும் விலகிய நிலையில், முழு உலகமும் ஏற்கனவே தன்னால் அடக்கப்பட்டதாகக் கருதுகிறான். உண்மையில், திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, எந்த எதிரிகளும் அற்ற பரந்த பேரரசுக்காகப் பேராசைப் படுகிறான். எனவே, அவனிடம் சமாதானம் கொள்வது என்பது அடையப்பட முடியாதது ஆகும்.
தன் உடைமையாக இருக்கும் அனைத்தும் மாற்றமில்லாமல் தனதே என அவன் {துரியோதனன்} கருதுகிறான். ஐயோ, துரியோதனனுக்காகப் பூமியில் ஏற்படப்போகும் அழிவு அருகிலிருப்பதாகத் தெரிகிறதே. ஏனெனில், க்ஷத்திரிய வீரர்கள் அனைவருடன் கூடிய பூமியின் மன்னர்கள், விதியால் உந்தப்பட்டு, பாண்டவர்களுடன் போரிட விரும்பி ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்கள். அந்த மன்னர்கள் அனைவரும் உன்னுடன் பகை கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, அவர்கள் அனைவரும் உன்னால் தங்கள் உடைமைகளை இழந்தவர்களாகவும் இருக்கின்றர். உன்னிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, அந்த வீர ஏகாதிபதிகள் அனைவரும் கர்ணனுடன் சேர்ந்து கொண்டு, திருதராஷ்டிரன் மகன்களுடன் {கௌரவர்களுடன்} ஒரு கூட்டணியை ஏற்படுத்தியிருக்கின்றனர். தங்கள் உயிரைத் துச்சமாக நினைக்கும் அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனுடன் இணைந்திருக்கின்றனர்.
ஓ! தாசார்ஹ குலத்து வீரா {கிருஷ்ணா}, அவர்களுக்கு மத்தியில் நீ நுழைவது மெச்சத்தகுந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே {கிருஷ்ணா}, தீய ஆன்மாக்களைக் கொண்ட எண்ணற்ற உனது எதிரிகள் ஒன்றாக அமர்ந்திருக்கையில், அவர்களுக்கு மத்தியில் நீ எப்படிச் செல்வாய்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, உண்மையில், தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவன் நீ என்பதையும், ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, உனது ஆண்மை மற்றும் புத்திக்கூர்மையையும் நான் அறிவேன். ஓ! மாதவா {கிருஷ்ண}, உன்னிடம் நான் கொண்ட அன்பானது, பாண்டுவின் மகன்களிடம் நான் கொண்டிருப்பதற்கு ஈடானதாகும். எனவே, நட்பு, மரியாதை மற்றும் எனது பாசத்தினாலேயே நான் இந்த வார்த்தைகளை உனக்குச் சொல்கிறேன். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே {கிருஷ்ணா}, உடல்படைத்த அனைத்து உயிர்களின் உள்ளுறை ஆன்மாவாக இருக்கும் உன்னைக் காண்பதில் நான் அடையும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்ன தேவைதான் இருக்கிறது?" என்றான் {விதுரன்}.