Gunakesi, the daughter of Matali! | Udyoga Parva - Section 97 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –26)
பதிவின் சுருக்கம் : இந்திரனின் தேரோட்டியான மாதலி, தனது மகள் குணகேசிக்காக வரன் தேட நாகலோகம் புறப்பட்ட கதையைத் துரியோதனனிடம் கண்வர் சொல்ல ஆரம்பித்தது ...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஜமதக்னேயரின் {பரசுராமரின்} வார்த்தைகளைக் கேட்ட ஒப்பற்ற முனிவரான கண்வர், குருக்களின் அந்தச் சபையில் துரியோதனனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.
கண்வர் {துரியோதனனிடம்}, "அண்டத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், அழிவற்றவனும் நித்தியமானவனும் ஆவான். அந்த ஒப்பற்ற முனிவர்களான நரனும் நாராயாணனும் அதே போன்றவர்களாவர். *அதிதியின் மகன்கள் அனைவரிலும் விஷ்ணு மட்டுமே நித்தியமானவனாவான். அவனே வெல்லப்பட முடியாதவனும், அழிவில்லாதவனும், எப்போதும் நிலைத்திருப்பவனும், அனைத்திற்கும் தலைவனும், தெய்வீக பண்புகளைக் கொண்டவனும் ஆவான். சூரியன், சந்திரன், பூமி, காற்று, நெருப்பு, ஆகாயம், கோள்கள் {கிரகங்கள்}, விண்மீன்கள் {நட்சத்திரங்கள்} ஆகிய பிற அனைத்தும் அழிவுக்குகந்தவையே. அண்டத்தின் முடிவு வரும்போது, இவையெல்லாம் மூவுலகில் இருந்தும் விடுபடும். அவை அழிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் படைக்கப்படும். மனிதர்கள், விலங்குகள், பறவைகள், உயிர்வாழும் பிற வகை உயிரினங்கள் ஆகிய பிற அனைத்தும், உண்மையில் மனிதர்களில் உலகில் அசைவுள்ள அனைத்தும் குறுகிய வாழ்வு கொண்டவையே.
மன்னர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரும் பெரும் செழிப்பை அனுபவித்து, இறுதியில் அழிவு காலத்தை அடைந்து, {இப்பிறவியின்} நற்செயல் மற்றும் தீச்செயல்களின் கனிகளை மீண்டும் பிறந்து அனுபவிக்கிறார்கள். நீ யுதிஷ்டிரனிடம் சமாதானம் கொள்வதே உனக்குத் தகும். பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இருவரும் இந்த உலகத்தை ஆளட்டும். ஓ! சுயோதனா {துரியோதனா}, "நானே பலவான்" என்று ஒருவன் சிந்திக்கக்கூடாது. எனெனில், ஓ! மனிதர்களில் காளையே, பொதுவாகப் பலவானாகக் கருதப்படும் மனிதர்களை விடப் பலம் நிறைந்தவர்களும் காணப்படுகிறார்களே. ஓ! குரு குலத்தின் மகனே {துரியோதனா}, உண்மையாகவே பலவானாக இருப்பவர்களால், உடல்வலிமை, அரிதாகவே பலமாகக் கருதப்படுகிறது. பாண்டவர்களைப் பொறுத்தவரை, தேவர்களுக்கு நிகரான ஆற்றல் நிறைந்த அவர்கள் அனைவரும் பலவான்களாகவே கருதப்படுகறார்கள்.
இதன் தொடர்ச்சியாக, தன் மகளுக்கு {குணகேசிக்கு} மணமகன் தேடிய மாதலியின் கதை உதாரணமாகச் சொல்லப்படுகிறது. மூவுலகங்களின் மன்னனுக்கு (இந்திரனுக்கு) மாதலி என்ற பெயரில் அவனது அன்புக்குரிய ஒரு தேரோட்டி இருந்தான். அவனுக்கு {மாதலிக்கு} அழகுக்காக உலகத்தால் கொண்டாடப்படும் ஒரு மகள் {குணகேசி} பிறந்தாள். தெய்வீக அழகுடன் இருந்த அந்த மாதலியின் குழந்தை குணகேசி என்ற பெயரால் அறியப்பட்டாள். உண்மையில், அன்பிலும், கட்டுடலிலும் மாதலியின் மகள் {குணகேசி}, மற்ற பெண்களை எல்லாம் விஞ்சியிருந்தாள். அவளை {குணகேசியை} மணமுடித்துக் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று அறிந்த மாதலியும் அவனது மனைவியும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, தன் கணவன் {மாதலி} அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று கவலைக்குள்ளானான்.
அவன் {மாதலி} தனக்குள்ளேயே, "ஐயோ, நன்னடத்தை, உயர்ந்த மரபு, புகழ் மற்றும் பணிவு கொண்ட குடும்பங்களில் ஒரு மகளின் பிறப்பு, எப்போதும் தீமையையே விளைவிக்கிறது. மரியாதைக்குரிய குடும்பங்களில் மகள்கள் பிறக்கும்போது, தாய்வழி, தந்தை வழி மற்றும் திருமணத்தால் பந்தப்படும் மூன்று குடும்பங்களின் பெருமையும் எப்போதும் ஆபத்துக்குள்ளாகிறது. எனது மனக்கண்ணால், தேவர்கள் மற்றும் மனிதர்களின் உலகில் தேடிப் பார்த்ததில், {எனது மகளுக்கு} தகுதியுடைய எந்த மணமகனையும் நான் காணவில்லை" என்று நினைத்தான்.
{முனிவர்} கண்வர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "தேவர்களிலும், தைத்தியர்களிலும், கந்தர்வர்களிலும், மனிதர்களிலும், எண்ணற்ற முனிவர்களிலும், தனது மகளுக்குத் தகுந்த கணவனாக யாரையும் மாதலி கருதவில்லை. இரவில், தனது மனைவியான சுதர்மையிடம் ஆலோசித்து, நாகர்களின் உலகத்திற்குப் பயணம் மேற்கொள்வதில் தனது இதயத்தை நிலைநிறுத்தினான். பிறகு அவன் {மாதலி} தனக்குள்ளேயே, "தேவர்களிலோ, மனிதர்களிலோ எனது குணகேசிக்குத் தகுந்த அழகனை நான் காணவில்லை. நாகர்கள் மத்தியில் எவனாவது நிச்சயம் இருப்பான்" என்று சொல்லிக் கொண்டான். இப்படிச் சொன்ன அவன் {மாதலி}, தனது மனைவியிடம் விடைபெற்றான். தனது மகளின் {குணகேசியின்} உச்சிமுகர்ந்த மாதலி, பாதாள உலகத்திற்குள் நுழைந்தான்.
..........................................................................................................................................................
*அதிதியின் மகன்கள் அனைவரிலும் விஷ்ணு மட்டுமே நித்தியமானவனாவான்.
மேலும் விபரங்களுக்கு:
அனைத்துயிர்களின் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 65
..........................................................................................................................................................
*அதிதியின் மகன்கள் அனைவரிலும் விஷ்ணு மட்டுமே நித்தியமானவனாவான்.
மேலும் விபரங்களுக்கு:
அனைத்துயிர்களின் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 65