An egg in Patala! | Udyoga Parva - Section 99 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –28)
பதிவின் சுருக்கம் : மாதலிக்கு நாரதர் பாதாளம் என்ற நகரைச் சுற்றிக் காட்டி விளக்குவது; அசுர நெருப்பு, ஹயக்ரீவன் எழுச்சி, பாதாளத்தில் இருக்கும் உயிரினங்கள், மழை உண்டாகும் விதம், யானைகளின் தோற்றம், கோ எனும் நோன்பு, பிரளயத்தின் போது அண்டத்தை அழிக்கக் காரணமாகும் முட்டை ஆகியவற்றைக் குறித்து மாதலியிடம் நாரதர் விளக்குவது...
நாரதர் {இந்திரனின் தேரோட்டி மாதலியிடம்} தொடர்ந்தார், "இங்கே, இந்த நாகர்கள் உலகத்தின் மத்தியிலே பாதாளம் என்ற பெயரில் அறியப்படும் ஒரு நகரம் அமைந்திருக்கிறது. அண்டம் அனைத்திலும் கொண்டாடப்படும் அது, தைத்தியர்களாலும், தானவர்களாலும் வழிபடப்படுகிறது. பூமியில் வாழும் உயிரினங்கள், நீரோட்டத்தின் வலிமையால் இங்கே அடித்துவரப்பட்டால், உரக்க அலறி பயத்தால் பீடிக்கப்படுகின்றன.
இங்கே அசுர நெருப்பு [1] என்ற பெயரால் அறியப்படுவதும், நீரால் மூட்டப்படுவதுமான நெருப்பு, தொடர்ந்து சுடர்விட்டு எரிகிறது. தேவர்களின் தளத்தால் நன்றாகப் பற்றப்பட்டுள்ளதால், கட்டுப்படுத்தப்பட்டு, தான் அடக்கப்பட்டிருப்பதாகக் கருதும் அது {அசுர நெருப்பு} அசையாமல் இருக்கிறது. இங்கேதான் தேவர்கள் முதலில் தங்கள் எதிரிகளை வீழ்த்தி, அமிர்தத்தைக் குடித்து, எச்சங்களை வைத்தனர்.
[1] வடவா நெருப்பு என்றும் இஃது அழைக்கப்படும் என்று கங்குலி சொல்கிறார். அசுரஜாதியான அக்னி என்று வேறு ஒரு பதிப்புக் கூறுகிறது.
இந்த இடத்தில் இருந்துதான் நிலவின் தேய்வும், வளர்ச்சியும் {க்ஷயமும் விருத்தியும்} காணப்படுகிறது [2]. ஒவ்வொரு மங்கலகராமன சந்தர்ப்பங்களிலும் மீண்டும் தோன்றும் குதிரைத்தலையன் (விஷ்ணு) {ஹயக்ரீவன்}, சுவர்ணன் [3] {ஆதித்தியன்} என்றும் அழைக்கப்படும் வேத பாடல்கள் மற்றும் மந்திரங்கள் ஆகியவை அடங்கிய ஒலியுடன் அண்டத்தை நிரப்பிக் கொண்டு இங்குதான் எழுகிறான். நீர் வடிவங்களான சந்திரன் முதலியவையும், பிறவும் தங்கள் நீரை இந்தப் பகுதியில் பொழிவதால் இந்த அற்புத இடம் பாதாளம் என்று அழைக்கப்படுகிறது [4].
[2] //பந்துவடிவிலான பூமியைச் சுற்றிவருகிற சூரியனும், சந்திரனும் பூமியின் ஒரு புறத்தால் மறைக்கப்படுவதால், சில சமயங்களில் அவை மனிதர்களின் கண்களுக்குத் தெரியாமல் போகின்றன. சூரியன் தெரியாத போது, பூமியின் ஒரு புறத்தில் இருப்பவர்களுக்கு அந்தப்பொழுது இரவாகிறது. பூமிப்பந்தின் உச்சியிலும் அடியிலுமிருப்பவர்கள் எப்பொழுதுமே சூரியன் முதலானவற்றைப் பார்க்கிறார்கள். அங்கே நீர்மயமாக இருக்கும் சந்திரமண்டலம் ஒளிவடிவமாக இருக்கும் சூரியனின் கதிர்களால் ஒளியூட்டப்படுகிறது. அவற்றுக்கும் {பூமிப்பந்தின் உச்சி மற்றும் அடி ஆகியவற்றிற்கும்}, சந்திரனுக்கும் எவ்வளவு தூரமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாகச் சந்திரன் பிரகாசிக்கிறான். எவ்வளவு நெருக்கமிருக்கிறதோ அவ்வளவு சந்திரன் மறைக்கப்படுகிறான். இதனால்தான், "முதல் கலையை அக்னி பருகுகிறது, இரண்டாவது கலையைச் சூரியன் பருகுகிறது" என்ற சாத்திரம் உண்டானது. இங்கு, பருகுதல் என்பது எதிரில் இருப்பதால் நிறைவடைகிறது என்ற பொருளைத் தரும். பூமியின் அடியில் இருப்பவர்களுக்கும், மேருவின் உச்சியில் இருப்பவர்களைப் போலவே, எப்போதும் சந்திரன் முழுமையாகவே தெரிகிறான். அவர்கள் பார்க்கும் இடத்தில் அக்னியால் மறைவு ஏற்படுவதில்லை.// என்று இந்த இடத்தில் பண்டிதர்களால் விளக்கம் கொடுக்கப்படுகிறது. இங்குப் பூமியைச் சூரியன் சுற்றுகிறது என்பது பூமியில் இருந்து அவற்றைப் பார்க்கும் பார்வையால் ஏற்படுகிறது எனக் கொள்க.
[3] //நீலகண்டன் அவர்கள் சுவர்ணாக்யம் ஜகத் {suvarnakhyam Jagat} என்பதை வேத பிராஞ்சம் {Veda prancha} என்று விளக்குகிறார். அஃதாவது, அனைத்து உள்ளடக்கங்களுடன் கூடிய முழுமையான வேதங்களே அஃது என்று நீலகண்டன் சொல்கிறார். நீலகண்டனைப் பொறுத்தவரை, மேற்கண்ட அந்தப் பத்தியின் பொருள், "அந்தணர்களால் ஓதப்படும் வேதக்குறிப்புகளை, விஷ்ணுவின் அந்த ஹயக்கிரீவத் தோற்றத்தில் தன் சொந்தக் குரலிலேயே அதிகரிக்கிறார்" என்பது ஆகும்// என்று கங்குலி சொல்கிறார்.
விஷ்ணுவே, தெய்வீக உருவமான ஹயக்ரீவர் உருவத்தில், வேத வாக்குகளால் உலகத்தை நிரப்பிக் கொண்டு, யுகம் மறைந்து தோன்றும் சந்தி காலங்களில் {சூரியனாக} அவதரிக்கிறார் என்பதே இங்குப் பொருள்.
[4] //பாதௌதி ஜலம் ஸ்ரவந்திதி பாதாளம் {Patauti Jalam sravantiti patalam} என்று நீலகண்டர் சொல்வதாககங்குலி சொல்கிறார்.// சந்திரனின் ஈர்ப்பைப் போல, அங்கே நீர் பெருக்குகிறது. எனவே, "பதஜ்ஜல" என்பது "பாதாள" என்று ஆனது என்றும் பண்டிதர்கள் விளக்கம் சொல்கிறார்கள். "அலம்" என்றால் "மிகுதி" என்றும் "பாத" என்றால் "விழுகின்றன" என்றும் பொருளைத் தருமாம். எனவே, "பாதாளம்" என்றால் "மிகுதியாக விழுவது", அதாவது "மிகுதியாக விழும் நீரைக் கொண்ட இடம்" என்றும் பொருள் கொள்ளலாம்.
அண்டத்தின் நன்மைக்காக, தெய்வீக யானையான ஐராவதம், இங்கிருந்துதான் குளிர்ந்த நீரை எடுத்து மேகங்களுக்குள் செலுத்துகிறது. அந்த நீரையே இந்திரன் மழையாகப் பொழிகிறான். இங்கே, சந்திரனின் கதிர்களால் வாழும், திமிகள் {Timi} மற்றும் பல்வேறு வடிவங்களிலான பல்வேறு வகைகளைச் சார்ந்த நீர் விலங்குகள் பிறவும் வசிக்கின்றன. ஓ! தேரோட்டி {மாதலி}, இந்த இடத்தில், பகலில், சூரியனின் கதிர்களால் துளைக்கப்பட்டு இறக்கும் பல்வேறு வகையான உயிரினங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் இரவில் மீண்டும் பிழைக்கின்றன. இந்த இடத்தில் சந்திரன் எந்நாளும் உதித்து, தனது கதிர்கள் எனும் கரங்களில் இருக்கும் அமிர்தத்தைக் கொண்டு, இறந்து கிடக்கும் அவ்வுயிரினங்களைத் தொடுவதே அதற்குக் {இறந்த உயிரினங்கள் பிழைப்பதற்குக்} காரணமாகும்.
வாசவனால் {இந்திரனால்} தங்கள் செழிப்பை இழந்தவர்களும், பாவம் நிறைந்தவர்களுமான பல தானவர்கள், அவனால் {இந்திரனால்} வீழ்த்தப்பட்டு, காலத்தால் பீடிக்கப்பட்டு, இங்கே தான் அடைந்திருந்தார்கள். இங்கேதான், உயிரினங்களின் தலைவனும், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெரும் ஆசானுமான {பூதபதியுமான} மகாதேவன் {சிவன்}, அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகக் கடுந்தவத்தைப் பயின்றான்.
"கோ" என்று அழைக்கப்படும் நோன்புகளை நோற்பவர்களும், வேதம் ஓதுதல் மற்றும் வேத கல்வி ஆகியவற்றால் உடல் மெலிந்திருப்பவர்களும், பிராணன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்றை விட்டு, தங்கள் தவங்களின் சக்தியால் சொர்க்கத்தை அடைந்தவர்களுமான மறுபிறப்பாளப் {பிராமண} பெருமுனிவர்கள் பலர் இங்கே வசிக்கின்றனர். கிடைத்த இடத்தில் உறங்கி, தனக்கு முன்பு பிறர் வைக்கும் எதையும் உண்டு, பிறர் தரும் ஆடைகளை உடுத்திக் கொண்டு வாழும் ஒரு மனிதன், "கோ" எனும் நோன்பைப் பின்பற்றும் ஒருவனாகச் சொல்லப்படுகிறான்.
ஐராவதம், வாமனம், குமுதம், தனது குலத்தின் முதல் மன்னனான அஞ்சனம் என்ற யானைகளில் சிறந்த யானைகள், கொண்டாடப்படும் யானையான சுப்ரதிகாவின் குலத்தில் இங்கேதான் பிறந்தன.
ஓ! மாதலி, மேன்மையான தகுதிகளால் தனித்துவமான ஏதாவது மணமகன் இங்கிருக்கிறானா என்று பார். அப்படியிருப்பின், உனது மகளை {குணகேசியை} ஏற்குமாறு வேண்டி நான் அவனிடம் மரியாதையுடன் செல்வேன்.
இந்த நீரில் சுடர்மிகும் அழகோடு கூடிய முட்டை ஒன்று கிடப்பதைப் பார். படைப்பின் ஆரம்பத்தில் இருந்தே இஃது {இந்த முட்டை} இங்கிருக்கிறது. இஃது அசைவதுமில்லை, வெடிப்பதுமில்லை. அதன் தோற்றம் அல்லது இயல்பு குறித்து யாரும் பேசுவதை நான் கேட்டதில்லை. இதன் தந்தை மற்றும் தாய் யார் என்பதை யாரும் அறியமாட்டார்கள். ஓ! மாதலி, உலகின் முடிவு வரும்போது, பலமிக்க நெருப்பு அதனுள் இருந்து வெடித்துப் பரவி, அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் கொண்ட மூன்று உலகங்களையும் அஃது {இந்த முட்டை} எரிக்கும் என்று சொல்லப்படுகிறது" என்றார் {நாரதர்}.
நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட மாதலி, அவரிடம், "தகுதி உடைய எவரும் இங்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, தாமதமில்லாமல் இங்கிருந்து செல்வோமாக" என்றான் {மாதலி}.