The combat of Sweta and Bhishma! | Bhishma-Parva-Section-048a | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 06)
பதிவின் சுருக்கம் : விராடனின் மகன் ஸ்வேதனுக்குத் துணையாகச் சிகண்டி; பீஷ்மர் புரிந்த பயங்கரப் போர்; போரிட்ட போர்வீரர்களின் நிலை; ஸ்வேதனைக் கண்டு அஞ்சிய கௌரவர்கள் பீஷ்மரைக் கைவிட்டது; பீஷ்மரின் தாக்குதல்; ஸ்வேதனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் மூண்ட பயங்கரப் போர்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "பெரும் வில்லாளியான ஸ்வேதன் சல்லியனின் தேரை நோக்கி முன்னேறிய போது, ஓ! சஞ்சயா, கௌரவர்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்? சந்தனுவின் மகனான பீஷ்மர் என்ன செய்தார்? இவை அனைத்தையும் கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக" என்று கேட்டான்.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைத்தலைவனாக ஸ்வேதனைத் தங்கள் முன்னணியில் நிறுத்தி, துணிவு மிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தவர்களான க்ஷத்திரியக் காளைகள் தங்கள் பலத்தை வெளிக்காட்டினார்கள். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (ஸ்வேதனை) விடுவிக்க விரும்பி, சிகண்டியைத் தலைமையாகக் கொண்டவர்களும், உமது அரச மகனுக்கு {துரியோதனனுக்கு} தங்கள் வலிமையை வெளிக்காட்டினார்கள். போர்வீரர்களில் முதன்மையானவரும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரைக் கொண்டவருமான பீஷ்மரைக் கொல்ல விரும்பி அவரை நோக்கியும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சிகண்டியின் தலைமையிலான வீரர்கள்} விரைந்தனர். அதைத் தொடர்ந்து நேரிட்ட போர் பயங்கரமானதாக இருந்தது. உமது துருப்புகளுக்கும், எதிரி துருப்புகளுக்கும் இடையிலான அந்த அற்புதம் நிறைந்த பயங்கரப் போர் எப்படி நடந்ததோ, அவ்வாறே நான் உமக்குச் சொல்கிறேன்.
அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} பல தேர்களின் கூடுகளை வெறுமையாக்கினார். (ஏனெனில்), அந்தத் தேர்வீரர்களில் சிறந்தவர் {பீஷ்மர்}, (தனது) அம்புகளால், பல தலைகளை வெட்டி வீழ்த்தினார். சூரியனுக்கு நிகரான சக்தி கொண்ட அவர் {பீஷ்மர்}, சூரியனையே தனது கணைகளால் மறைத்தார். இருளை விலக்கி எழுந்த சூரியனைப் போலத் தன்னைச் சூழ்ந்திருந்த எதிரிகளை அந்த மோதலில் அவர் {பீஷ்மர்} அகற்றினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அவரால் {பீஷ்மரால்} அடிக்கப்பட்ட பலம் நிறைந்த, பெருவேகம் கொண்ட நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகள், எண்ணற்ற க்ஷத்திரியர்களின் உயிர்களை அந்த மோதலில் பறித்தன.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மோதலில் அவர் {பீஷ்மர்} நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் மற்றும் முள் கவசம் பூண்ட யானைகள் ஆகியவற்றின் தலைகளை, வஜ்ரத்தின் தாக்குதலால் மலைகளில் இருந்து விழுந்த சிகரங்களைப் போல விழச்செய்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள் மற்ற தேர்களோடு கலப்பது தெரிந்தது. ஒரு தேரை மற்றொரு தேரோடும், ஒரு குதிரையை மற்றொரு குதிரையோடும் அப்போது காண முடிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரிழந்தும், {அடிபட்டு, உயிருடன்} தொங்கிக் கொண்டும் இருந்த, (குதிரைகளின் சேணங்களில் இருந்த) இளம் வீரர்களை, வேகமான குதிரைகள், அங்கேயும் இங்கேயும் சுமந்து திரிந்தன.
(தம் மேனியில்) வாள்களும், அம்பறாத்தூணிகளும் பொருந்தியிருக்க, (தம் உடல்களில் இருந்து) கவசங்கள் தளர்ந்திருக்க, உயிரிழந்த வீரர்களின் உடல்கள், தரையைப் படுக்கையாக்கி உறங்கிக் கொண்டிருந்தன. ஒருவருக்கு எதிராக ஒருவர் விரையும் போது, கீழே விழுந்து, மீண்டும் எழுந்து, எழுந்த பிறகு மீண்டும் விரைந்த போராளிகள் கைக்குக் கையெனப் கைகளாலேயேப் போரிட்டனர். ஒருவரால் காயப்பட்ட மற்ற பலர் போர்க்களத்தில் உருண்டு கொண்டிருந்தனர். மதம் கொண்ட யானைகள் அங்குமிங்கும் விரைந்தன. நூற்றுக்கணக்கான தேர்வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
தேர்வீரர்கள் தங்கள் தேர்களோடு சேர்த்து அனைத்துப் புறங்களில் இருந்தும் நசுக்கப்பட்டனர். ஒருவனின் கணையால் கொல்லப்பட்ட மற்றவன், அந்தத் தேர்வீரனின் {தனது எதிரியின்} தேரிலேயே பாய்ந்து விழுந்தான். தம் தேரோட்டி கொல்லப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயரத்தில் இருந்து பாயும் காட்சியும் காணப்பட்டது. அங்கே அடர்த்தியான புழுதி எழுந்தது. அது போர்க்களத்தில் வில்லின் நாணொலியுடன் போரிட்டுக் கொண்டிருந்தவர்களை {எதிரிகளை}, போராடிக் கொண்டிருந்த எதிராளிகளுக்குச் சுட்டிக் காட்டியது. தங்கள் உடல்களில் கொண்ட அழுத்தத்தின் காரணமாகப் போராளிகள் தங்கள் எதிரிகளை ஊகித்தனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (எதிரி) படைப்பிரிவுகளின் நாணொலிகளால் வழிநடத்தப்பட்ட போர்வீரர்கள், கணைகளுடன் போரிட்டனர். "ஹிஸ்" என்று போராளிகளால் அடிக்கப்பட்ட கணைகளின் ஒலி அவர்களின் எதிரிகளால் கேட்கப்பட்டது. காதுகளையே துளைக்கும் வண்ணம், பேரிகைகளின் ஒலி பேரொலியாக இருந்தது. போர்களத்தில் ஒரு போராளி தனது ஆற்றலை வெளிப்படுத்தியபடி உச்சரித்துக் கொண்ட அவனது பெயர், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்தி ஆரவாரமிக்கப் பேரொலியாக எழுந்தது, இருப்பினும் அவற்றை நம்மால் கேட்க முடியவில்லை. தனக்குப் பிறந்த மகனைத் தந்தையால் அடையாளம் காண முடியவில்லை. நேரான கணைகளின் மூலம் தேரின் சக்கரங்களில் ஒன்று உடைக்கப்பட்டோ, குதிரைகளில் ஒன்று கொல்லப்பட்டோ, தேரோட்டியுடன் கூடிய தேர்வீரர்கள் வீழ்த்தப்பட்டனர். இப்படியே தங்கள் தேர்களை இழந்த பல போர் வீரர்கள் ஓடிக் கொண்டிருப்பது {அங்கே பரவலாகத்} தெரிந்தது.
எதிரியைப் பீஷ்மர் தாக்கிய போது, வெட்டப்பட்டவன் கொல்லப்பட்டான், கொல்லப்படாதவன் உயிர்நிலைகளில் தாக்கப்பட்டான்; ஆனால் தாக்கப்படாதவன் என்று எவனும் இல்லை. அந்தப் பயங்கரப் போரில் குருக்களைப் படுகொலை செய்த ஸ்வேதனின் செயல் பெரிதாக இருந்தது. அவன் {ஸ்வேதன்} நூற்றுக்கணக்கான உன்னத இளவரசர்களைக் கொன்றான். அவன் {ஸ்வேதன்}, தேர்வீரர்களின் தலைகளையும் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டு, வில்லுடன் கூடிய (அவர்களது) கரங்களையும் தனது கணைகளைக் கொண்டு நூற்றுக் கணக்கில் வெட்டினான். தேர்வீரர்கள், தேர்ச்சக்கரங்கள், தேரில் இருந்த பிறர், தேர்கள், சிறிய மற்றும் விலை உயர்ந்த கொடிக்கம்பங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள், தேர்க்கூட்டங்கள், மனிதர்களின் கூட்டங்கள் ஆகியவற்றை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஸ்வேதன் அழித்தான்.
ஸ்வேதனின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அந்தத் தேர்வீரர்களில் சிறந்தவரைக் {பீஷ்மரைக்} கைவிட்டு, பின்னோக்கி புறமுதுகிட்டு நாம் ஓடினோம் {நமது படை ஓடியது}. அதனால்தான் (இப்போது) தங்களைக் காண்கிறோம். ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, கணைகள் தாக்கும் எல்லையைக் கடந்த குருக்கள் அனைவரும், அந்தப் போரில் சந்தனுவின் மகனான பீஷ்மரைக் கைவிட்டு, (பார்வையாளர்களாக மட்டுமே தாங்கள் இருந்தாலும்) மோதலுக்காகத் தங்கள் ஆயுதங்களுடன் காத்திருந்தார்கள். அந்தப் பயங்கரப் போரில், (உலகளாவிய) மகிழ்ச்சியற்ற அந்த நேரத்திலும், நமது படையில், மனிதர்களில் புலியான பீஷ்மர் மட்டுமே மேரு மலையைப் போல அசையாதிருந்து மகிழ்ச்சியாக இருந்தார். பின்பனிக் காலத்தின் {சிசிரருதுவின் - மாசி, பங்குனியின்} முடிவில் [1], சூரியன் தனது கதிர்களால் நீரை உறிஞ்சுவது போல, (எதிரிகளின்) உயிர்களைப் பறித்த பீஷ்மர், சூரியனைப் போன்ற தனது தேரின் தங்கக் கதிர்களால், அந்தச் சூரியனைப் போலவே ஒளிர்ந்தார். மேலும், அந்தப் பெரும் வில்லாளி கணை மேகங்களை அடித்து அசுரர்களைத் {???} தாக்கினார்.
[1] ருதுக்கள் மொத்தம் ஆறு ஆகும். அவையாவன : 1. வசந்த ருது, 2. கிரீஷ்ம ருது, 3. வருஷ ருது, 4. சரத் ருது, 5. ஹேமந்த ருது, 6. சிசிர ருது.வசந்த ருது - சித்திரை, வைகாசி - இளவேனில் காலம்.கிரீஷ்ம ருது - ஆனி, ஆடி - முதுவேனில் காலம்.வருஷ ருது - ஆவணி, புரட்டாசி - கூதிர் காலம்.சரத் ருது - ஐப்பசி, கார்த்திகை - கார் காலம்.ஹேமந்த ருது - மார்கழி, தை - முன்பனிக் காலம்.சிசிர ருது - மாசி, பங்குனி - பின்பனிக் காலம்.
அச்சம் நிறைந்த அந்த மோதலில் பீஷ்மரால் கொல்லப்படும்போது, அவ்வீரர்கள், தங்கள் படையணிகளில் இருந்து உடைந்து, விறகால் எரியும் நெருப்பிடம் இருந்து ஓடுவதைப் போல அவரிடம் {பீஷ்மரிடம்} இருந்து ஓடினர். அந்தத் தனி வீரனிடம் (ஸ்வேதனிடம்) மோதியவர்களில், எதிரிகளைக் கொல்பவரான பீஷ்மர் மட்டுமே மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் இருந்தார். துரியோதனனின் நலத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட அவர் {பீஷ்மர்} அந்தப் பாண்டவ வீரனை {ஸ்வேதனை} துன்புறுத்த ஆரம்பித்தார். கைவிடுவதற்குக் கடினமான தனது உயிரையே துச்சமாக மதித்து, அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்தக் கடும் மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர் {பீஷ்மர்} அந்தப் பாண்டவப் படையைக் கொன்றழித்தார்.
(தார்தராஷ்டிரப்) படைப்பிரிவுகளைத் தாக்கும் படைத்தலைவனை (ஸ்வேதனைக்) கண்டவரும், தேவ விரதன் என்று அழைக்கப்பட்டவரும், உமது தந்தையுமான பீஷ்மர், அவனை {ஸ்வேதனை} நோக்கி வேகமாக விரைந்தார். அதன்பேரில், ஸ்வேதன், கணைகளால் ஆன வலையால் பீஷ்மரை மறைத்தான். பீஷ்மரும் தனது கணைகளின் தாக்குதலால் ஸ்வேதனை மறைத்தார். முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போலவும், மதங்கொண்ட இரண்டு பெரிய யானைகள் மோதிக் கொள்வது போலவும், ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் புலிகள் போலவும் அவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து விரைந்தனர். ஒருவரின் ஆயுதங்களைத் தனது ஆயுதங்களின் மூலம் கலங்கடித்த மனிதர்களில் காளைகளான பீஷ்மரும், ஸ்வேதனும், ஒருவரின் உயிரை மற்றவர் பறிக்கும் விருப்பத்துடன் ஒருவருக்கொருவர் போரிட்டனர்.
ஸ்வேதன் பாண்டவப்படையைப் பாதுகாக்கவில்லையெனில், சினத்தில் சீறும் பீஷ்மர், ஒரே நாளில் அந்தப் படை முழுவதையும் எரித்திருப்பார். ஸ்வேதனால் தடுக்கப்பட்ட தங்கள் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அதே வேளையில் உமது மகன் {துரியோதனன்} உற்சாகமிழந்தான். கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், பல மன்னர்கள் சூழப் பாண்டவப் படையை எதிர்த்து தனது துருப்புகளுடன் விரைந்தான்.
இதனால் கங்கையின் மைந்தரை {பீஷ்மரைக்} கைவிட்ட ஸ்வேதன், மரங்களை வேருடன் பிடுங்கிப் போடும் பலத்த காற்று போல வேகமாக விரைந்து உமது மகனின் {துரியோதனனின்} படையைக் கொன்றழித்தான். கோபத்தில் உணர்விழந்த அந்த விராடன் மகன் {ஸ்வேதன்}, உமது படையை நிர்மூலமாக்கியபடி முன்னேறி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர் நிலைபெற்றிருந்த இடத்திற்கு (மீண்டும்) வந்தான். பிறகு அந்த உயர் ஆன்ம வீரர்கள் இருவரும், சுடர்மிகும் தங்கள் கணைகளோடு, பழங்காலத்தின் விருத்திரன் மற்றும் வாசவன் {இந்திரன்} போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி தங்களுக்குள் போரிட்டனர்.
ஆங்கிலத்தில் | In English |