The valour and death of Sweta! | Bhishma-Parva-Section-048b | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 06)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரின் வில்லைப் பலமுறை ஒடித்த ஸ்வேதன்; பீஷ்மரின் பனை மரக் கொடியை வெட்டி வீழ்த்திய ஸ்வேதன்; பீஷ்மர் ஸ்வேதனால் கொல்லப்பட்டார் எனக் கௌரவர்கள் நினைப்பது; ஸ்வேதன் தனது தேரை இழப்பது; பீஷ்மரின் தேரை ஸ்வேதன் தூள் தூளாக்குவது; பிரம்மாஸ்திரம் கொண்டு பீஷ்மர் ஸ்வேதனைக் கொல்வது; முதல் நாள் போரின் முடிவில் பாண்டவர்கள் சோகத்துடன் தங்கள் பாசறைக்குத் திரும்புவது...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "(தனது) வில்லை முழுமையாக வளைத்த ஸ்வேதன், பீஷ்மரை ஏழு கணைகளால் துளைத்தான். பிறகு, தனது ஆற்றலை வெளிப்படுத்திய அந்த வீரமிக்கவர் (பீஷ்மர்), சீற்றமிகுந்த யானையொன்று, தனக்கு இணையான மற்றொரு சீற்றமிக்க யானையைத் தடுப்பதைப் போலத் தனது எதிரியின் வீரத்தைத் தடுத்தார். க்ஷத்திரியர்களை மகிழ்வு கொள்ளச் செய்யும் ஸ்வேதன் பீஷ்மரை மேலும் தாக்கினான். அதற்குப் பதிலடியாக, சந்தனுவின் மகனான பீஷ்மரும் பத்து கணைகளால் அவனைத் {ஸ்வேதனைத்} துளைத்தார். இப்படி அவரால் {பீஷ்மரால்} துளைக்கப்பட்டாலும், அந்த வலிமைமிக்கப் போர்வீரன் {ஸ்வேதன்} மலையென அசையாமல் நின்றான்.
அதன்பிறகு ஸ்வேதன், அனைவரும் வியக்கும் வகையில் இருபத்தைந்து நேரான கணைகளால் சந்தனுவின் மகனைத் {பீஷ்மரைத்} துளைத்தான். புன்னகைத்தபடியே தனது கடைவாயை நாவால் நக்கிய ஸ்வேதன் அந்த மோதலில் மேலும் பத்து கணைகளால் பீஷ்மரின் வில்லைப் பத்து துண்டுகளாக வெட்டினான். முழுதும் இரும்பாலானதும், இறகு படைத்ததுமான மற்றொரு கணையால் (ஸ்வேதன்), அந்த உயர் ஆன்மா கொண்டவரின் (பீஷ்மரின்) பனைமரக் கொடிக்கம்பத்தின் உச்சியைக் குறிபார்த்துத் தகர்த்தான்.
பீஷ்மரின் கொடிக்கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், ஸ்வேதனிடம் வீழ்ந்து பீஷ்மர் கொல்லப்பட்டார் என்றே நினைத்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்களும், சுற்றிலும் தங்கள் சங்குகளால் முழக்கம் செய்தனர். உயர் ஆன்ம பீஷ்மரின் பனைமரக் கொடிக்கம்பம் வீழ்த்தப்பட்டதைக் கண்ட துரியோதனன் சினம் கொண்டு, தனது சொந்தப் படையைப் போரிடத் தூண்டினான். அவர்கள் அனைவரும், பெருந்துன்பத்தில் இருந்த பீஷ்மரை மிகக் கவனமாகப் பாதுகாத்தனர்.
(வெறுமனே) பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த அவர்களின் மன்னன் {துரியோதனன்}, "ஒன்று (இன்று) ஸ்வேதன் சாவான், அல்லது சந்தனுவின் மகனான பீஷ்மர் சாவார். இதை நான் உண்மையாகச் சொல்கிறேன்" என்றான். நால்வகைப் படைகளையும் கொண்டவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, கங்கையின் மைந்தரைப் பாதுகாக்க முன்னேறினர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாஹ்லீகன், கிருதவர்மன், கிருபர், சல்லியன், ஜராசந்தனின் மகன் {ஜயத்சேனன்}, விகர்ணன், சித்திரசேனன், விவிம்சதி ஆகிய அவர்கள், வேகம் தேவைப்பட்ட நேரத்தில், பெரும் வேகத்துடன் அனைத்துப்புறங்களில் இருந்தும் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டு, ஸ்வேதனின் மேல் தடையற்ற கணைமாரியைப் பொழிந்தனர்.
அளவிலா ஆன்மா கொண்ட அந்த வலிமைமிக்க வீரன் {ஸ்வேதன்}, கூரிய கணைகளால் அந்தச் சினம் மிகுந்த போர்வீரர்களைத் தடுத்து தனது கரங்களின் வேகத்தை வெளிக்காட்டினான். யானைக்கூட்டத்தைத் தடுத்த சிங்கத்தைப் போல, அவர்கள் அனைவரையும் தடுத்த ஸ்வேதன், அடர்ந்த கணை மாரியால் பீஷ்மரின் வில்லை வெட்டினான். அந்தப் போரில் மீண்டும் வேறு வில்லை எடுத்த சந்தனுவின் மகனான பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கப் பறவையின் {கழுகின்} இறகு படைத்த கணைகளால் ஸ்வேதனைத் துளைத்தார்.
அந்த மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினம் தூண்டப்பட்ட அந்தத் (பாண்டவப் படையின்) தலைவன் {ஸ்வேதன்}, அனைவரின் கண்களுக்கு முன்பாகவும் பீஷ்மரைப் பல கணைகளால் துளைத்தான். உலகமனைத்திலும் உள்ள வீரர்களில் முதன்மையான பீஷ்மர், போரில் ஸ்வேதனால் தடுக்கப்பட்டதைக் கண்ட மன்னன் (துரியோதனன்) பெரிதும் துன்புற்றான். உமது படை முழுவதும் கொண்ட துன்பமும் பெரிதாக இருந்தது. வீரரான பீஷ்மரை, ஸ்வேதன் தடுத்துத் தனது கணைகளால் சிதைத்ததைக் கண்ட அனைவரும் ஸ்வேதனால் பீஷ்மர் வீழ்த்தப்பட்டுக் கொல்லப்பட்டார் என்றே நினைத்தனர்.
தனது கொடிக்கம்பம் வீழ்த்தப்பட்டு, (தார்தராஷ்டிரப்) படையும் தடுக்கப்பட்டதைக் கண்டு கோபவசப்பட்ட தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஸ்வேதனின் மீது பல கணைகளைத் தொடுத்தார். எனினும், தேர்வீரர்களின் முதன்மையான ஸ்வேதன், பீஷ்மரின் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்து, அகன்ற தலை கொண்ட கணை ஒன்றால், மீண்டும் உமது தந்தையின் {பீஷ்மரின்} வில்லை ஒடித்தான். அந்த வில்லை ஒருபுறம் தூக்கி எறிந்த கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரிதானதும் அதிக வலிமையானதுமான மற்றொரு வில்லை எடுத்து, சாணைக்கல்லில் கூர்தீட்டப்பட்ட அகன்ற தலை கொண்ட ஏழு கணைகளில் {பல்லங்களில்} நான்கு கணைகளைக் கொண்டு, படைத்தலைவன் ஸ்வேதனின் நான்கு குதிரைகளைக் கொன்றார். பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தப் போர்வீரர் {பீஷ்மர்}, இரண்டால் {இரண்டு கணைகளால்} அவனது {ஸ்வேதனின்} கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தி, ஏழாவதால் {ஏழாவது கணையால்}, அவனது {ஸ்வேதனின்} தேரோட்டியின் தலையையும் கொய்தார்.
அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {ஸ்வேதன்}, தனது தேரோட்டியும், குதிரைகளும் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து கீழே குதித்தான். தேர்வீரர்களில் முதன்மையான ஸ்வேதன் தன் தேரை இழந்ததைக் கண்டப் பாட்டன் {பீஷ்மர்}, தனது கணைமாரியால் அனைத்துப் புறங்களிலும் அவனை {ஸ்வேதனைத்} தாக்கினார். பீஷ்மரின் வில்லில் இருந்து தொடுக்கப்பட்ட கணைகளால் அந்த மோதலில் தாக்கப்பட்ட ஸ்வேதன், (கைவிடப்பட்ட) தனது தேரிலேயே தனது வில்லை விட்டுவிட்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், கடுமையானதும், மரணக் கோலுக்கு ஒப்பானதும், மரணத்தையே கொடுக்கவல்லதுமான ஒரு பயங்கர ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} எடுத்தான்.
பெருஞ்சினத்தில் இருந்த ஸ்வேதன், அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மரிடம், "ஓ! மனிதர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, சற்றுப் பொறும். என்னைப் பாரும்" என்றான். போரில் பீஷ்மரிடம் இதைச் சொன்னவனும், எல்லையற்ற ஆற்றல் கொண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பெரும் வில்லாளி {ஸ்வேதன்}, பாண்டவர்களுக்காகத் தனது வீரத்தை வெளிப்படுத்தி, உமக்குத் தீமையை விரும்பி, பாம்புக்கு ஒப்பான அந்த ஈட்டியை வீசினான். ஸ்வேதனின் கரங்களில் இருந்து வீசப்பட்ட அஃது (அந்த ஈட்டி), அண்மையில் சட்டை உதிர்த்து வந்த பாம்பு போலவும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் பெரும் விண்கல்லைப் போலவும் பெரும் வேகத்தில் விழுந்தது.
இதனால் கிஞ்சிற்றும் அஞ்சாத உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, பசும்பொன்னால் ஆனதும், ஆகாயத்தில் வரும்போதே எரிந்து தீச்சுடர்கள் நிறைந்தது போலத் தெரிந்ததுமான அந்த ஈட்டியை, இறகு படைத்த எட்டு {8} கூரிய கணைகளால் ஒன்பது {9} துண்டுகளாகத் துண்டித்தார். அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் அனைத்தும் மகிழ்ச்சியால் பேரொலி எழுப்பின.
தனது ஈட்டி துண்டுகளாகத் துண்டிக்கப்பட்டதைக் கண்ட விராடனின் மகன் {ஸ்வேதன்}, காலத்தால் வெல்லப்பட்டு, கோபத்தால் உணர்விழந்து, என்ன செய்வதென்று அறியாதவனாக இருந்தான். கோபத்தால் உணர்விழந்த விராடனின் மகன் {ஸ்வேதன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கதாயுதத்துடன் கூடிய இரண்டாவது யமனைப் போல, பீஷ்மரைக் கொல்ல கையில் கதாயுதத்தை ஏந்தி, மகிழ்ச்சியுடன் புன்னகைத்து, சினத்தால் கண்கள் சிவந்து பாறைகளை {மலையை} எதிர்த்து விரையும் வேகமான நீரூற்று போல, பீஷ்மரை எதிர்த்து விரைந்தான். பெரும் ஆற்றல் கொண்டவரும், (பிறரின்) பலத்தை அறிந்தவருமான பீஷ்மர், தடுக்கப்பட முடியாத அவனது {ஸ்வேதனின்} வேகத்தைக் கண்டு, அந்தத் தாக்குதலில் இருந்து தப்ப திடீரெனத் {தனது தேரில் இருந்து} தரையில் இறங்கினார்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கனமான கதாயுதத்தைக் கோபத்துடன் சுழற்றிய ஸ்வேதன், மகேஸ்வர தேவனைப் {சிவனைப்} போல, அதைப் பீஷ்மரின் தேரின் மீது வீசினான். பீஷ்மரின் அழிவைக் கருதி அந்தக் கதாயுதம் வீசப்பட்டதன் விளைவாக, கொடிக்கம்பம், குதிரைகள், கணைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்தத் தேர் சாம்பலாகக் குறைக்கப்பட்டது {தூள் தூளானது}. தேர்வீரர்களில் முதன்மையான பீஷ்மர் {தரையில் நின்று போரிடும்} காலாட்படை வீரராக ஆனதைக் கண்டச் சல்லியன் மற்றும் பிற தேர்வீரர்கள் பலர் (அவரது உதவிக்காக) வேகமாக விரைந்தனர். வேறொரு தேரில் ஏறிய பீஷ்மர், உற்சாகமற்ற வகையில் தனது வில்லை வளைத்துத் தேர்வீரர்களில் முதன்மையான ஸ்வேதனை நோக்கி மெதுவாக முன்னேறினார்.
அதேவேளையில், தனக்கு நன்மை நிறைந்ததும், தெய்வீகமானதுமான ஒரு வலிமையான குரல் வானத்தில் இருந்து வருவதைப் பீஷ்மர் கேட்டார். (அந்தக் குரல்), "ஓ! பீஷ்மா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, காலத்தை வீணாக்காமல் முயற்சி செய்வாயாக. இவனை {விராடனின் மகன் ஸ்வேதனை} வெல்வதற்கான காலமாக இந்தக் காலத்தையே அண்டத்தைப் படைத்தவன் {பரமாத்மா} நிர்ணயித்திருக்கிறான்" {என்றது [அந்தக் குரல்]}.
தேவ தூதனால் உதிர்க்கப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ச்சியால் நிறைந்து, ஸ்வேதனை அழிப்பதில் தனது இதயத்தை நிலைக்கச் செய்தார். தேர்வீரர்களில் முதன்மையான ஸ்வேதன் காலாட்படை வீரனானதைக் கண்ட (பாண்டவத் தரப்பின்) வலிமைமிக்க வீரர்கள் பலர் (அவனது உதவிக்காக) ஒன்றாகத் திரண்டு விரைந்து வந்தனர். சாத்யகி, பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், (ஐந்து) கேகயச் சகோதரர்கள், திருஷ்டகேது மற்றும் பெரும் சக்தி கொண்ட அபிமன்யு ஆகியோரே அவர்கள் {ஸ்வேதனின் உதவிக்காக வந்த பாண்டவத் தரப்பு வீரர்கள்}.
(உதவி செய்ய) விரைந்து வரும் அவர்களைக் கண்ட அந்த அளவிலா ஆன்மா கொண்டவர் (பீஷ்மர்), துரோணர், சல்லியன், கிருபர் ஆகியோரின் உதவியோடு, காற்றின் பலத்தைத் தடுக்கும் மலையைப் போல, அவர்கள் அனைவரையும் தடுத்தார். பாண்டவத் தரப்பின் உயர் ஆன்ம வீரர்கள் அனைவரும் (இப்படித்) தடுக்கப்பட்ட போது, வாளை எடுத்த ஸ்வேதன் பீஷ்மரின் வில்லை வெட்டி வீழ்த்தினான்.
அந்த வில்லை ஒருபுறம் வீசிய பாட்டன் {பீஷ்மர்}, தேவ தூதனின் வார்த்தைகளைக் கேட்டு, ஸ்வேதனின் அழிவைத் தனது மனதில் விரைவாகத் தீர்மானித்தார். (ஸ்வேதனால்) கலங்கடிக்கப்பட்டிருந்தாலும், வலிமைமிக்கத் தேர்வீரரான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்} பிரகாசத்தில் சக்ரனின் {இந்திரனின்} வில்லுக்கு நிகரான வேறொரு வில்லை எடுத்து, அதில் ஒரு கணத்தில் நாணேற்றினார். பிறகு, ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனன் முதலான மனிதர்களில் புலிகளால் சூழப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரன் ஸ்வேதனைக் கண்ட உமது தந்தை கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, படைத்தலைவன் ஸ்வேதனை மட்டுமே குறிவைத்து விரைவாக முன்னேறினார்.
பீஷ்மர் முன்னேறுவதைக் கண்ட பெரும் ஆற்றல் படைத்த பீமசேனன், அறுபது {60} கணைகளால் அவரைத் {பீஷ்மரைத்} துளைத்தான். ஆனால் வலிமைமிக்கத் தேர்வீரரான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, பயங்கரக் கணைகளைக் கொண்டு பீமசேனன், அபிமன்யு ஆகிய இருவரையும் மற்றும் பிற தேர்வீரர்களையும் தடுத்து, நேரான மூன்று கணைகளால் அபிமன்யுவைத் தாக்கினார். அந்த மோதலில் பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்}, சாத்யகியை நூறு{100} கணைகளாலும், திருஷ்டத்யும்னனை இருபது{20} கணைகளாலும், கேகயச் சகோதரர்களை ஐந்து{5} கணைகளாலும் தாக்கினார். பயங்கரக் கணைகளைக் கொண்ட அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரையும் தடுத்த உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஸ்வேதனை நோக்கி மட்டுமே முன்னேறிக் கொண்டிருந்தார்.
பிறகு, வலிமை நிறைந்த பீஷ்மர், பெரும் பலத்தைத் தாங்க வல்லதும், தடுக்கப்பட முடியாததும், மரணத்திற்கு ஒப்பானதுமான ஒரு கணையை எடுத்துத் தனது வில்லில் பொருத்தினார். பிரம்ம ஆயுதத்தின் {பிரம்மாஸ்திரத்தின்} சக்தியை முறையாகக் கொண்டதும், இறகுகள் படைத்ததுமான அந்தக் கணை தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோரால் பார்க்கப்பட்டது. சுடர்மிகும் நெருப்பைப் போன்ற பிரகாசம் கொண்ட அந்தக் கணை, வஜ்ராயுதம் மின்னுவதைப் போல மின்னி, அவனது {ஸ்வேதனின்} கவசத்தைத் துளைத்து (அவனது உடலைக் கடந்து) பூமியைத் தாக்கியது.
மேற்கில் இருக்கும் தனது மாளிகைகளுக்குள் விரைந்து ஓடும் சூரியன், தனது ஒளிக்கதிர்களையும் உடன்கொண்டு செல்வதைப் போலவே அந்தக் கணையும் ஸ்வேதனின் உயிரை எடுத்துக் கொண்டு அவனது உடலைக் கடந்து போனது. இப்படி அந்தப் போரில் பீஷ்மரால் கொல்லப்பட்ட அந்த மனிதர்களில் புலி {ஸ்வேதன்}, மலையில் இருந்து தளர்ந்து விழும் சிகரம் போலக் கீழே விழுவதை நாங்கள் கண்டோம். பாண்டவத் தரப்பைச் சேர்ந்தவர்களும், க்ஷத்திரியக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அனைவரும் {ஸ்வேதனுக்காக} அழுது புலம்பத் தொடங்கினர். எனினும், உமது மகன்களும், குருக்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஸ்வேதன் வீழ்த்தப்பட்டதைக் கண்ட துச்சாசனன், சங்குகள் மற்றும் பேரிகைகளின் உரத்த இசையுடன் போர்க்களத்தில் கூத்தாடினான். போர்க்களத்தின் ரத்தினமான அந்தப் பெரும் வில்லாளி {ஸ்வேதன்} பீஷ்மரால் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், சிகண்டியைத் தலைமையாகக் கொண்டவர்களுமான (பாண்டவத் தரப்பின்) வலிமைமிக்க வில்லாளிகள் அச்சத்தால் நடுங்கினர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் படைத்தலைவன் கொல்லப்பட்டவுடன், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, விருஷ்ணி குலத்தவனும் {கிருஷ்ணனும்} மெதுவாகத் {தங்கள்} துருப்புகளைப் (இரவு ஓய்வுக்காகப்) பின்வாங்கச் செய்தனர்.
பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்கள் படைகள் மற்றும் உமது படைகள் ஆகிய இரண்டும் தொடர்ச்சியாக உரத்த முழக்கமிட்டபடி பின்வாங்கினர். பார்த்தர்களின் {பாண்டவர்களின்} வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தனிப்போரில் பயங்கரமாகக் கொல்லப்பட்ட (தங்கள் படைத்தலைவனை) நினைத்தபடி, உற்சாகமற்று (தங்கள் பாசறைகளுக்குள்) நுழைந்தனர்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |