The Second day's commence! | Bhishma-Parva-Section-051 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 09)
பதிவின் சுருக்கம் : இரண்டாம் நாள் போர் துவங்குவதற்காகக் கௌரவர்களும் பாண்டவர்களும் செய்த ஏற்பாடுகள்; சங்கு முழக்கங்கள்; சிங்க முழக்கங்கள்...
துரோணர் மற்றும் துச்சாசனன் முதலிய கௌரவப் படையினருடன் பேசும் துரியோதனன் |
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அளவிலா சக்தி கொண்ட பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} அமைக்கப்பட்டதும், வலிமையானதும், பயங்கரமானதும், கிரௌஞ்சம் என்று அழைக்கப்பட்டதுமான அந்த அணிவகுப்பை {கிரௌஞ்ச வியூகத்தைக்} கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஆசான் {துரோணர்}, கிருபர், சல்லியன், சோமதத்தனின் மகன் {பூரிஸ்வரவஸ்}, விகர்ணன், அஸ்வத்தாமன், துச்சாசனன் தலைமையிலான தனது தம்பிகள் மற்றும் {தன் தரப்பில்} போருக்காகத் திரண்டிருந்த எண்ணிலடங்கா வீரர்களை அணுகி, அவர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் நேரத்திற்குத் தகுந்த வார்த்தைகளைச் சொன்னான். அவன் {துரியோதனன்}, "பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்திருக்கும் நீங்கள் அனைவரும் சாத்திரங்களை அறிந்தவர்களாக இருக்கிறீர்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் பாண்டு மகன்களையும் அவர்களது துருப்புகளையும் தனியாகவே கொல்லத் தகுந்தவர்களாக இருக்கிறீர்கள். அப்படியிருக்கையில், ஒன்றாகத் திரண்டிருக்கும் நீங்கள் அனைவரும் சேர்ந்து எவ்வளவு அதிகம் செய்ய முடியும்? {என்பதை நினைத்துப் பாருங்கள்}.
எனவே, பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நமது படை அளவிட முடியாததாக இருக்கிறது. அதே வேளையில், பீமனால் பாதுகாக்கப்படும் அவர்களது {பாண்டவர்களின்} படை அளவிடக்கூடியதாகவே இருக்கிறது [1]. சம்ஸ்தானர்கள், சூரசேனர்கள், வேணிகர்கள் {வேத்ரிகர்கள்} [2], குகுரர்கள், ரேசகர்கள் {ஆரோசகர்கள்}, திரிகார்த்தர்கள், மத்ரகர்கள், யவனர்கள், சத்ருஞ்சயன், துச்சாசனன், அற்புத வீரனான விகர்ணன், நந்தன், உபநந்தகன், சித்திரசேனன், மணிபத்ரகர்கள் {பாரிபத்ரகர்கள்} ஆகியோர் தங்கள் (அவரவர்) துருப்புகளோடு பீஷ்மரைப் பாதுகாக்கட்டும்" என்றான் {துரியோதனன்}
[1] இதே போன்ற வரி பகவத் கீதையின் முதல் பகுதியில் (இந்தப் பர்வத்தின் {பீஷ்ம பர்வத்தின்} பகுதி 25ல் 10ம் பத்தியில் {சுலோகத்தில்) வருகிறது. அங்கே விரிவுரையாளர்களை, அதிலும் குறிப்பாக ஸ்ரீதரரைப் பின்பற்றியிருக்கும் நான் Aparyaptam மற்றும் Paryaptam ஆகியவற்றைப் போதுமானதற்குக் குறைந்த மற்றும் போதுமான என்று விளக்கியிருக்கிறேன். எனினும், அது தவறாக இருக்கக்கூடும் என்றும் இங்கே தோன்றுகிறது", என இங்கே விளக்குகிறார் கங்குலி.[2] { } இந்த வகை அடைப்புக்குறிக்குள் இருக்கும் பெயர்கள் வேறு பதிப்பில் கண்டவை
பிறகு, பீஷ்மர், துரோணர், உமது மகன்கள் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தர்களுடையதை {பாண்டவர்களின் வியூகத்தை} தாக்குப்பிடிக்கும் வண்ணம் வலிமைமிக்க ஓர் அணிவகுப்பை {வியூகத்தை} {??} வகுத்தார்கள். அதிக அளவிலான துருப்புகளால் சூழப்பட்ட பீஷ்மர், தேவர்களின் தலைவனைப் போலவே, ஒரு வலிமைமிக்கப் படைக்குத் தலைமை தாங்கி முன்னேறினார். பெரும் சக்தி கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தலர்கள், தசார்ணர்கள், மகதர்கள் {மாகதர்கள்}, விதர்ப்பர்கள், மேலகர்கள் {மேகலர்கள்}, கர்ணர்கள், பிராவரணர்கள் {கர்ணப்பிராவரணர்கள்} ஆகியோரோடு அவரை {பீஷ்மரைப்} பின்தொடர்ந்தார். காந்தாரர்கள், சிந்துசௌவீரர்கள், சிபிக்கள், வசாதிகள், போர்க்களத்தின் ரத்தினமான பீஷ்மரைப் பின்தொடர்ந்தார்கள். தனது துருப்புகள் அனைத்துடனும் சேர்ந்த சகுனி பரத்வாஜரின் மகனைப் {துரோணரைப்} பாதுகாத்தான்.
தனது தம்பிகள் அனைவருடனும், அஸ்வாதகர்கள், விகர்ணர்கள், அம்பஷ்டர்கள், கோசலர்கள், தரதர்கள், சகர்கள் க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகியோருடனும் கூடிய மன்னன் துரியோதனன், பாண்டவப் படைக்கு எதிராக உற்சாகமாக முன்னேறினான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பூரிஸ்ரவஸ், சலர், சல்லியன், பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் {பீஷ்மரின்} இடது பக்கத்தைப் பாதுகாத்தனர். சோமதத்தன், சுசர்மன், காம்போஜ ஆட்சியாளன் சுதக்ஷிணன், சதயு மற்றும் சுருதயு ஆகியோர் வலது பக்கத்தைப் பாதுகாத்தனர். அஸ்வத்தாமன், கிருபர், சத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் பெரும் பிரிவுகளிலான துருப்புகளுடன் படையின் பின்புறத்தில் நின்றனர். அவர்களுக்கும் பின்னால், கேதுமான், வசுதானன், காசி மன்னனின் பலமிக்க மகன் {அபிபூ} ஆகியோர் இருந்தனர்.
ஓ! பாரதரே, போருக்காக உற்சாகமாகக் காத்திருந்த உமது துருப்புகள் அனைத்தும் பெரும் மகிழ்ச்சியுடன் தங்கள் சங்குகளை ஊதி, சிங்க முழக்கம் செய்தார்கள். அந்தப் (போராளிகளின்) ஒலிகளைக் கேட்டு மகிழ்ச்சியால் நிறைந்தவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவரும் மரியாதைக்குரியவருமான குரு {கௌரவ} பாட்டன் {பீஷ்மர்}, சிங்க முழக்கம் முழங்கி தனது சங்கை எடுத்து ஊதினார். அதன்பேரில், பிறரும் தங்கள் சங்குகள், பேரிகைகள், பல விதங்களிலான காகளங்கள், ஆனகங்கள் ஆகியவற்றை முழங்கினார்கள். அந்த ஒலி ஆரவாரமிக்கப் பேரொலியாக இருந்தது.
வெண்குதிரைகள் பூட்டப்பட்ட பெருந்தேரில் நின்றிருந்த மாதவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், தங்கத்தால் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் அற்புத சங்குகளை முழங்கினார்கள். ரிஷிகேசன் {கிருஷ்ணன்} பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்பட்ட சங்கை ஊதினான். அர்ஜுனன் தேவதத்தையும், பயங்கரச் செயல்களைப் புரியும் விருகோதரன் {பீமன்}, பௌண்ட்ரத்தையும் முழங்கினார்கள். குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அனந்தவிஜயம் என்ற அழைக்கப்பட்ட சங்கை ஊதினான். அதே வேளையில், நகுலனும் சகாதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் என்று அழைக்கப்பட்ட சங்குகளை எடுத்து முழங்கினார்கள் [3].
[3] இது {போர் ஆரம்பித்தல்} சம்பந்தமாகப் பீஷ்ம பர்வம் பகுதி 25ல் 13 முதல் 20ம் ஸ்லோகம் வரை பார்க்கலாம் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
காசி ஆட்சியாளன் [4], சைப்யன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, பெரும் வில்லாளியான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோர் அவரவர் சங்குகள் எடுத்து ஊதி சிங்க முழக்கம் செய்தார்கள். அந்த வீரர்களால் எழுப்பப்பட்ட ஆரவாரமிக்கப் பேரொலி பூமியிலும் வானத்தில் உரக்க எதிரொலித்தது. இப்படியே, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியில் நிறைந்திருந்த குருக்களும் பாண்டவர்களும் மீண்டும் போரிட்டு ஒருவரை ஒருவரை அழிக்க விரைந்து முன்னேறினார்கள்." {என்றான் சஞ்சயன்}.
[4] இதே பகுதியில் காசியின் இளவரசன் கௌரவத் தரப்பில் இருந்து போரிடுவதாகக் குறிப்பு இருக்கிறது. காசியின் மன்னனோ பாண்டவர் தரப்பில் இருந்து போரிடுகிறான்.
ஆங்கிலத்தில் | In English |