The Krauncha Array! | Bhishma-Parva-Section-050 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 08)
பதிவின் சுருக்கம் : முதல் நாள் தோல்வி குறித்து யுதிஷ்டிரன் கவலைப் பட்டு கிருஷ்ணனிடம் செல்வது; அர்ஜுனனின் அக்கறையின்மை குறித்து யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் வருந்துவது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ஆறுதலைச் சொல்வது; யுதிஷ்டிரன் திருஷ்டத்யும்னனிடம் கிரௌஞ்ச வியூகத்தை அமைக்கும்படி சொல்வது; திருஷ்டத்யும்னனும் அவ்வாறே அமைப்பது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, முதல் நாளில் துருப்புகள் திரும்பப் பெறப்பட்டு, போரில் பீஷ்மரின் கோபத்தால் {கோபத்தைக் கண்டு} துரியோதனன் மகிழ்ச்சி கொண்ட போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவருடனும் மற்றும் (தனது தரப்பின்) மன்னர்கள் அனைவருடனும் சேர்ந்து ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} சென்றான்.
பீஷ்மரின் ஆற்றலைக் கண்டும், தனது தோல்வியை நினைத்தும் பெரும் துக்கத்தில் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த விருஷ்ணி குலக்கொழுந்திடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்க வில்லாளியான பீஷ்மரின் பயங்கர ஆற்றலைப் பார். காய்ந்த புல்லை {வைக்கோலை} எரிக்கும் நெருப்பைப் போல, அவர் {பீஷ்மர்} எனது துருப்புகளை எரிக்கிறார். தெளிந்த நெய்யால் ஊட்டப்படும் நெருப்பைப் போல எனது துருப்புகளை நக்கிக் கொண்டிருக்கும் அந்த உயர் ஆன்ம வீரரை {பீஷ்மரை} நம்மால் காணக்கூட முடியுமா?
வில் தரித்தவரும், மனிதர்களில் புலியுமான அந்த வலிமைமிக்க வீரரை {பீஷ்மரைக்} கண்டு, கணைகளால் பீடிக்கப்பட்டு, எனது துருப்புகள் ஓடுகின்றன. சினம் கொண்ட யமனோ, வஜ்ரம் தரித்தவனோ {இந்திரனோ}, கையில் வருண பாசத்தைக் கொண்டவனோ {வருணனோ}, கதாயுதத்துடன் கூடிய குபேரனோ கூடப் போரில் வீழ்த்தப்படலாம், ஆனால், வலிமைமிக்கத் தேர்வீரரும், பெரும் சக்தி படைத்தவருமான பீஷ்மரை வீழ்த்துவது இயலாது. இப்படிப்பட்ட நிலையில், பீஷ்மர் எனும் அடியற்ற கடலில் (என்னைக் காக்க) ஒரு படகில்லாமல் நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.
ஓ! கேசவா {கிருஷ்ணா}, எனது புரிதலில் உள்ள பலவீனத்தின் விளைவாக, (போரில் எதிரியாகப்) பீஷ்மரை அடைந்த நான், ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, காட்டுக்குச் செல்வேன். பூமியின் தலைவர்களான இவர்களை {பாண்டவர்களைப்}, பீஷ்மர் என்ற உருவத்தில் உள்ள மரணத்திற்கு {காலனுக்கு} அளிப்பதைவிட நான் அங்கே {காட்டில்} வாழ்வதே விரும்பத்தக்கது.
வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்த பீஷ்மர், ஓ! கிருஷ்ணா, எனது படையை அழித்துவிடுவார். சுடர்விடும் நெருப்பில், தங்கள் சொந்த அழிவுக்காக விழும் பூச்சிகளைப் போல, எனது படையைச் சேர்ந்த போராளிகளும் விழுவார்கள்.
ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நாட்டுக்காக ஆற்றலை வெளிப்படுத்துவதில், நான் அழிவை நோக்கியே இட்டுச் செல்லப்படுகிறேன். வீரர்களான எனது தம்பிகள், தங்கள் அண்ணனின் மேல் கொண்ட அன்பினால், அரசுரிமையையும், மகிழ்ச்சியையும் இழந்து, எனக்காகக் கணைகளால் பீடிக்கப்பட்டு வலியோடு இருக்கின்றனர். உயிரை மிக உயர்வாக நாம் கருதுகிறோம். ஏனெனில், இத்தகு சூழ்நிலையில் உயிர் என்பது (தியாகம் செய்ய முடியாத அளவுக்கு) விலைமதிப்பில்லாததாகும்.
எஞ்சிய எனது நாட்களில் நான் கடுந்தவங்களைப் பயில்வேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, இந்த எனது நண்பர்கள் கொல்லப்படுவதற்கு நான் காரணமாக மாட்டேன். வலிமைமிக்கவரான பீஷ்மர், அடிப்பவர்களின் முதன்மையான எனது தேர்வீரர்கள் பல்லாயிரம் பேரை எதிர்த்து, தனது தெய்வீக ஆயுதத்துடன் இடைவிடாமல் {களத்தில்} நிற்கிறார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, எதைச் செய்தால், அஃது எனக்கு நன்மையைச் செய்யும் என்பதைத் தாமதிக்காமல் சொல்வாயாக.
அர்ஜுனனைப் பொறுத்தவரை, அக்கறையில்லாத ஒரு பார்வையாளனாகவே நான் அவனைக் காண்கிறேன். பெரும் வலிமை கொண்ட இந்தப் பீமன் மட்டுமே, க்ஷத்திரியக் கடமைகளை நினைவில் கொண்டு, தனது கரங்களின் ஆற்றலை வெளிப்படுத்தி, தனது சக்தியை முழுமையாகப் பயன்படுத்துகிறான். வீரர்களைக் கொல்லும் தனது கதாயுதத்தைக் கொண்டு, தனது சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகள் ஆகியவற்றுடன் மோதி மிகக் கடினமான சாதனைகளை அடைகிறான். எனினும், ஓ! ஐயா {கிருஷ்ணா}, நூறுவருடங்கள் நன்கு போரிட்டாலும் எதிரிப் படையை அழிப்பதற்கு இவனால் {பீமனால்} ஆகாது.
(நமக்கு மத்தியில்) இந்த உனது நண்பன் (அர்ஜுனன்) மட்டுமே (வலிமைமிக்க) ஆயுதங்களை அறிந்தவனாவான். எனினும், பீஷ்மராலும், உயர் ஆன்ம துரோணராலும் நாம் எரிக்கப்படுவதைக் கண்டும், அக்கறையே இல்லாமல் நம்மைப் பார்க்கிறான். பீஷ்மர் மற்றும் உயர்ஆன்ம துரோணரின் தெய்வீக ஆயுதங்கள் தடையில்லாமல் பயன்படுத்தப்பட்டு க்ஷத்திரியர்கள் அனைவரையும் எரித்துக் கொண்டிருக்கின்றன. ஓ! கிருஷ்ணா, கோபம் தூண்டப்பட்ட பீஷ்மரின் ஆற்றலும், (அவரது தரப்பில்) இருக்கும் மன்னர்களின் துணையும், ஐயமில்லாமல் நம்மை நிர்மூலமாக்கிவிடும். ஓ! யோகத்தின் தலைவா {கிருஷ்ணா}, காட்டுத்தீயைத் தணிக்கும் மழைநிறைந்த மேகங்களைப் போலப் பீஷ்மருக்கு மரணத்தை எவன் அளிப்பானோ, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை, அந்தப் பெரும் வில்லாளியை {அர்ஜுனனை} நீ பார்ப்பாயாக. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, (பிறகு) உனது கருணையின் மூலம், எதிரிகள் கொல்லப்பட்டு பாண்டுவின் மகன்கள் தங்கள் நாட்டை மீட்டு, தங்கள் சொந்தங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்றான் {யுதிஷ்டிரன்}.
இதைச் சொன்ன உயர் ஆன்ம பிருதையின் மகன் {குந்தியின் மகன் யுதிஷ்டிரன்}, துன்பத்தால் பீடிக்கப்பட்ட இதயத்துடனும், மனம் ஒடுக்கப்பட்டும், சிந்திக்கும் மனநிலையோடு நீண்ட நேரம் அமைதியாக இருந்தான்.
துன்பத்தால் பீடிக்கப்பட்டு, கவலையால் உணர்வுகளை இழந்த அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} கண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, பாண்டவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும்படி, "ஓ! பாரதர்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, வருந்தாதீர். உமது தம்பிகள் அனைவரும் வீரர்களாகவும், உலகப் புகழ்பெற்ற வில்லாளிகளாகவும் இருக்கும்போது வருந்துவது உமக்குத் தகாது. வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, வயதால் மரியாதைக்குரிய இருவரான விராடர் மற்றும் துருபதர், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகியோரும் {கிருஷ்ணனான} நானும் உமக்கு நன்மையைச் செய்வதில் ஈடுபட்டிருக்கிறோம். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, (தங்கள்) துருப்புகளுடன் கூடிய இந்த ஏகாதிபதிகள் அனைவரும் உமது உதவியை வேண்டியும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} உமக்கு அர்ப்பணிப்புடனும் இருக்கின்றனர். உமது படையின் தலைவனும், பிருஷத குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரனுமான இந்தத் திருஷ்டத்யும்னனும், நிச்சயமாகப் பீஷ்மரைக் கொல்லப் போகிறவனான இந்தச் சிகண்டியும் உமது நன்மையையே எப்போதும் வேண்டி, உமக்கு ஏற்புடையதையே செய்து வருகிறார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் (யுதிஷ்டிரன்), அந்தச் சபையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனிடம், "ஓ! திருஷ்டத்யும்னா, நான் உன்னிடம் சொல்லும் வார்த்தைகளைக் குறித்துக் கொள். ஓ! பிருஷத குலத்தைச் சேர்ந்தவனே, நான் உதிர்க்கும் வார்த்தைகள் மீறப்படக்கூடாது. வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அங்கீகாரத்துடன், நீ எங்கள் படைகளின் தலைவனாக இருக்கிறாய். பழங்காலத்தில் தேவர்களின் படைக்குத் தலைவனாக {சேனாதிபதியாக} எப்போதும் இருந்த கார்த்திகேயனைப் {முருகனைப்} போல, ஓ! மனிதர்களில் காளையே {திருஷ்டத்யும்னா}, நீயும் பாண்டவப் படைக்குத் தலைவனாக இருக்கிறாய்.
ஓ! மனிதர்களில் புலியே {திருஷ்டத்யும்னா}, உனது ஆற்றலை வெளிப்படுத்திக் கௌரவர்களைக் கொல்வாயாக. ஓ! ஐயா {திருஷ்டத்யும்னா}, நானும், பீமனும், கிருஷ்ணனும், மாத்ரியின் மகன்களும், கவசம் பூண்ட திரௌபதியின் மகன்களும் [1] மற்றும் பிற மன்னர்களில் முதன்மையானவர்களும், ஓ! மனிதர்களில் காளையே {திருஷ்டத்யும்னா} உன்னைப் பின்பற்றுவோம்" என்றான் {யுதிஷ்டிரன்}.
[1] கோபத்தில் அர்ஜுனனை விட்டுவிட்டான் யுதிஷ்டிரன் ...
பிறகு, (கேட்பவர்களை) மகிழ்விக்கும் வண்ணம் திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, "பழங்காலத்தில் சுயம்புவால் விதிக்கப்பட்டது போலவே, ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, நானே துரோணரைக் கொல்பவனாவேன். இப்போதோ இந்தப் போரில் பீஷ்மர், துரோணர், கிருபர், சல்லியன், ஜெயத்ரதன் மற்றும் (குரு தரப்பில் இருக்கும்) செருக்கு நிறைந்த ஏகாதிபதிகள் அனைவருடனும் நான் போரிடுவேன்" என்றான் {திருஷ்டத்யும்னன்}.
இளவரசர்களில் முதன்மையானவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பிருஷதனின் மகன் {திருஷ்டத்யும்னன்} இதைத் துணிச்சலாகச் சொன்ன போது, பெரும் சக்தி கொண்டவர்களும், போரில் தோற்கடிக்கப்பட முடியாதவர்களுமான பாண்டவ வீரர்கள் பேரொலியுடன் ஆரவாரம் செய்தனர். பிறகு, பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரன், தனது படைத்தலைவனான பிருஷதன் மகனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} (இவ்வார்த்தைகளால்), "எதிரிகள் அனைவரையும் அழிக்கவல்லதும், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் பிருஹஸ்பதியால் இந்திரனுக்குச் சொல்லப்பட்டதும், பகையணியின் படைப்பிரிவுகளை அழிக்கவல்லதுமான ஓர் அணிவகுப்பு {வியூகம்} உண்டு. கிரௌஞ்சருமா {Krauncharuma - கொக்கு போன்ற வடிவம் கொண்ட வியூகம்} என்ற பெயரில் அறியப்பட்ட அந்த அணிவகுப்பை {வியூகத்தை} நீ அமைப்பாயாக. இதற்கு முன்னால் காணப்படாத அதை {கிரௌஞ்ச வியூகத்தை}, குருக்களுடன் சேர்ந்து பிற மன்னர்களும் காணட்டும்", என்றான் {யுதிஷ்டிரன்}.
[2]
[2]
விஷ்ணுவால் சொல்லப்பட்ட வஜ்ரதாங்கியைப் போல {இந்திரனைப்போல} மனிதர்களில் தேவனால் {யுதிஷ்டிரனால்} சொல்லப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்}, காலை விடிந்ததும், முழுப் படையின் முன்னணியில் தனஞ்சயனை {அர்ஜுனனை} நிறுத்தினான். இந்திரனின் கட்டளையின் பேரில் தேவதச்சனால் செய்யப்பட்ட தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கொடி, வானத்தில் அசைந்து கொண்டிருந்த போது, அஃது அற்புதமான அழகுடன் திகழ்ந்தது. இந்திரவில்லின் {வானவில்லின்} நிறங்களை ஒத்த நிறங்களைக் கொண்ட கொடிகள், விண்ணதிகாரிகளை {பறவைகளைப்} போலப் பறந்து கொண்டிருந்தன. வானத்தில் பறக்கும் நீராவியால் ஆன மாளிகை போல அது தெரிந்தது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தேர் சென்ற பாதையெங்கிலும் அது நடனமாடிக் கொண்டு செல்வதைப் போலவும் தெரிந்தது. அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, ரத்தினங்கள் நிறைந்த அதனுடனும் (கொடிக்கம்பத்துடனும்), அந்தக் கொடிக்கம்பம் காண்டீவந்தாங்கியுடனும் {அர்ஜுனனுடனும்} எனச் சுயம்புவுடன் சூரியனைப் போல (சூரியனுடன் சுயம்புவைப் போல என) [2] உயர்ந்த அலங்காரத்துடன் தெரிந்தது.
[2] "வங்காள உரையில் "சுவயம்பூரிவ பானுன Savayambhuriva bhanuna" என்றிருக்கிறது. அதையே நான் பின்பற்றியிருக்கிறேன். பம்பாய் உரையிலோ "மேருரிவபானுன Merurivabhanuna" என்றிருக்கிறது, அதன் பொருள் மேரு மலையுடன் கூடிய சூரியனைப் போல என்பதாகும். இரண்டுக்கும் இடையில் எதைத் தேர்வு செய்வது என்பது கடினமானது" என இங்கே விளக்குகிறார் கங்குலி.
பெரிய எண்ணிக்கையிலான துருப்புகளால் சூழப்பட்ட மன்னன் துருபதன் (அந்த அணிவகுப்பின் {வியூகத்தின்} தலைமையில் இருந்தான். குந்திபோஜன் மற்றும் சைப்யன் ஆகிய இரு மன்னர்களும் அதன் கண்களாகினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தாசர்ணர்கள் {தாசேரகர்கள்}, பிரயகர்கள் {பிரபத்ரர்கள்}, அநூபகர்கள், கிராதர்கள் ஆகியோரின் ஆட்சியாளர்கள் அதன் {கிரௌஞ்ச வியூகத்தின்} கழுத்தில் நிறுத்தப்பட்டார்கள். ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரன், படச்சரர்கள் {Patachcharas}, ஹூனர்கள் {Hunas}, பௌரவகர்கள் {Pauravakas}, நிஷாதர்கள் ஆகியோர் அதன் {அந்தக் கிரௌஞ்ச வியூகத்தின்} இரு சிறகுகள் ஆனார்கள். அதேபோல, பிசாசர்கள், குண்டவிஷர்கள் {குண்டீவிஷர்கள்}, மந்தகர்கள், லடாகர்கள், தங்கணர்கள், உத்திரர்கள் {உத்பசர்கள்}, சரபர்கள் {சபரர்கள்}, தும்புமர்கள், வத்சர்கள், நாகுலர்கள் ஆகியோரும் அப்படியே {கிரௌஞ்ச வியூகத்தின் சிறகுகள்} ஆனார்கள். நகுலனும் சகாதேவனும் தங்களை இடது சிறகில் நிறுத்திக் கொண்டார்கள் [3].
[3] சிறகிலிருப்போரின் பட்டியல் வேறு பதிப்பில் வேறு மாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு: யுதிஷ்டிரன், படச்சரர்கள், பௌண்ட்ரர்கள், பௌரவகர்கள், நிஷாதர்கள் ஆகியோர் பின்பாகமாகினர் என்றும், பீமசேனனும் திருஷ்டத்யும்மனும் சிறகுகளின் தலைமையில் இருந்தார்கள் என்றும், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, சாத்யகி, பிசாசர்கள், தாரதர்கள், குண்டீவிஷர்கள், புண்ட்ரர்கள், மாருதர்கள், தேனுகர்கள், தங்கணர்கள், பரதங்கணர்கள், பாஹ்லீகர்கள், தித்திரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகியோர் வலப்பக்க சிறகிலும், அக்னிவேசர்கள், ஹுண்டர்கள், மாளவர்கள், தானபாரிகள், சபரர்கள், உத்பஸர்கள், நாகுலர்கள், வத்சர்கள், நகுலசகாதேவர்கள் ஆகியோர் இடப்பக்க சிறகிலும் நின்றார்கள் என்றும் இருக்கிறது.
அந்தச் சிறகுகள் இரண்டும் சந்திக்கும் இடத்தில், பத்தாயிரம் தேர்களும், தலையில் நூறாயிரமும் {ஒருலட்சமும்}, பின்புறத்தில் ஆயிரம் லட்சத்து இருபதாயிரமும் {ஓர் அர்ப்புத்ததிற்கு மேல் இருபதாயிரம்}, கழுத்தில் நூற்று எழுபதாயிரம் {ஒரு லட்சத்து எழுபதாயிரம்} தேர்களும் நிறுத்தப்பட்டன. சிறகுகளின் இணைப்புகள், சிறகுகள், சிறகுகளின் எல்லைகள் ஆகியவற்றில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்விடும் மலைகளைப் போன்ற பெரும் உடல் படைத்த யானைகள் முன்னேறிக் கொண்டிருந்தன.
கேகயர்கள், காசி ஆட்சியாளன், முப்பதாயிரம் தேர்களுடன் கூடிய சேதிகளின் மன்னன் ஆகியோரின் துணையோடு விராடன் அதன் {அந்த வியூகத்தின்} பின்புறத்தைக் காத்தான் [4]. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் வலிமைமிக்க அணிவகுப்பை {கிரௌஞ்ச வியூகத்தை} இப்படி வகுத்துக் கொண்ட பாண்டவர்கள் அனைவரும் கவசங்களைத் தரித்துக் கொண்டு சூரிய உதயத்தை எதிர்பார்த்துப் போருக்காகக் காத்திருந்தார்கள். சுதமானவையும், விலையுயர்ந்தவையுமான அவர்களது வெண்குடைகள் சூரியனைப் போலப் பிரகாசமாக அவர்களது தேர்களிலும், யானைகளிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது". {என்றான் சஞ்சயன்}
[4] "பல வீரர்கள் மற்றும் குலங்களுக்குப் பாண்டவப் படையில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைப் பொறுத்தவரை வங்காளப்பதிப்பில் இருந்து பம்பாய் பதிப்பு பல இடங்களில் வேறுபடுகிறது. உண்மையான உரை எது என்பதைத் தீர்மானிப்பது இயலாததாக இருக்கிறது. எனவே, திருத்துவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல், நான் வங்க உரையையே பின்பற்றியிருக்கிறேன்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.
ஆங்கிலத்தில் | In English |