The conflict between Drona and Dhrishtadyumna! | Bhishma-Parva-Section-053 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 11)
பதிவின் சுருக்கம் : துரோணருக்கும் திருஷ்டத்யும்னுக்கும் இடையில் நடைபெற்ற போர்; இடையில் குறுக்கிட்ட பீமன்; பீமனுக்கு எதிராகக் கலிங்கர்களைத் தூண்டிய துரியோதனன்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, சிறந்த முறையில் போரில் முயற்சி செய்பவர்களான பெரும் வில்லாளி துரோணர், பிருஷத குலத்தின் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரும் தங்களுக்குள் எப்படிப் போரிட்டுக் கொண்டனர்? சந்தனுவின் மகனான பீஷ்மரால் (கூட) போரில் பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} தப்ப இயலவில்லை எனும்போது, ஓ! சஞ்சயா, முயற்சியை விட விதி மேன்மையானது என்றே நான் கருதுகிறேன். உண்மையில், கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் பீஷ்மரால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் அழித்து விட முடியும் எனும்போது, ஓ! சஞ்சயா, போரில் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் அவரால் {பீஷ்மரால்} பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} ஏன் தப்ப இயலவில்லை?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பயங்கரப் போரைக் குறித்து அமைதியுடன் கேட்பீராக. தேவர்களுடன் கூடிய வாசவனாலும் {இந்திரனாலும்} கூடப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வெல்ல முடியாது. துரோணர், திருஷ்டத்யும்னனை பல்வேறு வகையான கணைகளால் {பல்லங்களால்} துளைத்து, அவனின் {திருஷ்டத்தும்னனின்} தேரோட்டியைத் தேர் தட்டில் இருந்து விழச் செய்தார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபம் தூண்டப்பட்ட அந்த வீரர் {துரோணர்}, அற்புதமான தனது நான்கு கணைகளைக் கொண்டு திருஷ்டத்யும்னனின் நான்கு குதிரைகளைத் துன்புறுத்தினார். வீரனான திருஷ்டத்யும்னனும் ஒன்பது {9} கணைகளால் துரோணரைத் துளைத்து, அவரிடம், "நில்லும், நில்லும்" என்று சொன்னான்.
பெரும் ஆற்றல் கொண்டவரும், அளவிலா ஆன்மா கொண்டவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபம் நிறைந்த திருஷ்டத்யும்னனைத் தனது கணைகளால் மறைத்தார். பிறகு அவர் {துரோணர்} மரணத்தின் இரண்டாவது கோலைப் போன்றதும், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ரத்தைப் போன்றதுமான ஒரு பயங்கரக் கணையைப் பிருஷதனின் மகனுடைய {திருஷ்டத்யுன்மனின்} அழிவுக்காக எடுத்தார். பரத்வாஜர் {துரோணர்} அந்தக் கணையைக் கொண்டு குறி பார்ப்பதைக் கண்ட போராளிகளுக்கு மத்தியில் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் ஓலங்கள் எழுந்தன.
வீரனான திருஷ்டத்யும்னன் அந்தப் போர்க்களத்தில் மலைபோல அசைவற்றுத் தனியாக நின்றான். ஆச்சரியகரமான அவனது ஆற்றலை நாங்கள் அப்போது கண்டோம். தனக்கான மரணத்தைப் போலத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததும், பயங்கரமானதுமான சுடர்விடும் அந்தக் கணையை வெட்டிய அவன் {திருஷ்டத்யும்னன்}, பரத்வாஜரின் மகன் {துரோணரின்} மீது கணைமாரியைப் பொழிந்தான். கடுஞ்சாதனையைச் செய்த அந்தத் திருஷ்டத்யும்னனைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், அப்போது மகிழ்ச்சியால் நிறைந்து பேரொலியுடன் ஆரவாரம் செய்தனர்.
துரோணரைக் கொல்ல விரும்பியவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தங்கம் மற்றும் வைடூரியம் ஆகியவறால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டி ஒன்றை துரோணரின் மீது ஏவினான். சிரித்து நின்ற பரத்வாஜரின் மகன் {துரோணர்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதுமான அந்த ஈட்டியை மூன்று துண்டுகளாகத் துண்டித்தார். இப்படித் தனது ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் மேல் கணைகளை மழையெனப் பொழிந்தான்.
அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், அந்தக் கணை மாரியைக் கலங்கடித்தபடி, வாய்ப்புக் கிடைத்த சமயத்தில், துருபதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} வில்லை ஒடித்தார். (இப்படி) அந்த மோதலில் தனது வில் ஒடிக்கப்பட்டவனும், பெரும் புகழ் கொண்டவனுமான வலிமைமிக்க வீரன் {திருஷ்டத்யும்னன்}, மலை போன்ற பலம் நிறைந்த ஒரு கனமான கதாயுதத்தைத் துரோணர் மீது விசினான். அவனது {திருஷ்டத்யும்னனின்} கரங்களில் இருந்து வீசப்பட்ட அந்தக் கதாயுதம் துரோணரின் அழிவுக்காகக் காற்றில் நகர்ந்து சென்றது.
அதன் பிறகு நாங்கள் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அதிசயம் நிறைந்த ஆற்றலைக் கண்டோம். (தனது தேரின்) வேகத்தால், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கதாயுதத்தைக் கலங்கடித்த அவர் {துரோணர்}, கூரிய முனைகள் கொண்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், தங்க இறகுகள் படைத்ததும், சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்டதுமான பல கணைகளைப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி அடித்தார். பிருஷதனின் {திருஷ்டத்யும்னனின்} கவசத்தைக் கடந்த அவை, அந்தப் போரில் அவனது இரத்தத்தைக் குடித்தன.
பலாச மரம் (Palash Tree) Botanical Name: Butea monosperma tree |
வில் ஒடிந்தவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்த வீரனை {திருஷ்டத்யும்னனை} மலையில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல எண்ணிலா நேர்க் கணைகளால் அவர் {துரோணர்} மூடினார். மேலும், அவர் {துரோணர்} தனது எதிரியின் {திருஷ்டத்யும்னனின்} தேரோட்டியைத் தேர்த் தட்டில் இருந்து {மீண்டும்} விழச் செய்தார். நான்கு கணைகளால் குதிரைகளையும் விழச்செய்த அந்தத் துரோணர் சிம்ம கர்ஜனை புரிந்தார். மேலும் அவர் {துரோணர்}, மற்றொரு கணையால், திருஷ்டத்யும்னன் கரங்களை மூடியிருந்த தோலுறைகளையும் அறுத்தார். வில் ஒடிக்கப்பட்டு, தேரிழந்து, தனது குதிரைகள் கொல்லப்பட்டு, தேரோட்டி வீழ்த்தப்பட்ட அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, கைகளில் கதாயுதத்துடன் தனது தேரில் இருந்து இறங்கி பெரும் ஆற்றலை வெளிப்படுத்தினான்.
ஆனால், தனது தேரில் இருந்து அவன் {திருஷ்டத்யும்னன்} இறங்குவதற்கு முன்பே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணர், தனது கணைகளால் அந்தக் கதாயுதத்தைச் சுக்குநூறாக வெட்டினார். இந்தச் சாதனை எங்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது. அதன் பிறகு, பலமிக்கக் கரங்களைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய, பெரிய கேடயத்தையும், அழகிய வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டு, சினமிக்க யானையை நோக்கி விரையும் பசிமிகுந்த சிங்கத்தைப் போலத் துரோணரைக் கொல்ல விரும்பி விரைந்தான்.
அதன் பிறகு, நாங்கள் கண்ட பரத்வாஜர் மகனின் {துரோணரின்} ஆற்றலும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவரது (கரங்களின்) வேகமும், அவரது கரங்களின் பலமும் அற்புதம் நிறைந்தனவாக இருந்ததன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தனியாகவே அவர் {துரோணர்}, தனது கணை மாரியால் பிருஷதனின் மகனைத் {திருஷ்டத்யும்னனைத்} தடுத்தார். போரில் பெரும் பலத்தைக் கொண்டிருந்தாலும், அவனால் {திருஷ்டத்யும்னனால்} மேலும் முன்னேற முடியாமல் போனது. தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு, அந்தக் கணை மேகங்களைத் தனது கரங்களின் வேகத்தைப் பயன்படுத்திக் கேடயத்தால் விலக்கிக் கொண்டு இருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனை நாங்கள் கண்டோம்.
பிறகு, அந்த உயர் ஆன்ம பிருஷதன் மகனுக்கு {திருஷ்டத்யும்னனுக்கு} உதவ விரும்பியவனும் வலிமைமிக்கக் கரங்களும், பெரும் பலம் கொண்டவனுமான பீமன், அங்கே விரைந்து வந்தான். கூரிய ஏழு கணைகளால் துரோணரைத் துளைத்த அவன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விரைவாகப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} மற்றொரு தேரில் ஏற்றச் செய்தான்.
பிறகு, மன்னன் துரியோதனன், பெரும் படைப்பிரிவால் ஆதரிக்கப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனிடம் பரத்வாஜர் மகனைப் {துரோணரைப்} பாதுகாக்கத் தூண்டினான். பயங்கரமானதும், வலிமைமிக்கதுமான கலிங்கர்களின் படைப்பிரிவு, உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவின் பேரில் பீமனுக்கு எதிராக விரைந்தது. அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான துரோணர், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} கைவிட்டு விட்டு, விராடனுடனும், துருபதனுடனும் ஒரே சமயத்தில் மோதினார்.
போரில் மன்னன் யுதிஷ்டிரனை ஆதரிக்கத் திருஷ்டத்யும்னனும் முன்னேறினான். அப்போது, பயங்கரமானதும், மயிர் கூச்சத்தை ஏற்படுத்துவதும், உலகை அழிப்பதுமான அச்சம் நிறைந்த அந்தப் போர் கலிங்கர்களுக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் நடைபெற்றது.
ஆங்கிலத்தில் | In English |