Bhima and Satyaki dearer to Dhrishtadyumna! | Bhishma-Parva-Section-054b | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 12)
பதிவின் சுருக்கம் : தரையில் நின்று போரிட்ட பீமனைக் கணைகளால் துளைத்த கலிங்க மன்னன் சுருதாயுஸ்; தேரோட்டி அசோகன் பீமனுக்காகத் தேரைக் கொண்டு வருவது; சுருதாயுசைக் கொன்ற பீமன்; கலிங்கப்படையின் சத்தியதேவன், சத்யன், கலிங்க இளவரசனான கேதுமான் ஆகியோரைப் பீமன் கொன்றது; பீமனைச் சூழ்ந்த கொண்ட கலிங்கர்கள்; ஆயிரக்கணக்கான கலிங்கர்களைப் பீமன் கொல்வது; பீமனின் உதவிக்கு விரைந்த திருஷ்டத்யும்னனும், சாத்யகியும்; பீமசேனனைப் பீஷ்மர் எதிர்ப்பது; பீஷ்மரின் தேரோட்டியைக் கொன்ற சாத்யகி; தேரோட்டி இல்லாத குதிரைகள் பீஷ்மரைக் களத்தைவிட்டே கொண்டு செல்வது; கலிங்கர்கள் அனைவரையும் பீமன் கொல்வது; திருஷ்டத்யும்னன், பீமன், சாத்யகி ஆகியோர் ஒருவரையொருவர் தழுவிக் கொள்தல்...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கலிங்கத் துருப்புகளின் தலைமையில் நிற்கும் சுருதாயுஸைக் கண்ட பீமசேனன், அவனை {சுருதாயுசை} நோக்கி விரைந்தான். அவன் {பீமன்} முன்னேறி வருவதைக் கண்டவனும், அளவிலா ஆன்மாக் கொண்டவனுமான கலிங்கர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, ஒன்பது {9}கணைகளைக் கொண்டு பீமசேனனின் மார்பைத் துளைத்தான். கலிங்கர்களின் ஆட்சியாளனால் {சுருதாயுசால்} அடிக்கப்பட்ட கணைகளால் தாக்குண்டு, அங்குசத்தால் துளைக்கப்பட்ட யானை போலவும், விறகெனும் உணவூட்டப்பட்ட நெருப்பு போலவும் பீமசேனன் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.
அப்போது, தேரோட்டிகளில் சிறந்தவனான அசோகன் தங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரைக் கொண்டு வந்து அதில் பீமனை ஏறச் செய்தான். அதன்பேரில், எதிரிகளைக் கொல்பவனான குந்தியின் மகன் {பீமன்}, அந்தத் தேரில் ஏறினான். பிறகு, "நில், நில்" என்று சொன்னபடி கலிங்கர்களின் ஆட்சியாளனை {சுருதாயுசை} நோக்கி விரைந்தான். கோபத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கச் சுருதாயுஸ், தனது கரத்தின் வேகத்தை வெளிக்காட்டியபடி பீமன் மீது கூரிய பல கணைகளைச் செலுத்தினான் அந்தக் கலிங்கனின் {சுருதாயுசின்} அற்புத வில்லில் இருந்து அடிக்கப்பட்ட ஒன்பது கணைகளால் தாக்குண்டவனும், வலிமைமிக்க வீரனுமான பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தடியால் அடிக்கப்பட்ட ஒரு பாம்பைப் போலப் பெரும் கோபத்துக்கு உள்ளானான்.
வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பீமன், கோபத்தால் தூண்டப்பட்டுப் பெரும்பலத்துடன் தனது வில்லை வளைத்து, முழுவதும் இரும்பாலான {உருக்காலான} ஏழு கணைகளால் அந்தக் கலிங்க ஆட்சியாளனைக் {சுருதாயுசைக்} கொன்றான் [1]. இரண்டு கணைகளால், கலிங்கனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாத்த இரு வலிமைமிக்கப் பாதுகாவலர்களையும் கொன்றான். இப்படியே {சுருதாயுசின் தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களான} சத்தியதேவன் மற்றும் சத்யனை அவன் {பீமன்} யமனுலகிற்கு அனுப்பி வைத்தான். அளவிலா ஆன்மா கொண்ட பீமன், பல கணைகளையும், நீண்ட ஈட்டிகளையும் கொண்டு கேதுமானையும் யமனுலகிற்கு அனுப்பி வைத்தான். அதன்பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட கலிங்க நாட்டு க்ஷத்திரியர்கள், பல்லாயிரக்கணக்கான போராளிகளால் ஆதரிக்கப்பட்டு, கோபம் நிறைந்த பீமசேனனுடன் அந்தப் போரில் மோதினார்கள்.
[1] இங்கே கொல்லப்படும் சுருதாயுஸ் கலிங்க மன்னனாவான். இதன் பின் போரில் கூறப்படும் சுருதாயுஸ் அம்பஷ்டர்களின் மன்னனாவான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஈட்டிகள் {சக்திகள்}, கதாயுதங்கள், வாள்கள், தோமரங்கள், ரிஷ்டிகள் {சுருள் கத்திகள்}, போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான கலிங்கர்கள் பீமனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்படி எழுந்த கணைமாரியைச் சிதறடித்த அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு (தனது தேரிலிருந்து) பெரும் வேகத்துடன் கீழே குதித்தான். அதன் பிறகு பீமன் எழுநூறு {700} வீரர்களை யமனுலகு அனுப்பி வைத்தான். அதற்கும் கூடுதலாக, எதிரிகளைக் கலங்கடிப்பவனான அவன் {பீமன்}, இரண்டாயிரம் {2000} கலிங்கர்களை மரணலோகம் அனுப்பி வைத்தான். அந்தச் சாதனை உயர்வானதாகவும், அற்புதம் நிறைந்ததாகவும் தெரிந்தது. இப்படியே பயங்கர ஆற்றல் கொண்டவனும், வீரனுமான அந்தப் பீமன் கலிங்கர்களின் பெருங்கூட்டத்தைத் தொடர்ச்சியாக வீழ்த்திக் கொண்டிருந்தான்.
அந்தப் போரில், பாண்டுவின் மகனால் {பீமனால்}, தங்கள் பாகனை இழந்த யானைகள், கணைகளால் பீடிக்கப்பட்டு, தங்கள் படையினரையே மிதித்தபடி காற்றால் செலுத்தப்படும் மேகங்களின் திரளைப் போல உரத்த பிளிறல்களை உதிர்த்துக் கொண்டும் களத்தில் உலவின. வாளைக் கையில் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், மகிழ்ச்சியால் நிறைந்து, பயங்கரமான பேரொலியை எழுப்பும் தனது சங்கை எடுத்து ஊதினான். அந்தச் சங்கொலியால் அவன் {பீமன்} கலிங்கத் துருப்புகள் அனைத்தின் இதயங்களையும் அச்சத்தால் நடுங்கச் செய்தான்.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, ஒரே நேரத்தில் கலிங்கர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழப்பதாக அங்கே தெரிந்தது. போராளிகள் அனைவரும் மற்றும் விலங்குகள் அனைத்தும் அச்சத்தால் பீடிக்கப்பட்டன. பல பாதைகளில் பீமன் விரைந்ததன் விளைவாகவோ, யானைகளின் இளவரசனைப் போல அனைத்துப் புறங்களில் விரைந்ததன் விளைவாகவோ, தொடர்ச்சியாகக் குதித்ததன் விளைவாகவோ, அவனது {பீமனின்} எதிரிகள், தங்கள் புலனுணர்வுகளை இழந்து மயக்கமடைவதாகத் தெரிந்தது.
முதலையால் கலக்கப்பட்ட ஒரு பெரும் தடாகத்தைப் போலப் பீமசேனனால் அந்த முழுப் (கலிங்கப்) படையும் அச்சத்தால் நடுங்கியது. பீமனின் அற்புதச் சாதனைகளின் விளைவால் பீதியடைந்திருந்த கலிங்கப் போராளிகள் அனைவரும் திக்குகள் அனைத்திலும் சிதறி ஓடினர். எனினும் அவர்கள் மீண்டும் அணிதிரண்ட போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப்படையின் தலைவன் (திருஷ்டத்யும்னன்), தன் தனிப்பட்ட துருப்புகளிடம் "போரிடுங்கள்" என்று கட்டளையிட்டான். சிகண்டியின் தலைமையில் இருந்தவர்களும், தாக்குவதில் சாதித்த தேர்ப்படைகளால் ஆதரிக்கப்பட்டவர்களுமான (பாண்டவப் படையின்) பல தலைவர்கள், தங்கள் படைத்தலைவனின் வார்த்தைகளைக் கேட்டு, பீமனை அணுகினார்கள்.
பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், மேகத்தின் நிறத்தைக் கொண்ட பெரும் யானைப் படையுடன் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். இப்படித் தனது படையினர் அனைவரையும் தூண்டிக் கொண்டிருந்த பிருஷதனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, பல அற்புத வீரர்களால் சூழப்பட்டு, பீமசேனனின் ஒரு பக்கத்தை {ஒரு புறத்தைப்} [2] பாதுகாப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.
[2] மூலத்தில் பர்ஷினி என்று இருப்பதாகவும், ஒரு தேரின் ஒரு பக்கம் அல்லது சிறகு என அது பொருள் தரும் என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பாஞ்சாலர்களின் இளவரசனுக்குத் {திருஷ்டத்யும்னனுக்குத்} தனது உயிரை விட அன்புக்குரியவர்களாகப் பீமனையும், சாத்யகியையும் தவிர இவ்வுலகில் வேறு யாரும் இருக்கவில்லை. பகைவீரர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பீமசேனன் கலிங்கர்களுக்கு மத்தியில் உலவுவதைக் கண்டான். ஓ! மன்னா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்த அவன் {திருஷ்டத்யும்னன்} பல முழக்கங்களை {கர்ஜனைகளைச்} செய்தான். உண்மையில், அவன் தனது சங்கை எடுத்து ஊதியவாறும், சிம்மமுழக்கம் செய்தவாறும் இருந்தான். புறாக்களைப் போல வெண்ணிறக் குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான திருஷ்டத்யும்னனுடைய தேரின் சிவப்புக் கொடிக்கம்பத்தைக் {கோவிதாரக் கொடியைக் [3]} கண்ட பீமசேனனும் ஆறுதல் அடைந்தான்.
[3] கோவிதாரம் என்பது ஒருவகை மரமாகும்.
கலிங்கர்களுடன் மோதிக் கொண்டிருந்த பீமசேனனைக் கண்ணுற்ற அளவிலா ஆன்மாகக் கொண்ட திருஷ்டத்யும்னன், அவனது {பீமனின்} உதவிக்கு விரைந்தான். பெரும் சக்தி கொண்ட வீரர்களான திருஷ்டத்யும்னனும், விருகோதரனும் {பீமனும்}, தூரத்தில் சாத்யகியைக் கண்டு, அப்போரில் இன்னும் மூர்க்கமாகக் கலிங்கர்களுடன் போரிட்டனர்.
வெற்றிவீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சினியின் {சிநியின்} பேரன் {சாத்யகி}, அந்த இடத்தை நோக்கி விரைவாக முன்னேறி பீமன் மற்றும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரின் பக்கவாட்டை அடைந்தான். கையில் இருந்த வில் பெரும் அழிவை உண்டாக்கத் தன்னை மேலும் கடுமையாக்கிக் கொண்ட அவன் {சாத்யகி} போரில் எதிரியைக் கொல்லத் தொடங்கினான். கலிங்கத்தில் பிறந்த வீரர்களின் இரத்தம் மற்றும் சதை ஆகியவை கலந்த இரத்த வெள்ளத்தாலான ஆறை அங்கே பீமன் தோன்றச் செய்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது பீமசேனனைக் கண்டத் துருப்புகள், "பீமனின் வடிவில் காலனே வந்து கலிங்கர்களுடன் போரிடுகிறான்" என்று கதறினர்.
போரில் இந்தக் கதறல்களைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், பீமனை நோக்கி விரைந்து வந்து, படையில் உள்ள போராளிகளுடன் சூழ்ந்து கொண்டார். அதன்பேரில், சாத்யகி, பீமசேனன், பிருஷதக் {பார்ஷதக்} குலத்துத் திருஷ்டத்யும்னன் ஆகியோர், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தனர். அந்தப் போரில் கங்கையின் மைந்தரை விரைந்து சூழ்ந்த கொண்ட அவர்கள் அனைவரும், நேரத்தைக் கடத்தாமல், ஆளுக்கு மூன்று பயங்கரமான கணைகளால் பீஷ்மரைத் துளைத்தனர்.
எனினும், உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, வலிமைமிக்க வில்லாளிகளாகப் போரில் போராடிக் கொண்டிருந்த அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று நேரான கணைகளால் பதிலுக்குத் துளைத்தார். ஆயிரக்கணக்கான கணைகளால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தடுத்த அவர் {பீஷ்மர்}, தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீமனின் குதிரைகளைக் கொன்றார். குதிரைகள் கொல்லப்பட்டாலும் தேரிலேயே தங்கிய பெரும் சக்தி கொண்ட பீமன், பெரும் வேகத்துடன் ஓர் ஈட்டியை பீஷ்மரின் தேர் மீது எறிந்தான்.
உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, அந்த ஈட்டி தன்னை எட்டும் முன்பே அதை இரண்டாகத் துண்டித்துத் தரையில் வீழ்த்தினார். அப்போது, மனிதர்களில் காளையான பீமசேனன், எஃகினால் {சைக்கிய இரும்பினால்} ஆனதும், கனமானதுமான ஒரு பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தனது தேரில் இருந்து விரைவாகக் குதித்தான். தேர்வீரர்களில் முதன்மையான அவனை {பீமனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்ட திருஷ்டத்யும்னன், அந்தப் புகழ்பெற்ற வீரனை {பீமனை}, மற்றவர்கள் கண்ணெதிரிலேயே கூட்டிச் சென்றான் [4].
[4] தேரோட்டி அசோகன் அதன்பிறகு என்ன செய்திருப்பான்? இந்தப் பகுதியைத் தவிர்த்து இந்தத் தேரோட்டியைப் பற்றிய குறிப்பு பீஷ்ம பர்வத்தில் இல்லை.
பீமனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பிய சாத்யகி, தனது கணையால் மதிப்புக்குரிய குரு பாட்டனின் {பீஷ்மரின்} தேரோட்டியை வீழ்த்தினான். தனது தேரோட்டி கொல்லப்பட்டதும், காற்றின் வேகத்தைக் கொண்ட தனது குதிரைகளால், பீஷ்மர், போர்க்களத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். (இப்படி) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்} களத்தை விட்டுக் கொண்டு செல்லப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வைக்கோலை எரிக்கும் பெரும் நெருப்பைப் போலப் பீமசேனன் சுடர்விட்டு எரிந்தான். கலிங்கர்கள் அனைவரையும் கொன்ற அவன் {பீமன்} துருப்புகளின் மத்தியிலேயே இருந்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பைச் சேர்ந்த யாரும் அவனோ {பீமனோடு} மோதத் துணியவில்லை.
பாஞ்சாலர்களாலும், மத்ஸ்யர்களாலும் வழிபடப்பட்ட அவன் {பீமன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனைத் தழுவி கொண்டு சாத்யகியை அணுகினான். கலங்கடிக்கப்படமுடியாத ஆற்றல் கொண்டவனும், யதுக்களில் புலியுமான சாத்யகி, பீமசேனனை மகிழ்விக்கும் வண்ணம், திருஷ்டத்யும்னனின் முன்னிலையில் அவனிடம் {பீமனிடம்}, "கலிங்கர்களின் மன்னன் {சுருதாயுஸ்}, கலிங்கர்களின் இளவரசன் கேதுமான், அதே நாட்டைச் {கலிங்க நாட்டைச்} சேர்ந்த சக்ரதேவன் மற்றும் கலிங்கர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டது நற்பேறாலேயே. யானைகளும், குதிரைகளும், தேர்களும், உன்னத வீரர்களும், துணிவுமிக்கப் போராளிகளும் நிறைந்த கலிங்கர்களின் அந்தப் பெரும்படை உமது கரத்தின் பலம் மற்றும் ஆற்றலால் மட்டுமே நசுக்கப்பட்டது" என்றான் {சாத்யகி}.
இதைச் சொன்னவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனுமான சினியின் பேரன் {சாத்யகி}, அவனது {பீமன் இருந்த} தேரில் விரைந்து ஏறி, பாண்டுவின் மகனைத் {பீமனைத்} தழுவி கொண்டான். பிறகு, மீண்டும் தனது தேருக்கே திரும்பிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சாத்யகி} கோபத்தால் தூண்டப்பட்டு உமது துருப்புகளைக் {கௌரவத் துருப்புகளைக்} கொல்லத் தொடங்கி, பீமனை {பீமனின் கரங்களைப்} பலப்படுத்தினான்." {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |