Fourth day battle commenced! | Bhishma-Parva-Section-060 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 18)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரின் தலைமையில் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட கௌரவ வீரர்கள்; இருதரப்பும் அமைத்துக் கொண்ட வியூகங்கள்; இருதரப்பு படையணிகளுக்கு இடையில் ஏற்பட்ட கடும் போர்; இடையில் புகுந்த அபிமன்யு; அபிமன்யுவைத் தவிர்த்த பீஷ்மர்; பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இரவு கடந்ததும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபம் தூண்டப்பட்டவரும், பெரும்படையால் ஆதரிக்கப்பட்டவரும், பாரதப் படையின் தலைமையில் நின்றிருந்தவருமான உயர் ஆன்ம பீஷ்மர் எதிரியை {அர்ஜுனனை} நோக்கி முன்னேறினார். துரோணர், துரியோதனன், பாஹ்லீகன், துர்மர்ஷணன், சித்திரசேனன், வலிமைமிக்க ஜெயத்ரதன் மற்றும் பிற அரச வீரர்கள் ஆகியோர் பெரும்படைப்பிரிவுகளால் ஆதரிக்கப்பட்டு அனைத்துப் புறங்களிலும் அவனைச் {அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டார்கள்.
பெரும் ஆற்றலும், சக்தியும் படைத்தவனும், வலிமைமிக்க அந்தப் பெரும் தேர்வீரர்களால் சூழப்பட்டவனுமான அவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போல, அந்த அரசவீரர்களில் முதன்மையானோருக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான். படையணிகளுக்கு முன்னணியில் நின்ற யானைகளின் முதுகில் இருந்தவையும், சிவப்பு, மஞ்சள், கருப்பு, பளுப்பு போன்ற பல்வேறு நிறங்களில் இருந்தவையுமான பிரம்மாண்டக் கொடிகள் மிக அழகாகக் காற்றில் அசைவது தெரிந்தது.
பிற வலிமைமிக்கத் தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்ட சந்தனுவின் அரச மகனுடைய {பீஷ்மருடைய} படை, மின்னல் நிறைந்த மேகக் குவியல் போலவோ, மழைக்கால மேகங்களுடன் கூடிய ஆகாயம் போலவோ இருந்தது. போரை நோக்கமாகக் கொண்டதும், சந்தனுவின் மகனால் {பீஷ்மரால்} பாதுகாக்கப்பட்டதுமான குருக்களின் அந்தக் கடும் படை, கடலை நோக்கிப் பாயும் கங்கையின் கடும் ஊற்றைப் போல அர்ஜுனனை நோக்கி வேகமாக விரைந்தது.
குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தன் கொடியில் கொண்ட அந்த உயரான்மா (அர்ஜுனன்), பல்வேறு வகைகளிலான படைகளைக் கொண்டதும், எண்ணிலடங்கா யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், தேர்கள் ஆகியவற்றைத் தன் சிறகில் கொண்டதும், பெரும் மேகத்திரளுக்கு ஒப்பானதுமான அந்த {கௌரவ} அணிவகுப்பை [1] {வியூகத்தைத்} {அதே கருட வியூகமாக இருக்க வேண்டும்} தூரத்தில் இருந்தே கண்டான். மனிதர்களில் காளையான அந்த உயர் ஆன்ம வீரன் {அர்ஜுனன்}, உயர்ந்த கொடியைக் கொண்டதும், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதுமானத் தன் தேரில், தனது (தனிப்பட்ட) படைப்பிரிவின் தலைமையில் நின்று, வலிமைமிக்க {பிற} படை சூழ, எதிரிப்படை முழுவதையும் எதிர்த்து முன்னேறினான்.
[1] மூன்றாம் நாள் போரில் கண்ட கருட மற்றும் அர்த்தச்சந்திர வியூகங்களையே கௌரவர்களும் பாண்டவர்களும் நான்காம் நாளிலும் தொடர்ந்திருக்க வேண்டும்.
அற்புதக் கொடியுடன் கூடியவனும், (விலையுயர்ந்த மூடியால்) தேர்க்கால் மறைக்கப்பட்ட தேருடன் கூடியவனும், அந்தப் போரில் தனது தேரோட்டியாக இருந்த யது குலக் காளையின் {கிருஷ்ணனின்} துணையுடன் கூடியவனுமான அந்தக் குரங்குக் கொடியோனை (வீரனை) {அர்ஜுனனைக்} கண்டு, உமது மகன்களுடன் கூடிய கௌரவர்கள் அனைவரும் திகைப்பில் நிறைந்தனர். உலகத்தின் வலிமையான தேர்வீரனால் பாதுகாக்கப்பட்டதும், ஆயுதங்களை உயர்த்தி வைத்திருந்ததும், ஒவ்வொரு மூலையிலும் நாலாயிரம் {4000} யானைகளைக் கொண்டதுமான அந்தச் சிறந்த அணிவகுப்பை {வியூகத்தை} உமது படை கண்டது.
குருக்களில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் முந்தைய நாள் அமைக்கப்பட்டதும், மனிதர்கள் இதற்கு முன் கேள்விப்படாததும், காணாததும் போன்ற அந்த அணிவகுப்பே இன்றும் (பாண்டவர்களால்) அமைக்கப்பட்டது. அப்போது போர்க்களத்தில் ஆயிரம் பேரிகைககள் ஓங்கி அடிக்கப்பட்டன. படைப்பிரிவுகள் அனைத்தில் இருந்தும் எழும்பிய சங்கொலிகள், தூரிய ஒலிகள் மற்றும் சிங்க முழக்கங்கள் அங்கே பேரொலியை ஏற்படுத்தின.
நாண்களில் கணைகளைப் பொருத்திய துணிவுமிக்கப் போர்வீரர்களால் வளைக்கப்பட்ட (எண்ணிலா) விற்களின் உரத்த நாணொலிகளும், சங்குகளின் முழக்கங்களும், பேரிகைகள் மற்றும் பணவங்களின் ஆரவாரத்தை அமைதிப்படுத்தின {மறைத்து ஓங்கி ஒலித்தன}. சங்கொலிகளால் நிறைந்த மொத்த ஆகாயத்திலும் பூமியின் புழுதி பரவிக் காண்பதற்கு அற்புதமாக இருந்தது. புழுதியால் நிறைந்த வானம் தலைக்கு மேல் பெரிய கூடாரம் அமைக்கப்பட்டதைப் போலத்தெரிந்தது. அந்தக் கூடாரத்தைக் கண்ட துணிவுமிக்கப் போர்வீரர்கள் அனைவரும் (போரிடுவதற்காக) வேகமாக விரைந்தனர்.
தேர்வீரர்களால் தாக்கப்பட்ட தேர்வீரர்கள், தங்கள் தேரோட்டிகள், குதிரைகள், தேர்கள், கொடிகளுடன் வீழ்த்தப்பட்டார்கள். யானைகளால் தாக்கப்பட்ட யானைகளும், காலாட்படைவீரர்களால் தாக்கப்பட்ட காலாட்படை வீரர்களும் அப்படியே விழுந்தனர். வேல்கள் மற்றும் வாள்களுடன் விரைந்த குதிரைவீரர்களால் தாக்கப்பட்டவர்களும், விரைந்து வந்தவர்களுமான குதிரைவீரர்கள், அச்சம்நிறைந்த முகங்களுடன் கீழே விழுந்தனர். இவை அனைத்தையும் காண மிக அற்புதமாகத் தெரிந்தது.
தங்க நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சூரியப் பிரகாசத்தைக் கொண்டவையுமான அற்புதக் கேடயங்கள், போர்க்கோடரிகளாலும், வேல்களாலும், வாட்களாலும் (தாக்கப்பட்டு) களத்தில் விழுந்தன. யானைகளின் தந்தங்களாலும், {அவற்றின்} வலிய துதிக்கைகளாலும் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட பல தேர்வீரர்கள், தங்கள் தேரோட்டிகளோடு சேர்ந்து விழுந்தனர். தேர்வீரர்களில் காளைகளால் தாக்கப்பட்ட தேர்வீரர்களில் காளைகளான பலர் தங்கள் கணைகளுடன் தரையில் விழுந்தனர்.
யானைகளின் தந்தங்களாலும், பிற அங்கங்களாலும் தாக்கப்பட்டோ, படையணிகளின் நெருக்கத்தில் விரையும் அந்தப் பெரும் உயிரினங்களின் {யானைகளின்} வேகத்தால் நசுக்கப்பட்டோ ஓலமிடும் குதிரைவீரர்கள் மற்றும் காலாட்படை வீரர்களின் ஓலங்களைக் கேட்டே கூட அந்தப் போர்க்களத்தில் பல மனிதர்கள் விழுந்தனர். குதிரைப்படை மற்றும் காலாட்படைவீரர்கள் வீழ்ந்து, யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியன அச்சத்தால் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்த போது, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் சூழ இருந்த பீஷ்மர், குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனைக் {அர்ஜுனனைக்} கண்டார்.
ஐந்து {5} பனைமரங்களுடன் கூடிய கொடிமரத்தைக் கொண்டவரும், பனைமரக் கொடி வீரருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, வேகமான, அற்புத சக்தி கொண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், தன் பலமிக்க ஆயுதங்களின் சக்தியால் மின்னலைப் போல ஒளிர்வதுமான தேரில் இருந்த அந்தக் கிரீடம் தரித்தவனை {கிரீடியை [அ] அர்ஜுனனை} எதிர்த்து விரைந்து சென்றார்.
இந்திரனைப் போன்றே இருந்த அந்த இந்திரனின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர், கிருபர், சல்லியன், விவிம்சதி, துரியோதனன் மற்றும் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} ஆகியோர் தலைமையிலான (பிற) வீரர்களும் விரைந்தனர். ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனும், அழகிய தங்கக் கவசம் தரித்தவனும், அர்ஜுனனின் மகனுமான வீர அபிமன்யு, படையணிகளில் இருந்து விரைந்து வெளிப்பட்டு, {அர்ஜுனனை எதிர்த்து வந்த} அவ்வீரர்களை எதிர்த்து விரைந்து முன்னேறினான். தாங்கிக் கொள்ள முடியாத காரியங்களைச் செய்பவனான அந்தக் *கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு}, பெரும் பலமிக்க அவ்வீரர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் கலங்கடித்து, வேள்விப்பீடத்தில் இருப்பவனும், மந்திரங்களால் எழுப்பப்படுபவனும், சுடர்விடும் தழல்களைக் கொண்டவனுமான புகழத்தக்க அக்னியைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
எதிரிகளின் இரத்தத்தை நீராகக் கொண்டு பாயும் ஆறை அந்தப் போரில் உண்டாக்கிய வலிய சக்தி கொண்ட பீஷ்மர், அப்போது, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} விரைவாகத் தவிர்த்துவிட்டு, வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனிடமே {அர்ஜுனனிடமே} நேரடியாக மோதினார். கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அற்புத வடிவத்தையும், இடிமுழக்கம் போன்ற உரத்த நாணொலியையும் கொண்ட தனது காண்டீவத்தைக் கொண்டு கணைமாரியைப் பொழிந்து {பீஷ்மரால் ஏவப்பட்ட} அந்த வலிய ஆயுதமழையைக் கலங்கடித்தான்.
குரங்குகளின் இளவரசனை {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனும், தாங்கிக் கொள்ள இயலா காரியங்களைச் செய்பவனுமான அந்த உயர் ஆன்ம வீரன் {அர்ஜுனன்}, வில்லைத்தாங்கும் அனைவரிலும் சிறந்தவரான பீஷ்மர் மீது கூரிய முனை கொண்ட கணைகள் மற்றும் பளபளப்பான நாராசங்களைப் பதிலுக்குப் பொழிந்தான். குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்டதும், இரவின் இருளைப் போக்கி பகலை உண்டாக்குபவனைப் {சூரியனைப்} போன்ற பீஷ்மரால் எதிர்க்கப்பட்டதும், விடுக்கப்பட்டதுமான வலிமைமிக்க ஆயுத மழையை உமது துருப்புகள் கண்டன. உறுதியாக நடைபெற்றதும், பீஷ்மர் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரின் விற்களுடைய பயங்கர நாணொலிகளால் {அவற்றின் தனித்தன்மையால்} வேறுபட்டுத் தெரிந்ததும், மனிதர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்டதுமான அந்தத் தனிப்போரை குருக்கள், சிருஞ்சயர்கள் மற்றும் அங்கே இருந்த அனைவரும் கண்டனர்" {என்றான் சஞ்சயன்}.
_________________________________________________________________________________
கிருஷ்ணாவின்* மகன் {அபிமன்யு},
குறிப்பு:அர்ஜுனனின் பத்து பெயர்களில் கிருஷ்ணன் என்ற பெயரும் உண்டு.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைச் சொடுக்கவும்:
http://mahabharatham.arasan.info/2010/03/Arjuna.html
http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section44.html
அர்ஜுனன் {Arjuna}
_________________________________________________________________________________
கிருஷ்ணாவின்* மகன் {அபிமன்யு},
குறிப்பு:அர்ஜுனனின் பத்து பெயர்களில் கிருஷ்ணன் என்ற பெயரும் உண்டு.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைச் சொடுக்கவும்:
http://mahabharatham.arasan.info/2010/03/Arjuna.html
http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section44.html
அர்ஜுனன் {Arjuna}
தாய்: குந்தி-Kunti {பிருதை-Pritha}
தந்தை: பாண்டு / {தேவர்களின் தலைவன் இந்திரனின் உயிர்வித்து}
அர்ஜுனனின் பத்து பெயர்கள்:
அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்சு, விஜயன், கிருஷ்ணன் [1], சவ்யசச்சின், தனஞ்சயன் என்பவையே அவை” என்றான்.
- Seemore at:
அர்ஜுனன் {உத்தரனிடம்},
“செல்வத்தின் மத்தியில் நான் வாழ்ந்ததாலும், அனைத்து நாடுகளையும் அடக்கி, அவர்களது செல்வங்களைக் கொள்ளை கொண்டதாலும், என்னைத் தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.
ஒப்பற்ற மன்னர்களுடன் போர்புரியச் சென்று, அவர்களை வீழ்த்தாமல் (களத்தைவிட்டு) நான் திரும்பியதில்லை என்பதால், என்னை விஜயன் என்று அழைக்கிறார்கள்.
எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், என்னை ஸ்வேதவாஹனன் என்று அழைக்கிறார்கள்.
அடிவானில் உத்திர நட்சத்திரக்கூட்டம் {உத்தரப் பல்குனி} தோன்றிய நாளில் {உத்திரம் நட்சத்திரம் கொண்ட நாளில்} இமயத்தின் மார்பில் நான் பிறந்ததால், என்னைப் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.
முன்னர், வலிமைமிக்கத் தானவர்களுடன் நான் மோதும்போது, சூரியப்பிரகாசம் கொண்ட ஒரு மணிமுடியை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், நான் கிரீடி என்று பெயர் பெற்றேன்.
போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் பீபத்சு என்று நான் அறியப்படுகிறேன்.
காண்டீவத்தை எனது இருகரங்களாலும் இழுக்கவல்லவனாக நான் இருப்பதால், சவ்யசச்சின் {சவ்யசாசி} என்று தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் நான் அறியப்படுகிறேன்.
பூமியின் நான்கு எல்லைகளுக்குள் எனது நிறம் மிக அரிதானதாலும், எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.
அணுகமுடியாதவனாகவும், அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், பகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகனாகவும் இருப்பதால் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில், நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.
எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் [2] என்பது, கரிய தோலும் {நிறமும்} பெரும் தூய்மையும் கொண்ட சிறுவனான என் மீது பாசம் கொண்ட எனது தந்தையால் {பாண்டுவால்} எனக்கு வழங்கப்பட்டதாகும்.
அர்ஜுனனின் பத்து பெயர்கள்:
- Seemore at:
ஆங்கிலத்தில் | In English |