'Is Krishna a human?" Bhishma! | Bhishma-Parva-Section-066 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 24)
பதிவின் சுருக்கம் : பிரம்மனின் கோரிக்கையை ஏற்ற விஷ்ணு; வந்தது யார் என்று பிரம்மனிடம் தேவர்கள் கேள்வி; கிருஷ்ணனின் பெருமைகளைச் சொல்லும் பிரம்மன்; கிருஷ்ணனின் பெருமைகளைத் துரியோதனனுக்குச் சொல்லும் பீஷ்மர்...
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அப்போது, உலகங்களின் தலைவனான அந்த ஒப்பற்ற தேவன் {நாராயணன்} மென்மையான மற்றும் ஆழமான குரலில், "யோகத்தின் மூலம், ஓ! ஐயா {பிரம்மனே}, உன்னால் விரும்பப்படும் அனைத்தும் என்னால் அறியப்பட்டது. நீ விரும்பியது போலவே நடக்கும்" என்று சொல்லி அங்கேயே மறைந்து போனான்.
பிறகு, பெரும் வியப்பால் நிறைந்த தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரும் பிரம்மனிடம் ஆவலுடன், "ஓ! தலைவா {பிரம்மரே}, ஒப்பற்றவரான உம்மால் பணிவுடன் வணங்கப்பட்டவனும், இத்தகு உயர்ந்த வார்த்தைகளால் புகழப்பட்டவனுமான அவன் யார்? நாங்கள் அதைக் கேட்க விரும்புகிறோம்" என்றனர். இப்படிச் சொல்லப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} தேவர்கள், மறுபிறப்பாள முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளால் மறுமொழியாக, "தத் என்று அழைக்கப்படுபவன் எவனோ, உயர்ந்தவன் எவனோ, இப்போதும், எப்போதும் இருப்பவன் எவனோ, பரமாத்மா எவனோ, உயிரினங்களின் ஆன்மா எவனோ, பெருந்தலைவன் எவனோ, தேவர்களில் காளைகளே, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனான அவனிடமே நான் பேசிக் கொண்டிருந்தேன். அண்டத்தின் நன்மைக்காக, மனித குலத்தின் மத்தியில், வசுதேவன் குடும்பத்தில் பிறப்பெடுக்கும்படி, அந்த அண்டத்தின் தலைவன் {நாராயணன்} என்னால் வேண்டப்பட்டான்.
நான் அவனிடம் {பிரம்மனாகிய நான் நாராயணனிடம்}, "அசுரர்களின் படுகொலைக்காக மனிதர்களின் உலகில் உன் பிறப்பை எடுப்பாயாக" என்றேன். போரில் கொல்லப்பட்டவர்களும், கொடுமையான வடிவமும், பெரும் பலமும் கொண்டவர்களுமான அந்தத் தைத்தியர்களும், ராட்சசர்களும் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்திருக்கிறார்கள். உண்மையில், ஒப்பற்றவனும், வலிமைமிக்கவனுமான தலைவன் {நாராயணன்}, மனிதக் கருவறையில் பிறந்து, நரனின் துணையுடன் பூமியில் வாழ்வான். தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிப் போரிட்டாலும் கூட, புராதனமானவர்களும், முனிவர்களில் சிறந்தவர்களுமான அந்த நரனையும், நாராயணனையும் வீழ்த்த இயலாது.
அளவிலா பிரகாசம் கொண்ட முனிவர்களான அந்த நரனும், நாராயணனும் மனிதர்களின் உலகில் ஒன்றாகப் பிறப்பெடுக்கும்போது மூடர்கள் அவர்களை அறியமாட்டார்கள். எவனுடைய ஆன்மாவில் இருந்து, முழு அண்டத்தின் தலைவனும், பிரம்மனுமான நான் உதித்தேனோ, உலகங்கள் அனைத்தின் தலைமை தெய்வமான அந்த வாசுதேவன், உங்கள் துதிகளுக்குத் தகுந்தவனாவான். தேவர்களில் சிறந்தவர்களே, பெரும் சக்தி கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவனுமான அவன், வெறும் மனிதன் என்று எப்போதும் அலட்சியப்படுத்தப்படக் கூடாது.
தலைமையான புதிர் {பரமரகசியம்} அவனே, தலைமையான புகலிடம் அவனே, தலைமையான பிரம்மம் அவனே, தலைமையான மகிமை அவனே. சிதைவில்லாதவன், தோற்றமில்லாதவன், நித்தியமானவனும் அவனே. யாராலும் புரிந்துகொள்ளப்பட முடியாத அவனே, புருஷன் என்றும் பாடப்படுகிறான். தலைமையான சக்தி என்றும், தலைமையான மகிழ்நிலை என்றும் தேவ தச்சன் {விஸ்வகர்மா} அவனைப் பாடியிருக்கிறான்.
எனவே, இந்திரனைத் தங்கள் தலைமையாகக் கொண்ட தேவர்களோ, அசுரர்கள் அனைவருமோ, அளவிலா ஆற்றல் படைத்த தலைவன் வாசுதேவனை, அவன் ஒரு மனிதன்தானே என ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. வெறும் மனிதன்தானே ரிஷிகேசன் என்று பேசி அலட்சியம் செய்யும் மூட அறிவு கொண்டவன் இழிந்தவன் என்று அழைக்கப்படுவான்.
அந்தத் தெய்வீகமானவனை, படைக்கப்பட்டவையான அசைவன மற்றும் அசையாதனவற்றின் ஆன்மாவானவனை, (தன் மார்பில்) மங்கலகரமான சக்கரத்தைத் {ஸ்ரீவத்சம் என்ற மறுவைத்} தாங்கியிருப்பவனை, திகைப்பூட்டும் பிரகாசம் கொண்டவனை, தன் நாபியில் (பழங்காலத்} தாமரை உதித்தவனைக் குறித்து அறியாத ஒருவன் மக்களால் இருளில் மூழ்கியவன் {தமோ குணம் கொண்டவன்} என்று சொல்லப்படுகிறான். கிரீடத்தையும், கௌஸ்துப ரத்தினத்தையும் தரித்தவனும், தன் நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான அவனை அவமதிப்பவன் அடர்த்தியான இருளில் {கோரமான அந்தகாரத்தில்} மூழ்குகிறான். தேவர்களில் சிறந்தவர்களே, இந்த உண்மைகள் அனைத்தையும் முறையாக அறிந்த அனைவராலும், உலகங்களின் தலைவனான அந்த வாசுதேவன் துதிக்கப்பட வேண்டும்" என்றான் {பிரம்மன்}.
பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "பழங்காலத்தில், தேவர்களிடமும், முனிவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்ன ஒப்பற்ற பெரும்பாட்டன் {பிரம்மன்}, அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பித் தன் வசிப்பிடம் திரும்பினார். பிரம்மனால் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், அப்சரசுகள் ஆகியோர் மகிழ்ச்சியால் நிறைந்து சொர்க்கத்திற்குத் திரும்பினார்கள்.
ஓ! ஐயா {துரியோதனா}, பண்பட்ட ஆன்மா கொண்ட, முனிவர்களின் சபையில் பழமையானவனான வாசுதேவனைக் குறித்த இவை என்னால் கேட்கப்பட்டன. மேலும், ஓ! சாத்திரங்களை நன்கறிந்தவனே {துரியோதனா}, ஜமதக்னியின் மகனான ராமன் {பரசுராமர்}, பெரும் அறிவு கொண்ட மார்க்கண்டேயர், வியாசர் மற்றும் நாரதர் ஆகியோரிடம் இருந்தும் நான் இதைக் கேட்டிருக்கிறேன்.
இவை யாவற்றையும் அறிந்தும், ஒப்பற்ற வாசுதேவனே நித்தியமான தலைவன் என்றும், உலகங்கள் அனைத்தின் தலைமையான தெய்வம் என்றும், பெரும் உரிமையாளன் என்றும், எவனில் இருந்து பிரம்மன் உதித்தானோ அவனே என்றும், அண்டத்தின் தகப்பன் என்றும் கேட்டும், மனிதர்களால் வாசுதேவன் ஏன் துதிக்கப்படவும், வழிபடப்படவும் கூடாது? ஓ! ஐயா {துரியோதனா}, "வில்தரித்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பாண்டவர்களிடமும் ஒருபோதும் போருக்குச் செல்லாதே" என்று பண்பட்ட ஆன்மாக்களை உடைய முனிவர்களால் முன்பே தடுக்கப்பட்டும், மடமையினால் அஃது உன்னால் புரிந்து கொள்ளப்படவில்லை.
எனவே, நான் உன்னைக் கொடிய ராட்சசன் என்றே கருதுகிறேன். இதுதவிரவும், இருளில் {தமோ குணத்தில்} நீ மூழ்கியிருக்கிறாய். இதனால் தான் நீ கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வெறுக்கிறாய். மனிதர்களின் மத்தியில் வேறு யார்தான் தெய்வீகமான நரனையும், நாராயணனையும் வெறுப்பார்கள்? இதனால் தான், ஓ! மன்னா {துரியோதனா}, அவன் {கிருஷ்ணன்} நித்தியமானவன் என்றும், மங்காதவன் என்றும், அண்டம் முழுவதும் படர்ந்தூடுருவி இருப்பவன் என்றும், மாற்றமில்லாதவன் என்றும், ஆட்சியாளன் என்றும், அனைத்தையும் படைத்துத் தாங்குபவன் {காப்பவன்} என்றும், உண்மையான இருப்பு என்றும் நான் உனக்குச் சொல்கிறேன்.
மூன்று உலகங்களையும் தாங்குபவன் அவனே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களின் தலைமைத் தேவன் அவனே, பெரும் உரிமையாளன் அவனே, போராளி அவனே, வெற்றி அவனே, வெல்பவனும் அவனே, மேலும் இயற்கை அனைத்தின் தலைவனும் அவனே. ஓ! மன்னா {துரியோதனா}, நற்குணம் {சத்வ குணம்} நிறைந்தவனும், மேலும், இருள் {தமோ} மற்றும் பேராசையின் {ராஜச} குணங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டவனும் அவனே.
கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ அங்கே அறம் {தர்மம்} இருக்கும்; அறம் எங்கிருக்குமோ அங்கே வெற்றியிருக்கும். அவனது {கிருஷ்ணனுடைய} யோக மகிமையாலும், அவனது ஆன்ம யோகத்தாலுமே, ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள் ஆதரிக்கப்படுகின்றனர். எனவே, வெற்றி என்பது, நிச்சயம் அவர்களுடையதே. நீதியுடன் கூடிய அறிவையும், போரில் பலத்தையும் பாண்டவர்களுக்கு எப்போதும் அளிப்பவன் அவனே {கிருஷ்ணனே}; மேலும், ஆபத்துகளில் இருந்து எப்போதும் அவர்களைப் பாதுகாப்பவனும் அவனே {கிருஷ்ணனே}.
அனைத்துயிர்களில் ஊடுருவியிருப்பவனும், அருளுடன் எப்போதும் இருப்பவனுமான அவனே நித்திய தேவனாவான். நீ எவனைக் குறித்துக் கேட்டாயோ, அவன், வாசுதேவன் {கிருஷ்ணன்} என்ற பெயரால் அறியப்படுகிறான். தங்களுக்கெனத் தனித்துவமான பண்புகளைக் கொண்ட பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், தங்கள் தனிப்பட்ட கடமைகளை ஆற்றி, ஒடுங்கிய இதயங்களுடனும் பணிவுடனும் அவனையே சேவித்து வழிபடுகிறார்கள். துவாபர யுக முடிவின் நெருக்கத்திலும், கலி யுகத் தொடக்கத்திலும் அர்ப்பணிப்புள்ள பக்தர்களால் சங்கர்ஷணனுடன் {பலராமனுடன்} சேர்த்துப் பாடப்படுபவன் அவனே. யுகத்துக்குப் பின் யுகத்தையும், தேவர்கள் மற்றும் மனிதர்களின் உலகங்களையும், கடலால் சூழப்பட்ட நகரங்கள் மற்றும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தையும் படைத்தவன் வாசுதேவனே {கிருஷ்ணனே}" {என்றார் பீஷ்மர்}.
இந்தப் பகுதி விஸ்வோபாக்யானம் என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் | In English |