Sixth day war with Makara and Krauncha vyuha ! | Bhishma-Parva-Section-075 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 33)
பதிவின் சுருக்கம் : படைகள் இரண்டிலும் எழுந்த பேராரவாரம்; பாண்டவர்கள் மகர வியூகம் அமைத்தது; கௌரவர்கள் கிரௌஞ்ச வியூகம் அமைத்தது; இருதரப்பிலும் ஒவ்வொரும் ஏற்ற நிலைகள்; ஆறாம் நாள் போர் தொடங்கியது; துரோணரின் தேரோட்டியைக் கொன்ற பீமசேனன்; பீஷ்மராலும், துரோணராலும் பாண்டவர்களுக்கு ஏற்பட்ட அழிவு; பீமனாலும், அர்ஜுனனாலும் கௌரவர்களுக்கு ஏற்பட்ட அழிவு...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சிறிது ஓய்வுக்குப் பிறகு அந்த இரவு கடந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்கள், பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பும் மீண்டும் போருக்குப் புறப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் யானைகளையும், குதிரைகளையும் மோதலுக்குத் தயார்ப்படுத்தும்போதும், காலாட்படை வீரர்கள் தங்கள் கவசங்களைத் தரிக்கும்போதும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போருக்குத் தயாரான வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் பேராரவாரம் எழுந்தது. களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சங்குகள் மற்றும் துந்துபிகளின் முழக்கங்கள் {அங்கிருந்தவர்களைச்} செவிடாக்குவதாக இருந்தன.
அப்போது, மன்னன் யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னனிடம், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, எதிரியைச் சுடுவதும், மகரம் என்று அழைக்கப்படுவதுமான வியூகத்தில் துருப்புகளை அணிவகுப்பாயாக" என்றான். பிருதையின் மகனால் {குந்தியின் மகன் யுதிஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், தேர்ப்போராளிகளில் முதன்மையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (மகர வியூகத்தில் அணிவகுக்கும்படி) தேர்வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.
துருபதனும், பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அந்த அணிவகுப்பின் தலையில் அமைந்தார்கள். சகாதேவனும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும் அதன் கண்களாக அமைந்தார்கள். வலிமைமிக்கவனான பீமசேனன் அதன் வாயாக {முகமாக} அமைந்தான். சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர் அதன் கழுத்தில் நின்றனர். பெரும்படைப்பிரிவின் தலைவனான மன்னன் விராடன், திருஷ்டத்யும்னனாலும், ஒரு பெரும் படையினாலும் ஆதரிக்கப்பட்டு அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறமாக அமைந்தான்.
கேகயச் சகோதரர்கள் ஐவரும் அதன் இடது விலாவானார்கள். மனிதர்களில் புலியான திருஷ்டகேது, பெரும் ஆற்றலைக் கொண்ட சேகிதானன் ஆகியோர் வலது விலாவில் அந்த அணிவகுப்பைப் பாதுகாக்க நின்றார்கள். அதன் இரண்டு பாதங்களில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், அருளப்பட்டவனுமான குந்திபோஜனும், சதானீகனும் ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டு நின்றார்கள். சோமகர்களால் சூழப்பட்ட பெரும் வில்லாளியான வலிமைமிக்கச் சிகண்டியும், இராவத்தும் {இராவானும் [அ] அரவானும்} அந்த மகர வியூகத்தின் வால் பகுதியில் நின்றார்கள்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் பெரும் அணிவகுப்பை அமைத்துக் கொண்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவசம் தரித்தப்படி அதிகாலையிலேயே மீண்டும் போருக்காக நின்றார்கள். யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படையுடனும், உயர்த்திப் பிடிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், குடைகள் ஆகியவற்றுடனும், கூர் தீட்டப்படு பிரகாசமாக இருந்த ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு கௌரவர்களை எதிர்த்து விரைவாகச் சென்றனர்.
பிறகு உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, இப்படி அணிவகுப்பட்ட (பாண்டவப்) படையைக் கண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் நாரையின் வடிவத்திலான {கிரௌஞ்ச வியூகத்தை} [1] எதிரணியாக வகுத்தார். அதன் அலகாகப் பரத்வாஜரின் மகன் (துரோணர்) இருந்தார். அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதன் கண்களாயிருந்தனர். வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான கிருதரவர்மன், அங்கே நின்ற காம்போஜர்களின் ஆட்சியாளனோடும் {சுதக்ஷிணனோடும்}, பாஹ்லீகர்களோடும் அதன் தலையாக அமைந்தான். அதன் கழுத்தாக, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூரசேனன் மற்றும் உமது மகன் துரியோதனன் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல மன்னர்களால் சூழப்பட்டபடி நின்றார்கள்.
[1] வில்லிபாரதம் இவ்வியூகத்தைக் கரிஞ்ச வியூகம் என்கிறது.
பெருஞ் சனம்தன்னை, அப் பீடுடை வீடுமன்,
கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான். {வில்லி பாரதம் 3:ஆ.போ.சு.5
மத்ரர்கள், சௌவீரர்கள், கேகயர்கள் ஆகியோரோடு ஒன்றிணைந்த பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, ஒரு பெரும்படையால் சூழப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் மார்பில் நின்றான். கவசம் தரித்துக் கொண்டு, தன் தனிப்பட்ட துருப்புகளின் துணையோடு இருந்த பிரஸ்தலையின் மன்னன் சுசர்மன் இடது சிறகில் நின்றான். துஷாரர்கள், யவனர்கள், சகர்கள் ஆகியோர் சூளிகர்களுடன் {சூசுபர்களுடன்} சேர்ந்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த அணிவகுப்பின் வலது சிறகில் நின்றார்கள். சுருதாயுஷ், சதாயுஷ் {சதாயிஷ்}, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} அந்த அணிவகுப்பின் பின்பகுதியில் ஒருவரை ஒருவர் பாதுகாத்தபடி நின்றனர் [2].
[2] பெரும் விற்களையுடையவர்களும், காலாட்படையினருடன் கூடியவர்களுமான அவந்தி மன்னர்கள் இருவரும் அந்தக் கிரௌஞ்ச வியூகத்தின் பின்புறத்தில் நின்றார்கள் என்றும், சுருதாயுஷ், சதாயுஷ், பூரிஸ்ரவஸ் ஆகியோர் அதன் இடைப்பக்கத்தில் நின்றதாகவும் வேறு பதிப்பில் காணப்படுகிறது. கலிங்க மன்னனான சுருதாயுஷ் என்பவன் பீமனால் கொல்லப்பட்டதாக பீஷ்ம பர்வம் பகுதி 54ஆவில் குறிப்பிருக்கிறது. இங்கு குறிப்பிடப்படும் சுருதாயுஷ் வேறு ஒருவனாக இருக்க வேண்டும்.
பிறகு அந்தப் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போருக்காகக் கௌரவர்களை எதிர்த்து விரைந்தார்கள். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, போர் தொடங்கிய போது சூரியன் எழுந்திருந்தான் {உதயமாகியிருந்தது}. யானைகள், யானைகளை எதிர்த்து விரைந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைவீரர்கள், குதிரைவீரர்களை எதிர்த்தும், தேர்வீரர்கள், தேர்வீரர்களையும், யானைகளையும் அச்சந்தரும் அந்தப் போரில் எதிர்த்தனர். தேர்வீரர்கள் யானைப் பாகன்களை எதிர்த்தும், யானைப் பாகன்கள் குதிரைவீரர்களை எதிர்த்தும் விரைந்தனர். தேர்வீரர்கள், காலாட்படை வீரர்களோடும், காலாட்படை குதிரைப்படையோடும் மோதின. கோபத்தால் தூண்டப்பட்ட வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட விரைந்தனர்.
பீமசேனன், அர்ஜுனன், இரட்டையர்கள் {சகாதேவன் மற்றும் நகுலன்} ஆகியோரால் பாதுகாகப்பட்ட அந்தப் பாண்டவப்படை, விண்மீன்களால் {நட்சத்திரங்களால்} அலங்கரிக்கப்பட்ட இரவைப் போல அழகானதாக இருந்தது. பீஷ்மர், கிருபர், துரோணர், சல்லியன், துரியோதனன் மற்றும் பிறருடன் கூடிய உமது படையும் {கௌரவப்படை}, கோள்களால் {கிரகங்களால்} நிறம்பெற்ற ஆகாயவிரிவைப் போல ஒளிர்ந்தது.
பெரும் ஆற்றலைக் கொண்டவனான குந்தியின் மகன் பீமசேனன், துரோணரைக் கண்டு, பெரும் வேகம் கொண்ட குதிரைகளால் சுமக்கப்பட்ட பரத்வாஜரின் மகனுடைய {துரோணரின்} படைப்பிரிவை எதிர்த்து விரைந்தான். அந்த மோதலில் கோபம் தூண்டப்பட்டவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான துரோணர், பீமனின் முக்கிய உறுப்புகளைக் குறி வைத்து, முழுக்க முழுக்க இரும்பாலான ஒன்பது {9} கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைத்தார். அந்தப் போரில் பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} ஆழமாகத் துளைக்கப்பட்ட பீமன், துரோணரின் தேரோட்டியை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அதன்பேரில் பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தானே குதிரைகளைக் கட்டுப்படுத்தியபடி, பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல அந்தப் பாண்டவப்படையை எரிக்க ஆரம்பித்தார்.
இப்படித் துரோணராலும், பீஷ்மராலும் கொல்லப்பட்டவர்களான சிருஞ்சயர்கள், கேகயர்களுடன் சேர்ந்து சிதறி ஓடினார்கள். அதேபோல, பீமனாலும், அர்ஜுனனாலும் சிதைக்கப்பட்ட உமது துருப்புகளும், செருக்குடன் நிற்கும் அழகிய பெண் போல, உணர்விழந்து நின்றார்கள். வீரர்களுக்கு அழிவை உண்டாக்கும் அந்த மோதலில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் அவர்களது படை ஆகிய இரண்டுக்கும் ஏற்பட்ட வேதனை பெரிதாக இருந்தது. தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து, ஓ!பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் போரிடும் துருப்புகளின் அற்புதக் காட்சியை நாங்கள் கண்டோம். அம்மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், கௌரவர்களும், ஒருவரின் ஆயுதங்களுக்கு மற்றவர் பதிலடி கொடுத்தபடி ஒருவரோடொருவர் போரிட்டனர்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |