Abhimanyu let Duryodhana's brothers not to be killed! | Bhishma-Parva-Section-085 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 43)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கும் சுருதாயுஷுக்கும் இடையில் நடைபெற்ற போர்; யுதிஷ்டிரனின் கோபத்தைக் கண்டு உலகமே நடுங்கியது; புறமுதுகிட்ட சுருதாயுஷ்; சேகிதானனுக்கும், கிருபருக்கும் இடையில் நடைபெற்ற போர்; இருவரும் மயங்கி விழுந்தது; திருஷ்டகேதுவுக்கும் பூரிஸ்ரவசுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தேர் இழந்த திருஷ்டகேது சதானீகனின் தேரில் ஏறியது; துரியோதனன் தம்பிகள் மூவருக்கும், அபிமன்யுவுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தேர்களை இழந்த துரியோதனன் தம்பிகளைக் கொல்லாமல் விட்ட அபிமன்யு; சுசர்மனிடம் பேசிய அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சூரியன் நடுக்கோட்டை {நடுப்பகலை) அடைந்ததும், சுருதாயுஷைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், தனது குதிரைகளைத் துரிதப்படுத்தினான். எதிரிகளைத் தண்டிக்கும் சுருதாயுஷை நோக்கி விரைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, கூர்முனை கொண்ட ஒன்பது கணைகளால் அவனை {சுருதாயுஷை} தாக்கினான். பெரும் வில்லாளியான மன்னன் சுருதாயுஷ், அப்போரில் யுதிஷ்டிரனால் ஏவப்பட்ட கணைகளைத் தடுத்து, ஏழு கணைகளால் அந்தப் பாண்டு மைந்தனைத் {யுதிஷ்டிரனைத்} தாக்கினான். அப்போரில் அவனது {யுதிஷ்டிரனின்} கவசத்தை ஊடுருவிய அவை {ஏழு கணைகள்}, மிக முக்கியச் சக்திகளை உறிஞ்சிக் குடிப்பதைப் போல [1]., உயர் ஆன்மா கொண்ட அவனது {மகாத்மாவான யுதிஷ்டிரனின்} குருதியைக் குடித்தன.
[1] மூலத்தில் Vichnvantas என்று இருக்கிறது. இதன் பொருள் "மலர்களைப் பறிப்பதைப் போல" என்பதாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மன்னன் சுருதாயுஷால் ஆழமாகத் துளைக்கப்பட்டிருந்தாலும், (பதிலுக்கு) வராஹகர்ணத்தால் {பன்றியின் காது போன்ற ஒரு கணையால்} அந்த உயர் ஆன்ம மன்னின் {சுருதாயுஷின்} இதயத்தைத் துளைத்தான். தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, மேலும் ஒரு பல்லத்தால், உயர் ஆன்ம சுருதாயுஷின் கொடிமரத்தை, அவனது தேரில் இருந்து விரைவாகப் பூமியில் வீழ்த்தினான். தன் கொடிமரம் வீழ்த்தப்பட்டதைக் கண்ட மன்னன் சுருதாயுஷ், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} ஏழு கூரிய கணைகளால் துளைத்தான்.
அப்போது, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், உயிரினங்களை எரிப்பதற்காக யுகத்தின் முடிவில் சுடர்விட்டெரியும் நெருப்பைப் போலக் கோபத்தில் சுடர்விட்டெரிந்தான். கோபத்தால் தூண்டப்பட்ட பாண்டு மகனைக் {யுதிஷ்டிரனைக்} கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோர் நடுங்கினர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த அண்டமும் கலங்கத் தொடங்கியது. "கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இன்றே மூவுலகங்களையும் எரிக்கப்போகிறான்" என்பதே உயிர்கள் அனைத்தின் மனதிலும் எழுந்த சிந்தனையாக இருந்தது. உண்மையில், பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கோபத்தால் இப்படித் தூண்டப்பட்ட போது, உலக அமைதிக்காக முனிவர்களும், தேவர்களும் வேண்டிக்கொண்டனர்.
கோபத்தால் நிறைந்து, கடைவாயை அடிக்கடி நாவால் நனைத்த {நக்கிய} யுதிஷ்டிரன், யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போலப் பயங்கரமாகத் தோன்றினான். அப்போது, ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது வீரர்கள் அனைவரும் தங்கள் வாழ்வைக் குறித்த நம்பிக்கையை இழந்தனர். எனினும், பொறுமையால் கோபத்தைத் தணித்த புகழ் பெற்ற அந்தப் பெரும் வில்லாளி {யுதிஷ்டிரன்}, சுருதாயுஷின் வில்லை அதன் கைப்பிடியில் வெட்டினான். பிறகு அப்போரில், அனைத்துத் துருப்புகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, வில்லறுபட்ட சுருதாயுஷை, நாராசம் {நெடுங்கணை} ஒன்றினால் நடுமார்பில் துளைத்தான்.
பிறகு, அந்த வலிமைமிக்க யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது கணைகளால் சுருதாயுஷின் குதிரைகளை விரைவாகக் கொன்று, மேலும் ஒருக்கணமும் தாமதிக்காமல் அவனது தேரோட்டியையும் கொன்றான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆற்றலைக் கண்ட சுருதாயுஷ், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரை விட்டு விட்டு, போரில் இருந்து விரைவாக ஓடினான் [2]. தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அந்தப் பெரும் வில்லாளி {சுருதாயுஷ்}, வீழ்த்தப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் துருப்புகள் அனைத்தும் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டன {புறமுதுகிட்டு ஓடின}. இந்தச் சாதனையை அடைந்த தர்மனின் மகன் யுதிஷ்டிரன், வாயை அகல விரித்திருக்கும் காலனைப் போல உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.
[2] கலிங்க மன்னன் சுருதாயுஷ் பீமனால் கொல்லப்பட்டதாக பகுதி 54ஆவில் கண்டோம். இது வேறு ஒருவனாக இருக்க வேண்டும்.
பிறகு, விருஷ்ணி குலத்தின் சேகிதானன், துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தேர்வீரர்களின் முதன்மையான கௌதமரைத் {கிருபரைத்} தன் கணைகளால் மறைத்தான். அந்தப் போரில், அந்தக் கணைகளையெல்லாம் கலங்கடித்த சரத்வானின் மகனான கிருபர், பதிலுக்குப் பெரும்கவனத்துடன் தன் கணைகளால் சேகிதானனைத் துளைத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் ஒரு பல்லத்தைக் கொண்டு சேகிதானனின் வில்லை அறுத்த அந்தப் பெருங்கரவேகம் கொண்டவர் {கிருபர்}, மற்றுமொரு பல்லத்தினால் முன்னவனின் {சேகிதானனின்} தேரோட்டியையும் வீழ்த்தினார். பிறகு அந்தக் கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சேகிதானனின் குதிரைகளையும், பின்னவனின் {சேகிதானனின்} சிறகுகளைப் {பக்கங்களைப்} பாதுகாத்த இரண்டு வீரர்களையும் கொன்றார்.
பிறகு அந்தச் சத்வத குலத்தின் சேகிதானன், தனது தேரில் இருந்து விரைவாகக் குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். கதாயுதம் தாங்குவோர் எவரிலும் முதன்மையான சேகிதானன், வீரர்களைக் கொல்லும் அந்தக் கதாயுதத்தால், கௌதமரின் {கிருபரின்} குதிரைகளைக் கொன்று, பிறகு அவரது தேரோட்டியையும் கொன்றான். அப்போது, அந்தக் கௌதமர் {கிருபர்}, தரையில் நின்றபடியே சேகிதானன் மேல் பதினாறு {16} கணைகளை ஏவினார். சத்வத குலத்தின் அந்த வீரனை {சேகிதானனைத்} துளைத்துச் சென்ற அந்தக் கணைகள், பூமியில் நுழைந்தன.
அதன்பேரில் சினம் தூண்டப்பட்ட சேகிதானன், விருத்திரனைக் கொல்ல விரும்பிய புரந்தரனை {இந்திரனைப்} போல, மீண்டும் ஒரு முறை தன் கதாயுதத்தை வீசினான். கௌதமர் {கிருபர்}, தன்னை நோக்கி வரும் அந்தத் கதாயுதத்தைக் கடினமான பலம் கொண்ட பல்லாயிரக்கணக்கான கணைகளால் தடுத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உறையில் இருந்து தன் வாளை உருவிய சேகிதானன், கௌதமரை {கிருபரை} நோக்கி விரைந்தோடினான்.
அதன் பேரில், கௌதமரும் {கிருபரும்}, தன் வில்லைத் தூக்கியெறிந்துவிட்டு, பளபளக்கும் ஒரு வாளை எடுத்துக் கொண்டு, சேகிதானனை நோக்கி பெரும் வேகத்துடன் விரைந்தார். அற்புதமான வாள்களுடன் இருந்தவர்களும், பெரும் பலம் கொண்டவர்களுமான அந்த இருவரும், கூர்முனை கொண்ட தங்கள் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மனிதர்களில் காளையரான அவர்கள் தங்கள் கத்திகளால் ஒருவரை ஒருவர் சக்தியுடன் தாக்கிக் கொண்டதால், உயிரினங்களின் பூதமான (உயிரினங்கள் பொதுப் பூதமான) பூமியில் விழுந்தனர்.
தாங்கள் கொண்ட முயற்சியினால் களைப்படைந்த அந்த இருவரும் மூர்ச்சையடைந்து அங்கங்கள் அசைவற்றுக் கிடைந்தனர். அப்போது, நட்பால் உந்தப்பட்ட காரகார்ஷன் {பீமன்} [3] அந்த இடத்திற்கு வேகமாக விரைந்தான். வெல்லப்பட முடியாத அந்த வீரன் {பீமன்}, அந்த அவல நிலையில் கிடந்த சேகிதானனைக் கண்டு, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனை {சேகிதானனைத்} தன் தேரில் ஏற்றினான். அதே போல, உமது மைத்துனனான துணிச்சல்மிகு சகுனியும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையான அந்தக் கௌதமரை {கிருபரை} தன் தேரில் விரைவாக ஏறச் செய்தான்.
[3] காரகார்ஷன் என்ற பெயர் கங்குலியின் பாரதத்தில் வேறு எங்கும் இல்லை. வேறு பதிப்புகளில் இந்த இடத்தில் பீமன் என்றே இருக்கிறது.
கோபத்தால் தூண்டப்பட்ட {சேதி மன்னன்} திருஷ்டகேது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தொண்ணூறு {90} கணைகளால் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசை} விரைவாக மார்பில் துளைத்தான். தன் மார்பில் கொண்ட அந்தக் கணைகளோடு இருந்த அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, தன் கதிர்களுடன் கூடிய நடுப்பகல் சூரியனைப் போலப் பெரிதும் பிரகாசித்தான்.
எனினும் அந்தப் போரில் பூரிஸ்ரவஸ், தன் சிறந்த கணைகளால் திருஷ்டகேதுவின் தேரோட்டியையும், குதிரைகளையும் கொன்று, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {திருஷ்டகேதுவை}, அவனது தேரை இழக்கச் செய்தான். குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்டுத் தன் தேரை இழந்து நிற்கும் திருஷ்டகேதுவைக் கண்ட பூரிஸ்ரவஸ், அந்த மோதலில் அடர்த்தியான கணை மழையால் அவனை {திருஷ்டகேதுவை} மறைத்தான். பிறகு, தன் தேரைக் கைவிட்ட அந்த உயர் ஆன்ம திருஷ்டகேது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, {நகுலனின் மகனான} சதானீகனின் தேரில் ஏறிக் கொண்டான்.
தங்கக்கவசம் பூண்டிருந்த தேர்வீரர்களான சித்திரசேனன், விகர்ணன், துர்மர்ஷணன் ஆகியோர் அனைவரும், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர். பிறகு, காற்று {வாயு}, பித்தம், சளி {வாதம், பித்தம், கபம் [சிலேத்துமம்]} ஆகியவற்றோடு {எனும் மூன்றோடு} உடல் கொள்ளும் போரைப் போல [4], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அபிமன்யுவுக்கும், அந்த {மூன்று} வீரர்களுக்கும் இடையில் ஒரு கடுமையான போர் நடந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எனினும் அந்த மனிதர்களில் புலி (அபிமன்யு), உமது மகன்களைத் தங்கள் தேர்களை இழக்கச் செய்து, பீமனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அவர்களைக் கொல்லாமல் விட்டான் [5].
[4] இந்து {இந்து மத} உடலியக்கவியலில், முக்கியச் சக்திகளின் மேலான ஆதிக்கத்திற்காக எப்போதும் போட்டியிடும் உடலின் மூன்று தாதுக்கள் இவை என இங்கே விளக்குகிறார் கங்குலி.
[5] திருதராஷ்டிரர் மகன்களைக் கொல்வதாகப் பீமன் உறுதியேற்றிருந்தான்; எனவே, அபிமன்யு, அவர்களைத் தானே கொன்று, தனது பெரியப்பனின் உறுதிமொழியைப் பொய்யாக்க விரும்பவில்லை என இங்கே விளக்குகிறார் கங்குலி.
பிறகு, மோதல் தொடர்ந்து கொண்டிருந்த போது, தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவரான பீஷ்மர், உமது மகன்களை மீட்பதற்காக, வலிமைமிக்கத் தேர்வீரனாயினும் சிறுவனும், தனியனுமான அபிமன்யுவை நோக்கி முன்னேறுவதைக் கண்டவனும், வெண்ணிறக் குதிரைகளைக் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் (அர்ஜுனன்), வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, தேர்வீரர்கள் அதிகமாக இருக்கும் அந்த இடத்திற்குக் குதிரைகளைச் செலுத்துவாயாக. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக, துணிச்சல்மிக்கவர்களாக, ஆயுதங்களை அறிந்தவர்களாக, போரில் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, எதிரி நமது துருப்புகளைக் கொல்ல இயலாதவண்ணம் குதிரைகளை வழிநடத்துவாயாக" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.
அளவிலா சக்தி கொண்ட குந்தியின் மகனால் {அர்ஜுனனால்} இப்படித் தூண்டப்பட்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேரைப் போரில் செலுத்தினான். சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், இப்படி உமது படையை நோக்கி முன்னேறிய போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்கு மத்தியில் ஆரவாரமிக்கப் பேரொலி எழுந்தது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைப் பாதுகாத்தபடி நின்ற அந்த மன்னர்களிடம் வந்த குந்தியின் மகன் {அர்ஜுனன்}, (முதலில்) {திரிகர்த்த மன்னன்} சுசர்மனிடம், "போரில் முதன்மையானவன் என்றும், ஆரம்பத்தில் {பழங்காலத்தில்} இருந்தே (எங்களுடைய) கொடிய எதிரியாக இருப்பவன் என்று உன்னை நான் அறிவேன். அந்த (உனது) தீய நடத்தையின் பயங்கரக் கனியை இன்று நீ பார். நான், இன்று உன்னை உனது முன்னோர்களின் ஆவிகளைச் சந்திக்கச் செய்வேன்" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைப் பாதுகாத்தபடி நின்ற அந்த மன்னர்களிடம் வந்த குந்தியின் மகன் {அர்ஜுனன்}, (முதலில்) {திரிகர்த்த மன்னன்} சுசர்மனிடம், "போரில் முதன்மையானவன் என்றும், ஆரம்பத்தில் {பழங்காலத்தில்} இருந்தே (எங்களுடைய) கொடிய எதிரியாக இருப்பவன் என்று உன்னை நான் அறிவேன். அந்த (உனது) தீய நடத்தையின் பயங்கரக் கனியை இன்று நீ பார். நான், இன்று உன்னை உனது முன்னோர்களின் ஆவிகளைச் சந்திக்கச் செய்வேன்" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.
எனினும், தேர்ப்படைகளின் தலைவனான சுசர்மன், எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்} சொன்ன இந்தக் கடும் வார்த்தைகளைக் கேட்டும், (பதிலுக்கு) நல்லதாகவோ, அல்லதாகவோ ஒன்றும் சொல்லவில்லை. (ஆனால்) வீர அர்ஜுனனை அணுகி, தன்னைப் பின்தொடர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மன்னர்களுடன் அந்தப் போரில் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு, ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் துணையுடன், பகலை உண்டாக்குபவனை {சூரியனை} மூடும் மேகங்களைப் போல, முன்புறம், பின்புறம், பக்கங்கள் {விலாப்புறம்} என அனைத்துப் புறங்களிலும் கணைகளால் அவனை {அர்ஜுனனை} மூடினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படைக்கும், பாண்டவர்களின் படைக்கும் இடையில் நீரைப் போல குருதி ஓடும் ஒரு பயங்கரப் போர் நடைபெற்றது" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |