Wednesday, June 29, 2016

அம்பஷ்டர்களின் மன்னன் சுருதாயுஸ்! - துரோண பர்வம் பகுதி – 092

Srutayus, the king of Amvashthas! | Drona-Parva-Section-092 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 08)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனை மயக்கமடையச் செய்த சுருதாயுசும், அச்யுதாயுசும்; சுருதாயுஸ், அச்யுதாயுஸ் அவர்களது மகன்கள் ஆகியோரை அர்ஜுனன் கொன்றது; மிலேச்சர்களைக் கொன்று விரட்டிய அர்ஜுனன்; அம்பஷடர்களின் மன்னனான மற்றொரு சுருதாயுசைக் கொன்றது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சுதக்ஷிணன் மற்றும் வீரச் சுருதாயுதன் ஆகியோர் வீழ்ந்த பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்த உமது வீரர்கள் பார்த்தனை {அர்ஜுனனை} நோக்கி வேகமாக விரைந்தனர். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அபிஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள் ஆகியோர் தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கணைமாரியை இறைக்கத் தொடங்கினர். பிறகு பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அறுநூறு கணைகளின் மூலம் அவர்களை எரித்தான். அதன்பேரில் அந்த வீரர்கள் புலியைக் கண்ட சிறு விலங்குகளைப் போல அச்சத்தால் தப்பி ஓடினர். மீண்டும் திரும்பி வந்த அவர்கள், போரில் தங்களை வீழ்த்துபவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பார்த்தனைச் சூழ்ந்து கொண்டனர். தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன்னை நோக்கி இப்படி விரைந்து வந்த போராளிகளின் தலைகளையும், கரங்களையும் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் விரைவாக அறுத்தான். வீழ்ந்த தலைகளால் நிரப்பப்படாத இடமென்று அந்தப் போர்க்களத்தில் ஓர் அங்குலம் கூடக் காணப்படவில்லை. களத்தில் பறந்து திரிந்த காக்கைகள், கழுகுகள், அண்டங்காக்கைகள் ஆகியவற்றின் கூட்டங்கள் ஒரு மேகத்திரையை ஏற்படுத்தின. இப்படித் தங்கள் மனிதர்கள் கொல்லப்படுவதைக் கண்ட சுருதாயுஸ் மற்றும் அச்யுதாயுஸ் {அசுருதாயுஸ்} ஆகிய இருவரும் கோபத்தால் நிறைந்தனர். அவர்கள் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} மூர்க்கமாக மோதுவதைத் தொடர்ந்தனர்.
பெரும் வலிமையும், செருக்கும், வீரமும், நல்ல பிறப்பும், கரங்களில் பலமும் கொண்ட அந்த வில்லாளிகள் இருவரும் {சுருதாயுஸ் மற்றும் அச்யுதாயுஸ் ஆகியோர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் புகழை வெல்ல விரும்பியும், உமது மகனின் {துரியோதனனின்} நிமித்தமாகவும், அர்ஜுனனின் அழிவுக்காகவும், வலது புறத்திலிருந்தும், இடது புறத்திலிருந்து பின்னவன் {அர்ஜுனன்} மேல் தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். இரு மேகத்திரள்கள் ஒரு தடாகத்தை நிறைப்பதைப் போல, அந்தக் கோபக்கார வீரர்கள், நேரான ஓராயிரம் கணைகளால் அர்ஜுனனை மறைத்தனர். பிறகு தேர்வீரர்களில் முதன்மையானவனான அந்தச் சுருதாயுஸ் கோபத்தால் நிறைந்து, நன்கு கடினமாக்கப்பட்ட வேல் ஒன்றால் தனஞ்சயனைத் தாக்கினான்.

எதிரிகளை நொறுக்குபவனான அர்ஜுனன், தன் வலிமைமிக்க எதிரியால் {சுருதாயுஸால்} அந்தப் போரில் ஆழத் துளைக்கப்பட்டு, (அதனால்) கேசவனையும் {கிருஷ்ணனையும்} மலைக்கச் செய்யும் வகையில் மயக்கமடைந்தான். அதேவேளையில், வலிமைமிக்கத் தேர்வீரனான அச்யுதாயுஸ் கூர்முனை கொண்ட சூலமொன்றால் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைப்} பலமாகத் தாக்கினான். அதனால் ஆழத் துளைக்கப்பட்ட பார்த்தன், தன் கொடிக்கம்பத்தைப் பற்றியபடி தன்னைத் தாங்கிக் கொண்டான். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயன் {அர்ஜுனன்} உயிரிழந்தான் என்ற நம்பிக்கையில் துருப்புகள் அனைத்தும் சிங்க முழக்கமிட்டன. புலன்களை இழந்த பார்த்தனைக் கண்டு கிருஷ்ணனும் துயரத்தால் எரிந்தான். பிறகு கேசவன் ஆறுதல் வார்த்தைகளால் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தேற்றினான்.

அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான அவர்கள் (சுருதாயுசும், அச்யுதாயுசும்) சரியான இலக்குடன் அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தங்கள் கணை மாரியைப் பொழிந்து, தங்கள் தேர், தேர் சக்கரங்கள், கூபரங்கள், குதிரைகள், கொடிக்கம்பம், கொடி ஆகியவற்றோடு கூடிய தனஞ்சயனையும், விருஷ்ணி குலத்து வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} கண்ணுக்குப் புலப்படாமல் ஆகும்படி செய்தார்கள். இவையாவும் அற்புதமாகத்தெரிந்தன. அதேவேளையில், பீபத்சு {அர்ஜுனன்}, யமனின் வசிப்பிடத்தில் இருந்து திரும்பி வந்தவனைப் போல மெதுவாகத் தன்னுணர்வு மீண்டான். கணைகளால் மறைக்கப்பட்ட கேசவனோடு கூடிய தன் தேரையும், சுடர்மிக்க இரு நெருப்புகளைப் போலத் தன் முன் நின்ற அந்த எதிராளிகள் இருவரைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பார்த்தன், சக்ரனின் {இந்திரனின்} பெயரைக் கொண்ட ஆயுதத்தை {ஐந்திராயுதத்தை} இருப்புக்கு அழைத்தான். அவ்வாயுதத்தில் இருந்து ஆயிரக்கணக்கான நேர்க்கணைகள் பாய்ந்தன. அந்தக் கணைகள் வலிமைமிக்க வில்லாளிகளான அந்தச் சுருதாயுசையும், அச்யுதாயுசையும் தாக்கின.

பார்த்தனால் துளைக்கப்பட்ட பின்னவர்களால் {சுருதாயுஸ் மற்றும் அச்யுதாயுசால்} ஏவப்பட்ட கணைகளும் ஆகாயத்தில் பாய்ந்தன. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அக்கணைகளைத் தன் கணைகளின் பலத்தால் விரைவாகக் கலங்கடித்து, வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் மோதியபடியே களத்தில் திரியத் தொடங்கினான். அதே வேளையில் சுருதாயுசும், அச்யுதாயுசும் அர்ஜுனனின் கணை மாரியால் தங்கள் கரங்களையும் தலைகளையும் இழந்தனர். அவர்கள், காற்றால் முறிந்து விழுந்த இரண்டு நெடுமரங்களைப் போலப் பூமியில் விழுந்தனர். கடல் வற்றிப் போனதைக் கண்டால் மனிதர்கள் என்ன உணர்ச்சியை அடைவார்களோ அதே போன்ற ஆச்சரியத்தைச் சுருதாயுசின் மரணமும், அச்யுதாயுசின் படுகொலையும் ஏற்படுத்தின.

பிறகு அந்த இளவரசர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்த ஐம்பது தேர்வீரர்களையும் கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொன்ற படியே பாரதப் படையை எதிர்த்துச் சென்றான். சுருதாயுசும், அச்யுதாயுசும் கொல்லப்பட்டதைக் கண்ட அவர்களது மகன்களும், மனிதர்களில் முதன்மையானோருமான நியாதாயுஸ் {நியுதாயு} மற்றும் தீர்க்காயுஸ் {தீர்க்காயு} ஆகியோர், ஓ! பாரதரே, சினத்தால் நிறைந்து, தங்கள் தந்தைமாருக்கு நேர்ந்த பேரழிவால் மிகவும் துன்புற்று, பல்வேறு வகைகளிலான கணைகளை இறைத்தபடியே குந்தியினை மகனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தனர். சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், நேரான கணைகளின் மூலம் ஒருக்கணத்தில் அவர்கள் இருவரையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.

தாமரைகள் நிறைந்த தடாகத்தின் நீரைக் கலங்கடிக்கும் ஒரு யானையைப் போலத் தார்தராஷ்டிரப் படையணிகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பார்த்தனை {அர்ஜுனனை} (குரு படையில் இருந்த) க்ஷத்திரியக் காளையரால் தடுக்க முடியவில்லை. பிறகு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கர்களில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களான ஆயிரக்கணக்கான யானைப்பாகர்கள், சினத்தால் நிறைந்து, தங்கள் யானைப் படையுடன் பாண்டுவின் மகனைச் சூழ்ந்து கொண்டனர். துரியோதனனால் தூண்டப்பட்ட மேற்கு மற்றும் தெற்கின் மன்னர்கள் பலரும், கலிங்கர்களின் ஆட்சியாளனால் [1] தலைமை தாங்கப்பட்ட வேறு பலரும் மலைகளைப் போன்ற தங்கள் யானைகளுடன் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.

[1] கலிங்க மன்னன் சுருதாயுஷ் இரண்டாம் நாள் போரிலேயே பீமனால் கொல்லப்பட்டான். இப்போது இங்குத் தலைமை தாங்கு கலிங்க மன்னன் வேறு ஒருவனாக இருக்க வேண்டும்.

எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால், அப்படி முன்னேறி வருபவர்களும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அந்தப் போராளிகளின் தலைகளையும், கரங்களையும் விரைவாக அறுத்தான். அந்தத் தலைகளாலும், அங்கதங்களால் அலங்கரிக்கபட்ட கரங்களாலும் விரவிக் கிடந்த போர்க்களமானது, பாம்புகளால் பின்னிப் பிணைக்கப்பட்ட தங்கக் கற்களைப் போலத் தெரிந்தது. வீரர்களின் கரங்கள் அப்படி வெட்டப்பட்டு வீழ்ந்த போது, மரங்களில் இருந்து விழும் பறவைகளைப் போல அவை தெரிந்தன. ஆயிரக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்ட யானைகள், (தங்கள் காயங்களில்) குருதி பெருக்கியபடி, மழைக்காலங்களில் செம்மண் கலந்த நீர் வழியும் மலைகளைப் போலத் தெரிந்தன. பார்த்தனின் {அர்ஜுனனின்} கூரிய கணைகளால் கொல்லப்பட்ட பிறர் அந்தக் களத்தில் விழுந்து கிடந்தனர்.

பல்வேறு வகைகளிலான கோர வடிவங்களுடனும், பல்வேறு ஆடைகளை உடுத்தி, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டும், யானைகளில் இருந்த மிலேச்சர்கள் பலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகைகளிலான கணைகளால் உயிரை இழந்து தாங்கள் கிடந்த களத்தில் பிரகாசமாகத் தெரிந்தனர். பாதங்களால் முடுக்கிய தங்கள் பாகர்களுடன் ஆயிரக்கணக்கான யானைகள், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்டு இரத்தம் கக்கின, அல்லது வலியால் பிளிறின, அல்லது கீழே விழுந்தன, அல்லது அனைத்துத் திசைகளிலும் கட்டுப்பாடில்லாமல் ஓடின. பெரும் அச்சமடைந்த பல யானைகள், தங்கள் மனிதர்களையே மிதித்து நசுக்கிக் கொன்றன. கடும் நஞ்சைக் கொண்ட பாம்புகளைப் போலக் கடுமையானவையும், அதிகப்படியாக வைக்கப்படிருந்தவையுமான இன்னும் பல யானைகளும் அதையே செய்தன.

யவனர்கள், பாரடர்கள் [2], சகர்கள், பாஹ்லிகர்கள், கடும் கண்களைக் கொண்டவர்களும், யமனின் தூதுவர்கள் போன்றவர்கள், தாக்குவதில் சாதித்தவர்களும், அசுரர்களின் மாய சக்திகளை அறிந்தவர்களும், (வசிஷ்டருடைய) பசுக்குப் பிறந்தவர்களுமான மிலேச்சர்கள், தார்வாதிசாரர்கள், தரதர்கள், புண்டரர்கள் ஆகியோர் ஆயிரக்கணக்கானோர் கூட்டமாகச் சேர்ந்து எண்ணற்ற படையை அமைத்துக் கொண்டு தங்கள் கூரிய கணை மழையைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பொழியத் தொடங்கினர். போர்க்கலையின் பல்வேறு முறைகளை அறிந்தவர்களான அந்த மிலேச்சர்கள் தங்கள் கணைகளால் அர்ஜுனனை மறைத்தனர். அர்ஜுனனும் அவர்கள் மீது தன் கணைகளை விரைவாகப் பொழிந்தான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள் ஆகாயத்தில் சென்ற போது வெட்டுக்கிளிக் கூட்டங்களைப் போலத் தெரிந்தன. உண்மையில் தனஞ்சயன், மேகங்கள் உண்டாக்குவதைப் போன்ற ஒரு நிழலை துருப்புகளின் மீது உண்டாக்கி, தலையை முழுமையாக மழித்தவர்களும், பாதி மழித்தவர்களும், சடாமுடியால் மறைத்துக் கொண்டவர்களும், தூய்மையற்ற பழக்கங்களைக் கொண்டவர்களும், கோணல் முகம் கொண்டவர்களுமான மிலேச்சர்கள் அனைவரையும் தன் ஆயுதங்களின் பலத்தால் கொன்றான். அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த மலைவாசிகளும், அந்த மலைக் குகை வாசிகளும் அச்சத்தால் தப்பி ஓடினர்.

[2] கங்குலியில் இங்கே Paradas என்று இருக்கிறது. வேறு ஒரு பதிப்பில் இங்குப் பாரதர்கள் என்றே இருக்கிறது. இவர்கள் பரதவம்சத்தவர் அல்ல. இன்றைய பலுச்சிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தப் பாரடர்கள் என்று புரானிக் என்சைக்ளோபீடியா சொல்கிறது.

அண்டங்காக்கைகள், கங்கங்கள் {கழுகுகள்}, ஓநாய்கள் ஆகியன பெரும் மகிழ்ச்சியுடன் பார்த்தனின் {அர்ஜுனனின்} கூரிய கணைகளால் களத்தில் வீழ்த்தப்பட்ட யானைகள், குதிரைகள் மற்றும் அவற்றின் மிலேச்ச சாரதிகளின் குருதியைக் குடித்தன. உண்மையில் அர்ஜுனன், குருதியை ஓடையாகக் கொண்ட ஒரு கடும் நதியை அங்கே பாயச் செய்தான். (கொல்லப்பட்ட) காலாட்படையினர், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியன அதன் கரைகளாக அமைந்தன. பொழியப்பட்ட கணைமாரிகள் அதன் படகுகளாகின, போராளிகளின் மயிர்கள் அதன் பாசிகளாகவும், புல்தரைகளாகவும் அமைந்தன. வீரர்களின் கரங்களில் இருந்து வெட்டப்பட்ட விரல்கள் அதன் சிறு மீன்களாக அமைந்தன. அந்த ஆறானது யுக முடிவில் உள்ள பயங்கர யமனைப் போலத் தெரிந்தது. அந்தக் குருதிப் புனல் யமலோகத்தை நோக்கியே பாய்ந்தது. கொல்லப்பட்ட யானைகளின் உடல்கள் அதில் மிதந்திருந்தபடியே அதன் ஓட்டத்தைத் தடுத்தன. இந்திரன், பெருமழையைப் பொழியும் காலத்தில் மேடு பள்ளங்களைச் சமமாக மறைப்பதைப் போலவே, க்ஷத்திரியர்கள், யானைகள், குதிரைகள், அவற்றின் சாரதிகளின் இரத்தம் பூமி முழுவதையும் மறைத்தது.

அந்த க்ஷத்திரியர்களில் காளை {அர்ஜுனன்}, ஆறாயிரம் குதிரைவீரர்களையும், க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் ஆயிரம் பேரையும் அப்போரில் மரணத்தின் கோரப் பற்களுக்கிடையே அனுப்பி வைத்தான். நன்கு தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான யானைகள் கணைகளால் துளைக்கப்பட்டு, இடியால் தாக்கப்பட்ட மலைகளைப் போலக் களத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தன. மேலும் அர்ஜுனன், மதங்கொண்ட யானையொன்று காட்டுச் செடிகளை நசுக்குவதைப் போலக் குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் யானைகளைக் கொன்றபடியே களத்தில் திரிந்து கொண்டிருந்தான். காற்றால் உந்தப்பட்ட காட்டுத் தீயானது, மரங்கள், கொடிகள், செடிகள், விறகு, புற்கள் ஆகியவற்றுடன் கூடிய அடர்ந்த காட்டை எரிப்பதைப் போலவே, பாண்டுவின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்} எனும் நெருப்பானவன், கணைகளைத் தன் {அந்நெருப்பின்} தழல்களாகக் கொண்டு, காற்றான கிருஷ்ணனால் தூண்டப்பட்டு, கோபத்துடன் உமது வீரர்கள் எனும் காட்டை எரித்தான். தேர்களின் தட்டுகளை வெறுமையாக்கி, பூமியை மனித உடல்களால் விரவச் செய்த தனஞ்சயன், பெரும் மனிதக் கூட்டத்திற்கு மத்தியில் கையில் வில்லுடன் ஆடுபவனைப் போலத் தெரிந்தான். இடியின் பலத்தைக் கொண்ட தன் கணைகளால் பூமியை இரத்தத்தால் நனைத்த தனஞ்சயன் கோபத்தால் தூண்டப்பட்டுப் பாரதப் படைக்குள் ஊடுருவினான்.

அப்படி அவன் செல்கையில் அம்பஷ்டர்களின் ஆட்சியாளனான சுருதாயுஸ் அவனைத் தடுத்தான். அப்போது அர்ஜுனன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் போராடிக்கொண்டிருந்த சுருதாயுசின் குதிரைகளைக் கங்க சிறகுகளைக் கொண்ட கூர்மையான கணைகளால் விரைவாக வீழ்த்தினான். மேலும் பார்த்தன், பிற கணைகளால் தன் எதிராளியின் வில்லையும் வெட்டிவிட்டுக் களத்தில் திரிந்து கொண்டிருந்தான். கோபத்தால் நிலைகுலைந்த கண்களைக் கொண்ட அந்த அம்பஷ்டர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, கேசவனையும் {கிருஷ்ணனையும்} போரில் அணுகினான். பிறகு கோபத்தால் நிறைந்த அவன் {சுருதாயுஸ்}, தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு. அதன் வீச்சுகளால் (அர்ஜுனன் செல்லும்) தேரைத் தடுத்து, கேசவனையும் {கிருஷ்ணனையும்} தாக்கினான்.

பிறகு, பகைவர்களைக் கொல்பவனான அர்ஜுனன், அந்தக் கதாயுதத்தால் கேசவன் தாக்கப்பட்டதைக் கண்டு கோபத்தால் நிறைந்தான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரன் {அர்ஜுனன்}, உதயச் சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலத் தேர்வீரர்களில் முதன்மையானவனும், கதாயுததாரியுமான அந்த அம்பஷ்டர்களின் ஆட்சியாளனை {சுருதாயுசைத்} தங்கச் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் மறைத்தான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம வீரனின் கதாயுதத்தைக் கணைகள் பிறவற்றால் தூள்தூளாக வெட்டி கிட்டத்தட்ட அதைத் தூசாக்கினான். இவை அனைத்தையும் காண மிக அற்புதமாகத் தெரிந்தது.

அந்தக் கதாயுதம் சுக்குநூறாக வெட்டப்பட்டதைக் கண்ட அந்த அம்பஷ்டர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, மற்றொரு பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அர்ஜுனனையும், கேசவனையும் மீண்டும் மீண்டும் தாக்கினான். அப்போது அர்ஜுனன், கதாயுதத்தை உயர்த்திப் பிடித்திருந்தவையும், இந்திரனின் கொடிமரங்களைப் போன்றவையுமான சுருதாயுசின் கரங்களைக் கூரிய அர்த்தச்சந்திர கணைகள் இரண்டால் வெட்டி, சிறகுபடைத்த மற்றொரு கணையால் அந்த வீரனின் {சுருதாயுசின்} தலையையும் அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படிக் கொல்லப்பட்ட சுருதாயுஸ் [3], இந்திரனின் நெடும் கொடிமரமானது இயந்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் நாண்கள் வெட்டப்பட்டு விழுவதைப் போலப் பேரொலியால் பூமியை நிறைத்தபடியே கீழே விழுந்தான். அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, தேர்க்கூட்டங்களாலும், நூற்றுக்கணக்கான யானைகள் மற்றும் தேர்களாலும் சூழப்பட்ட பார்த்தன், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலக் காணப்பட முடியாதவனானான்" {என்றான் சஞ்சயன்}.

[3] பீஷ்ம பர்வம் பகுதி 54ஆவில் பீமனால் கொல்லப்பட்ட கலிங்க மன்னன் சுருதாயுஷும், துரோண பர்வம் பகுதி 91ல் அர்ஜுனனால் கொல்லப்படும் சுருதாயுதனும், இப்போது பகுதி 92ல் வரும் இரு சுருதாயுஸ்களும் வெவ்வேறானவர்களாக இருக்க வேண்டும். பீஷ்ம பர்வம், துரோண பர்வம் ஆகியவற்றில் சுருதாயுஷ், சுருதாயுதன், சுருதாயுஸ் என மூன்று பெயர்கள் மாறி மாறிக் காணக்கிடைக்கின்றன. கர்ண பர்வத்தில் ஒரு சுருதாயுஸ் அஸ்வத்தாமனால் கொல்லப்படுகிறான். ஆக மொத்தம் சுருதாயுஸ் என்ற பெயரில் ஐந்து பேர் இருந்திருக்க வேண்டும். அதில் ஒருவன் கலிங்க மன்னன், ஒருவன் அம்பஷ்டர்களின் மன்னன், ஒருவன் காம்போஜ மன்னனாகவோ, காம்போஜ நாட்டினனாகவோ இருந்திருக்கவேண்டும். மற்றவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top