Tuesday, July 26, 2016

கிருதவர்மனைக் கடந்த சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 112

Satyaki passed over Kritavarma! | Drona-Parva-Section-112 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 28)

பதிவின் சுருக்கம் : சாத்யகிக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த வீரர்கள்; சாத்யகியைக் கண்டு ஓடிய கௌரவ வீரர்கள்; சாத்யகியுடன் மோதிய துரோணர்; துரோணரைத் தவிர்த்துச் சென்ற சாத்யகி, சாத்யகிக்கும் கிருதவர்மனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; கிருதவர்மனின் தேரோட்டியைக் கொன்று போஜர்களின் படைப்பிரிவில் இருந்து வெளியேறிய சாத்யகி; துரோணர் சாத்யகியைப் பின்தொடர்ந்தது; காம்போஜர்களை அடைந்த சாத்யகி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுயுதானன் {சாத்யகி}, போரிடும் விருப்பத்தால் உமது துருப்புகளை எதிர்த்துச் சென்றபோது, மன்னன் யுதிஷ்டிரன், துரோணரின் தேரை அடைவதற்காக, யுயுதானனைத் தன் படை சூழப் பின்தொடர்ந்து சென்றான். பிறகு, பாஞ்சலர்களின் மன்னனுடைய மகனும் வெல்லப்பட முடியாத வீரனுமான திருஷ்டத்யும்னனும், மன்னன் வசுதானனும் [1], பாண்டவப் படையிடம் பேரொலியுடன், "போரில் வெல்லப்பட முடியாத வீரனான சாத்யகி (கௌரவப் படையின் ஊடாகக்) எளிமையாகக் கடந்து செல்வதற்கு ஏதுவாக {உதவிட} வாருங்கள், விரைவாகத் தாக்குங்கள், எதிரியை எதிர்த்து விரையுங்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் அவனை வெல்லப் போராடுவார்கள்" என்று சொன்னார்கள். இதைச் சொன்ன (பாண்டவப் படையின்) பெரும் தேர்வீரர்கள், தங்கள் எதிரிகளின் மீது மூர்க்கமாகப் பாய்ந்தனர். உண்மையில் அவர்கள் அனைவரும், "சாத்யகியை வெல்ல முயல்வோரை நாங்கள் வெல்வோம்" என்று சொல்லிக் கொண்டே விரைந்தனர்.


[1] இவன் பாம்சு நாட்டைச் சேர்ந்தவன் எனச் சபாபர்வம் பகுதி 51ல் குறிப்பு இருக்கிறது. உத்யோக பர்வம் பகுதி 4லும்  பாம்சு நாட்டு ஆட்சியாளனைப் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. துரோண பர்வம் பகுதி 190ல் இவன் துரோணரால் கொல்லப்படுகிறான்.

அப்போது சாத்யகியின் தேரருகே உரத்த ஆரவாரம் கேட்டது. எனினும், உமது மகனின் {துரியோதனனின்} படையானது சாத்யகியின் கணைகளால் மறைக்கப்பட்டுத் தப்பி ஓடியது. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்வத குலத்தோனால் {சாத்யகியால்} அந்தப் படை, போராடும் நூறு குழுக்களாகப் பிளக்கப்பட்டது. அந்தப் படை அப்படிப் பிளந்த போது, வலிமைமிக்கத் தேர்வீரனான சிநி (சிநியின் பேரன் {சாத்யகி}), எதிரியின் படைப்பிரிவின் முகப்பில் இருந்த வீரமிக்கப் பெரும் வில்லாளிகள் எழுவரை நொறுக்கினான். மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்விடும் நெருப்பின் தழல்களுக்கு ஒப்பான தன் கணைகளால் அவன் {சாத்யகி} பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மன்னர்களையும், பிற வீரர்கள் பலரையும் யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான். சிலநேரங்களில் அவன் {சாத்யகி}, ஒரே கணையால் நூறு வீரர்களையும், சில நேரங்களில் நூறு கணைகளால் ஒரே ஒரு வீரனையும் துளைத்தான்.

உயிரினங்களை அழிக்கும் பெரும் ருத்ரனைப் போல அவன் {சாத்யகி} யானைப் பாகர்களையும், குதிரைகள் மற்றும் தேரோட்டிகளுடன் கூடிய தேர்வீரர்களையும் கொன்றான். இத்தகு கரநளினத்தை வெளிக்காட்டி, இத்தகு கணை மேகங்களைப் பொழிந்த சாத்யகியை எதிர்த்துச் செல்ல உமது துருப்புகளில் எவரும் துணியவில்லை. நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரனால் {சாத்யகியால்} தரையில் நசுக்கப்பட்டுப் பீதியடைந்திருந்த அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் அனைவரும், செருக்கு மிக்க அந்த வீரன் {சாத்யகி} பார்த்துக் கொண்டிருக்கும்போதே களத்தைவிட்டுச் சென்றனர். அவன் {சாத்யகி} தனி ஒருவனாக இருந்தாலும், பலராகக் கண்ட அவர்கள், அவனது சக்தியால் மலைப்படைந்தனர்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் பரவிக்கிடந்தவையான நொறுங்கிய தேர்கள், உடைந்த நீடங்கள் [2] மற்றும் சக்கரங்கள், விழுந்த குடைகள், கொடிமரங்கள், இருசுக்கட்டைகள், கொடிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகள், தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்தனம் பூசப்பட்டவையுமான கரங்கள், ஓ! மன்னா, யானையின் துதிக்கைக்கு ஒப்பானவையும், பாம்புகளின் ஒடுங்கிய உடலைப் போன்றவையுமான மனிதத் தொடைகள், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அகன்ற பெரிய கண்களையும் சந்திரனுக்கு ஒப்பான அழகையும் கொண்ட வீரர்களின் முகங்கள் ஆகியவற்றால் பூமி மிக அழகாகத் தெரிந்தது. பல்வேறு முறைகளில் அறுக்கப்பட்டு விழுந்து கிடக்கும் பெரும் உடல் கொண்ட யானைகளுடன், மலைகளால் பரவியிருக்கும் ஒரு பெரிய சமவெளியைப் போன்று அந்தத் தரையானது மிக அழகாகத் தெரிந்தது. நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரனால் {சாத்யகியால்} நொறுக்கப்பட்டு, கொல்லப்பட்டு, தரையில் விழுந்து கிடக்கும் குதிரைகள், தங்கத்தால் மெருகூட்டப்பட்டவையும், முத்துக்களின் வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் அழகிய கடிவாளங்களோடும், அழகிய வடிவம் மற்றும் அமைப்புடன் கூடிய தங்கள் கவசங்களோடும் மிக அழகாகத் தெரிந்தன. பல்வேறு வகைகளிலான உமது துருப்பினரைக் கொன்ற அந்தச் சாத்வத குலத்தோன் {சாத்யகி}, உமது படையைக் கலங்கடித்து முறியடித்த படியே உமது படைக்குள் நுழைந்தான்.

[2] நீடம் என்பது, தேர்வீரன் ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏதுவாகத் தேரில் ஏற்படுத்தப்பட்ட ஓர் இடமாகும்.

சாத்யகி, முன்பு தனஞ்சயன் {அர்ஜுனன்} சென்ற அதே வழியில் தானும் செல்ல விரும்பினான். அப்போது துரோணர் வந்து அவனைத் {சாத்யகியைத்} தடுத்தார். பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்} மோதிய யுயுதானன் {சாத்யகி}, சினத்தால் நிறைந்து, கரையில் மோதியும் நிற்காத பெரும் வெள்ளமென நிற்காமல் சென்றான். எனினும் துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனை அந்தப் போரில் தடுத்து, உயிர் நிலைகளையே ஊடுருவவல்ல ஐந்து கூரிய கணைகளால் அவனைத் துளைத்தார். இருப்பினும், அந்தப் போரில் சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்டவையும், கங்கம் மற்றும் மயிலின் இறகுகளைக் கொண்டவையும், தங்கச் சிறகுகளைத் தரித்தவையுமான ஏழு கணைகளால் துரோணரைத் துளைத்தான். பிறகு துரோணர், சாத்யகியையும், அவனது குதிரைகளையும், தேரோட்டிகளையும் ஆறு கணைகளால் பீடித்தார்.

வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனால் துரோணரின் அந்தச் சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சிங்க முழக்கமிட்ட அவன் {சாத்யகி}, பத்துக் கணைகளாலும், பிறகு ஆறாலும், பிறகும் வேறு எட்டு கணைகளாலும் துரோணரைத் துளைத்தான். மேலும் யுயுதானன், மீண்டும் துரோணரைப் பத்துக் கணைகளாலும், அவரது தேரோட்டியை ஒன்றாலும், அவரது நான்கு குதிரைகளை நான்கு கணைகளாலும் துளைத்தான். மேலும் சாத்யகி, மற்றுமொரு கணையால், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரின் கொடிமரத்தையும் தாக்கினான். பிறகு துரோணர், வேகமாகச் செல்பவையும், விட்டில் பூச்சிகளைப் போல எண்ணிக்கையில் கணக்கற்றவையுமான கணைகளால் சாத்யகியையும், அவனது தேர், குதிரைகள், தேரோட்டி, கொடிமரம் ஆகியவற்றையும் விரைவாக மறைத்தார். அதே போல யுயுதானனும், பெரும் வேகம் கொண்ட கணக்கற்ற கணைகளால் அச்சமற்ற வகையில் துரோணரை மறைத்தான்.

அப்போது துரோணர், யுயுதானனிடம், "உன் ஆசான் (அர்ஜுனன்), அவனுடன் போரிட்டுக் கொண்டிருந்த என்னைத் தவிர்த்துவிட்டு, என் பக்கவாட்டின் வழியாக ஒரு கோழையைப் [3] போலப் போரை விட்டுச் சென்றுவிட்டான். ஓ! மது குலத்தோனே {சாத்யகி}, உன் ஆசானைப் போலவே நீயும் இந்தப் போரில் என்னை விரைவாகத் தவிர்க்கவில்லையெனில், என்னுடன் போரிடும் நீ இன்று உயிருடன் தப்ப முடியாது" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட சாத்யகி {துரோணரிடம்}, "நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் உத்தரவின் பேரில் தனஞ்சயரின் பாதையை நான் பின்தொடர்ந்து செல்கிறேன். ஓ! பிராமணரே, நீர் அருளப்பட்டிருப்பீராக, (நான் உம்முடன் போரிட்டால்) நான் நேரத்தை இழக்க நேரிடும். ஒரு சீடனானவன் தன் ஆசான் நடந்த வழியிலேயே எப்போதும் நடக்க வேண்டும். எனவே, நான் என் ஆசான் நடந்த பாதையையே பின்பற்றிச் செல்வேன்" என்றான்.

[3] வேறொரு பதிப்பில் அற்ப மனிதனைப் போல என்று சொல்லப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே கோழை என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இவ்வளவே சொன்ன அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா, ஆசானை {துரோணரைத்} தவிர்த்துவிட்டுத் திடீரென முன்னேறிச் சென்றான். அவன் {சாத்யகி} தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, துரோணர் அனைத்து வகைகளிலும் எனது முன்னேற்றத்தைத் தடுக்கவே முனைவார். ஓ! சூதா, இந்த என் முக்கியமான வார்த்தைகளைக் கேட்டுப் போரில் கவனமாகச் செல்வாயாக. அங்கே பெரும் காந்திமிக்க அவந்திகளின் படை தெரிகிறது. அதற்கு அடுத்ததாகத் தெற்கத்தியரின் வலிமைமிக்கப் படை இருக்கிறது. அதற்கு அடுத்து, பாஹ்லீகர்களின் பெரும்படை இருக்கிறது. பாஹ்லீகர்களுக்குப் பக்கத்தில், கர்ணனின் உத்தரவின் பேரில் போரிடும் தீர்மானத்துடன் இருக்கும் வலிமைமிக்கப் படை இருக்கிறது.

ஓ! தேரோட்டியே இந்தப் படைகள் அனைத்தும் தங்களுக்குள் ஒவ்வொரு வகையில் வேறுபாடுகளைக் கொண்டவை, ஆனால் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் அவை போர்க்களத்தில் ஒன்றையொன்று காத்துக் கொள்ளவும் செய்கின்றன. இந்தப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை அடைந்து குதிரைகளை உற்சாகமாகச் செலுத்துவாயாக. உண்மையில், குதிரைகள் சகித்துக்கொள்ளக்கூடிய வேகத்தில் அவற்றைச் செலுத்தி, ஓ! தேரோட்டியே, ஆயுதங்களை உயர்த்திய கரங்களுடன் கூடிய பாஹ்லீகர்களும், பலவேறு நாடுகளைச் சேர்ந்த காலாட்படை வீரர்கள், வரிசையாக நிற்கும் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களுடன் கூடிய படைப்பிரிவுகளுடன், சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையில் நிற்கும் எண்ணற்ற தெற்கத்தியர்களும் எங்கே இருக்கிறார்களோ, அங்கே என்னைக் கொண்டு செல்வாயாக" என்றான் {சாத்யகி}.

தன் தேரோட்டியிடம் இவ்வளவே சொல்லி, அந்தப் பிராமணரை (துரோணரைத்) தவிர்த்துவிட்டுச் சென்ற அவன் {சாத்யகி}, கடுமையானதும், வலிமையானதுமான கர்ணனின் இரு படைப்பிரிவுகளுக்கு ஊடான திறந்தவெளியின் வழியே கடந்து செல்லும்படி தன் தேரோட்டியிடம் சொன்னான். எனினும் கோபத்தால் தூண்டப்பட்ட துரோணர், எண்ணற்ற கணைகளை அவன் {சாத்யகி} மீது ஏவிபடியே பின்னால் இருந்து அவனைத் தொடர்ந்து சென்றார். உண்மையில் அந்த ஆசான் {துரோணர்}, திரும்பிப் பார்க்கும் விருப்பம் ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருந்தவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனுமான யுயுதானனை நெருக்கமாகவே பின்தொடர்ந்தார்.

கர்ணனின் பெரும்படையைத் தன் கூரிய கணைகளால் தாக்கிய சாத்யகி, அளவில்லாததும், பரந்திருந்ததுமான பாரதர்களின் படைக்குள் ஊடுருவினான். எனினும் யுயுதானன் {சாத்யகி}, அந்தப் படைக்குள் நுழைந்த போது (அவனை எதிர்த்து நின்ற) துருப்புகள் தப்பி ஓடின. இதன்காரணமாகக் கோபம் நிறைந்த கிருதவர்மன், சாத்யகியைத் தடுப்பதற்காக முன்வந்தான். முன்னேறிவரும் கிருதவர்மனை ஆறு கணைகளால் தாக்கிய வீரச் சாத்யகி, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் விரைவாகக் கொன்றான் [4]. மீண்டும் அவன் {சாத்யகி}, வேறு நான்கு கணைகளால் கிருதவர்மனின் நடுமார்பைத் துளைத்தான். அவன், பெரும் வேகம் கொண்ட, நேரான பதினாறு கணைகளால் மீண்டும் கிருதவர்மனின் நடுமார்பைத் துளைத்தான்.

[4] வேறொரு பதிப்பில் குதிரைகளை அடித்தான் என்றிருக்கிறது.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரர்ரே}, இப்படி அந்தச் சாத்வத குலத்தோனின் {சாத்யகியின்} கடும் சக்தி கொண்ட பல கணைகளால் மோதப்பட்ட கிருதவர்மனால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், காற்றின் வேகத்தைக் கொண்டதுமான வத்ஸதந்தத்தை {கன்றின் பல்லுக்கு ஒப்பான முனை கொண்ட கணையைக்} குறி பார்த்த அவன் {கிருதவர்மன்}, தன் வில்லின் நாணைத் தன் காது வரை இழுத்து சாத்யகியின் மார்பைத் துளைத்தான். அழகிய சிறகுகளைக் கொண்ட அந்தக் கணை, அவனது கவசத்தையும், உடலையும் ஊடுருவிச் சென்று இரத்தக் கறையுடன் பூமிக்குள் நுழைந்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரர்ரே}, உயர்ந்த ஆயுதங்களைக் கொண்ட வீரனான அந்தக் கிருதவர்மன், கணைகள் பலவற்றை ஏவி, கணைகள் பொருத்தப்பட்ட சாத்யகியின் வில்லை அறுத்தான். அந்தப் போரில், சினத்தால் நிறைந்த அவன் {கிருதவர்மன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரர்ரே}, பெரும் கூர்மையைக் கொண்ட பத்து கணைகளால் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியின் நடுமார்பைத் துளைத்தான்.

தன் வில் உடைந்த காரணத்தால், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான சாத்யகி, கிருதவர்மனின் வலது கை மீது ஓர் ஈட்டியை ஏவினான். வலுவான {வேறொரு} வில்லொன்றை எடுத்து வளைத்த யுயுதானன், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளைத் தன் எதிரியின் மீது விரைவாக ஏவி, அந்தக் கணை மழையால் கிருதவர்மனையும், அவனது தேரையும் முழுமையாக மறைத்தான். இப்படி ஹிருதிகனின் மகனை {கிருதவர்மனை} மறைத்த சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தால் எதிரியின் தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான். இப்படிக் கொல்லப்பட்ட அந்த ஹிருதிகன் மகனுடைய தேரோட்டி அந்தப் பெரும் தேரில் இருந்து கீழே விழுந்தான். இதன் காரணமாக, தேரோட்டியை இழந்த கிருதவர்மனின் குதிரைகள் [5] பெரும் வேகத்துடன் தப்பி ஓடின.

[5] மேலே கிருதவர்மனின் நான்கு குதிரைகள் கொல்லப்பட்டதாகக் குறிப்பு இருக்கிறது. ஒருவேளை கிருதவர்மன் நான்குக்கும் மேற்பட்ட குதிரைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் இங்கே ஊகிக்கலாம். அல்லது மேலே அடிக்குறிப்பு [4]ல் சுட்டப்பட்டுள்ளதைப் போல அங்கே அந்த இடத்தில் குதிரைகள் "கொல்லப்பட்டன" என்பதற்குப் பதில் "தாக்கப்பட்டன" என்பதே பொருந்தும்.

பெரும் கலக்கமடைந்த அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்} தானே அக்குதிரைகளைத் தடுத்தான். வீரம் கொண்ட அந்தப் போர்வீரன் {கிருதவர்மன்}, கையில் வில்லுடன் தன் தேரில் (போருக்குத் தயாராக) நின்றான். இந்தச் சாதனையைக் கண்ட அவனது {கிருதவர்மனது} துருப்புகள் அஃதை உயர்வாகப் பாராட்டின. குறுகிய காலத்திற்கு ஓய்ந்திருந்த கிருதவர்மன், பிறகு தன் நல்ல குதிரைகளைத் தூண்டினான். அச்சமற்ற அவன் {கிருதவர்மன்}, தன் எதிரிகளைப் பெரும் அச்சங்கொள்ளச் செய்தான். எனினும், அந்நேரத்தில் சாத்யகி அவனைத் தாண்டிச் சென்றுவிட்டான். எனவே இப்போது கிருதவர்மன், சாத்யகியைத் தொடர்ந்து செல்லாமல் பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.

இப்படியே போஜர்களின் படைப்பிரிவை விட்டு வெளியேறிய சாத்யகி, காம்போஜர்களின் வலிமைமிக்கப் படைப்பிரிவை நோக்கிப் பெரும் வேகத்தோடு சென்றான். அங்கே துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அந்தத் தேர்வீரர்களால் தடுக்கப்பட்டவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான யுயுதானனால் ஓர் அடியும் நகர முடியவில்லை. அதேவேளையில், தன் துருப்புகளை உரிய இடங்களில் நிறுத்திய துரோணர், அவர்களைப் பாதுகாக்கும் சுமையைப் போஜர்களின் ஆட்சியாளனிடம் {கிருதவர்மனிடம்} ஒப்படைத்துவிட்டு, போரிடும் ஆசையால் உறுதியான தீர்மானத்தைச் செய்து கொண்டு, யுயுதானனை நோக்கி பெரும் வேகத்துடன் விரைந்தார்.

இப்படித் யுயுதானனைப் பின்னாலிருந்து தொடர்ந்து செல்லும் துரோணரைக் கண்ட பாண்டவப் படையின் முதன்மையான வீரர்கள் உற்சாகத்துடன் அவரைத் தடுக்கத் தொடங்கினர். எனினும் பீமசேனனின் தலைமையிலான பாஞ்சாலர்கள் அனைவரும், தேர்வீரர்களில் முதன்மையான ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} அணுகி மகிழ்ச்சியற்றவர்களாக ஆனார்கள். ஓ! மன்னா, தன் ஆற்றலை வெளிப்படுத்திய வீரக் கிருதவர்மன், சிறிது உற்சாகமற்றவர்களாக இருந்தாலும், பெரும் வீரியத்துடனேயே போரிட்டு வந்த அந்த வீரர்கள் அனைவரையும் தடுத்தான். அச்சமற்ற அவன் {கிருதவர்மன்}, தன் கணைமழையின் மூலம் தன் எதிரிகளின் விலங்குகளைப் பலவீனமடையச் செய்தான். எனினும், (பாண்டவப் படையின்) துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், போஜர்களின் ஆட்சியாளனால் {கிருதவர்மனால்} இப்படிப் பீடிக்கப்பட்டாலும், பெரும்புகழுக்காகப் போராடும் உயர் பிறப்புக் கொண்ட படைவீரர்களைப் போல அந்தப் போஜப்படையை எதிர்த்துப் போரிடத் தீர்மானித்தனர்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top