Satyaki killed Sudarsana! | Drona-Parva-Section-117 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 33)
பதிவின் சுருக்கம் : கௌரவர்கள் எவராலும் தடுக்கப்பட முடியாமல் களத்தில் முன்னேறிய சாத்யகி; இடையில் வந்த மன்னன் சுதர்சனன்; சுதர்சனனின் தேரோட்டியையும், சுதர்சனனையும் கொன்ற சாத்யகி; வீரர்களின் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துரோணரையும், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} தலைமையிலான உமது படையின் போர்வீரர்கள் பிறரையும் வென்றவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, சிரித்துக் கொண்டே தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, "ஓ! சூதா {முகுந்தா}, கேசவராலும் {கிருஷ்ணராலும்}, பல்குனராலும் {அர்ஜுனராலும்} ஏற்கனவே நமது எதிரிகள் எரிக்கப்பட்டிருக்கின்றனர். (மீண்டும்) அவர்களை வெல்வதற்கான (மேம்போக்கான) ஒரு வழியாக மட்டுமே நாம் இருக்கிறோம். தேவர்களுடைய தலைவனின் {இந்திரனின்} மகனான அந்த மனிதர்களில் காளையால் {அர்ஜுனரால்} ஏற்கனவே கொல்லப்பட்டு மாண்டவர்களையே நாம் கொல்கிறோம்" என்றான்.
சிநிக்களில் காளையும், வில்லாளிகளில் முதன்மையானவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த வலிமைமிக்க வீரன் {சாத்யகி}, தன் தேரோட்டியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, சுற்றிலும் தன் கணைகளைப் பெரும்பலத்துடன் இறைத்து, அந்தப் பயங்கரப் போரில் இரைதேடிச் செல்லும் பருந்தைப் போலவே சென்றான். குரு வீரர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனைத் {சாத்யகியைத்} தாக்கினாலும், சந்திரன் அல்லது சங்கின் வெண்மையைக் கொண்ட அந்தச் சிறந்த குதிரைகளால் தாங்கப்பட்டு, கௌரவப்படைப்பிரிவுகளைத் துளைத்துச் சென்றவனும், ஆயிரங்கதிரோனான சூரியனுக்கு ஒப்பானவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனை {சாத்யகியைத்} தடுப்பதில் அவர்களால் {குரு வீரர்களால்} வெல்ல முடியவில்லை. உண்மையில், குறையற்ற வலிமை கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுக்கு {இந்திரனுக்கு} இணையான வீரம் கொண்டவனும், கூதிர் காலச் சூரியனைப் போல ஆகாயத்தில் தெரிபவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகியை, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் போரிட்டவர்களில் ஒருவனாலும் தடுக்க முடியவில்லை.
அப்போது, போர்க்கலையின் அனைத்து முறைகளை அறிந்தவனும், தங்கக் கவசம் அணிந்திருந்தவனும், வில் மற்றும் கணைகளைத் தரித்திருந்தவனும், சினத்தால் நிறைந்தவனும், மன்னர்களில் முதன்மையானவனுமான சுதர்சனன் [1], விரைந்து வரும் சாத்யகியை எதிர்த்து, அவன் {சாத்யகி} செல்வதைத் தடுக்க முயன்றான். பிறகு அவர்களுக்கு ஏற்பட்ட மோதலானது மிகக் கடுமையானதாக இருந்தது. உமது வீரர்கள் மற்றும் சோமகர்கள் ஆகிய இருதரப்பினரும் அந்த மோதலை விருத்திரனுக்கும் வாசவனுக்கும் இடையிலான மோதலைப் போலப் புகழ்ந்தனர். அந்தப் போரில் சுதர்சனன், நூற்றுக்கணக்கான கூர்மையான கணைகளால் அந்தச் சாத்வதர்களில் முதன்மையானவனை {சாத்யகியைத்} துளைக்க முயன்றான். அவை சாத்யகியை அடைவதற்கு முன்பே {சாத்யகியால்} வெட்டப்பட்டன. அதே போலத் தன் முதன்மையான தேரில் நின்ற சுதர்சனனும், இந்திரனுக்கு ஒப்பான சாத்யகியால் அவன் மீது ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் தன் சிறந்த கணைகளால் இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டினான்.
[1] இவன் திருதராஷ்டிரன் மகனும், துரியோதனனின் தம்பியுமான சுதர்சனன் அல்ல. இவன் வேறு ஒருவன். நக்னஜித்திடம் இருந்து கிருஷ்ணனால் விடுவிக்கப்பட்ட மன்னன் சுதர்சனன் என்று ஒருவன் உத்யோக பர்வம் பகுதி 48ல் குறிப்பிடப்படுகிறான். இவன் அவனாகவும் இருக்கலாம், அல்லது வேறு ஒருவனாகவும் இருக்கலாம். பாண்டவத் தரப்பைச் சேர்ந்த சுதர்சனன் என்ற மற்றொரு மாலவ மன்னன் துரோண பர்வம் பகுதி 199ல் குறிப்பிடப்படுகிறான்.
சாத்யகியுடைய கணைகளின் சக்தியால் தன் கணைகள் கலங்கடிக்கப்படுவதைக் கண்டவனும், கடும் சக்தி கொண்டவனுமான சுதர்சனன், (தன் எதிரியை) எரித்துவிடுபவனைப் போலக் கோபத்துடன், தங்கச் சிறகுகள் கொண்ட அழகிய கணைகளை எவினான். பிறகும் அவன் {சுதர்சனன்}, நெருப்புக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகள் கொண்டவையும், தன் வில்லின் நாணைக் காதுவரை இழுத்து ஏவப்பட்டவையுமான மூன்று அழகிய கணைகளால் தன் எதிரியை மீண்டும் துளைத்தான். சாத்யகியின் கவசத்தைப் பிளந்த அவை, பின்னவனின் {சாத்யகியின்} உடலுக்குள் ஊடுருவின.
அதே போலவே அவன் (இளவரசனான சுதர்சனன்), சுடர்மிக்க நான்கு பிற கணைகளைக் குறிபார்த்து, அவற்றைக் கொண்டு, வெள்ளிநிறம் போல வெண்மையாக இருந்த சாத்யகியின் நான்கு குதிரைகளைத் தாக்கினான். அவனால் {சுதர்சனனால்} இப்படிப் பீடிக்கப்பட்டவனும், இந்திரனுக்கு இணையான ஆற்றலையும் பெரும் சுறுசுறுப்பையும் கொண்டவனுமான சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கூரிய கணைகளால் சுதர்சனனின் குதிரைகளைக் கொன்று உரக்க முழங்கினான். பிறகு சக்ரனின் {இந்திரனின்} வஜ்ரத்துக்கு ஒப்பான ஒரு பல்லத்தால் சுதர்சனனின் தேரோட்டியுடைய தலையை வெட்டிய அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, யுக நெருப்புக்கு ஒப்பான க்ஷுரப்ரம் ஒன்றால், ஓ! மன்னா, பழங்காலத்தில் போரில் வலிமைமிக்கப் பலனின் தலையைப் பலவந்தமாக வெட்டிய வஜ்ரதாரியைப் {இந்திரனைப்} போலக் காது குண்டலங்களைக் கொண்டதும், முழு நிலவுக்கு ஒப்பானதும், மிகப் பிரகாசமான முகத்தால் அலங்கரிக்கப்பட்டதும் சுதர்சனனின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினான். பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்த யது குலத்து உயர் ஆன்மக் காளை {சாத்யகி}, இப்படி அந்த அரசபேரனை {சுதர்சனனைக்} கொன்று, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்து, தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.
பிறகு, மனிதர்களில் வீரனான அந்த யுயுதானன் {சாத்யகி}, தனக்கு முன் சென்ற அர்ஜுனனின் பாதையிலேயே சென்று, (அப்படிச் செல்கையில்) உமது துருப்புகள் அனைத்தையும் தன் கணைகளின் மேகங்களால் தடுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியபடி அந்தச் சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட அதே தேரில் சென்றான். அவன் {சாத்யகி}, தன் வழியில் உள்ள அனைத்தையும் எரித்துச் செல்லும் காட்டுத் தீயைப் போலத் தன் கணைகள் அடையும் தொலைவில் இருந்த எதிரிகள் அனைவரையும் எரித்ததால், அங்கே இருந்த முதன்மையான வீரர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, அவனால் {சாத்யகியால்} அடையப்பட்ட முதன்மையான அதிசய சாதனைகளைப் பாராட்டினர்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |