Ekalavya lay dead! | Udyoga Parva - Section 48d | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 8) {யானசந்தி பர்வம் - 2}
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனை வெல்ல விரும்புவன், அடைய முடியாததை விரும்புகிறான் என்று அர்ஜுனன் சொல்வது; மேலும், கிருஷ்ணன் ருக்மினியைக் கடத்தியது, சுதர்சனனை விடுவித்தது, பாண்டிய மன்னனைக் கொன்றது, கலிங்கர்களைக் கொன்றது, வாராணசி நகரத்தை எரித்தது, ஏகலவ்யனைக் கொன்றது, கம்சனைக் கொன்றது, சால்வனை வென்றது, அசுரர்களான நரகன் மற்றும் முரனைக் கொன்றது, அதன்காரணமாகத் தேவர்களிடம் கிருஷ்ணன் பெற்ற வரம் ஆகியவற்றையும் சொல்லி, அப்படிப்பட்ட கிருஷ்ணனை துரியோதனன் சிறையிலடைக்க நினைக்கிறான் என்றும், தனக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் பிளவை உண்டாக்கப் பார்க்கிறான் என்றும், அஃது எவ்வளவு தூரம் துரியோதனனால் ஆகும் என்பதைப் போரில் அவன் காண்பான் என்றும் அர்ஜுனன் சஞ்சயனிடம் சொன்னது...
{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “பெரும் சக்தியுடையவனும், வீரர்களில் முதன்மையானவனும் வசுதேவரின் மகனுமான கிருஷ்ணனைப் போரில் வெல்ல விரும்புபவன், தன் இரு கரங்களின் உதவியை மட்டுமே கொண்டு, அளவிலா நீரைக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த பெரும் சமுத்திரத்தைக் கடக்க விரும்புபவன் ஆவான். உயர்ந்திருக்கும் கைலாச மலையைத் தன் உள்ளங்கையால் அடித்துப் பிளந்துவிட விரும்புபவன், தனது கைகளில் இருக்கும் நகங்கள் தேய்ந்து போனாலும், அந்த மலைக்குச் சிறு பாதிப்பையும் அவனால் ஏற்படுத்த இயலாது.
போரில் வாசுதேவனை வெல்ல விரும்புபவன், எரியும் தழலை தன் இரு கைகளால் அணைப்பவனாக, சூரியனையும் சந்திரனையும் தடுப்பவனாக, தேவர்களின் அமிர்தத்தைத் தன் வலிமையால் கவர்பவனாக இருக்க வேண்டும்.
ஒரே தேரில் சென்று, போரில் தன் பலத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, போஜ இனத்தின் அரச வீரர்களை {மன்னர்களை} வெட்டி வீழ்த்தி, பெரும் புகழ்பெற்ற ருக்மிணியைக் கடத்தித் தனது மனைவியாக்கி, பிறகு அவள் மூலமாக உயர் ஆன்ம பிரத்யும்னனைப் பெற்றவனே அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}.
காந்தார நாட்டை விரைந்து அழித்து, நக்னஜித்தின் மகன்கள் அனைவரையும் வென்று, அடைத்து வைக்கப்பட்டிருந்த மன்னன் சுதர்சனனை, {தன்} பெரும் சக்தியை வெளிப்படுத்தி, விடுவித்தவனே இந்தத் தேவர்களுக்குப் பிடித்தமானவன் {கிருஷ்ணன்}.
தன் மார்பால் மன்னன் பாண்டியன் [1] மார்பை மோதி அவனை {பாண்டியனைக்} கொன்றவனும், கலிங்கர்களை [2] வீழ்த்தியவனும் இவனே {கிருஷ்ணனே}. பிறரால் வீழ்த்தப்பட முடியாதவனான இவனாலேயே வாராணசி நகரம் {காசி} எரிக்கப்பட்டுப் பல வருடங்கள் மன்னனில்லாமல் இருந்தது.
[1] கவாடபுரத்துப் பாண்டியன் என்று வேறு பதிப்பில் இருக்கிறது.
[2] கலிங்கர்களையும் தந்தவக்தரனையும் கொன்றான் என்று வேறு பதிப்பில் இருக்கிறது.
நிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யன் [3], எப்போதும் இவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} போர் அறைகூவல் விடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்; ஆனால், மலைமீது மூர்க்கமாக அடித்து வீசப்பட்ட அசுரன் ஜம்பன் {ஜம்பாசுரன்} போல, {அந்த ஏகலவ்யன்} கிருஷ்ணனால் வெட்டுண்டு இறந்து கிடக்கிறான்.
[3] ஆதிபர்வம் பகுதி 134ல் ஏகலவ்யன் முதலில் தோன்றுகிறான், பின்பு, சபாபர்வம் பகுதி 24ல் ஜராசந்தன் கொல்லப்படுவது விரிவாகச் சொல்லப்படுகிறது. ஜராசந்தனின் மரணத்திற்குப் பிறகு யுதிஷ்டிரன் செய்த ராஜசூய வேள்வி சபா பர்வம் பகுதி 43ல் வருகிறது. அங்குக் கூடியிருந்த அவையில் ஏகலவ்யன் இருந்ததாகக் குறிப்பு ஒன்று வருகிறது. அதன் பிறகு சபா பர்வம் பகுதி 52ல் ராஜசூய வேள்வி செய்து முடித்த யுதிஷ்டிரனுக்கு ஏகலவ்யன் காலணிகளைப் பரிசளித்ததாக ஒரு குறிப்பு வருகிறது. அதற்குப் பிறகு உத்யோக பர்வத்தின் இந்தப் பகுதி 48ல் தான், ஏகலவ்யன் கிருஷ்ணனால் கொல்லப்பட்டதாக ஒரு குறிப்பு வருகிறது.
தனக்கு அடுத்தபடியாகப் பலதேவனைக் {பலராமனைக்} கொண்டவனும் {having Baladeva for his second}, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் மத்தியில், சபையில் அமர்ந்திருந்த உக்கிரசேனனின் தீய மகனைக் (கம்சனைக்) கொன்று, {அந்த} நாட்டை உக்கிரசேனனிடமே கொடுத்தவனும் இந்தக் கிருஷ்ணனே.
தான் கொண்ட மாய சக்திகளின் விளைவால் அச்சமற்றவனாகி வானத்தில் நிலைத்திருந்த {வானத்தில் இருந்து போர் செய்த} சௌபத்தின் தலைவனான மன்னன் சால்வனிடம் போரிட்டவன் இந்தக் கிருஷ்ணனே; (சௌபத்தின் தலைவனால் {சால்வனால்}) வீசப்பட்ட கடுமையான சதாக்னியை, சௌபத்தின் வாயிலில் நின்று தனது கரங்களில் பிடித்தவன் இவனே {இந்தக் கிருஷ்ணனே}. இவனுடைய {கிருஷ்ணனுடைய} வலிமையை எந்த மனிதனால் தாங்கிக் கொள்ள முடியும்?
வல்லமைமிக்கதும், அணுக முடியாததும், தாங்க முடியாததுமான பிராக்ஜோதிஷம் என்ற நகரத்தை அசுரர்கள் கொண்டிருந்தனர். அதிதியிடம் தான் அபகரித்து வந்த காதணிகளை {ரத்னகுண்டலங்களை}. பூமியின் {பூமாதேவியின்} வலிமைமிக்க மகனான நரகன் {நரகாசுரன்}, அங்கேதான் {பிராக்ஜோதிஷத்தில்தான்} வைத்திருந்தான்.
சக்ரனின் {இந்திரனின்} தலைமையில் கூடியிருந்த மரணத்திற்கு அஞ்சாத தேவர்களே கூட அவனை {நரகாசுரனை} வெல்ல இயலாதவர்களாகவே இருந்தார்கள். கேசவனின் {கிருஷ்ணனின்} ஆற்றல், வலிமை, {இவன் கொண்டிருந்த} தடுக்க முடியாத ஆயுதம் ஆகியவற்றைக் கண்டும், இவனது {கிருஷ்ணனின்} பிறப்பின் நோக்கத்தை அறிந்தும், அசுரர்களை அழிக்கும் பணியில் இவனை {கிருஷ்ணனை} தேவர்கள் அமர்த்தினார்கள்.
வெற்றியை உறுதி செய்யும் தெய்வீகப் பண்புகள் அனைத்தையும் தன்னிடம் கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, மிகக் கடினமான இந்தப் பணியைத் தானே மேற்கொள்ள ஏற்றுக் கொண்டான். நிர்மோசனம் என்ற நகரத்தில் இந்த வீரன் {கிருஷ்ணன்}, ஆறாயிரம் {6000} அசுரர்களைக் கொன்று, எண்ணிலா கூர்முனைக் கணைகளைத் துண்டுகளாக அறுத்துப் போட்டு, முரனையும், ராட்சசர்கள் கூட்டத்தையும் கொன்று, அந்த நகரத்திற்குள் {நிர்மோசனத்திற்குள்} நுழைந்தான்.
அங்கேதான் {நிர்மோசனத்தில்தான்} வலிமைமிக்க நரகனுக்கும் {நரகாசுரனுக்கும்}, அளவிலா சக்தி கொண்ட விஷ்ணுவுக்கும் இடையில் அந்த மோதல் நிகழ்ந்தது. காற்றால் வேரோடு சாய்க்கப்பட்ட கோங்கு மரம் போல, கிருஷ்ணனால் கொல்லப்பட்ட நரகன் அங்கே உயிரற்றுக் கிடக்கிறான். அழகாலும், சாகாப்புகழாலும் அலங்கரிக்கப்பட்டவனும் ஒப்பற்ற ஆற்றல் கொண்டவனும் கற்றவனுமான கிருஷ்ணன், முரனையும், பூமியின் {பூமாதேவியின்} மகனான நரகனையும் கொன்று, ரத்தினங்களால் ஆன அந்தக் காதணிகளையும் மீட்டுத் திரும்பி வந்தான்.
அந்தப் போரில், இவன் {கிருஷ்ணன்} செய்த பயங்கரச் சாதனைகளைச் சாட்சியாகக் கண்ட தேவர்கள் {கிருஷ்ணனிடம்}, “போரில் உனக்கு எப்போதும் களைப்பேற்படாது, ஆகாயமோ, நீரோ உனது வழியைத் தடை செய்யாது {ஆகாயத்திலும், நீரிலும் செல்லும் சக்தி உனக்குக் கிடைக்கும்}. ஆயுதங்கள் உன் உடலைத் துளைக்காது” என்று இவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அருளினர். இவை அனைத்தினாலும், கிருஷ்ணன், தனக்குப் போதுமான வெகுமதி கிடைத்ததாகக் கருதினான்.
அளவிலாத பெரும் வலிமையைக் கொண்ட வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} அறங்கள் அனைத்தும் {குண நிறைவுகள் அனைத்தும்} இருக்கின்றன. அளவற்ற சக்தி வாய்ந்தவனும், தாங்கிக் கொள்ள முடியாதவனுமான இந்த விஷ்ணுவை {கிருஷ்ணனை}, இன்னும் கூடத் திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} வெல்லவே விரும்புகிறான். அதனாலேயே அந்த இழிந்தவன் {துரியோதனன்}, அடிக்கடி இவனைச் சிறையிலடைக்க [4] எண்ணுகிறான். எனினும், இவை யாவற்றையும் கிருஷ்ணன் எங்களுக்காகப் பொறுத்து வருகிறான் {மன்னித்து வருகிறான்}. அந்த இழிந்தவன் {துரியோதனன்}, கிருஷ்ணனுக்கும் எனக்கும் இடையில் திடீர்ப் பிளவை உண்டாக்கவும் முயன்று வருகிறான். எனினும், பாண்டவர்களிடம் கிருஷ்ணன் கொண்ட பாசத்தை அகற்ற, தான் எவ்வளவு தூரம் திறன்பெற்றவன் என்பதைப் போர்க்களத்தில் அவன் {துரியோதனன்} காண்பான்.
[4] இந்த இடத்தில் துரியோதனன் கிருஷ்ணனைக் கட்ட முயன்று வருகிறான் என்று ஒரு பதிப்பிலும், எப்போதும் கிருஷ்ணனை எதிர்த்து வாதாடி வருகிறான் என்று மற்றொரு பதிப்பிலும் வருகிறது.