Satyaki defeated the mountaineers! | Drona-Parva-Section-120 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 36)
பதிவின் சுருக்கம் : சாத்யகியின் திறனை வியந்த திருதராஷ்டிரன்; சாத்யகிக்கு எதிராக மலைநாட்டினரைத் தூண்டிய துச்சாசனன்; சாத்யகியால் கொல்லப்பட்ட யானைகளும், குதிரைகளும், வீரர்களும்; கற்களைக் கொண்டு போரிடும் மலைவாசிகளின் போர்முறை; சாத்யகியால் கொல்லப்பட்ட மலைவாசிகள்; துரோணரும் அவரது தேரோட்டியும் பேசிக்கொண்டது; சாத்யகிக்கு அஞ்சி துரோணரை நோக்கி ஓடி வந்த கௌரவர்கள்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் பெரும்படையைக் கலங்கடித்தபடியே அர்ஜுனனை நோக்கிச் செல்வதைக் கண்டு, ஓ! சஞ்சயா, உண்மையில் வெட்கங்கெட்டவர்களான என் மகன்கள் என்ன செய்தனர்? சவ்யசச்சினுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனான அந்த யுயுதானன் {சாத்யகி} தங்கள் எதிரில் இருந்த போது, உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்த இழிந்தவர்களால் போரில் எப்படித் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்ய முடிந்தது? போரில் வெல்லப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் என்ன செய்தனர்? உலகம் பரந்த புகழைக் கொண்ட சாத்யகியால், உண்மையில், போரில் எப்படி அவர்களைக் கடந்து செல்ல முடிந்தது? ஓ! சஞ்சயா, என் மகன்கள் உயிரோடிருக்கையிலேயே அந்தச் சிநியின் பேரனால் {சாத்யகியால்} எப்படிப் போரிட முடிந்தது? இவை யாவையும் எனக்குச் சொல்வாயாக. ஓ! ஐயா {சஞ்சயா}, உன்னிடமிருந்து கேட்டவாறே, ஒருவனுக்கும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பலருக்கும் இடையில் நடந்த அம்மோதல் மிக அற்புதமானாதாகவே இருக்கிறது.
ஓ! சூதா {சஞ்சயா}, சாத்வத குல வீரனான தனி ஒருவனால் {சாத்யகியால்}, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் கொல்லப்பட்டதால் விதியானது இப்போது என் மகன்களுக்குச் சாதமானதாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஐயோ, ஓ! சஞ்சயா, கோபத்தால் தூண்டப்பட்ட யுயுதானன் {சாத்யகி} என்ற ஒற்றை வீரனுக்குக்கூட என் படை இணையானதாக இல்லையே. {அப்படியிருக்கையில்} பாண்டவர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. ஆயுதங்களில் திறன்மிக்கவரும், போர்க்கலையின் முறைகள் அனைத்தையும் அறிந்தவரான துரோணரையே போரில் வென்ற சாத்யகி, சிறு {அற்ப} விலங்குகளைக் கொல்லும் ஒரு சிங்கத்தைப் போல என் மகன்களைக் கொன்றுவிடுவான். போரில் மூர்க்கமாகப் போரிட்டும் கிருதவர்மன் முதலிய எண்ணற்ற வீரர்களால் யுயுதானனைக் கொல்ல முடியவில்லையே. பின்னவன் {சாத்யகி} என் மகன்களைக் கொன்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை. சிநியின் புகழ்பெற்ற பேரன் போரிட்டது போலப் பல்குனனேகூட {அர்ஜுனனேகூட} போரிடவில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய ஆலோசனைகளாலும், துரியோதனனின் செயல்களாலுமே இவை யாவும் வந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நான் உம்மிடம் சொல்லப் போவதைக் கவனமாகக் கேட்பீராக.
உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், சம்சப்தகர்கள் அனைவரும் கடுமையாகப் போரிடத் தீர்மானித்து மீண்டும் திரண்டனர். துரியோதனன் தலைமையில் மூவாயிரம் {3000} வில்லாளிகளும், சகர்கள், காம்போஜர்கள், பாஹ்லீகர்கள், யவனர்கள், பாரடர்கள் [1], கலிங்கர்கள், தங்கணர்கள், அம்பஷ்டர்கள், பிசாசர்கள் {பைசாசர்கள்}, பர்ப்பரர்கள், சினத்தால் தூண்டப்பட்டு, கற்களை ஆயுதமாக ஏந்திய மலை நாட்டினர் ஆகியோர் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க நெருப்பை எதிர்க்கும் விட்டிற்பூச்சிகளைப் போல அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தனர். அதே போல, ஓ! மன்னா, ஐநூறு {500} வீரர்களான பிறரும் சாத்யகியை எதிர்த்து விரைந்தனர். ஆயிரம் {1000} தேர்களையும், பெரும் தேர்வீரர்களான நூறு பேரையும், ஆயிரம் {1000} யானைகளையும், இரண்டாயிரம் {2000} வீரர்களையும், எண்ணற்ற காலாட்படை வீரர்களையும் கொண்ட மற்றொரு பெரிய படையும் சிநியின் பேரனை எதிர்த்து விரைந்தது.
[1] கங்குலியில் இங்கே Paradas என்று இருக்கிறது. வேறு ஒரு பதிப்பில் இங்குப் {வேறு} பாரதர்கள் என்று இருக்கிறது. இவர்கள் பரதவம்சத்தவர் அல்ல. இன்றைய பலுச்சிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்தப் பாரடர்கள் என்று புரானிக் என்சைக்ளோபீடியா சொல்கிறது.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துச்சாசனன், "அவனை {சாத்யகியைக்} கொல்வீராக" என்று சொல்லி அந்த வீரர்கள் அனைவரையும் தூண்டியபடியே சாத்யகியைச் சூழ்ந்து கொண்டான். அந்த எண்ணிலடங்கா எதிரிகளுடன், தனி ஒருவனாக அச்சமற்றவகையில் போராடிய சிநியின் பேரனுடைய நடத்தை மகத்தானதாகவும், அற்புதமானதாகவும் இருப்பதை நாங்கள் கண்டோம். அவன் {சாத்யகி}, தேர்வீரர்கள் அடங்கிய அந்த மொத்த படையையும், அந்த யானைப் படையையும், அந்தக் குதிரைவீரர்கள் அனைவரையும், கள்வர்களின் அந்தப் படை முழுவதையும் கொன்றான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்களால் மினுமினுக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போல, அந்தப் போர்க்களமானது, உடைந்த தேர்ச்சக்கரங்கள், அவனது {சாத்யகியின்} வலிமைமிக்க ஆயுதங்களால் நொறுக்கப்பட்ட எண்ணற்ற அக்ஷங்கள் {ஏர்க்கால்கள்}, துண்டுகளாகக் குறைக்கப்பட்ட அழகிய தேர் அச்சுக்கள், நசுங்கிய யானைகள், வீழ்ந்த கொடிமரங்கள், சிதறிக் கிடக்கும் கவசங்கள் மற்றும் கேடயங்கள், மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், அனுஷ்கரங்கள் {இருசுக்கட்டைகள்} ஆகியவற்றால் விரவி கிடந்தது [2].
[2] வேறொரு பதிப்பில் இதற்குப் பிறகு இன்னும் அதிகமாக, "மலைகளின் வடிவம் போன்ற வடிவத்தையுடைவையும், மிலேச்சர்களால் ஏறப்பட்டவையும், விள்ளப்பட்ட {கட்டிச் சேர்க்கப்பட்ட} மைக்கட்டி போன்றவையும், கீழே விழுந்திருப்பவையுமான பெரும் யானைகளாலும், பருத்திருக்கும் மலை போன்றவையான விலங்குகளாலும், மந்தரங்களாலும், பத்ரங்களாலும், மிருகமந்தரங்களாலும், மந்தரபத்ரங்களாலும், மந்தரமிருகங்களாலும், மிருகபத்ரங்களாலும், பத்ரமிருகங்களாலும் ஆங்காங்கு யுத்த பூமியானது வியாபிக்கப்பட்டிருந்தது" என்று இருக்கிறது.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யானைகளில் முதன்மையானவை பலவும், ஓ! மன்னா, மலைகளைப் போலப் பெரியவையும், அஞ்சனம், வாமனம், மற்றும் பிற இனங்களில் பிறந்த முதன்மையான யானைகள் பலவும், உயிரையிழந்து தரையில் கிடந்தன [3]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சாத்யகியால், வனாயு, மலைநாடு, காம்போஜம், பாஹ்லீக இனங்களைச் சேர்ந்த முதன்மையான பல குதிரைகள் கொல்லப்பட்டன. அந்தச் சிநியின் பேரன், பல்வேறு மாநிலங்களில் பிறந்தவர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுமான காலாட்படை வீரர்களை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றான்.
[3] வேறொரு பதிப்பில், "அஞ்சனத்தின் வம்சத்திற் பிறந்தவையும், வாமனத்தினுடைய குலத்தில் தோன்றியவையும், சுப்ரதீகத்தின் குலத்தில் தோன்றியவையும், குமுதத்தினுடைய வம்சத்தில் தோன்றியவையும், ஐராவதத்தின் குலத்தில் பிறந்தவையும், அவ்வாறே மற்றத்திக்கஜங்களுடைய குலங்களில் தோன்றியவையுமான பல சிறந்த யானைகள் அடிக்கப்பட்டு விழுந்தன" என்று இருக்கிறது
அந்தப் படைவீரர்கள் இப்படிக் கொல்லப்பட்டு வருகையில் கள்வர்களிடம் பேசிய துச்சாசனன், "அறநெறியறியா வீரர்களே போரிடுவீராக! ஏன் பின்வாங்குகிறீர்?" என்றான். தன் வார்த்தைகளைக் கேளாமல் ஓடிச் செல்லும் அவர்களைக் கண்டவனும், உமது மகனுமான துச்சாசனன், கற்களைக் கொண்டு போரிடுவதில் திறம்பெற்றவர்களான துணிச்சல் மிக்க அந்த மலைவாசிகளிடம், "கற்களைக் கொண்டு போரிடுவதில் நீங்கள் சாதித்தவர்களாக இருக்கிறீர்கள். எனவே நிற்பீராக. அந்த வீரன் {சாத்யகி} போரிடும் விருப்பத்துடன் இருப்பினும், அவன் {சாத்யகி} உங்கள் போர் முறையை அறியாதவனாவான். கௌரவர்கள் அனைவரும் இந்தப் போர்முறையை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். சாத்யகியை நோக்கி விரைவீர். அஞ்சாதீர். சாத்யகியால் உங்களை அணுக இயலாது" என்று சொல்லி அவர்களைத் {மலைவாசிகளைத்} தூண்டினான்.
இப்படித் தூண்டப்பட்டவர்களும், கற்களைக் கொண்டு போரிடும் முறையை அறிந்தவர்களும், மலைவாசிகளுமான அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும், மன்னனை நோக்கி விரையும் அமைச்சர்களைப் போலவே அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} நோக்கி விரைந்தனர். பிறகு அந்த மலைவாசிகள், யானைகளின் தலையைப் போன்று பெரிய அளவிலான கற்களைத் தங்கள் கரங்களில் உயர்த்தியபடியே அந்தப் போரில் யுயுதானனுக்கு எதிராக நின்றனர். உமது மகனால் {துச்சாசனனால்} தூண்டப்பட்ட பிறரும், ஏவுகணைகளைத் தரித்துக் கொண்டு அந்தச் சாத்வதனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தில், பின்னவனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது சாத்யகி, கற்களைக் கொண்டு போரிடும் விருப்பத்தால் தன்னை நோக்கி விரைந்து வரும் அவ்வீரர்களைக் குறிபார்த்து, அவர்கள் மேல் கூரிய கணைகளை ஏவினான். அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, பாம்புகளைப் போன்று தெரிந்த அந்தக் கணைகளால், அந்த மலைவாசிகள் வீசிய கற்களின் அடர்த்தியான மழையைத் துண்டுகளாக வெட்டினான். சுடர்மிக்க விட்டிற்பூச்சிகளைப் போலத் தெரிந்த அந்தக் கற்களின் துண்டுகள், பல போராளிகளைக் கொன்றன. அதன்பேரில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, "ஓ!" என்றும், "ஐயோ" என்றும் அந்தக் களத்தில் கதறல்கள் எழுந்தன. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கரங்களில் பெரும் கற்களை உயர்த்திப் பிடித்திருந்த துணிச்சல் மிக்க ஐநூறு {500} போர் வீரர்களின் கரங்களும் வெட்டப்பட்டுக் கீழே தரையில் கிடந்தன. மேலும் முழுமையாக ஆயிரம் {1000} பேரும், அதன் பிறகு ஒரு நூறாயிரம் {1,00,000} பேரும், கற்களைப் பிடித்திருந்த நிலையிலேயே தங்கள் கரங்கள் வெட்டப்பட்டுச் சாத்யகியை அணுகமுடியாமல் கீழே விழுந்தனர். உண்மையில் சாத்யகி, கற்களைக் கொண்டு போரிட்ட அந்த வீரர்களில் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்றான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தது.
பிறகு அவர்களில் பலர் மீண்டும் போரிடத் திரும்பி கற்களின் மாரியைச் சாத்யகியின் மீது பொழிந்தனர். வாள்கள் மற்றும் வேல்கள் தரித்த தரதர்கள், தங்கணர்கள், கசர்கள், லம்பகர்கள், புளிந்தர்கள் ஆகியோரில் பலர் அவன் {சாத்யகியின்} மீது தங்கள் ஆயுதங்களை வீசினர். எனினும், ஆயுதப் பயன்பாடுகளை நன்கறிவந்தனான சாத்யகி, அந்தக் கற்களையும், ஆயுதங்களையும் தன் கணைகளால் வெட்டினான். சாத்யகியின் கூரிய கணைகள் துளைத்து, ஆகாயத்தில் உடைக்கப்பட்ட அந்தக் கற்கள் உண்டாக்கிய அந்தக் கடும் ஒலியால் அச்சமடைந்த பல தேர்வீரர்களும், குதிரைகளும், யானைகளும் போரில் இருந்து ஓடின. அந்தக் கற்களின் துண்டுகளால் தாக்கப்பட்ட மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன, குளவிகளால் கடிபட்டதைப் போல உணர்ந்து போரில் நிற்க முடியாதவர்களாக ஆனார்கள். (சாத்யகியைத் தாக்கிய) யானைகளில் எஞ்சியவை சில குருதியால் நனைந்து, தங்கள் தலைகளும், கும்பங்களும் பிளக்கப்பட்டு யுயுதானனுடைய தேரின் அருகில் இருந்து தப்பி ஓடின. அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மாதவனால் {சாத்யகியால்} இப்படிக் கலங்கடிக்கப்பட்ட உமது துருப்புகளுக்கு மத்தியில் அலைகள் நிரம்பிய பெருங்கடலைப் போல ஆரவாரம் எழுந்தது.
அந்தப் பெரும் ஆரவாரத்தைக் கேட்ட துரோணர், தன் தேரோட்டியிடம், "ஓ! சூதா, சாத்வத குலத்தைச் சேர்ந்த அந்தப் பெரும் தேர்வீரன் {சாத்யகி}, கோபத்தால் தூண்டப்பட்டு நம் படையைப் பல்வேறு துண்டுகளாகச் சிதறடித்து, அந்தகனைப் போலவே களத்தில் திரிந்து கொண்டிருக்கிறான். இந்தச் சீற்றமிகு ஆரவாரம் வரும் இடத்திற்குத் தேரைச் செலுத்துவாயாக. யுயுதானன், கற்களைக் கொண்டு போரிடும் மலைவாசிகளுடன் போரிடுகிறான் என்பதில் ஐயமில்லை. நமது தேர்வீரர்களும், மூர்க்கமாக ஓடும் குதிரைகளால் சுமந்து செல்லப்படுவது காணப்படுகிறது. ஆயுதங்களற்றவர்களாகவும், கவசமற்றவர்களாகவும் காயமடைந்தவர்களாகவும் இருக்கும் அவர்களில் பலர் கீழே விழுகின்றனர். இந்தக் குதிரைகள் மூர்க்கமாக ஓடிக் கொண்டிருப்பதால் தேரோட்டிகள் அவற்றைத் தடுக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்" என்றார் {துரோணர்}.
பரத்வாஜர் மகனின் {துரோணரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேரோட்டி, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணரிடம், "ஓ! நீண்ட நாட்களால் {ஆயுளால்} அருளப்பட்டவரே, கௌரவத் துருப்புகள் ஓடுகின்றன. (எதிரியால்) முறியடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் நமது போர்வீரர்களைக் காண்பீராக. மேலும், ஒன்று கூடியிருப்பவர்களான பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் உம்மைக் கொல்லும் விருப்பத்தால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்து வருகின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, இப்பணிகளில் {இவ்விரு பணிகளில்}, கவனத்தைக் கோரும் முதன்மையான பணி யாது என்பதை நீர் தீர்மானிப்பீராக. (முன்னேறி வரும்) பாண்டவப் படையைச் சந்திக்க நாம் இங்கே நிற்க வேண்டுமா? அல்லது (சாத்யகியை நோக்கிச்) நாம் செல்ல வேண்டுமா? சாத்யகியைப் பொறுத்தவரை, இப்போது அவன் நம்மிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கிறான்" என்றான் {துரோணரின் தேரோட்டி}.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தத் தேரோட்டி இப்படிப் பரத்வாஜர் மகனிடம் {துரோணரிடம்} பேசிக் கொண்டிருக்கையில், பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களைக் கொன்றபடி சிநியின் பேரன் {சாத்யகி} அங்கே திடீரெனத் தோன்றினான். அந்தப் போரில் உமது துருப்புகள் இப்படி யுயுதானனால் கொல்லப்படுகையில், யுயுதானனுடைய தேரின் அருகே இருந்து துரோணரின் படைப்பிரிவை நோக்கி அவை ஓடின. அதேபோலவே, எந்தப் (பிற) தேர்வீரர்களோடு சேர்ந்து துச்சாசனன் சென்றானோ, அவர்கள் அனைவரும், துரோணரின் தேர் காணப்பட்ட அந்த இடத்திற்கே பீதியடைந்து விரைந்து வந்தனர்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |