The encounter between Ghatotkacha and Aswatthama! | Drona-Parva-Section-155b | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 04)
பதிவின் சுருக்கம் : பாண்டவப் படையினரைக் கொன்ற துரோணர்; பாண்டவப்படை தப்பி ஓடியது; துரோணரை எதிர்த்த அர்ஜுனனும், பீமனும்; மீண்டும் திரண்ட பாண்டவப் படை; அஸ்வத்தாமனை நோக்கி விரைந்த கடோத்கசன்; கடோத்கசனின் தேர் குறித்த வர்ணனை; கடோத்கசனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த கடும் மோதல்...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அப்போது துரோணருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில், மூவுலகங்களுக்கான ஆட்சி உரிமையில் உள்ள விருப்பத்தால் பலிக்கும் {மகா பலிக்கும்}, தேவர்களுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பாக ஒரு போர் தொடங்கியது.(32) பெரும் சக்தி கொண்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கணை மேகங்களால் பாண்டவப்படையை மூழ்கடித்து, யுதிஷ்டிரனையும் துளைத்தார். மேலும் துரோணர் சாத்யகியைப் பத்து கணைகளாலும், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} இருபதாலும் துளைத்தார்.(33, 34) பிறகு அவர் பீமசேனனை ஒன்பது கணைகளாலும், நகுலனை ஐந்தாலும், சகாதேவனை எட்டாலும், சிகண்டியை நூறு கணைகளாலும் துளைத்தார்.(35) பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரர் {துரோணர்} திரௌபதியின் மகன்கள் (ஐவரில்) ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்தார். மேலும் அவர் {துரோணர்}, விராடனை எட்டு கணைகளாலும், துருபதனை பத்தாலும் துளைத்தார்.(36) பிறகு அவர் {துரோணர்} அம்மோதலில் யுதாமன்யுவை மூன்று கணைகளாலும், உத்தமௌஜஸை ஆறாலும் துளைத்தார். மேலும் பல போராளிகளையும் துளைத்த அவர் {துரோணர்}, பிறகு யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தார்.(37)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரால் கொல்லப்பட்ட பாண்டுமகனின் துருப்புகள் அச்சத்தால், உரத்த ஓலங்களுடன் அனைத்துத் திசைகளிலும் ஓடின.(38) துரோணரால் அப்படிக் கொல்லப்பட்ட அந்தப் படையைக் கண்டவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பல்குனன் {அர்ஜுனன்}, சற்றே கோபத்தால் தூண்டப்பட்டு, ஆசானை {துரோணரை} நோக்கி வேகமாகச் சென்றான்.(39) அந்தப் போரில் துரோணரும் அர்ஜுனனை நோக்கிச் செல்வதைக் கண்ட யுதிஷ்டிரனின் படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீண்டும் அணிதிரண்டது.(40) அப்போது துரோணருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் நேர்ந்தது.
உமது மகன்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பஞ்சுப்பொதியை எரிக்கும் நெருப்பைப் போலப் பாண்டவப் படையை எரிக்கத் தொடங்கினார்.(41) சூரியனைப் போல ஒளிர்ந்தவரும், சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசம் கொண்டவருமான அவர் {துரோணர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்ட தம் வில்லிலிருந்து கடுமையாகவும், தொடர்ச்சியாகவும், கதிர்களைப் போன்ற கணைகளை வெளியிட்டுக் கொண்டும், சூரியனைப் போலச் சுற்றிலும் உள்ள அனைத்தையும் எரித்தபடியே தமது எதிரிகளை எரிப்பதைக்கண்டும் கூட, அவரைத் {துரோணரைத்} தடுக்கக்கூடியவர் எவரும் அந்தப் படையில் இல்லை.(42, 43) துரோணரின் கணைகள், அவரது முகத்துக்கு நேரே அணுகத் துணிந்தோர், அனைவரின் தலைகளையும் வெட்டிவிட்டு, பூமிக்குள் நுழைந்தன. அந்தச் சிறப்புமிக்கப் போர் வீரரால் இப்படிக் கொல்லப்பட்ட அந்தப் பாண்டவப் படை, அர்ஜுனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் தப்பி ஓடியது.(44, 45) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் துரோணரால் இப்படி முறியடிக்கப்பட்ட அந்தப் படையைக் கண்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்}, துரோணரின் தேரை நோக்கிச் செல்லுமாறு கோவிந்தனை {கிருஷ்ணனைக்} கேட்டுக் கொண்டான்.(46) அப்போது தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} வெள்ளி, அல்லது, பசுவின் பால், அல்லது குந்த {குறுக்கத்தி} மலர், அல்லது சந்திரனின் நிறம் கொண்ட அந்தக் குதிரைகளைத் துரோணரின் தேரை நோக்கித் தூண்டினான்.
பல்குனன் {அர்ஜுனன்} துரோணரை நோக்கிச் செல்வதைக் கண்டு, பீமசேனனும் தன் தேரோட்டியிடம்,(47, 48) “துரோணரின் படைப்பிரிவை நோக்கி என்னைச் சுமந்து செல்வாயாக” என்றான். பீமனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி விசோகன், துல்லியமான இலக்கைக் கொண்ட ஜிஷ்ணுவை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து செல்லும்படி தன் குதிரைகளைத் தூண்டினான்.(49) உறுதியான தீர்மானத்துடன் துரோணரின் படைப்பிரிவை நோக்கிச் செல்லும் அந்த இரு சகோதரர்களைக் கண்டவர்களும், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், மத்ஸ்யர்கள், சேதிகள், காருஷர்கள், கோசலர்கள் மற்றும் கைகேயர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(50, 51)
பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் பயங்கரப் போர் ஒன்று நடைபெற்றது. வலிமைமிக்க இரு தேர்க்கூட்டங்களுடன் சென்ற பீபத்சுவும் {அர்ஜுனனும்}, விருகோதரனும் {பீமனும்}, முன்னவன் {அர்ஜுனன்} வலப்புறத்திலும், பின்னவன் {பீமன்} முன்புறத்திலும் என உமது படைகளைத் தாக்கினர் [2]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்த) மனிதர்களில் புலிகளான பீமசேனனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} கண்டவர்களான திருஷ்டத்யும்னனும், பெரும்பலமுடைய சாத்யகியும் அவர்களைப் பின்னால் தொடர்ந்து சென்றனர்.(52, 53) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் இரு படைகளின் விளைவாக அங்கே எழுந்த ஆரவாரமானது, புயலொன்றால் சீற்றத்துடன் தாக்கப்படும் பல கடல்களின் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது. போரில் சாத்யகியைக் கண்ட அஸ்வத்தாமன், சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவஸின்} கொலையால் சினத்தால் நிறைந்து, போரின் முன்னணியில் இருந்த அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.
[2] வேறொரு பதிப்பில், “தென்பக்கத்தை அர்ஜுனனும், வட பக்கத்தைப் பீமனும் தாக்கினார்கள்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “பீபத்சு வலப்புறத்தையும், விருகோதரன் இடப்புறத்தையும் தாக்கினர்” என்றிருக்கிறது.
சினியின் பேரனுடைய {சாத்யகியின்} தேரை எதிர்த்து அந்தப் போரில் விரையும் அவனை {அஸ்வத்தாமனைக்} கண்டவனும், பீமசேனனின் மகனும், பெரும் ராட்சசனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான கடோத்கசன், கரடித் தோல்களால் மறைக்கப்பட்டதும், உருக்காலானதும், பெரியதுமான ஒரு பயங்கரத் தேரில் ஏறி அவனை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான். அந்தப் பெரிய தேரின் உயரம் மற்றும் அகலம் இரண்டும் அளவில் முப்பது நல்வங்கள் [3] இருந்தன. சரியான இடங்களில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுத் தயாரிக்கப்பட்டிருந்த அதன் சடசடப்பொலி பெரும் மேகத்திரள்களுக்கு ஒப்பானதாக இருந்தது.(54-58) அதில் குதிரைகளோ, யானைகளோ பூட்டப்படவில்லை, ஆனால், யானைகளைப் போன்ற உயிரினங்கள் [4] பூட்டப்பட்டிருந்தன. அதன் நெடிய கொடிமரத்தில், சிறகுகளையும், கால்களையும் விரித்தபடியும், கண்களை அகல விரித்த படியும், பயங்கரமாகக் கூச்சலிட்டபடியும் கழுகுகளின் இளவரசன் அமர்ந்திருந்தான். மேலும் சிவப்புக் கொடிகளுடன் கூடிய அது பல்வேறு விலங்குகளின் உள்ளுறுப்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(59, 60) அந்தப் பெரும் வாகனம் எட்டுச் சக்கரங்களை உடையதாக இருந்தது.
[3] ஒரு நல்வம் என்பது நானூறு முழம் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] நீலகண்டர் இவற்றைப் பிசாசங்கள் என்று விளக்குவதாகக் கங்குலி இங்கே குறிப்பிடுகிறார். வேறொரு பதிப்பிலும், பழைய உரையில் பிசாசங்கள் என்றிருப்பதாக அடிக்குறிப்பு ஒன்று இருக்கிறது.
அதில் {அந்தத் தேரில்} ஏறிச் சென்ற கடோத்கசன், வேல்கள் {சூலங்கள்}, கனமான தண்டாயுதங்கள் {உலக்கைகள்}, பாறைகள் {மலைகள்}, மரங்கள் ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டிருந்தவர்களும், கடுந்தோற்றும் கொண்டவர்களும், முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி அளவுக்கு இருந்தவர்களுமான ராட்சசர்களால் சூழப்பட்டிருந்தான். பிரளய காலத்தில் தண்டாயுதத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பாக உயர்த்திப் பிடிக்கப்பட்ட வில்லுடன் முன்னேறி வரும் அவனை {கடோத்கசனைக்} கண்ட பகை மன்னர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். மலைச்சிகரத்தைப் போலத் தெரிந்தவனும், அச்சந்தரும் வகையில் பயங்கரத்தோற்றம் கொண்டவனும், பயங்கரப் பற்கள், கடும் முகம், அம்பு போன்ற காதுகள், உயர்ந்த தாடை எலும்புகள், மேல்நோக்கி நிற்கும் விறைப்பான முடி, பயங்கரக் கண்கள், சுடர்விடும் வாய், ஆழமான வயிறு, குறுகிய திறப்புக் கொண்ட ஆழமான பள்ளத்தைப் போல அகன்ற உணவுக்குழாய் ஆகியவற்றைக் கொண்டவனும், தலையில் கிரீடம் தரித்தவனும், அனைத்து உயிரினங்களையும் அச்சத்தால் பீடிக்கவல்லவனும், யமனைப் போல அகல விரிந்த வாய் கொண்டவனும், பெரும் காந்தி கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் கலங்கடிக்கவல்லவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அந்தக் கடோத்கசன் தங்களை நோக்கி வருவதைக் கண்ட உமது மகனின் {துரியோதனனின்} படையானது, காற்றினால் (அசைவால்) உண்டாகும் கடும் அலைகளால் கலங்கடிக்கப்படும் கங்கையின் ஓடையைப் போலப் பெரும் கலக்கமடைந்து அச்சத்தால் பீடிக்கப்பட்டது.(61-67) கடோத்கசனால் செய்யப்பட்ட சிங்கமுழக்கங்களால் பீதியடைந்த யானைகள் சிறுநீர் கழிக்கத்தொடங்கின, மன்னர்கள் நடுங்கத் தொடங்கினர்.(68)
இரவின் விளைவால் மிகப் பலமடைந்த ராட்சசர்களால் பொழியப்பட்ட அடர்த்தியான கற்களின் மழையொன்று அந்தப் போர்க்களத்தில் விழத் தொடங்கியது.(69) இரும்புச்சக்கரங்கள், புசுண்டிகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், சதாக்னிகள் மற்றும் கோடரிகள் ஆகியவற்றின் தடையற்ற மழை அங்கே பொழிந்தது.(70) அச்சந்தருவதும், கடுமையானதுமான அந்தப் போரைக் கண்ட மன்னர்கள், உமது மகன்கள் ஆகியோரும், கர்ணனும் கூட வலியை மிகவும் உணர்ந்து தப்பி ஓடினர்.(71) தன் ஆயுத வலிமையில் எப்போதும் தற்பெருமை கொண்டவனான துரோணரின் பெருமைமிக்க மகன் {அஸ்வத்தாமன்} மட்டுமே அச்சமில்லாமல் நின்றான். மேலும் அவன் {அஸ்வத்தாமன்} விரைவில் கடோத்கசனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயையை விலக்கினான்.(72)
தன் மாயை அழிக்கப்பட்டதும் சினமடைந்த கடோத்கசன், (அஸ்வத்தாமன் மீது) கடுங்கணைகளை ஏவினான். கோபக்காரப் பாம்புகள் எறும்புப்புற்று ஒன்றை வேகமாகத் துளைத்துச் செல்வதைப் போலவே அவை துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்தன.(73) அஸ்வத்தாமனின் உடலைத் துளைத்துச் சென்ற அக்கணைகள் குருதியால் நனைந்து, எறும்புப்புற்றுக்குள் செல்லும் பாம்புகளைப் போல வேகமாகப் பூமிக்குள் நுழைந்தன.(74) எனினும், வேகமான கரங்களையும், பெரும் ஆற்றலையும் கொண்ட அஸ்வத்தாமன், கோபத்தால் நிறைந்து, பத்து கணைகளால் கடோத்கசனைத் துளைத்தான்.(75) துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} தன் முக்கிய அங்கங்களில் ஆழத் துளைக்கப்பட்ட கடோத்கசன், பெரும் வலியை உணர்ந்து, ஆயிரம் ஆரங்களைக் கொண்ட சக்கரம் ஒன்றை எடுத்துக் கொண்டான்.(76)
உதயச் சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட அதன் {அந்தச் சக்கரத்தின்} முனை கத்தியைப் போன்று கூர்மையானதாக இருந்தது. மேலும் அது பல்வேறு ரத்தினங்களாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(77) அஸ்வத்தாமனைக் கொல்ல விரும்பிய பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அந்தச் சக்கரத்தை அவன் மீது வீசினான். அது வேகமாகத் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கிச் சென்ற போது, பின்னவன் {அஸ்வத்தாமன்}, தன் கணைகளால் அதைத் துண்டுகளாக வெட்டினான்.(78) இப்படிக் கலங்கடிக்கப்பட்ட அது, பேறற்ற மனிதனால் பேணிவளர்க்கப்பட்ட நம்பிக்கையைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. தன் சக்கரம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், சூரியனை விழுங்கும் ராகுவைப் போலத் தன் கணைகளால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} வேகமாக மறைத்தான்” {என்றான் சஞ்சயன்}.(79)
-----------------------------------------------------------------------------------துரோண பர்வம் பகுதி – 155ஆ-ல் வரும் மொத்த சுலோகங்கள்-48
ஆங்கிலத்தில் | In English |