Aswatthama killed Ghatotkacha's son! | Drona-Parva-Section-155c | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 04)
பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமனை எதிர்த்த கடோத்கசன் மகன் அஞ்சனபர்வன்; அஞ்சனபர்வனைக் கொன்ற அஸ்வத்தாமன்; கடோத்கசனுக்கும் அஸ்வத்தாமனுக்கு இடையில் நடந்த பேச்சு; அர்ஜுனனை எதிர்த்துச் செல்ல சகுனியைத் தூண்டிய துரியோதனன்...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அதேவேளையில், பெரும் காந்தி கொண்டவனும், கரிய மைக்குவியலுக்கு ஒப்பானவனுமான கடோச்கசனின் மகன் {அஞ்சனபர்வன்}, முன்னேறி வந்து கொண்டிருந்த துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} காற்றின் வழியைத் தடுக்கும் மலைகளின் அரசனை (மேருவைப்) போலத் தடுத்தான்.(80) பீமசேனனின் பேரனான அஞ்சனபர்வனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அஸ்வத்தாமன், பெரும் மேகத்திலிருந்து கொட்டும் மழைத்தாரைகளைத் தாங்கிக் கொள்ளும் மேரு மலையைப் போலத் தெரிந்தான். ஆற்றலில் ருத்ரனுக்கோ, உபேந்திரனுக்கோ இணையான அஸ்வத்தாமன், அப்போது சினத்தால் நிறைந்தான்.(81,82) ஒரு கணையால் அவன் {அஸ்வத்தாமன்} அஞ்சனபர்வனின் கொடிமரத்தை வெட்டினான்; மேலும் இரண்டால் அவனது {அஞ்சனவர்வனின்} இரு சாரதிகளையும், மேலும் மூன்றால் அவனது திரிவேணுகத்தையும் [5] வெட்டினான்.(83) பிறகும் அவன் {அஸ்வத்தாமன்} அந்த ராட்சசனின் {அஞ்சனபர்வனின்} வில்லைத் தன் கணை ஒன்றாலும், நான்கு பிற கணைகளால் அவனது குதிரைகள் நான்கையும் வெட்டினான்.
[5] தேர், வண்டி முதலியவற்றில் சாரதி அமர்வதற்கு உள்ள இடம்.
தேரற்றவனாகச் செய்யப்பட்ட அஞ்சனபர்வன் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டான். அந்த ராட்சசன் கைகளில் இருந்ததும், தங்க நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான அந்தக் கத்தியை மற்றொரு கூரிய கணையால் அஸ்வத்தாமன் இரண்டு துண்டுகளாக வெட்டினான். அப்போது அந்த ஹிடிம்பையின் பேரன் {அஞ்சனபர்வன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கதாயுதத்தைச் சுழற்றி அஸ்வத்தாமன் மீது வீசினான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அதைத் தன் கணைகளால் தாக்கி, பூமியில் விழச் செய்தான். உயரப் பறந்து வானத்தை அடைந்த அஞ்சனபர்வன், கரிய மேகம் ஒன்றைப் போல முழங்கத் தொடங்கினான்.(84-86) அங்கே ஆகாயத்தில் இருந்த படியே அவன் {அஞ்சனபர்வன்} தன் எதிரியின் மீது மரங்களைப் பொழிந்தான். மேகத் திரள்களைத் தன் கதிர்களால் துளைக்கும் சூரியனைப் போலவே, மாயைகளின் கொள்ளிடமாக ஆகாயத்தில் இருந்த அந்தக் கடோத்கசன் மகனை {அஞ்சனபர்வனை} அஸ்வத்தாமன் தன் கணைகளால் துளைத்தான். பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட அந்த ராட்சசன் {அஞ்சனபர்வன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேருக்கு மீண்டும் கீழிறங்கி வந்தான்.(87,88) பிறகு அவன் {அஞ்சனபர்வன்} பூமியின் பரப்பில் உள்ள நெடிய அழகிய மை மலை ஒன்றை {மலை போன்ற மைக்குவியவலைப்} போலத் தெரிந்தான். அப்போது, பழங்காலத்தில் அசுரன் அந்தகனைக் கொன்ற மகாதேவனைப் போல, இரும்பு கவசத்துடன் கூடிய பீமனுடைய மகனின் {கடோத்கசனின்} மகனை {அஞ்சனபர்வனைத்} துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கொன்றான்.
வலிமைமிக்கத் தனது மகன் {அஞ்சனபர்வன்}, அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டதைக் கண்ட கடோத்கசன், துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} வந்து, காட்டுத்தீயைப் போலப் பாண்டவத் துருப்புகளை எரித்து வந்த அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} வீர மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(89-91) கடோத்கசன், “நில்லும், ஓ! துரோண மகனே {அஸ்வத்தாமா} நில்லும். என்னிடம் இருந்து நீர் உயிருடன் தப்ப முடியாது. கிரௌஞ்சனை அழித்த அக்னியின் மகனை {கார்த்திகேயனைப்} போல இன்று நான் உம்மைக் கொல்லப் போகிறேன்” என்றான்.(92) அதற்கு அஸ்வத்தாமன், “ஓ! மகனே {கடோத்கஜா}, செல்வாயாக, ஓ! தெய்வீக ஆற்றல் கொண்டவனே {கடோத்கசா}, பிறருடன் போரிடுவாயாக. ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, தந்தை மகனுடன் போரிடுவது முறையாகாது [6].(93) ஓ! ஹிடிம்பையின் மகனே, நான் உன்னிடம் எந்தக் கோபமும் கொள்ளவில்லை. எனினும், ஒருவனது கோபம் தூண்டப்படும்போது, ஒருவன் தன்னையே கூடக் கொன்றுகொள்ளக் கூடும் [7]” என்றான் {அஸ்வத்தாமன்}.(94)
[6] “பாண்டவர்களும் அஸ்வத்தாமனும் துரோணரின் சீடர்கள் என்பதால் அவர்கள் சகோதரர்களைப் போன்றவர்களே. எனவே, கடோத்கசன் பீமனின் மகன் என்பதால், அவன் அஸ்வத்தாமனுக்குச் சகோதரனின் மகனாவான்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.[7] வேறொரு பதிப்பில், “ரோஷத்துடன் கூடிய பிராணியானது தன்னைக் கூட ஹிம்சித்துக் கொள்ளுமல்லவா?” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓர் உயிரினம் சினத்தால் தூண்டப்படும்போது, (அப்போது) அது தன்னையே கொன்று கொள்ளக்கூடும்” என்றிருக்கிறது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வார்த்தைகளைக் கேட்ட கடோத்கசன், தன் மகனின் வீழ்ச்சியால் துயரத்தில் நிறைந்து, கோபத்தால் தாமிரம் போல் கண்கள் சிவந்து, அஸ்வத்தாமனை அணுகி,(95) “ஓ! துரோண மகனே {அஸ்வத்தாமா}, நான் போருக்குப் பயந்த இழிந்தவன் என்பதைப் போல இவ்வார்த்தைகளால் என்னை அச்சுறுத்துகிறீரா? இந்த உமது வார்த்தைகள் முறையற்றனவாகும்.(96) உண்மையில், கொண்டாடப்படும் குருக்களின் குலத்தில் பீமரால் பெறப்பட்டவன் நான். போரில் ஒருபோதும் புறமுதுகிடாத வீரர்களான பாண்டவர்களின் மகன் நான்.(97) பலத்தில் பத்து கழுத்தோனுக்கு (ராவணனுக்கு) இணையான ராட்சசர்களின் மன்னன் நான். நில்லும், ஓ! துரோண மகனே நில்லும். நீர் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது.(98) நான் இன்றைய போர்க்களத்தில் போரிடும் உமது விருப்பத்தை அகற்றுவேன்” என்றான் {கடோத்கசன்}.
சினத்தால் கண்கள் சிவக்க அஸ்வத்தாமனுக்கு இப்படி மறுமொழிகூறிய அந்த வலிமைமிக்க ராட்சசன் {கடோத்கசன்}, யானைகளின் இளவரசனை எதிர்த்துச் செல்லும் சிங்கம் ஒன்றைப் போலத் துரோணரின் மகனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(99) பிறகு கடோத்கசன், போரில் பயன்படும் தேரொன்றின் அக்ஷத்தின் {ஏர்க்காலின்} அளவுடைய கணைகளை, தேர்வீரர்களில் காளையான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போலப் பொழிந்தான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணை மழை தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் விலக்கினான்.(100, 101) அந்நேரத்தில் ஆகாயத்தில் கணைகளுக்கிடைய (போராளிகளைப் போல) ஒரு மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அந்த இரவு ஆகாயம், விட்டில் பூச்சிகளைப்(கூட்டங்களைப்) போல அந்த ஆயுதங்களின் மோதலால் உண்டான பொறிகளால் பிரகாசமாக ஒளிர்ந்தது. அந்தப் போரில் தன் ஆற்றலில் செருக்குடைய துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} தன் மாயை விலக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், மீண்டும் தன்னைக் கண்களுக்குப் புலப்படாதவனாக ஆக்கிக் கொண்டு {மீண்டும்} ஒரு மாயையை உண்டாக்கினான்.(102,103) சிகரங்களும், மரங்களும் நிறைந்ததும், சூலங்கள், வேல்கள், வாள்கள், கனமான தண்டங்கள் ஆகியன தடையில்லாமல் பாயும்படியான ஓர் அருவியைக் கொண்டதுமான ஒரு மலையின் வடிவத்தை அவன் {கடோத்கசன்} ஏற்றான்.(104) கரிய மைத் திரளைப் போலிருந்த அந்த மலையையும், அதிலிருந்து பாயும் எண்ணற்ற ஆயுதங்களையும் கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சற்றும் அசையவில்லை. அப்போது பின்னவன் {அஸ்வத்தாமன்} வஜ்ர ஆயுதத்தை {வஜ்ராஸ்திரத்தை} [8] இருப்புக்கு அழைத்தான்.(105,106) அவ்வாயுதத்தால் தாக்கப்பட்ட அந்த மலைகளின் இளவரசன் வேகமாக அழிந்தான்.
[8] “இடியின் சக்தியைக் கொண்ட ஆயுதம் {அஸ்திரம்}” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிறகு அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஆகாயத்தில் வானவில்லுடன் கூடிய நீல மேகங்களாகி அந்தப் போரில் துரோணரின் மகன் மீது கற்கள் மற்றும் பாறைகளாலான மழையை மூர்க்கமாகப் பொழியத் தொடங்கினான்.(107) அப்போது ஆயுதங்களை அறிந்த மனிதர்களில் அனைவரிலும் முதன்மையான அந்த அஸ்வத்தாமன், வாயவ்ய ஆயுதத்தைக் குறி பார்த்து, ஆகாயத்தில் எழுந்த அந்த நீல மேகத்தை அழித்தான்(108) மனிதர்களில் முதன்மையான அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்} திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் தன் கணைகளால் மறைத்து, நூறாயிரம் {100,000} தேர்வீரர்களைக் கொன்றான். பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, சிங்கங்கள், அல்லது புலிகள், அல்லது மதங்கொண்ட ஆற்றலைக் கொண்ட யானைகளுக்கு ஒப்பான ராட்சசர்களில், சிலர்கள் யானைகளில் ஏறியும், சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளிலும் எனப் பெரும் எண்ணிக்கையில் வந்தவர்களின் துணையுடன், வில்லை வளைத்துக் கொண்டு தன்னை நோக்கி வரும் கடோத்கசனைக் கண்டான்.(109-111) அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பயங்கர முகங்கள், தலைகள் மற்றும் கழுத்துகள் கொண்ட தன் தொண்டர்கள் துணையுடன் இருந்தான்.(112) அந்த ராட்சசர்களில் பௌலஸ்தியர்கள் மற்றும் யாதுதானர்களும் இருந்தனர் [9]. அவர்கள் ஆற்றலில் இந்திரனுக்கு இணையானவர்களாக இருந்தனர். அவர்கள் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏந்தியவர்களாகவும், பல்வேறு விதங்களிலான கவசங்களைப் பூண்டவர்களாகவும் இருந்தனர்.(113) பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்ட அவர்கள் சினத்தில் பெருகியவர்களாகவும் இருந்தனர். உண்மையில் போரில் எளிதில் வெல்லப்பட முடியாதவர்களான அந்த ராட்சசர்களின் துணையுடனேயே போருக்கு கடோத்கசன் வந்தான்.(114)
[9] இவர்கள் ராட்சசர்களில் வேறு வகையினர் என்று இங்கே கங்குலி விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவர்கள், “புலஸ்திய வம்சத்தில் தோன்றியவர்களும், தமோ குணத்தினால் மூடப்பட்டவர்களும் ஆவர்” என்று சொல்லப்பட்டுள்ளது.
அவர்களைக் கண்ட உமது மகன் துரியோதனன் மிகவும் உற்சாகமற்றவனாக ஆனான். அவனிடம் {துரியோதனனிடம்} துரோண மகன் {அஸ்வத்தாமன்}, “ஓ! துரியோதனா, பொறுப்பாயாக. உனக்கு அச்சம் தேவையில்லை.(115) உனது இந்த வீரச் சகோதரர்களுடனும், இந்திரனின் ஆற்றலைக் கொண்ட இந்தப் பூமியின் தலைவர்களுடனும் ஒருபுறமாக நிற்பாயாக. நீ தோல்வியடைய மாட்டாய். நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். அதே வேளையில் உன் துருப்புகளுக்கும் நீ உறுதியளிப்பாயாக {ஆறுதலளிப்பாயாக}” என்றான் {அஸ்வத்தாமன்}.(116) அதற்குத் துரியோதனன், “உமது இதயம் பெரியதென்பதால், நீர் சொல்வதை நான் அற்புதமாகக் கருதவில்லை. ஓ! கௌதமர் மகனின் {கிருபரின்} மகனே {அஸ்வத்தாமரே}, நீர் எங்களிடம் கொண்ட மதிப்பு பெரியதே” என்றான் {துரியோதனன்}.(117)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அஸ்வத்தாமனிடன் இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {துரியோதனன்}, பிறகு சுபலனின் மகனிடம் {சகுனியிடம்}, “பெரும் வீரமிக்க நூறாயிரம் தேர்வீரர்கள் சூழத் தனஞ்சயன் {அர்ஜுனன்} போரில் ஈடுபடுகிறான். அறுபதாயிரம் தேர்களுடன் நீர் அவனை எதிர்த்துச் செல்வீராக. கர்ணன், விருஷசேனன், கிருபர், நீலன், வடக்கத்தியர் {வடநாட்டு அரசர்கள்}, கிருதவர்மன், புருமித்ரனின் மகன்கள், துச்சாசனன், நிகும்பன், குண்டபேதி, புரஞ்சயன், திருடரதன், பதாகின், ஹேமபுஞ்சகன் {ஹேமகம்பனன், [ஹேமபுஷ்யகன்]}, சல்லியன், ஆருணி, இந்திரசேனன், சஞ்சயன், விஜயன், ஜெயன், கமலாக்ஷன், பரகிராதின், ஜெயதர்மன் {ஜெயவர்மன்}, சுதர்சனன் ஆகியோரும் [10] மேலும் அறுபதாயிரம் காலாட்படை வீரர்களுடன் உம்மைத் தொடர்ந்து வருவார்கள்.(118-122)
[10] வேறொரு பதிப்பில் இந்தப்பட்டியலில் கூடுதலாகச் சுதாபனன், பராக்கிரமன் ஆகியோர் இருக்கின்றனர். மன்மதநாததத்தரின் பதிப்பில் புருகிரமன் என்ற ஒருவன் மட்டுமே கூடுதலாக இருக்கிறான். கங்குலியில் வரும் ஹேமபுஞ்சகன் என்ற பெயர் வேறொரு பதிப்பில் ஹேமகம்பனன் என்றும், மன்மதநாததத்தரின் பதிப்பில் ஹேமபுஷ்யகன் என்றும் இருக்கிறது.
அம்மானே {சகுனியே}, தேவர்களின் தலைவன் அசுரர்களைக் கொல்வதைப் போலவே, பீமன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} மற்றும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரை நீர் கொல்வீராக. உம்மிடமே வெற்றி குறித்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.(123) ஏற்கனவே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அவர்களின் அங்கங்கள் அனைத்தும் மிகவும் சிதைக்கப்பட்டுள்ளன. ஓ! மாமனே {சகுனியே}, அக்னியின் மகன் (கார்த்திகேயன்) அசுரர்களைக் கொன்றதைப் போலவே குந்தியின் மகன்களைக் கொல்வீராக” என்றான் {துரியோதனன்}.(124) உமது மகனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களை அழிப்பதற்காக வேகமாகச் சென்று, உமது மகன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்” {என்றான் சஞ்சயன்}.(125)
----------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 155இ-ல் வரும் மொத்த சுலோகங்கள்-46
----------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 155இ-ல் வரும் மொத்த சுலோகங்கள்-46
ஆங்கிலத்தில் | In English |