Aswatthama applauded by all! | Drona-Parva-Section-155d | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 04)
பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமனின் வில்லை வெட்டிய கடோத்கசன்; கடோத்கசனின் தேரை அழித்த அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனின் தேரில் ஏறிய கடோத்கசன்; ராட்சசக் கூட்டத்தை அழித்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமன் உண்டாக்கிய குருதிப்புனல்; துருபதன் மகன்களையும், குந்திபோஜன் மகன்களையும் கொன்ற அஸ்வத்தாமன்; மயக்கமடைந்த கடோத்கசனை வேறு தேரில் ஏற்றிய திருஷ்டத்யும்னன்; அனைவராலும் புகழப்பட்ட அஸ்வத்தாமன்...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, பிரகலாதனுக்கும் இடையில் நடந்ததைப் போல அவ்விரவில், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்}, துரோணரின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்} இடையிலான போர் நடைபெற்றது.(126) சினத்தில் நிறைந்த கடோத்கசன், நஞ்சையோ, நெருப்பையோ போன்ற பத்து கடுங்கணைகளால் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} மார்பைத் தாக்கினான்.(127) பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} ஏவப்பட்ட அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட அஸ்வத்தாமன், புயலால் அசைக்கப்பட்ட நெடிய மரம் ஒன்றைப் போலத் தன் தேர்த்தட்டில் நடுங்கிக் கொண்டிருந்தான்.(128) கடோத்கசன் மீண்டும் ஒரு பல்லத்தைக் கொண்டு துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} கைகளில் இருந்த பிரகாசமான வில்லை வெட்டினான்.(129) பிறகு பெருங்கடினத்தைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பின்னவன் {அஸ்வத்தாமன்}, (தன் எதிரியின் மீது) மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கூரிய கணைகளைப் பொழிந்தான்.(130) பிறகு அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வானுலாவுபவையும், எதிரிகளைக் கொல்பவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைகள் பலவற்றை வானுலாவும் அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது ஏவினான்.(131)
அப்போது அஸ்வத்தாமனின் அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவையும், அகன்ற மார்பினரான ராட்சசர்களைக் கொண்டவையுமான அந்தப் பெரிய படை, சிங்கங்களால் பீடிக்கப்பட்ட மதயானைக் கூட்டத்தைப் போலத் தெரிந்தது.(132) குதிரைகள், சாரதிகள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்த ராட்சர்களைத் தன் கணைகளால் எரித்த அவன் {அஸ்வத்தாமன்}, யுக முடிவில் உயிரினங்களை எரிக்கும் புகழத்தக்க அக்னியைப் போலச் சுடர்விட்டெரிந்தான்.(133) தன் கணைகளால் ஒரு முழு அக்ஷௌஹிணி ராட்சசத் துருப்புகளை எரித்த அஸ்வத்தாமன், முந்நகரத்தை {திரிபுரத்தை} [11] எரித்த தெய்வீக மகேஸ்வரனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(134) வெற்றியாளர்களில் முதன்மையான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, உமது எதிரிகளை எரித்து, யுகமுடிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் யுக நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(135)
[11] “திரிபுராசுரனின் நகரமான திரிபுரம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது சினத்தால் நிறைந்த கடோத்கசன், “துரோணரின் மகனைக் கொல்வீராக” என்று சொல்லி அந்தப் பரந்த ராட்சசப் படையைத் தூண்டினான்.(136) பிரகாசமான பற்களையும், பெரிய முகங்களையும், பயங்கரத் தன்மைகளையும், அகன்ற வாய்களையும், நீண்ட நாக்குகளையும், கோபத்தால் சிவந்த கண்களையும் கொண்ட அந்தப் பயங்கர ராட்சசர்கள், கடோத்கசனின் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர்.(137) தங்கள் சிங்க முழக்கங்களால் பூமியை நிறைத்து, பல்வேறு வகை ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அவர்கள் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கொல்வதற்காக அவனை எதிர்த்து விரைந்தனர்.(138) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசர்கள், கோபத்தால் கண்கள் சிவந்து, அஸ்வத்தாமனின் தலை மீது நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஈட்டிகள், சதக்னிகள், பரிகங்கள், அசனிகள், நீண்ட வேல்கள் {சூலங்கள்}, கோடரிகள், கத்திகள், கதாயுதங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, கனமான தண்டாயுதங்கள், போர்க்கோடரிகள், பராசங்கள், வாள்கள், வேல்கள் {தோமரங்கள்}, குணபங்கள், பளபளப்பான கம்பனங்கள், ஸ்தூலங்கள் {புசுண்டிகள்}, ஏவுகணைகள், கற்கள், (சூடான) பாகு நிறைந்த பாத்திரங்கள், எஃகால் ஆன ஸ்தூணங்கள் {தூண்கள்}, உலக்கைகள் மற்றும் பயங்கரமான வடிவத்துடன் கூடியவையும் எதிரிகளை அழிக்கவல்லவையான அனைத்தையும் வீசினார்கள்.(139-142)
துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலையில் விழுந்து கொண்டிருந்த, அந்த ஆயுதங்களின் அடர்த்தியான கணைமாரியைக் கண்ட உமது போர்வீரர்கள் மிகவும் துன்புற்றனர்.(143) எனினும், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஆகாயத்ததில் எழுந்த மேகத்தைப் போலத் தெரிந்ததும், இடியின் பலத்தைக் கண்டதுமான அந்தப் பயங்கர ஆயுத மழையைத் தன் கூரிய கணைகளால் அச்சமற்றவகையில் அழித்தான்.(144) பிறகு அந்த உயர் ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், தெய்வீக ஆயுதங்களின் சக்தியை மந்திரங்களால் ஈர்த்திருந்தவையுமான பிற ஆயுதங்களால் வேகமாக ராட்சசர்களில் பலரைக் கொன்றான்.(145) அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், அகலமான மார்பைக் கொண்டவர்களுமான அந்த ராட்சசர்களின் பெரும்படை, சிங்கங்களால் பீடிக்கப்பட்ட மதங்கொண்ட யானைகளின் கூட்டத்தைப் போலத் தெரிந்தது.(146)
அப்போது, துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்க ராட்சசர்கள், சீற்றத்தால் நிறைந்து, முன்னவனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தனர்.(147) அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்} பார்த்துக் கொண்டிருந்தபோதே, தன் சுடர்மிக்கக் கணைகளால் அந்த ராட்சசப் படையை எரித்தவனும், உயர்ந்த வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்தவனுமான அந்தப் போர்வீரன் {அஸ்வத்தாமன்}, தனியாகவும், ஆதரவற்றவனாகவும் இருந்து கொண்டே, உயிருடன் கூடிய வேறு எந்த உயிரினங்களும் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்ததால், அப்போது துரோணரின் மகனால் வெளிக்காட்டப்பட்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(148,149) ராட்சசப் படையை எரித்துக் கொண்டிருந்த போது, அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, யுகமுடிவில் அனைத்தையும் எரிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(150)
உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு மத்தியில், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால், அந்தப் போரில் அவர்களது படைகளை எரிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} பார்க்கவல்ல சக்தி, வலிமைமிக்க ராட்சச இளவரசனான அந்த வீர கடோத்கசனைத் தவிர வேறு எவனிடமும் இல்லை.(151,152) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் கண்களை உருட்டிக் கொண்டும், உள்ளங்கைகளைத் தட்டிக் கொண்டும், தன் (கீழ்) உதட்டைக் கடித்துக் கொண்டும் இருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் தேரோட்டியிடம், “துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமரிடம்} என்னைச் சுமந்து செல்வாயாக” என்றான்.(153)
வெற்றிக் கொடிகளைக் கொண்ட அந்த உறுதிமிக்கத் தேரில் ஏறிச் சென்ற அந்த எதிரிகளைக் கொல்பவன் {கடோத்கசன்}, துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} மீண்டும் ஒரு தனி மோதலை விரும்பி, பின்னவனை {அஸ்வத்தாமனை} எதிர்த்துச் சென்றான். பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, சிங்க முழக்கமொன்றை முழங்கி, அந்த மோதலில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது, தெய்வீகக் கைவண்ணம் {வேலைப்பாடு} கொண்டதும், எட்டு மணிகளுடன் கூடியதுமான ஒரு பயங்கர அசனியை[12] ஏவினான்.(154-156) எனினும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் வில்லை விட்டுவிட்டுத் தேரில் இருந்து கீழே குதித்து, அதை {அந்த அசனியைப்} பிடித்து, மீண்டும் கடோத்கசன் மீதே அதைத் திருப்பி வீசினான். அதே வேளையில் கடோத்கசன், தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே இறங்கினான்.(157) பளபளக்கும் பிரகாசம் கொண்ட அந்த உறுதி மிக்க அசனியானது, குதிரைகள், சாரதி, கொடிமரம் ஆகியவற்றோடு கூடிய அந்த ராட்சசனின் வாகனத்தைச் சாம்பலாக்கி, பூமியைத் துளைத்து அவளுக்குள் {பூமிக்குள்} நுழைந்தது.(158) தன் தேரில் இருந்து கீழே குதித்து, தெய்வீகக் கைவண்ணம் கொண்ட அந்தப் பயங்கர அசனியைப் பிடித்த அந்தத் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அருஞ்செயலைக் கண்டு உயிரினங்கள் அனைத்தும் மெச்சின.(159)
[12] “அசனி என்றால் உண்மையில் இடி அல்லது வஜ்ரம் என்று பொருள். ஒருவேளை இஃது ஒரு வகை இரும்பு கதாயுதமாக இருக்கலாம்” என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் தேருக்குச் சென்ற அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, இந்திரனின் பெரிய வில்லுக்கு ஒப்பான ஒரு பயங்கர வில்லை எடுத்துக் கொண்டு, சிறப்புமிக்கத் துரோணரின் மகன் மீது கூரிய கணைகள் பலவற்றை ஏவினான்.(160) திருஷ்டத்யும்னனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான முதன்மையான கணைகள் பலவற்றை அஸ்வத்தாமனின் மார்பில் ஏவினான். பிறகு துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆயிரக்கணக்கான குறுங்கணைகளையும் {பிண்டிபாலங்களையும்}, நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} ஏவினான்.(161,162) எனினும், கடோத்கசன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகிய இருவரும், நெருப்பின் தீண்டலுக்கு ஒப்பான தங்கள் கணைகளால் அஸ்வத்தாமனின் கணைகளைத் தாக்கி அவற்றைக் கலங்கடித்தனர். (ஒரு புறத்தில்) மனிதர்களில் சிங்கங்களான அந்த இருவர், (மறுபுறத்தில்) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} என அவர்களுக்கு இடையில் மிகக் கடுமையாக நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! பாரதக் குலத்தவரே {திருதராஷ்டிரரே}, போராளிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது, ஆயிரம் தேர்கள், முன்னூறு யானைகள் மற்றும் ஆறாயிரம் குதிரைகள் ஆகியவற்றுடன் அந்த இடத்திற்குப் பீமசேனன் வந்தான்.(163, 164) எனினும், துரோணரின் அற மகன் {அஸ்வத்தாமன்}, களைப்பறியா ஆற்றலுடன் தொடர்ந்து பீமனின் வீர மகனுடனும் {கடோத்கசனுடனும்}, {பின் தொடர்ந்து வரும்} தொண்டர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனுடனும் போரிட்டான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில் அத்தகு அருஞ்செயல்களை உயிரினங்கள் அனைத்தில் எவையும் செய்ய முடியாது எனும் அளவுக்குத் துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} வெளிக்காட்டப்பட்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(165-167) பீமசேனன், ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, விஜயன் {அர்ஜுனன்} மற்றும் அச்யுதன் {கிருஷ்ணன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குதிரைகள், சாரதிகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய ஒரு முழு அக்ஷௌஹிணி ராட்சசத் துருப்புகளைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் கூரிய கணைகளால் அவன் {அஸ்வத்தாமன்} அழித்தான்.(168,169) நேராகச் செல்லும் (அஸ்வத்தாமனின்) கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட யானைகள், சிகரங்களற்ற மலைகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன. வெட்டப்பட்டு நடுங்கிக் கொண்டிருந்த துதிக்கைகளால் விரவிக் கிடந்த பூமியானது நெளியும் பாம்புகளால் நிறைந்திருப்பதைப் போல அழகாகத் தெரிந்தது. தங்கத் தண்டுகள் மற்றும் அரசக் குடைகளால் விரவிக் கிடந்த பூமியானது, யுக முடிவின் போது கோள்கள், நட்சத்திரங்கள், நிலவுகள் மற்றும் சூரியன்கள் பலவற்றால் விரவிக்கிடக்கும் ஆகாயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(170, 171)
அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வேகமான ஓடையுடன் கூடிய குருதிப்புனல் ஒன்றை அங்கே ஓடச் செய்தான். யானைகள், குதிரைகள் மற்றும் போராளிகளின் குருதியே அதன் {அந்த ஆற்றின்} நீரானது. நெடிய கொடிமரங்கள் அதன் தவளைகளாகின. பேரிகைகள் அதன் பெரும் ஆமைகளாகின; குடைகள் அதன் அன்ன {அன்னப்பறவை} வரிசையாகின; அபரிமிதமான சாமரங்கள் அதன் நுரைகளாகின; கங்கங்கள், கழுகுகள் ஆகியன அதன் முதலைகளாகின; அபரிமிதமான ஆயுதங்கள் அதன் மீன்களாகின; பெரும் யானைகள் கரையில் கிடக்கும் அதன் கற்கள் மற்றும் பாறைகளாகின; யானைகளும், குதிரைகளும் அதன் சுறாக்களாகின; தேர்கள் அதன் நிலையில்லாத கரைகளாகின; கொடிகள் அதன் அழகிய மர வரிசைகளாகின. கணைகளைத் தன் (சிறு) மீன்களாகக் கொண்ட அந்தப் பயங்கர ஆறு, வேல்கள், ஈட்டிகள், வாள்கள் ஆகியவற்றைத் தன் பாம்புகளாகக் கொண்டிருந்தது; மஜ்ஜை மற்றும் இறைச்சியைச் சேறாகவும், தலையற்ற உடல்களை மிதக்கும் தெப்பங்களாகவும் கொண்டிருந்தது. (மனிதர்கள் மற்றும் விலங்குகளின்) மயிர்களால் அடைக்கப்பட்ட அஃது அவற்றைப் பாசியாகக் கொண்டிருந்தது. மேலும் அது மருண்டோரை அச்சங்கொள்ளவும், உற்சாகமிழக்கவும் செய்தது. போராளிகளின் ஓலம் அதன் பயங்கர முழக்கமாக இருந்தது. இரத்த அலைகளே அதன் பரப்பில் தெரிந்தன.(172-177) காலாட்படை வீரர்களால் நிறைந்து பயங்கரமாக இருந்த அது, கடலான யமனின் வசிப்பிடத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது.
ராட்சசர்களைக் கொன்ற துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிறகு, தன் கணைகளால் ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனைப்} பீடிக்கத் தொடங்கினான்.(178) மீண்டும் சினத்தால் நிறைந்தவனும், பலமிக்கவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கணைகள் பலவற்றால், விருகோதரன் {பீமன்} மற்றும் பிருஷதன் {துருபதன்} மகன்கள் உள்ளிட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தர்களைத் துளைத்த பிறகு, துருபதன் மகன்களில் ஒருவனான சுரதனைக் {சுருதனைக்} கொன்றான். பிறகும் அவன் {அஸ்வத்தாமன்}, சத்ருஞ்சயன் என்ற பெயர் கொண்ட சுரதனின் தம்பியையும் கொன்றான்.(179,180) மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, பலானீகன், ஜயானீகன், ஜயன் ஆகியோரையும் கொன்றான். சிங்க முழக்கம் செய்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மீண்டும் கூரிய கணையொன்றால் பிருஷத்ரனையும், அதன் பிறகு செருக்குமிக்கச் சந்திரசேனனையும் கொன்றான். பிறகும் அவன் {அஸ்வத்தாமன்} பத்து கணைகளால் குந்திபோஜனின் பத்து மகன்களைக் கொன்றான்.(181,182) மேலும் அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுருதாயுஷை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான். அவன் {அஸ்வத்தாமன்}, அழகிய சிறகுகளையும், கண்களையும் {!} கொண்ட மூன்று பிற கூரிய கணைகளால் வலிமைமிக்கச் சத்ருஞ்சயனைச் {!} சக்ரனின் {இந்திரனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பினான் [13].
[13] “இதற்கு முந்தைய மூன்று சுலோகங்களைப் பொறுத்தவரை, வங்கம் மற்றும் பம்பாய்ப் பதிப்புகளுக்கிடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன” என இங்கே விளக்குகிறார் கங்குலி. அதனால்தான் சத்ருஞ்சயன் இருமுறை சொல்லப்படுகிறான் போலும். இவையும், சுருதாயுஷ் பற்றிய குறிப்பும் வேறு பதிப்பில் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
பிறகு சினத்தால் நிறைந்த அஸ்வத்தாமன், கடுமையானதும், நேரானதுமான ஒரு கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(183,184) பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, அந்த நாணைத் தன் காது வரை இழுத்து, கடுமையானதும், யமனின் தண்டத்திற்கு ஒப்பானதுமான அந்தச் சிறந்த கணையால் கடோத்கசனைக் குறிபார்த்து வேகமாக ஏவினான்.(185) அழகிய சிறகுகளைக் கொண்ட அந்த வலிமைமிக்கக் கணை, ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மார்பைத் துளைத்துக் கடந்து சென்று பூமிக்குள் நுழைந்தது. அதன்பேரில் கடோத்கசன் அந்தத் தேரிலேயே கீழே விழுந்தான். அவன் விழுவதைக் கண்டு, அவன் இறந்துவிட்டான் என்று நம்பியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} முன்னிலையில் இருந்து அவனை {கடோத்கசனை} அகற்றி, மற்றொரு தேரில் அவனைக் கிடத்தச் செய்தான்.(187)
இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரனின் தேர்ப்படையானது போரில் இருந்து புறமுதுகிட்டது. அப்போது, தன் எதிரிகளை வென்ற துரோணரின் வீர மகன் {அஸ்வத்தமான்} உரக்கச் சிங்க முழக்கமிட்டான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவராலும், மனிதர்கள் அனைவராலும் அவன் {அஸ்வத்தாமன்} வழிபடப்பட்டான்.(188) நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இறந்து கிடந்த ராட்சசர்களின் உடல்களால் விரவிக் கிடந்த பூமியானது, மலைச் சிகரங்களால் விரவிக் கிடப்பதைப் போலப் பயங்கரத் தோற்றத்தை அடைந்து கடக்கமுடியாததாக ஆனது.(189) சித்தர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், நாகர்கள், பறவைகள், பித்ருக்கள், அண்டங்காக்கைகள், அங்கே பெரும் எண்ணிக்கையிலான மனித ஊனுண்ணிகள், பேய்கள், அப்சரஸ்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} புகழ்வதில் ஒன்று சேர்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(190)
----------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 155ஈ-ல் வரும் மொத்த சுலோகங்கள்-65
----------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 155ஈ-ல் வரும் மொத்த சுலோகங்கள்-65
ஆங்கிலத்தில் | In English |