Drona not able to defeat Yudhishthira! | Drona-Parva-Section-156 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 05)
பதிவின் சுருக்கம் : சோமதத்தனை மயக்கமடையச் செய்த சாத்யகியும், பீமசேனனும்; சோமதத்தனின் தந்தையான பாஹ்லீகனைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரன் மகன்கள் பத்து பேரைக் கொன்றது; கர்ணனின் தம்பி விருகரதனைக் கொன்றது; காந்தார இளவரசர்களையும் சதசந்திரனையும் கொன்றது; நடுங்கத் தொடங்கிய கௌரவ மன்னர்கள்; எதிரி படையினரைக் கொன்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கும் துரோணருக்கும் இடையிலான மோதல்; பிரம்மாயுதத்தைப் பயன்படுத்திய துரோணர்; யுதிஷ்டிரனை வீழ்த்த முடியாத துரோணர் அவனைக் கைவிட்டது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துருபதனின் மகன்களும், குந்திபோஜனின் மகன்களும், ஆயிரக்கணக்கான ராட்சசர்களும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} கொல்லப்படுவதைக் கண்ட யுதிஷ்டிரன், பீமசேனன், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன், யுயுதானன் {சாத்யகி} ஆகியோர் ஒன்றாகத் திரண்டு தங்கள் இதயங்களைப் போரில் உறுதியாக நிறுத்தினர்.(1,2) அப்போது அந்தப் போரில் சாத்யகியைக் கண்ட சோமதத்தன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மீண்டும் சினத்தால் நிறைந்து, பின்னவனை {சாத்யகியை} அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(3) வெற்றியை விரும்பிய இரு தரப்பினரான உமது போர்வீரர்களுக்கும், எதிரியுடைவர்களுக்கும் இடையில் கடுமையானதும், காண்பதற்கு மிக அற்புதமானதுமான ஒரு போர் நடந்தது.(4) சாத்யகியின் சார்பாகப் போரிட்ட பீமன், அந்தக் கௌரவ வீரனை {சோமதத்தனைப்} பத்து கணைகளால் துளைத்தான். எனினும் சோமதத்தன் பதிலுக்கு ஒரு நூறு கணைகளால் அந்த வீரனை {பீமனைத்} துளைத்தான்.(5)
அப்போது சினத்தால் நிறைந்த சாத்வதன் {சாத்யகி}, நகுஷனின் மகனான யயாதியின் உயரிய நற்குணங்கள் அனைத்தையும் கொண்டவனும், தன் மகனின் மரணத்தால் பீடிக்கப்பட்டிருந்தவனுமான அந்த முதிய போர்வீரனை {சோமதத்தனை}, இடியின் சக்தியைக் கொண்ட பத்து கூரிய கணைகளால், துளைத்தான். பெரும் பலத்துடன் அவனை {சோமதத்தனைத்} துளைத்த அவன் {சாத்யகி}, மீண்டும் ஏழு கணைகளால் அவனைத் தாக்கினான்.(6,7) பிறகு சாத்யகிக்காகப் போரிட்ட பீமசேனன், புதியதும், கடினமானதும், பயங்கரமானதுமான பரிகம் ஒன்றை சோமதத்தனின் தலை மீது வீசினான்.(8) சாத்யகியும் சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் நெருப்புக்கு ஒப்பான காந்தியையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட ஒரு கூரிய கணையைச் சோமதத்தனின் மார்பில் ஏவினான்.(9) பரிகம் மற்றும் கணை ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வீர சோமதத்தனின் உடலில் பாய்ந்தன. அதன்பேரில் வலிமைமிக்க அந்தத் தேர்வீரன் கீழே விழுந்தான்.(10)
பாஹ்லீகன், தன் மகன் (சோமதத்தன்) மயக்கத்தில் வீழ்ந்ததைக் கண்டு, மழைக்காலத்து மேகத்தைப் போலக் கணை மாரிகளை இறைத்தபடி சாத்யகியை நோக்கி விரைந்தான்.(11) அப்போது பீமன், சாத்யகிக்காக ஒன்பது கணைகளால் சிறப்புமிக்கப் பாஹ்லீகனைப் பீடித்து, போரின் முன்னணியில் இருந்த அவனைத் {பாஹ்லீகனைத்} துளைத்தான்.(12) அப்போது, பிரதீபனின் வலிமைமிக்க மகன் (பாஹ்லீகன்) கோபத்தால் நிறைந்து, இடியை வீசும் புரந்தரனை {இந்திரனைப்} போலப் பீமனின் மார்பில் ஈட்டி ஒன்றை வீசினான். அதனால் தாக்கப்பட்ட பீமன் (தன் தேரில்) நடுங்கியபடியை மயக்கமடைந்தான். பிறகு, தன் உணர்வுகள் மீண்ட அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, தன் எதிராளியின் {பாஹ்லீகனின்} மீது ஒரு கதாயுதத்தை வீசினான்.(14) பாண்டுவின் மகனால் {பீமனால்} வீசப்பட்ட அந்தக் கதாயுதம் பாஹ்லீகனின் தலையைக் கொய்ததால், மின்னல் தாக்கி வீழ்த்தப்பட்ட மரம் ஒன்றைப் போல அவன் {பாஹ்லீகன்} பூமியில் உயிரற்று கீழே விழுந்தான்.(15)
மனிதர்களில் காளையான அந்த வீரப் பாஹ்லீகன் கொல்லப்பட்டதும், ஆற்றலில் தசரதன் மகனான ராமனுக்கு இணையானவர்களான உமது மகன்களில் பத்து பேர் பீமனைப் பீடிக்கத் தொடங்கினர்.(16) அவர்கள் நாகதத்தன், திருதரதன் {த்ருடரதன்}, வீரபாகு {மஹாபாகு}, அயோபுஜன், திருதன் {த்ருடன்}, சுஹஸ்தன், விரஜஸ், பிரமாதன் {பிரமாதி}, உக்ரன், அனுயாயி ஆகியோராவர்.(17) அவர்களைக் கண்ட பீமசேனன் சினத்தால் நிறைந்தான். பிறகு அவன் {பீமன்}, பெரும் கடினத்தைத் தாங்கவல்ல கணைகள் பலவற்றை எடுத்துக் கொண்டான். அடுத்தடுத்து அவர்களில் ஒவ்வொருவரையும் குறிபார்த்த அவன் {பீமன்}, அவர்கள் மீது அந்தக் கணைகளால் ஏவி, அவர்கள் ஒவ்வொருவரின் முக்கிய அங்கங்களையும் தாக்கினான்.(18) அவற்றால் துளைக்கப்பட்ட அவர்கள், சக்தியையும் உயிரையும் இழந்து, சூறாவளியால் முறிக்கப்பட்டு மலையின் முகடுகளில் இருந்து விழும் நெடிய மரங்களைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர் [1].(19)
[1] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன்{?}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {?}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {?}, சுஷேணன் {?}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 133ல் அதே 14ம் நாள் போரிலும், துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆகிய ஐவரை துரோண பர்வம் பகுதி 134ல் அதே 14ம் நாள் போரிலும், சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகிய எழுவரை துரோண பர்வம் பகுதி 135ல் அதே 14ம் நாள் போரிலும், சத்ருஞ்சயன், சத்ருஸஹன், சித்ரன், சித்ராயுதன். த்ருடன், சித்ரசேனன், விகர்ணன் ஆகிய எழுவரை துரோண பர்வம் பகுதி 136ல் அதே 14ம் நாள் போரிலும், துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகி இருவரை துரோண பர்வம் பகுதி 154ல் அதே 14ம் நாள் இரவு போரிலும், நாகதத்தன், திருடரதன், வீரபாகு {மஹாபாகு}, அயோபுஜன், திருதன், சுஹஸ்தன், விரஜஸ், பிரமாதன், உக்ரன், அனுயாயி ஆகியோரை இப்போது துரோணபர்வம் பகுதி 156ல் அதே 14ம் நாள் இரவுப் போரிலும் சேர்த்து பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 68 பேரைக் கொன்றிருக்கிறான். இந்தப் பதினான்காம் நாள் போரில் மட்டும் 44 பேரைக் கொன்றிருக்கிறான். துரோண பர்வம் பகுதி 132 மற்றும் 133ல் கொல்லப்பட்ட துர்ஜயன், துர்முகன் இருவரும் ஒருவரேயெனில் பீமன் 14-நாள் போரில் மொத்தமாக 67 பேரையும் 14ம் நாள் போரில் மட்டும் இதுவரை 43 பேரையும் கொன்றிருக்கிறான்.
அந்தப் பத்து கணைகளால் உமது மகன்கள் பத்து பேரைக் கொன்ற பீமன், கணைகளின் மாரியால் கர்ணனுக்குப் பிடித்தமான மகனை {விருஷசேனனை} மறைத்தான்.(20) அப்போது கர்ணனின் தம்பியும், கொண்டாடப்படுபவனுமான விருகரதன், பீமனைப் பல கணைகளால் துளைத்தான். எனினும் அந்த வலிமைமிக்கப் பாண்டவன் {பீமன்} அவனை {விருகரதனை} வெற்றிகரமாக வெளியேற்றினான் {கொன்றான்}.(21) அடுத்ததாக உமது மைத்துனர்களில் {சகுனியின் சகோதரர்களில்} ஏழு தேர்வீரர்களைத் தன் கணைகளால் கொன்ற வீரப் பீமன், சதசந்திரனை பூமியில் நசுக்கினான் {கொன்றான்}.(22) வலிமைமிக்கத் தேர்வீரனான சதசந்திரனின் கொலையைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களான சகுனியின் சகோதரர்கள், கவாக்ஷன், சரபன், விபு, சுபகன், பானுதத்தன் ஆகிய ஐந்து வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பீமசேனனை நோக்கி விரைந்து, கூரிய கணைகளால் அவனைத் தாக்கினர். மழையால் தாக்கப்படும் மலை ஒன்றைப் போல இப்படி அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட பீமன் தன் ஐந்து கணைகளால் அந்த வலிமைமிக்க ஐந்து மன்னர்களையும் கொன்றான்.(24) அவ்வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னர்களில் முதன்மையானோர் பலர் நடுங்கத் தொடங்கினர்.(25)
அப்போது கோபத்தால் நிறைந்த யுதிஷ்டிரன், குடத்தில் பிறந்தவரும் (துரோணரும்), உமது மகன்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படையணிகளை அழிக்கத் தொடங்கினான்.(26) உண்மையில் யுதிஷ்டிரன், தன் கணைகளால், அம்பஷ்டர்கள், மாலவர்கள், துணிவுமிக்கத் திரிகர்த்தர்கள் மற்றும் சிபிக்கள் ஆகியோரை யமனின் உலகங்களுக்கு அனுப்பத் தொடங்கினான்.(27) அபிஷாஹர்கள், சூரசேனர்கள், பாஹ்லீகர்கள், வசாதிகள் ஆகியோரை வெட்டிய அவன் {யுதிஷ்டிரன்}, பூமியை சதையாலும், குருதியாலும் சகதியாக்கினான்.(28) மேலும் அவன் ஒரு நொடிப்பொழுதிற்குள்ளேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான யௌதேயர்கள், மாலவர்கள், மத்ரகர்கள் ஆகியோரைக் கணைகள் பலவற்றின் மூலம் யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் அனுப்பினான்.(29) அப்போது யுதிஷ்டிரனின் தேரருகே, “கொல்வீர், பிடிப்பீர், கைப்பற்றுவீர், துளைப்பீர், துண்டுகளாக வெட்டுவீர்” என்று எழுந்த உரத்த ஆரவராம் கேட்கப்பட்டது.(30)
இப்படி உமது துருப்புகளை முறியடித்துக் கொன்றுவரும் அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட துரோணர், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டுக் கணை மாரியால் யுதிஷ்டிரனை மறைத்தார்.(31) பெருங்கோபத்தில் நிறைந்திருந்த துரோணர், வாயவ்ய ஆயுதத்தால் யுதிஷ்டிரனைத் தாக்கினார். எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அதே போன்ற தன் ஆயுதத்தால் அந்தத் தெய்வீக ஆயுதத்தைக் கலங்கடித்தான். தமது ஆயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபத்தால் நிறைந்து, பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்ல விரும்பி வாருணம், யாம்யம், ஆக்நேயம், துவாஷ்டரம், சாவித்ரம் ஆகிய பல்வேறு தெய்வீக ஆயுதங்களை யுதிஷ்டிரன் மீது ஏவினார். எனினும், அறநெறி அறிந்தவனான அந்த வலிய கரங்களைக் கொண்ட பாண்டவன் {யுதிஷ்டிரன்}, குடத்தில் பிறந்தவரால் {துரோணரால்} ஏவப்பட்டவையோ, அல்லது தன்னை நோக்கி ஏவப்பட இருந்தவையோவான அந்த ஆயுதங்கள் அனைத்தையும் அச்சமற்ற வகையில் கலங்கடித்தான். அப்போது தன் சபதத்தை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்த அந்தக் குடத்தில் பிறந்தவர் {துரோணர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகனின் {துரியோதனனின்} நன்மைக்காகத் தர்மனின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்ல விரும்பி ஐந்திரம், பிராஜாபத்ய ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார்.(32-36)
யானை, அல்லது சிங்கத்தின் நடையையும், அகன்ற மார்பையும், அகன்ற சிவந்த கண்களையும், (துரோணரின் சக்திக்கு) சற்றும் குறையாத சக்தியையும் கொண்ட அந்தக் குரு குலத்தில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, மாஹேந்திர ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். அதைக்கொண்டே துரோணரின் ஆயுதத்தை அவன் கலங்கடித்தான்.(37) தன் ஆயுதங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட துரோணர், கோபத்தால் நிறைந்து, யுதிஷ்டிரனின் அழிவை அடைய விரும்பி, பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்தார்.(38) அடர்த்தியான இருளில் மூழ்கி இருந்த எங்களால் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லை. அனைத்து உயிரினங்களும் கூட, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் அச்சத்தில் நிறைந்தன.(39) பிரம்மாயுதம் உயர்த்தப்படுவதைக் கண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பிரம்மாயுதத்தைக் கொண்டு அதைக் கலங்கடித்தான்.(40) அப்போது அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்த மனிதர்களில் காளையரான அந்தப் பெரும் வில்லாளிகள் துரோணர் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரையும் போர்வீரர்களில் முதன்மையான அனைவரும் பாராட்டினர்.(41)
பிறகு, சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்த துரோணர், யுதிஷ்டிரனைக் கைவிட்டு வாயவ்யா ஆயுதத்தால் துருபதனின் படைப்பிரிவை எரிக்கத் தொடங்கினார்.(42) பீமசேனனும், சிறப்புமிக்கப் பார்த்தனும் {அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருந்த போதே துரோணரால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், அச்சத்தால் தப்பி ஓடினர்.(43) அப்போது கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் (அர்ஜுனனும்), பீமசேனனும் தங்கள் துருப்புகள் ஓடுவதைத் தடுத்து, இரு பெரும் தேர்க்கூட்டங்களுடன் பகைவரின் படையோடு திடீரென மோதினர்.(44) பீபத்சு {அர்ஜுனன்} வலதை {வலது பக்கத்தைத்} தாக்க, விருகோதரன் {பீமன்} இடதை {இடது பக்கத்தைத்} தாக்க [2] எனப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, இரு வலிமைமிக்கக் கணை மாரிகளுடன் மோதினார்.(45)
[2] வேறொரு பதிப்பில், “பீபத்சு தென்புறத்திலும், விருகோதரன் வடபுரத்திலும் பாரத்வாஜர் மீது பெரிய இரண்டு அம்பு வெள்ளங்களை வர்ஷித்தார்கள்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
அப்போது கைகேயர்கள், சிருஞ்சயர்கள், பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ஸ்யர்கள் மற்றும் சாத்வதர்கள் ஆகியோரோடு கூடி அந்தச் சகோதரர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்றனர்.(46) பிறகு கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லப்பட்ட அந்தப் பாரதப் படை உறக்கத்தாலும், இருளாலும் பீடிக்கப்பட்டுப் பிளக்கத் தொடங்கியது.(47) துரோணரும் உமது மகனும் {துரியோதனனும்}, அவர்களை அணிதிரட்ட முயன்றனர். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓடிக்கொண்டிருந்த அந்தப் போராளிகள் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(48)
---------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 156-ல் வரும் மொத்த சுலோகங்கள்-48
---------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 156-ல் வரும் மொத்த சுலோகங்கள்-48
ஆங்கிலத்தில் | In English |