“I shall cut off thy tongue!” said Karna! | Drona-Parva-Section-157 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 05)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களை வீழ்த்த கர்ணனைத் தூண்டிய துரியோதனன்; அர்ஜுனனைக் கொல்ல சபதமேற்ற கர்ணன்; கர்ணனைக் கண்டித்த கிருபர்; கர்ணனின் மறுமொழி; பாண்டவர்களின் பலத்தை எடுத்துரைத்த கிருபர்; இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தைக் கிருபருக்கு நினைவுப் படுத்திய கர்ணன்; கிருபரின் நாவை அறுப்பேன் என்று சொன்ன கர்ணன்; மேலும் கிருபரை நிந்தித்த கர்ணன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சினத்தில் பெருகியிருந்த பாண்டவர்களின் அந்தப் பரந்த படையைக் கண்டு, அதைத் தடுக்கப்பட முடியாததாகக் கருதிய உமது மகன் துரியோதனன், கர்ணனிடம் இவ்வார்த்தைகளில் பேசினான்:(1) “ஓ! நண்பர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனே, உன் நண்பர்களைப் பொறுத்தவரை இப்போது (உன் உதவி மிகவும் தேவைப்படும்) நேரம் வந்துவிட்டது. ஓ! கர்ணா, என் போர்வீரர்கள் அனைவரையும் போரில் காப்பாயாக.(2) சினத்தில் நிறைந்தவர்களும், சீறும் பாம்புகளுக்கு ஒப்பானவர்களுமான பாஞ்சாலர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் ஆகியோர் அனைவராலும் இப்போது நமது போராளிகள் அனைத்துப்பக்கங்களிலும் சூழப்பட்டிருக்கின்றனர்.(3) அதோ {பார்}, வெற்றியை விரும்பும் பாண்டவர்கள் மகிழ்ச்சியில் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். பாஞ்சாலர்களின் பரந்த தேர்ப்படையானது சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டுள்ளதாகும்” என்றான் {துரியோதனன்}.(4)
கர்ணன் {துரியோதனனிடம்}, “பார்த்தனை {அர்ஜுனனைக்} காப்பதற்காகப் புரந்தரனே {இந்திரனே} இங்கு வந்தாலும், வேகமாக அவனையும் {இந்திரனையும்} வென்று, அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நான் கொல்வேன்.(5) {இதை} நான் உண்மையாகவே சொல்கிறேன். ஓ! பாரதா {துரியோதனா}, உற்சாகங்கொள்வாயாக. பாண்டுவின் மகன்களையும், கூடியிருக்கும் அனைத்துப் பாஞ்சாலர்களையும் நான் கொல்வேன்.(6) பாவகனின் {அக்னியின்} மகன் {கார்த்திகேயன்} வாசவனுக்கு {இந்திரனுக்கு} வெற்றியைப் பெற்றுத் தருவதைப் போலவே நானும் உனக்கு வெற்றியைப் பெற்றுத் தருவேன். எதிர்வந்திருக்கும் இந்தப் போரில் உனக்கு ஏற்புடையது எதுவோ, அதையே நான் செய்வேன்.(7) பார்த்தர்கள் அனைவரிலும் பல்குனனே {அர்ஜுனனே} பலவானாவான். சக்ரனின் {இந்திரனின்} கைவண்ணம் {வேலைப்பாடு} கொண்ட மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} அவன் மீது வீசுவேன்.(8) ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துரியோதனா}, அந்தப் பெரும் வில்லாளி {அர்ஜுனன்} இறந்ததும், அவனது சசோதரர்கள் உன்னிடம் சரணடைவார்கள், அல்லது மீண்டும் காட்டுக்குச் செல்வார்கள்.(9) ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நான் உயிரோடிருக்கையில் எந்தத் துயரிலும் ஒருபோதும் ஈடுபடாதே. ஒன்று சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும், ஒன்றுகூடியிருக்கும் பாஞ்சாலர்கள், கைகேயர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவரையும் போரில் நான் வெல்வேன். என் கணைமாரிகளின் மூலம் அவர்களை முள்ளம்பன்றிகளாக்கி, பூமியை நான் உனக்கு அளிப்பேன்” என்று மறுமொழி கூறினான் {கர்ணன்}.(11)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கர்ணன் இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சரத்வான் மகன் {கிருபர்}, சிரித்துக் கொண்டே சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(12) “ஓ! கர்ணா, உன் பேச்சு நன்றாக இருக்கிறது. வார்த்தைகள் மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றால், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உன்னைப் பாதுகாவலனாகக் கொள்ளும் இந்தக் குருக்களில் காளை {துரியோதனன்}, போதுமான அளவு பாதுகாப்பு கொண்டவனாகவே கருதப்படுவான்.(13) ஓ! கர்ணா, குரு தலைவனின் {துரியோதனனின்} முன்னிலையில் நீ அதிகமாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய். ஆனால் உண்மையில் உன் ஆற்றலோ, (தற்புகழ்ச்சி நிறைந்த உனது பேச்சுகளின்) எந்த விளைவுகளோ எப்போதும் காணப்பட்டதில்லை.(14) பாண்டுவின் மகன்களுடன் போரில் நீ மோதுவதைப் பல நேரங்களில் நாங்கள் கண்டிருக்கிறோம். அந்தச் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும், ஓ! சூதனின் மகனே {கர்ணா}, பாண்டவர்களால் நீ வெல்லப்பட்டாய்.(15) கந்தர்வர்களால் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} (கைதியாகக்) கொண்டு செல்லப்பட்ட போது, அந்தச் சந்தர்ப்பத்தில் முதல் ஆளாக ஓடிய ஒரே ஆளான உன்னைத் தவிரத் துருப்புகள் அனைத்தும் போரிடவே செய்தன [1].(16)
[1] வேறொரு பதிப்பில், “கந்தர்வர்களால் திருதராஷ்டிர புத்திரன் கவரப்பட்ட காலத்தில் எல்லாச் சேனைகளும் போர்புரிந்தன. அப்போது நீ ஒருவன் மாத்திரம் முந்தி ஓடிவிட்டாய்” என்றிருக்கிறது.
விராடனின் நகரத்திலும், நீயும், உன் தம்பியும் உள்பட ஒன்று சேர்ந்திருந்த கௌரவர்கள் அனைவரும் போரில் பார்த்தனால் வெல்லப்பட்டனர்.(17) பாண்டுவின் மகன்களில் பல்குனன் {அர்ஜுனன்} என்ற ஒரே ஒருவனுக்குக் கூடப் போர்க்களத்தில் நீ இணையாகமாட்டாய். அப்படியிருக்கையில், கிருஷ்ணனைத் தங்களின் தலைமையில் கொண்ட பாண்டு மகன்கள் அனைவரையும் நீ எவ்வாறு வெல்லத் துணிவாய்?(18) ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ மிகவும் அதிகமாகத் தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். எதையும் சொல்லாமல் நீ போரில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வாயாக. தற்பெருமையில் ஈடுபடாமல் ஆற்றலை வெளிப்படுத்துவதே நல்லோரின் கடமையாகும்.(19) ஓ! சூதனின் மகனே, ஓ! கர்ணா கூதிர்காலத்தின் வறண்ட மேகங்களைப் போல எப்போதும் முழங்கிக் கொண்டு, பொருட்படுத்தத் தகாதவனாகவே உன்னை நீ காட்டிக்கொள்கிறாய். எனினும், இதை மன்னன் {துரியோதனன்} புரிந்து கொள்ளவில்லை.(20)
ஓ! ராதையின் மகனே {கர்ணா}, பிருதையின் மகனை {அர்ஜுனனைக்} காணும்வரைதான் நீ முழங்கிக் கொண்டிருப்பாய். பார்த்தன் {அர்ஜுனன்} அருகில் வருவதைக் கண்டதும் உன் முழக்கங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.(21) உண்மையில் நீ பல்குனனின் {அர்ஜுனனின்} கணைகள் அடையும் தொலைவுக்கு வெளியே இருக்கும் வரையே முழங்கிக் கொண்டிருக்கிறாய். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் நீ துளைக்கப்படும்போது, இந்த உனது முழக்கங்கள் மறைந்துவிடுகின்றன.(22) க்ஷத்திரியர்கள் தங்கள் கரங்களின் மூலம் தங்கள் மாண்பைக் காட்டுவர். பிராமணர்கள் பேச்சு மூலமாக {தமது மாண்பைக் காட்டுவர்}; அர்ஜுனன் தன் வில்லின் மூலமாக {தன் மாண்பைக்} காட்டுவான்; ஆனால் கர்ணனோ, ஆகாயத்தில் அவன் கட்டும் கோட்டைகளின் மூலம் {தன் மாண்பைக்} காட்டுவான்.(23) (போரில்) ருத்ரனையே மன நிறைவு கொள்ளச் செய்த அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைத்} தடுக்கவல்லவன் எவன் இருக்கிறான்?” என்றார் {கிருபர்}.
இப்படிச் சரத்வான் மகனால் {கிருபரால்} கோபம் தூண்டப்பட்டவனும், அடிப்பவர்களில் முதன்மையானவனுமான கர்ணன், கிருபருக்குப் பின்வரும் விதத்தில் பதிலளித்தான்:(24) “வீரர்கள் எப்போதும் மழைக்காலத்து மேகங்களைப் போல முழங்கி, நிலத்தில் இடப்பட்ட விதைகளைப் போல வேகமாகக் கனிகளை {பலன்களைத்} தருவார்கள்.(25) போர்க்களத்தில் பெரும் சுமைகளைத் தங்கள் தோள்களில் ஏற்கும் வீரர்கள், தற்புகழ்ச்சி நிறைந்த பேச்சுகளில் ஈடுபடுவதில் நான் எக்குறையும் காணவில்லை. சுமையைத் தாங்கிக் கொள்ள மனதால் தீர்மானிக்கும் ஒருவனது செயல் நிறைவேறுவதில் விதியே அவனுக்கு உதவி செய்கிறது.(26,27) பெரும் சுமையைச் சுமக்க இதயத்தால் விரும்பும் நான், போதுமான உறுதியை எப்போதும் ஒன்றுதிரட்டுகிறேன்.(28)
ஓ! பிராமணரே {கிருபரே}, போரில் கிருஷ்ணன் மற்றும் சாத்வதர்களுடன் கூடிய பாண்டுவின் மகன்களைக் கொன்ற பிறகு இத்தகு முழக்கங்களில் நான் ஈடுபட்டால் உமக்கென்ன?(29) வீரர்கள் எவரும் கூதிர்க்காலத்து மேகங்களைப் போலக் கனியற்ற {பலன்றற} வகையில் முழங்குவதில்லை. தன் சொந்த வலிமையை அறிந்தே விவேகிகள் முழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.(30) ஒன்றாகச் சேர்ந்து, உறுதியுடன் போரிட்டு வரும் கிருஷ்ணன் மற்றும் பார்த்தனை {அர்ஜுனனை} இன்றைய போரில் வெல்ல என் இதயத்தில் தீர்மானித்திருக்கிறேன். ஓ! கௌதமரின் மகனே {கிருபரே}, அதற்காகவே நான் முழங்குகிறேன்.(31) ஓ! பிராமணரே {கிருபரே}, என் இந்த முழக்கங்களின் கனியைப் பார்ப்பீராக. போரில் தங்களைப் பின்தொடர்பவர்கள் {தொண்டர்கள்}, கிருஷ்ணன் மற்றும் சாத்வதர்கள் ஆகிய அனைவரோடும் சேர்ந்த பாண்டுவின் மகன்களைக் கொன்று, ஒரு முள்ளும் {எந்த எதிரியும்} இல்லாத முழுப் பூமியை நான் துரியோதனனுக்கு அளிப்பேன்” என்றான் {கர்ணன்}. (32)
கிருபர் {கர்ணனிடம்}, “செயல்கள் இல்லாமல் உன் சிந்தனைகளையே கண்டுபிடித்துச் சொல்லும் உனது இந்தப் பிதற்றல்களை நான் சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை. நீ எப்போதும் கிருஷ்ணர்கள் {கருப்பர்களான கிருஷ்ணன், அர்ஜுனன்} இருவரையும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் மதிப்பு குறைவாகவே பேசுகிறாய்.(33) ஓ! கர்ணா, போரில் திறம்பெற்ற அவ்விரு வீரர்களைத் தன் தரப்பில் எவன் கொண்டிருக்கிறானோ, அவன் வெற்றி அடைவது உறுதி. உண்மையில், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், நாகர்கள், பறவைகள் ஆகிய அனைவரும் கவசம் பூண்டு வந்தாலும், கிருஷ்ணனும், அர்ஜுனனும் வீழ்த்தப்பட முடியாதவர்களே. தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாவான். அவன் உண்மைநிறைந்த பேச்சு கொண்டவனாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவனாகவும் இருக்கிறான். பித்ருக்களையும், தேவர்களையும் அவன் துதிக்கிறான். அவன் {யுதிஷ்டிரன்} உண்மை மற்றும் அறப்பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.
மேலும் அவன் {யுதிஷ்டிரன்} ஆயுதங்களில் திறம்பெற்றவனாகவும் இருக்கிறான். பெரும் நுண்ணறிவு கொண்ட அவன், நன்றியறிவுள்ளவனாகவும் இருக்கிறான்.(34-36) அவனது {யுதிஷ்டிரனது} தம்பியர் அனைவரும் பெரும் வலிமை கொண்டவர்களாகவும், அனைத்து ஆயுதங்களையும் நன்கு பயின்றவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூத்தோரின் சேவையில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். ஞானமும், புகழும் கொண்ட அவர்கள் தங்கள் செயல்பாடுகளில் நீதியுள்ளவர்களாக {அறவோராக} இருக்கின்றனர்.(37) அவர்களது சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இந்திரனின் ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தாக்குவதில் திறமையான அவர்கள் அனைவரும் பாண்டவர்களிடம் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர்.
திருஷ்டத்யும்னன், சிகண்டி, துர்முக்ஷன் மகனான ஜனமேஜயன் {தௌர்முகி}(38), சந்திரசேனன், மத்திரசேனன், கீர்த்திவர்மன், துருவன், தரன், வசுசந்திரன், சுதேஜனன்,(39) துருபதனின் மகன்கள், வலிமைமிக்க உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான துருபதன், மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, அவர்களுக்காக {பாண்டவர்களுக்காக} உறுதியுடன் போராடும் அவனது {விராடனின்} தம்பியர்(40) அனைவரும், கஜானீகன், சுருதானீகன், வீரபத்திரன், சுதர்சனன், சுருதத்வஜன், பலானீகன், ஜயானீகன், ஜயப்பிரியன்,(41) விஜயன், லப்தலாக்ஷன், ஜயாஸ்வன், காமராஷன், விராடனின் அழகிய சகோதரர்கள்,(42) இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), திரௌபதியின் மகன்கள் (ஐவர்), ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் அனைவரும் பாண்டவர்களுக்காகவே போரிடுகின்றனர். எனவே, பாண்டுவின் மகன்கள் அழிவைச் சந்திக்கமாட்டார்கள்.(43)
இவர்களும், இன்னும் பிற (வீரர்களின்) கூட்டத்தினர் பலரும் பாண்டுவின் மகன்களுக்காகவே போரிடுகின்றனர். தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடியதும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் குழுக்கள் அனைத்துடன் கூடியதும், யானைகள், பாம்புகள் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்துடன் கூடியதுமான மொத்த அண்டமே, பீமன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகியோரின் ஆயுத ஆற்றலில் அழிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.(44,45) யுதிஷ்டிரனைப் பொறுத்தவரை, கோபம் நிறைந்த தன் கண்களால் மட்டுமே அவனால் மொத்த உலகையும் எரித்துவிட முடியும். ஓ! கர்ணா, அளவிலா வலிமை கொண்ட சௌரியே {கிருஷ்ணனே} யாவருக்காகக் கவசம் பூண்டானோ அந்த எதிரிகளை எவ்வாறு நீ வெல்லத் துணிவாய்? ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ எப்போதும் சௌரியுடன் {கிருஷ்ணனுடன்} போரில் மோதத் துணிகிறாய் என்பது உன் பங்குக்குப் பெரும் மடமையாகும்” என்றார் {கிருபர்}.(46,47)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “(கிருபரால்) இப்படிச் சொல்லப்பட்ட ராதையின் மகனான கர்ணன், ஓ! குரு குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே சரத்வானின் மகனான ஆசான் கிருபரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(48) “ஓ! பிராமணரே {கிருபரே}, பாண்டவர்களைக் குறித்து நீர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையே. இவையும், இன்னும் பிற நற்குணங்களும் பாண்டு மகன்களிடம் காணப்படவே செய்கின்றன.(49) பார்த்தர்கள், வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும், தைத்தியர்களாலும், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.(50) ஆனாலும், வாசவன் {இந்திரன்} என்னிடம் கொடுத்துள்ள ஈட்டியின் {சக்தியின்} உதவியால் நான் பார்த்தர்களை வெல்வேன். ஓ! பிராமணரே {கிருபரே}, சக்ரனால் {இந்திரனால்} எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஈட்டியானது கலங்கடிக்கப்பட முடியாதது என்பதை நீர் அறிவீர்.(51) அதைக் கொண்டு போரில் நான் சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கொல்வேன். அர்ஜுனனின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிருஷ்ணனும், அர்ஜுனனோடு பிறந்த சகோதரர்களும், அர்ஜுனன் (அவர்களுக்கு உதவி செய்ய) இல்லாமல் பூமியை {பூமியின் அரசுரிமையை} அனுபவிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள்.(52) எனவே, அவர்கள் அனைவரும் அழிவையே அடைவார்கள். கடல்களுடன் கூடிய இந்தப் பூமியானவள், குருக்களின் தலைவன் {துரியோதனன்} எந்த முயற்சியையும் செய்யாமலேயே அவனுடைய உடைமையாகவே இருப்பாள்.(53) {நல்ல} கொள்கையால் இவ்வுலகில் அனைத்தும் அடையத்தக்கதே என்பதில் ஐயமில்லை.(54) ஓ! கௌதமரே {கிருபரே}, இதை அறிந்தே நான் இந்த முழக்கங்களில் {கர்ஜனைகளில்} ஈடுபடுகிறேன்.
உம்மைப் பொறுத்தவரை, நீர் முதியவராகவும், பிறப்பால் பிராமணராகவும், போரில் திறனற்றவராகவும் இருக்கிறீர்.(55) பாண்டவர்களிடம் நீர் மிகுந்த பாசம் கொண்டிருக்கிறீர். இதன் காரணமாகவே நீர் என்னை இப்படி அவமதிக்கிறீர். ஓ! பிராமணரே, மீண்டும் இதுபோன்ற வார்த்தைகளை என்னிடம் சொன்னீரெனில், ஓ! இழிந்தவரே {கிருபரே}, என் கத்தியை உருவி உமது நாவை அறுத்துவிடுவேன்.(56) ஓ! பிராமணரே {கிருபரே}, ஓ! தீய புரிதல் கொண்டவரே, துருப்புகள் அனைத்தையும், கௌரவர்களையும் அச்சுறுத்தவே நீர் பாண்டவர்களைப் புகழ விரும்புகிறீர்.(57) ஓ! கௌதமரே {கிருபரே}, இதைப் பொறுத்தவரை, நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேளும்.(58) போரில் திறனுடையவர்களான துரியோதனன், துரோணர், சகுனி, துர்முகன், ஜயன், துச்சாசனன், விருஷசேனன், மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியர்}, {கிருபராகிய} நீர், சோமதத்தர், பீமன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விவிம்சதி ஆகிய அனைவரும் இங்கே கவசமணிந்து நிற்கின்றனர்.(59,60) சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டிருந்தாலும், போரில் இவர்களை வெல்லத்தக்க எந்த எதிரி இருக்கிறான்? நான் பெயர் சொன்ன வீரர்கள் அனைவரும், ஆயுதங்களில் திறனுடையவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், சொர்க்கத்தில் அனுமதி வேண்டுபவர்களும் [2], அறநெறியறிந்தவர்களும், போரில் திறம்பெற்றவர்களுமாவர்.(61) போரில் அவர்கள் தேவர்களையே கொல்லவல்லவர்களாவர். வெற்றியை விரும்பும் துரியோதனனுக்காகக் கவசமணிந்து பாண்டவர்களைக் கொல்வதற்காகப் போர்க்களத்தில் தங்கள் நிலைகளை இவர்கள் ஏற்பார்கள்.(62) வலிமைமிக்க மனிதர்களின் வழக்கில் கூட வெற்றியென்பது விதியைச் சார்ந்தே இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.(63)
[2] போர்க்களத்தில் வீழ்ந்து சொர்க்கத்தில் அனுமதி வேண்டுபவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டுமெனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மரே நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுக் கிடக்கிறார் எனும்போதும், விகர்ணன், ஜெயத்ரதன்,(64) பூரிஸ்ரவஸ், ஜயன், ஜலசந்தன், சுதக்ஷிணன், தேர்வீரர்களில் முதன்மையான சலன், பெரும் சக்தி கொண்ட பகதத்தன்(65) ஆகிய இவர்களும், தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களும், (பாண்டவர்களைவிட) வலிமைமிக்கவர்களுமான வீரர்கள் அனைவரும், பாண்டவர்களால் கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கின்றனர்(66) எனும்போதும், ஓ! மனிதர்களில் இழிந்தவரே, இவையாவும் விதியின் விளைவு என்பதைவிட நீர் வேறு என்ன நினைக்கிறீர்? ஓ! பிராமணரே, யாரை நீர் புகழுகிறீரோ, அந்தத் துரியோதனனின் எதிரிகளைப் பொறுத்தவரையும் கூட, அவர்களில் துணிச்சல்மிக்க வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(67) குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு படைகளும் எண்ணிக்கையில் குறைந்துவருகின்றன.(68) நான் இதில் பாண்டவர்களின் ஆற்றலைக் காணவில்லை. ஓ! மனிதர்களில் இழிந்தவரே, யாரை நீர் வலிமைமிக்கவர்களாக எப்போதும் கருதுகிறீரோ,(69) அவர்களுடன் நான் என் முழு வலிமையைப் பயன்படுத்தித் துரியோதனனின் நன்மைக்காகப் போரில் போராடுவேன். வெற்றியைப் பொறுத்தவரை, அது விதியைச் சார்ந்ததே” என்றான் {கர்ணன்}.(70)
------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 157-ல் வரும் மொத்த சுலோகங்கள்-70
------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 157-ல் வரும் மொத்த சுலோகங்கள்-70
ஆங்கிலத்தில் | In English |