Aswatthama vanquished Dhrishtadyumna! | Drona-Parva-Section-158b | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 07)
பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குப் பதிலுரைத்து நிந்தித்த அஸ்வத்தாமன்; பாஞ்சாலர்களை முறியடித்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை எதிர்த்து விரைந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனும், அஸ்வத்தாமனும் கடுமொழியில் பேசிக் கொள்வது; திருஷ்டத்யும்னனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த கடும் மோதல்; திருஷ்டத்யும்னனை வென்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனிடம் இருந்து தப்பி ஓடிய பாஞ்சாலர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரியோதனனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், போரில் வீழ்த்த கடினமான போர்வீரனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தைத்தியர்களை அழிப்பதில் ஈடுபட்ட இந்திரனைப் போல எதிரியை அழிப்பதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(1) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அஸ்வத்தாமன் உமது மகனுக்குப் பதிலளிக்கும வகையில், “ஓ! குருவின் வழித்தோன்றலே {துரியோதனா}, இது நீ சொல்வதுபோலத்தான் இருக்கிறது.(2) எனக்கும், என் தந்தைக்கும் {துரோணருக்கும்} எப்போதும் பாண்டவர்கள் அன்புக்குரியவர்களே. அதே போல நாங்கள் இருவரும் அவர்களின் அன்புக்குரியவர்களே. எனினும் போரில் அவ்வாறு இல்லை.(3) எங்கள் உயிரைக் குறித்த கவலையில்லாமல் எங்கள் வலிமையின் அளவுக்கு நாங்கள் அச்சமற்ற வகையில் போரிடுகிறோம். என்னாலும், கர்ணன், சல்லியன், கிருபர், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோராலும்,(4) ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாண்டவர்ப்படையை அழித்துவிட முடியும். போரில் நாங்கள் இல்லையென்றால், ஓ! குருக்களில் சிறந்தவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, பாண்டவர்களாலும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் குரு படையை அழித்துவிட முடியும். நாங்கள் பாண்டவர்களுடன் எங்கள் சிறப்பான சக்தியைப் பயன்படுத்திப் போரிடுகிறோம், அதே போல அவர்களும், அவர்களுடையதில் சிறந்ததைப் பயன்படுத்தி எங்களோடு போரிடுகிறார்கள்.(5,6)
ஓ! பாரதா {துரியோதனா}, சக்தியோடு மோதும் சக்தி சமன்படுத்தப்படுகிறது {தணிவடைகிறது}. பாண்டு மகன்கள் உயிரோடுள்ள வரையும், பாண்டவப்படை வெல்லப்பட்ட இயலாததாகும்.(7) என்னால் உனக்குச் சொல்லப்படும் இஃது உண்மையானதாகும். பாண்டுவின் மகன்கள் பெரும் வலிமை படைத்தவர்களாவர். மேலும் அவர்கள் தங்களுக்காகப் போரிடுகின்றனர்.(8) ஓ! பாரதா {துரியோதனா}, {அப்படியிருக்கையில்}, ஏன் அவர்களால் உன் துருப்புகளைக் கொல்ல முடியாது. எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, நீ பேராசைமிக்கவனாக இருக்கிறாய். ஓ! கௌரவா {துரியோதனா}, நீ வஞ்சகனாகவும் இருக்கிறாய்.(9) வீணாகப் பிதற்றுபவனாகவும், அனைத்தையும் சந்தேகப்படுபவனாகவும் இருக்கிறாய். இதன் காரணமாகவே, நீ எங்களையும் சந்தேகிக்கிறாய். ஓ! மன்னா {துரியோதனா}, பாவம் நிறைந்த ஆன்மாவாகவும், பாவத்தின் வடிவமாகவும் நீ இருக்கிறாய் என்றே நான் நினைக்கிறேன்.(10) பாவம்நிறைந்த இழிந்த சிந்தனைகளைக் கொண்டிருப்பதாலேயே நீ எங்களையும், பிறரையும் சந்தேகிக்கிறாய். என்னைப் பொறுத்தவரை, உன் நிமித்தமாக உறுதியுடன் போரிடும் நான் என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்.(11)
ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, நான் இப்போதும் உனக்காகவே போரிடச் செல்கிறேன். நான் எதிரியுடன் போரிட்டு, பெரும் எண்ணிக்கையிலான பகைவர்களைக் கொல்வேன்.(12) பாஞ்சாலர்கள், சோமகர்கள், கைகேயர்கள் ஆகியோருடனும், பாண்டவர்களுடனும், ஓ!எதிரிகளைத் தண்டிப்பவனே, உனக்கு ஏற்புடையதைச் செய்யவே நான் போரிடுவேன்.(13) இன்று என் கணைகளால் எரிக்கப்படும், சேதிகள், பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர், சிங்கத்தால் பீடிக்கப்படும் பசுமந்தையைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுவர்.(14) இன்று, தர்மனின் அரச மகனும் {யுதிஷ்டிரனும்}, சோமகர்கள் அனைவரும் என் ஆற்றலைக் கண்டு, மொத்த உலகமும் அஸ்வத்தாமன்களால் நிறைந்திருப்பதாகக் கருதுவார்கள்.(15) தர்மனின் மகனான யுதிஷ்டிரன், போரில் (என்னால்) கொல்லப்படும் பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் கண்டு உற்சாகமற்றவனாக ஆவான்.(16) ஓ! பாரதா {துரியோதனா}, போரில் என்னை அணுகும் அனைவரையும் நான் கொல்வேன். ஓ! வீரா {துரியோதனா}, என் கரங்களின் வலிமையால் பீடிக்கப்படும் அவர்களில் எவரும் இன்று என்னிடம் இருந்து உயிருடன் தப்ப முடியாது” என்றான் {அஸ்வத்தாமன்}.(17)
உமது மகன் துரியோதனனிடம் இவ்வாறு சொன்ன அந்த வலிய கரத்தோன் {அஸ்வத்தாமன்} போரிடச் சென்று வில்லாளிகள் அனைவரையும் பீடித்தான்.(18) உயிர்வாழும் அனைவரிலும் முதன்மையான அவன் {அஸ்வத்தாமன்} உமது மகன்களுக்கு ஏற்புடையதைச் செய்ய இப்படியே முயன்றான். அப்போது, கௌதமர் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, பாஞ்சாலர்களிடமும், கைகேயர்களிடம்,(19) “வலிமைமிக்கத் தேர்வீரர்களே, அனைவரும் என் உடலைத் தாக்குங்கள். உங்கள் கரங்களின் நளினத்தை வெளிக்காட்டியபடி என்னுடன் உறுதியாகப் போரிடுங்கள்” என்று சொன்னான்.(20)
அவனால் {அஸ்வத்தாமனால்} இவ்வாறு சொல்லப்பட்ட போராளிகள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது ஆயுதமழையைப் பொழிந்தனர்.(21) அம்மழையைக் கலங்கடித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, திருஷ்டத்யும்னனும், பாண்டுவின் மகன்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் போரில் துணிச்சல்மிக்க வீரர்களில் பத்து பேரை கொன்றான்.(22) அப்போது போரில் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கைவிட்டு விட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(23) துணிச்சல்மிக்கப் போர்வீரர்களான பாஞ்சாலர்களும், சோமகர்களும் தப்பி ஓடுவதைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தான்.(24) மழைநிறைந்த மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சக்கரச் சடசடப்பொலி கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான தேர்களில் ஏறிவந்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களுமான தேர்வீரர்கள் நூறு பேர் சூழச் சென்ற பாஞ்சால மன்னன் மகனான வலிமைமிக்கத் தேர்வீரன் திருஷ்டத்யும்னன், தனது போர் வீரர்கள் கொல்லப்படுவதைக் கண்டு துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(25,26) “ஆசானின் மூட மகனே [1], அற்பப் போராளிகளைக் கொல்வதில் யாது பயன்? நீர் வீரரென்றால், என்னோடு போரிடுவீராக.(27) நான் உம்மைக் கொல்வேன். தப்பி ஓடாமல் ஒரு கணம் காத்திருப்பீராக” என்றான்.
[1] வேறொரு பதிப்பில், “ஆச்சார்யபுத்திரரே, உமக்கு மங்களம் உண்டாகட்டும். மற்றவர்களைக் கொல்வதால் உமக்கு என்ன பயன்?” என்று இருக்கிறது. “மூடமகனே” என்ற வார்த்தை இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ ஆசானின் மகனே, ஓ தீய புரிதல் கொண்டவரே, சாதாரணப் படைவீரரைகளை ஏன் கொல்கிறீர்?” என்று கேட்பதாக வருகிறது. இங்கும் “மூட மகனே”, “Foolish son” என்பது இல்லை.
இதைச் சொன்னவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், பயங்கரமானவையும், கூரியவையும், முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லவையுமான கணைகள் பலவற்றால் ஆசானின் மகனை {அஸ்வத்தாமனைத்} தாக்கினான். வேகமாகச் செல்லவல்லவையும் தங்கச் சிறகுகளையும், கூரிய முனைகளையும் கொண்டவையும், ஒவ்வொரு எதிரியின் உடலையும் துளைக்கவல்லவையுமான அந்தக் கணைகள், சுதந்திரமாக உலவும் வண்டுகள், தேனைத்தேடி மலர்ந்திருக்கும் மரத்திற்குள் நுழைவதைப் போல, தொடர்ந்த சரமாகச் சென்று அஸ்வத்தாமனின் உடலுக்குள் ஊடுருவின.(28-30) ஆழத்துளைக்கப்பட்டுச் சினத்தில் பெருகி, மிதிக்கப்பட்ட பாம்பைப் போலச் செருக்குடனும், அச்சமற்றும் கையில் வில்லுடன் சென்ற துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} தன் எதிரியிடம் {திருஷ்டத்யும்னனிடம்} (31), “ஓ! திருஷ்டத்யும்னா, என் முன்பிருந்து விலகாமல் ஒருக்கணம் காத்திருப்பாயாக. என் கூரிய கணைகளால் விரைவில் நான் உன்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்” என்றான்.(32)
இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களை வெல்பவனுமான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தி, கணைகளின் மேகங்களால் அனைத்துப் பக்கங்களிலும் பிருஷதனின் மகனை {திருஷ்டத்யும்னனை} மறைத்தான்.(33) இப்படித் துரோணர் மகனால் {அஸ்வத்தாமனின்} (கணைகளால்) அம்மோதலில் மறைக்கப்பட்டவனும், போரில் வீழ்த்தக் கடினமானவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, துரோணர் மகனிடம்,(34) “ஓ! பிராமணரே, நீர் என் பிறப்பையோ, என் சபதத்தையோ அறியவில்லை. ஓ! தீய புரிதல் கொண்டவரே, துரோணரை முதலில் கொன்ற பிறகு, நான் உம்மைக் கொல்கிறேன்.(35) துரோணர் இன்னும் உயிரோடு இருப்பதால் நான் இன்று உம்மைக் கொல்ல மாட்டேன். ஓ! தீய புரிதல் கொண்டவரே, இந்த இரவு கடந்து, பொழுது நன்றாக விடிந்ததும், முதலில் உமது தந்தையைப் போரில் கொன்று, பிறகு உம்மையும் ஆவிகளின் உலகத்திற்கு [2] அனுப்புவேன். இதையே நான் விரும்புகிறேன்.(36-37) எனவே, என் எதிரே அதுவரை நின்று பார்த்தர்கள் மீது நீர் கொண்டிருக்கும் வெறுப்பையும், குருக்களிடம் நீர் கொண்ட அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டிக் கொண்டிருப்பீராக. உம்மால் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது(38) ஓ! மனிதர்களில் இழிந்தவரே, எந்தப் பிராமணன், பிராமண நடைமுறைகளைக் கைவிட்டு, க்ஷத்திரிய நடைமுறைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறானோ, அவன் க்ஷத்திரியர்கள் அனைவராலும் கொல்லத்தகுந்தவன் ஆகிறான்” என்று சொல்லி முழங்கினான் {திருஷ்டத்யும்னன்}.(39)
[2] வேறொரு பதிப்பில், “யமலோகம்” என்றும், மன்மதநாததத்தரின் பதிப்பில், “இறந்து போனோருடைய ஆவிகளின் உலகம்” என்றும் இருக்கிறது.
அவமதிக்கும் வகையில் இப்படிக் கடுமொழியில் பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} சொல்லப்பட்ட அந்தப் பிராமணர்களில் சிறந்தவன் (அஸ்வத்தாமன்) தன் சினமனைத்தையும் திரட்டிக் கொண்டு, “நில், நிற்பாயாக” என்று சொல்லித்(40) தன் கண்களாலேயே பிருஷதன் மகனை எரித்துவிடுபவனைப் போல அவனைப் {திருஷ்டத்யும்னனைப்} பார்த்தான். ஒரு பாம்பைப் போல (சீற்றத்துடன்) பெருமூச்சு விட்ட அந்த ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, அப்போது அந்தப் போரில் திருஷ்டத்யும்னனை (கணைமாரியால்) மறைத்தான்.(41) எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தேர்வீரர்களில் சிறந்தவனும், பாஞ்சாலத் துருப்புகள் அனைத்தாலும் சூழப்பட்டவனுமான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, அந்த மோதலில் துரோணரின் மகனுடைய கணைகளால் இப்படித் தாக்கப்பட்டாலும், தன் சக்தியைச் சார்ந்திருந்து நடுங்காதிருந்தான். பதிலுக்கு அவன் {திருஷ்டத்யும்னன்} பல கணைகளை அஸ்வத்தாமன் மீது ஏவினான்.(42,43) உயிரைப் பணயமாகக் கொண்ட அந்தச் சூதாட்டத்தில் {போரில்} ஈடுபட்ட அந்த வீரர்கள், ஒருவரையொருவர் பொருத்துக் கொள்ள முடியாமல், ஒருவரையொருவர் தடுத்துக் கொண்டு, கணைமாரிகளையும் தடுத்தனர்.(44) மேலும் அந்தப் பெரும் வில்லாளிகள், சுற்றிலும் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தனர்.
துரோணர் மற்றும் பிருஷதன் மகன்களுக்கிடையில் அச்சத்தைத் தூண்டும் வகையில் நடைபெற்ற அந்தக் கடும்போரைக் கண்ட சித்தர்கள், சாரணர்கள் மற்றும் வானுலாவும் உயிரினங்கள் ஆகியோர் அவர்களை உயர்வாகப் பாராட்டினர். ஆகாயத்தையும், திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் கணை மேகங்களால் நிறைத்து,(45,46) அடர்த்தியான இருளை உண்டாக்கிய அந்த வீரர்கள் இருவரும் (எங்களால் காணப்படாத நிலையிலேயே) ஒருவரோடொருவர் தொடர்ந்து போரிட்டனர். போரில் நர்த்தனம் செய்பவர்களைப் போலத் தங்கள் விற்களை வட்டமாக வளைத்துக் கொண்டு,(47) ஒருவரையொருவர் கொல்லும் உறுதியான ஆவலோடு இருந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்கள், அனைவரின் இதயமும் அச்சங்கொள்ளும் வகையில், குறிப்பிடத்தகுந்த சுறுசுறுப்புடனும், திறனுடனும் அழகாகப் போரிட்டனர்.(48) அந்தப் போரில் ஆயிரக்கணக்கான முதன்மையான போர்வீரர்களால் பாராட்டப்பட்டுக் காட்டில் உள்ள இரு காட்டு யானைகளைப் போல இப்படி உறுதியாகப் போரிட்டுக் கொண்டிருந்த அவர்களைக் கண்ட படைகள் இரண்டும் மகிழ்ச்சியால் நிறைந்தன. சிங்க முழக்கங்கள் அங்கே கேட்கப்பட்டன, போராளிகள் அனைவரும் தங்கள் சங்குகளை முழக்கினர்.(49,50)
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இசைக்கருவிகள் இசைக்கத் தொடங்கின. மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கச் செய்யும் அந்தக் கடும் போரானது,(51) குறுகிய காலத்திற்கு மட்டுமே சமமாக இருந்ததைப் போலத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விரைந்து சென்று உயர் ஆன்மப் பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} வில், கொடிமரம், குடை, பார்ஷினி சாரதிகள், முதன்மைச் சாரதி மற்றும் குதிரைகள் நான்கையும் வெட்டினான்.(52,53) பிறகு அளவிலா ஆன்மாக் கொண்ட அந்தப் போர்வீரன் {அஸ்வத்தாமன்}, தன் நேரான கணைகளின் மூலம் பாஞ்சாலர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடச் செய்தான்.(54) போரில் வாசவனுக்கு ஒப்பான துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} சாதனைகளைக் கண்ட பாண்டவப் படையானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் நடுங்கத் தொடங்கியது.(55)
துருபதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, பல்குனனும் {அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நூறு பாஞ்சாலர்களை நூறு கணைகளாலும், மூன்று முதன்மையான மனிதர்களை மூன்று கூரிய கணைகளால் கொன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான பாஞ்சாலர்களைக் கொன்றான்.(56,57) அப்போது போரில் இப்படிக் கொல்லப்பட்டவர்களான பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கைவிட்டு விட்டுத் தங்கள் கிழிந்த கொடிகளுடன் தப்பி ஓடினர்.(58) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, போரில் தன் எதிரிகளை வென்றுவிட்டு, கோடை காலத்தின் முடிவில் வரும் மேகத் திரள்களைப் போல உரக்க முழங்கினான்.(59) பெரும் எண்ணிக்கையிலான எதிர்களைக் கொன்றுவிட்டு, யுக முடிவின் போது, உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல அஸ்வத்தாமன் பிரகாசமாகத் தெரிந்தான்.(60) போரில் ஆயிரக்கணக்கான எதிரிகளை வீழ்த்திய பிறகு கௌரவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளை வென்ற தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல அழகில் சுடர்விட்டெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.(61)
------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 159-ல் வரும் மொத்த சுலோகங்கள்-61
------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 159-ல் வரும் மொத்த சுலோகங்கள்-61
ஆங்கிலத்தில் | In English |