Duryodhana unable to rally those who fly away! | Drona-Parva-Section-160 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 08)
பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமனுடன் மோதிய பாண்டவத் தலைவர்கள்; அஸ்வத்தாமனைக் காக்க துரியோதனனும், துரோணரும் விரைவது; இரு படைகளுக்கும் இடையில் நடைபெற்ற கடும்போர்; பின்வாங்கி ஓடிய தங்கள் துருப்புகளை ஒன்றுதிரட்டிய பீமனும் அர்ஜுனனும்; அர்ஜுனனுக்கு எதிரில் தப்பி ஓடிய கௌரவர்கள்; தங்கள் துருப்புகளைத் தடுக்க முடியாத துரியோதனனும் துரோணரும்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரனும், பாண்டுவின் மகனான பீமசேனனும் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்தனர்.(1) இதைக் கண்ட மன்னன் துரியோதனன், பரத்வாஜர் மகனின் {துரோணரின்} துணையுடன் அம்மோதலில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான். அப்போது, கடுமையானதும், பயங்கரமானதும், மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதுமான போரொன்று தொடங்கியது.(2) கோபத்துடன் கூடிய யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான அம்பஷ்டர்கள், மாலவர்கள், வங்கர்கள், சிபிக்கள் மற்றும் திரிகர்த்தர்களை இறந்தோரின் ஆட்சிப்பகுதிகளுக்கு அனுப்பத் தொடங்கினான். பீமனும், அபிஷாஹர்கள், சூரசேனர்கள், போரில் வீழ்த்தக் கடினமான மற்றும் பிற க்ஷத்திரியர்களைச் சிதைத்து, பூமியை இரத்தச் சகதியாக்கினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் ஆனவன் (அர்ஜுனன்), யௌதேயர்கள், மலையகத்தார், மத்ரகர்கள் மற்றும் மாலவர்களையும் இறந்தோரின் உலகங்களுக்கு அனுப்பினான்.
வேகமாகச் செல்லக்கூடிய கணைகளால் பலமாகத் தாக்கப்பட்ட யானைகள், இரு சிகரங்களைக் கொண்ட மலைகளைப் போலப் பூமியில் கீழே விழத் தொடங்கின.(3-6) நடுக்கத்துடன் நகர்ந்து கொண்டேயிருந்த வெட்டப்பட்ட யானைகளின் துதிக்கைகளால் விரவிக்கிடந்த பூமியானது, நெளியும் பாம்புகளால் மறைக்கப்பட்டதைப் போல அழகாகத் தெரிந்தது.(7) தங்கத்தில் அலங்கரிக்கப்பட்டவையும், விழுந்து கிடந்தவையுமான மன்னர்களின் குடைகளால் மறைக்கப்பட்ட பூமியானது, சூரியன்கள், சந்திரன்கள், நட்சத்திரங்களால் மின்னிக்கொண்டிருக்கும் ஆகாயத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(8)
அதே நேரத்தில், துரோணரின் தேரருகே கடும் ஆரவாரம் எழுந்து, “கொல்வீராக”, “அச்சமற்றுத் தாக்குவீராக”, “துளைப்பீராக”, “துண்டுகளாக வெட்டுவீராக” என்ற இந்த வார்த்தைகள் கேட்கப்பட்டன. எனினும் சினத்தால் நிறைந்த துரோணர், வலிமைமிக்கச் சூறாவளியானது, திரண்டு வரும் மேகத்திரள்களை அழிப்பதைப் போலத் தம்மை நோக்கி வந்த எதிரிகளை, வாயவ்ய ஆயுதத்தின் மூலம் அழிக்கத் தொடங்கினார். இப்படித் துரோணரால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், பீமசேனனும், உயர் ஆன்ம பார்த்தனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அச்சத்தால் தப்பி ஓடினர்.(9-11)
அப்போது, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் (அர்ஜுனனும்), பீமசேனனும், ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் துருப்புகளைத் தடுத்து, பெரும் தேர்ப்படையின் துணையுடன் துரோணரின் பரந்தப் படையைத் தாக்கினர்.(12) பீபத்சு {அர்ஜுனன்} வலதையும், விருகோதரன் {பீமன்} இடதையும் எனத் தாக்கிய அவர்கள் இருவரும் [1], பரத்வாஜரின் மகன் {துரோணர்} மீது இரு கணைமாரிகளைப் பொழிந்தனர்.(13) சிருஞ்சயர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மத்ஸ்யர்களுடனும், சோமகர்களுடனும் கூடி, (துரோணருடனான மோதலில்) ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த இரு சகோதரர்களையும் பின்தொடர்ந்து சென்றனர். அதே போல, உமது மகனை {துரியோதனனைச்} சேர்ந்தவர்களும், தாக்குவதில் திறம்பெற்றவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானோருமான பலர், பெரும் படையின் துணையுடன், (துரோணரை ஆதரிப்பதற்காக) துரோணரின் தேரை நோக்கிச் சென்றனர்.(14,15)
[1] வேறொரு பதிப்பில், “அவர்கள் பாரத்வாஜர் மீது தென்பக்கத்திலும் வடபக்கத்திலும் இரண்டு பெரிய அம்பு வெள்ளத்தால் வர்ஷித்தார்கள்” என்றிருக்கிறது.
அப்போது, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லப்பட்ட அந்தப் பாரதப் படையானது, உறக்கத்தால் வெல்லப்பட்டும், அந்த இருளால் பீடிக்கப்பட்டும் பிளக்கத் தொடங்கியது.(16) உமது மகன் {துரியோதனன்} மற்றும் துரோணர் ஆகிய இருவரும் அவர்களை அணிதிரட்ட பெருமுயற்சி செய்தனர்.(17) எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் துருப்புகள் ஓடுவதைத் தடுக்க முடியவில்லை. உண்மையில், அந்தப் பரந்த படையானது, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்டு, உலகமே இருளில் மூழ்கியிருந்த அந்த நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடத் தொடங்கியது.(18) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விலங்குகளையும், தாங்கள் ஏறிச் சென்ற வாகனங்களையும் கைவிட்ட மன்னர்கள் பலர், அச்சத்தால் வெல்லப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.19
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 160-ல் வரும் மொத்த சுலோகங்கள்-19
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 160-ல் வரும் மொத்த சுலோகங்கள்-19
ஆங்கிலத்தில் | In English |