Satyaki slew Somadatta! | Drona-Parva-Section-161 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 09)
பதிவின் சுருக்கம் : சோமதத்தனை நோக்கிச் சென்ற சாத்யகி, சாத்யகிக்கும், சோமதத்தனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; சோமதத்தனைக் கொன்ற சாத்யகி; துரோணரைத் தாக்கிய யுதிஷ்டிரன்; துரோணருடன் யுதிஷ்டிரன் போரிடுவதைத் தடுத்த கிருஷ்ணன்; பீமசேனனின் அருகில் நிலைகொண்ட யுதிஷ்டிரன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சோமதத்தன் தன் பெரிய வில்லை அசைப்பதைக் கண்ட சாத்யகி, தன் சாரதியிடம், “சோமதத்தனை நோக்கி என்னைக் கொண்டு செல்வாயாக.(1) ஓ! சூதா, குருக்களில் இழிந்தவனும், பாஹ்லீகன் மகனுமான அந்த எதிரியை {சோமதத்தனைக்} கொல்லாமல் நான் இன்று போரில் இருந்து திரும்புவதில்லை என்று உனக்கு நான் உண்மையாகவே சொல்கிறேன்” என்றான்.(2) இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, சிந்து இனத்தில் பிறந்தவையும், சங்கு போன்ற வெண்ணிறம் கொண்டவையும், அனைத்து ஆயுதங்களையும் தாங்க வல்லவையும், வேகமானவையுமான அந்தக் குதிரைகளைப் போருக்குத் தூண்டினான்.(3) காற்று, அல்லது மனோ வேகம் கொண்ட அந்தக் குதிரைகள், பழங்காலத்தில் தானவர்களைக் கொல்வதற்காக இந்திரனைச் சுமந்து சென்ற பின்னவனின் {இந்திரனின்} குதிரைகளைப் போல அந்தப் போரில் யுயுதானனை {சாத்யகியைச்} சுமந்து சென்றன.(4)
அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, போரிடுவதற்காக வேகமாக முன்னேறி வருவதைக் கண்ட சோமதத்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சமில்லாமல் அவனை நோக்கித் திரும்பினான்.(5) மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளை இறைத்த அவன் {சோமதத்தன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலச் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்தான்.(6) அம்மோதலில் சாத்யகியும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தக் குருக்களின் காளையை {சோமதத்தனை) கணைமாரிகளால் அச்சமில்லாமல் மறைத்தான்.(7) அப்போது சோமதத்தன், அறுபது {60} கணைகளால் அந்த மது குலத்து வீரனின் {சாத்யகியின்} மார்பைத் துளைத்தான். பதிலுக்குச் சாத்யகியும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் சோமதத்தனைத் துளைத்தான்.(8) ஒருவரையொருவர் கணைகளால் துளைத்துக் கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், வசந்தகாலத்தில் மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(9)
{மேனி} எங்கும் இரத்தக் கறை படிந்திருந்தவர்களும், குரு மற்றும் விருஷ்ணி குலங்களைச் சேர்ந்த சிறப்புமிக்கவர்களுமான அவ்விரு போர்வீரர்களும், தங்கள் கண்பார்வைகளாலேயே கொன்றுவிடுபவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(10) வட்டமாகச் சுழன்ற தங்கள் தேர்களில் இருந்தவர்களும், பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்டவர்களுமான அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களுக்கு ஒப்பானவர்களாகவே தெரிந்தனர்.(11) தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டு, {மேனி} எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அவர்கள் இரண்டு முள்ளம்பன்றிகளைப் போலத் தெரிந்தனர்.(12) தங்கச் சிறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விட்டிற்பூச்சிகளால் மறைக்கப்பட்ட இரு நெடிய மரங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(13) அவர்களின் மேல் ஒட்டிக் கொண்டிருந்த சுடர்மிக்கக் கணைகளால் பிரகாசமாகத் தெரிந்த உடல்களுடன் கூடிய அவ்விரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அந்தப் போரில் எரியும் பந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட இரு கோபக்கார யானைகளை போலத் தெரிந்தனர்.(14)
அப்போது அந்தப் போரில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான சோமதத்தன், அர்த்தச்சந்திரக் கணையொன்றால், மாதவனின் {சாத்யகியின்} பெரிய வில்லை அறுத்தான்.(15) மிகத்தேவையான ஒன்றான வேகம் தேவைப்பட்ட அந்த நேரத்தில், பெரும் வேகத்துடன் கூடிய அந்தக் குருவீரன் {சோமதத்தன்}, இருபத்தைந்து கணைகளால் சாத்யகியைத் துளைத்து, மீண்டும் அவனைப் பத்தால் துளைத்தான்.(16) பிறகு சாத்யகி, மேலும் கடினமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து கணைகளால் சோமதத்தனை வேகமாகத் துளைத்தான்.(17) மேலும் ஒரு பல்லத்தை எடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே பாஹ்லீகன் மகனின் {சோமதத்தனின்} தங்கக் கொடிமரத்தை அறுத்தான்.(18) சோமதத்தன் தன் கொடிமரம் வெட்டப்பட்டதைக் கண்டாலும், அச்சமில்லாமல் இருபது கணைகளால் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைத்} துளைத்தான்.(19) சாத்வதனும் {சாத்யகியும்} சினத்தால் தூண்டப்பட்டு, அம்மோதலில் க்ஷுரப்ரம் ஒன்றால் சோமதத்தனின் வில்லை அறுத்தான்.(20) மேலும் அவன் {சாத்யகி}, விஷப்பற்களற்ற பாம்பொன்றைப் போல அப்போதிருந்த சோமதத்தனைத் தங்கச் சிறகுகள் கொண்ட நேரான நூறு கணைகளாலும் துளைத்தான்.(21) பெரும்பலங்கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சோமதத்தன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, (கணைமாரியால்) சாத்யகியை மறைக்கத் தொடங்கினான்.(22) சினத்தால் தூண்டப்பட்ட சாத்யகியும், சோமதத்தனைப் பல கணைகளால் துளைதான். பதிலுக்குச் சோமதத்தன், தன் கணை மாரியால் சாத்யகியைப் பீடித்தான்.(23)
அப்போது மோதலுக்கு வந்து சாத்யகியின் சார்பாகப் போரிட்ட பீமன், பத்து கணைகளால் பாஹ்லீகன் மகனை {சோமதத்தனைத்} துளைத்தான். எனினும், சோமதத்தன், கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் அச்சமில்லாமல் பீமசேனனைத் தாக்கினான்.(24) பிறகு சினத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, இடியைப் போலக் கடினமானதும், தங்கக் கைப்பிடி கொண்டதும், பயங்கரமானதுமான புதிய பரிகம் ஒன்றை சோமதத்தனின் மார்பைக் குறிபார்த்து ஏவினான்.(25) எனினும் அந்தக் குருவீரன் {சோமதத்தன்}, தன்னை எதிர்த்து வேகமாக வரும் அந்தப் பயங்கரப் பரிகத்தைச் சிரித்துக் கொண்டே இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(26) இரும்பாலான உறுதிமிக்க அந்தப் பரிகமானது, இப்படி இரண்டாக வெட்டப்பட்டதும், இடியால் பிளக்கப்பட்ட மலையொன்றின் பெரிய சிகரத்தைப் போலக் கீழே விழுந்தது.(27)
அப்போது சாத்யகி, ஓ! மன்னா, அம்மோதலில் ஒரு பல்லத்தால், சோமதத்தனின் வில்லை அறுத்து, மேலும் அவனது விரல்களுக்கு அரணாக இருந்த தோலுறைகளையும் ஐந்து கணைகளால் அறுத்தான்.(28) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் நான்கு கணைகளால் அந்தக் குரு போர்வீரனின் {சோமதத்தனின்} நான்கு சிறந்த குதிரைகளை யமனின் முன்னிலைக்கு அனுப்பினான். (29) மேலும் அந்தத் தேர்வீரர்களில் புலியானவன் {சாத்யகி} சிரித்துக் கொண்டே மற்றொரு நேரான கணையால், சோமதத்தனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினான்.(30) பிறகு அவன் {சாத்யகி}, நெருப்புபோன்ற பிரகாசம் கொண்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், எண்ணெயில் முக்கப்பட்டதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான ஒரு பயங்கரக் கணையைச் சோமதத்தன் மீது ஏவினான்.(31) சிநியின் பேரனால் {சாத்யகியால்} ஏவப்பட்ட அந்தச் சிறந்த கடுமையான கணை, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சோமதத்தனின் மார்பின் மீது ஒரு பருந்தைப் போல வேகமாகப் பாய்ந்தது.(32) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கச் சாத்வதனால் {சாத்யகியால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரன் சோமதத்தன், (தனது தேரில் இருந்து) கீழே விழுந்து இறந்தான்.(33) பெரும் தேர்வீரனான சோமதத்தன் அங்கே கொல்லப்பட்டதைக் கண்ட உமது போர்வீரர்கள், தேர்களின் பெருங்கூட்டத்துடன் யுயுதானனை எதிர்த்து விரைந்தனர்.(34)
அதே வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிரபத்ரகர்கள் அனைவருடனும், பெரும் படையுடனும் கூடிய பாண்டவர்களும், துரோணரின் படையை எதிர்த்து விரைந்தனர்.(35) அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரன், பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் கணைகளால் பின்னவரின் {துரோணரின்} துருப்புகளைத் தாக்கவும், முறியடிக்கவும் தொடங்கினான்.(36) தமது துருப்புகளை இப்படிக் கலங்கடிக்கும் யுதிஷ்டிரனைக் கண்ட துரோணர், கோபத்தால் கண்கள் சிவந்து, அவனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தார்.(37) பிறகு அந்த ஆசான் {துரோணர்} ஏழு கூரிய கணைகளால் பிருதையின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரனும் பதிலுக்கு ஐந்து கணைகளால் ஆசானை {துரோணரைத்} துளைத்தான்.(38)
பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} ஆழத் துளைக்கப்பட்டவரான அந்த வலிமைமிக்க வில்லாளி (துரோணர்), ஒருக்கணம் தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, யுதிஷ்டிரனின் கொடிமரம் மற்றும் வில் ஆகிய இரண்டையும் வெட்டினார்.(39) பெரு வேகம் தேவைப்பட்ட அந்த நேரத்தில், வில்லறுபட்ட அந்த மன்னர்களில் சிறந்தவன் {யுதிஷ்டிரன்}, போதுமான அளவு உறுதியானதும், கடுமையானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(40) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓராயிரம் கணைகளால், துரோணரின் குதிரைகள், சாரதி, கொடிமரம், தேர் ஆகியவற்றுடன் சேர்த்து அவரையும் {துரோணரையும்} துளைத்தான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தன.(41) அந்தக் கணைகளின் தாக்குதல்களால் பெரும் வலியை உணர்ந்தவரும், பிராமணர்களில் காளையுமான அந்தத் துரோணர், கீழே தமது தேர்த்தட்டில் அமர்ந்தார்.(42) பிறகு தன் உணர்வுகள் மீண்டு, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டு, பெரும்சினத்தில் நிறைந்த அந்த ஆசான் {துரோணர்}, வாயவ்ய ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தார்.(43) பிருதையின் வீர மகன் {யுதிஷ்டிரன்}, கையில் வில்லுடன் அம்மோதலில் அச்சமில்லாமல், தான் கொண்டிருந்த அதே போன்ற ஆயுதத்தால் அவ்வாயுதத்தைக் கலங்கடித்தான்.(44) மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணரின் {துரோணரின்} பெரிய வில்லை இரண்டு துண்டுகளாகவும் வெட்டினான். அப்போது க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார். (45) குரு குலத்தின் காளை (யுதிஷ்டிரன்), பல கூரிய கணைகளால் அந்த வில்லையும் அறுத்தான்.
அப்போது குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் பேசிய வாசுதேவன் {கிருஷ்ணன்}(46), “ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதர்களில் சிறந்தவரே, துரோணருடன் போரிடுவதை நிறுத்தும்.(47) துரோணர் உம்மைக் கைப்பற்றவே எப்போதும் முயன்று வருகிறார். நீர் அவருடன் போரிடுவது பொருந்தாது என்றே நான் நினைக்கிறேன்.(48) துரோணரின் அழிவுக்காக எவன் படைக்கப்பட்டானோ, அவனே அவரைக் கொல்வான் என்பதில் ஐயமில்லை. ஆசானை {துரோணரை} விட்டுவிட்டு, மன்னன் சுயோதனன் {துரியோதனன்} எங்கிருக்கிறானோ, அங்கே செல்வீராக.(49) மன்னர்கள் மன்னர்களுடனேயே போரிட வேண்டும், மன்னர்களல்லாத இது போன்றோருடன் அவர்கள் போரிட விரும்பக்கூடாது. எனவே, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, சிறு படையின் உதவியுடன் நானும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, மனிதர்களில் புலியான பீமனும் குருக்களுடன் எங்கே போரிட்டுக் கொண்டிருக்கிறோமோ, அங்கே யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவை சூழ வருவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(50,51)
வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஒருக்கணம் சிந்தித்து, அகல விரித்த வாய்களுடன் கூடிய யமனைப் போல உமது துருப்புகளைக் கொன்றபடி எதிரிகளைக் கொல்பவனான பீமன், எங்கே கடும்போரில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தானோ, அந்தப் போர்க்களப் பகுதிக்குச் சென்றான்.(52,53) கோடைகாலத்தின் முடிவில் முழங்கும் மேகங்களுக்கு ஒப்பாகத் தன் தேரின் சடசடப்பொலியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடி சென்றவனும், பாண்டுவின் (மூத்த) மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பீமனின் பக்கத்தில் நிலைகொண்டு, எதிரியைக் கொல்வதில் ஈடுபட்டான்.(54) துரோணரும், அந்த இரவில் தன் எதிரிகளான பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார்” {என்றான் சஞ்சயன்}.(55)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 161-ல் வரும் மொத்த சுலோகங்கள்-55
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 161-ல் வரும் மொத்த சுலோகங்கள்-55
ஆங்கிலத்தில் | In English |