Armys lighted up by lamps! | Drona-Parva-Section-162 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 10)
பதிவின் சுருக்கம் : படைகளின் உற்சாகமற்ற நிலை; தன் துருப்புகளிடம் விளக்குகளையும், பந்தங்களையும் எடுத்துக்கொள்ளச் சொன்ன துரியோதனன்; பாண்டவர்களின் படையும் விளக்குகளால் ஒளியூட்டப்படுவது; பிரகாசமான போர்க்களத்தின் வர்ணனை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பூமியானது இருளாலும் புழுதியாலும் மறைக்கப்பட்டுக் கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},(1) களத்தில் நின்றிருந்த போராளிகளால் ஒருவரையொருவர் காண முடியவில்லை. அந்த க்ஷத்திரியர்களில் முதன்மையானோர், அனுமானத்தினாலும், (அவர்கள் சொன்ன), தனிப்பட்ட மற்ற பிற பெயர்களாலும் வழிநடத்தப்பட்டு ஒருவரோடொருவர் போரிட்டனர். தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரின் அந்தப் பயங்கரப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணர், கர்ணன், கிருபர், பீமன், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சாத்வதன் {சாத்யகி}(2,3) ஆகியோர் {தங்களுக்குள்} ஒருவரையொருவரையும், இருதரப்பின் துருப்புகளையும் பீடித்தனர்.
அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோரால் சுற்றிலும் கொல்லப்பட்ட இரு படைகளின் போராளிகளும்,(4) அந்த இரவு நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர். உண்மையில், முற்றிலும் உற்சாகமற்ற இதயங்களுடன் கூடிய அந்தப் போர்வீரர்கள், அணி பிளந்து அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(5) அப்படி அவர்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடிச் செல்லும்போதே பெரும் படுகொலைகளுக்கும் ஆட்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயிரக்கணக்கான முதன்மையான தேர்வீரர்களும் அந்தப் போரில் ஒருவரையொருவர் கொன்றனர்.(6) இருளில் எதையும் காணமுடியாத போராளிகள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். இவையாவும் உமது மகனின் {துரியோதனனின்} தீய ஆலோசனைகளின் விளைவாகவே நடக்கின்றன. உண்மையில், உலகமே இருளில் மறைக்கப்பட்டிருந்த அந்நேரத்தில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, முதன்மையான தேர்வீரர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், பீதியால் வெல்லப்பட்டு அந்தப் போரில் தங்கள் உணர்வுகளை இழந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(7)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அவ்விருளால் பீடிக்கப்பட்டும், பாண்டவர்களால் மூர்க்கமாகக் கலங்கடிக்கப்பட்டும், நீங்கள் {உங்கள்} சக்திகளை இழந்திருந்தபோது, உங்களது மனநிலைகள் எவ்வாறு இருந்தன?(8) ஓ! சஞ்சயா, அனைத்தும் இருளில் மூழ்கியிருந்தபோது, பாண்டவத் துருப்புகளும் என்னுடையவையும், மீண்டும் எவ்வாறு கண்களுக்குப் புலப்பட்டன?” என்று கேட்டான்.(9)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது (கௌரவர்களில்) கொல்லப்பட்டோரில் எஞ்சியோர், அவர்களது தலைவர்களின் உத்தரவுகளின் பேரில் மீண்டும் (கச்சிதமாக [அ] நெருக்கமாக) அணி வகுக்கப்பட்டனர்.(10) துரோணர், தம்மை முன்னணியிலும், சல்லியனைப் பின்புறத்திலும் நிலைநிறுத்தினார். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் சகுனி ஆகியோர் முறையே {அந்தப் படையின்} வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் தங்களை நிறுத்திக் கொண்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், அவ்விரவில் துருப்புகள் அனைத்தையும் பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டான்.(11)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காலாட்படை வீரர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்திய துரியோதனன், அவர்களிடம், “உங்கள் பெரும் ஆயுதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, நீங்கள் அனைவரும் உங்கள் கைகளில் சுடர்மிக்க விளக்குகளை எடுத்துக் கொள்வீராக” என்றான்.(12) இப்படி அந்த மன்னர்களில் சிறந்தவனால் {துரியோதனனால்} உத்தரவிடப்பட்டதும், அந்தக் காலாட்படை வீரர்கள் எரியும் விளக்குகளை மகிழ்ச்சியாக ஏந்தினர். வானத்தில் நின்று கொண்டிருந்த தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், தெய்வீக முனிவர்கள், வித்யாதரர்கள் மற்றும் அப்சரசுகளின் பல்வேறு இனக்குழுக்கள்,(13) நாகர்கள், யக்ஷர்கள், உரகர்கள், கின்னரர்கள் ஆகியோரும் மகிழ்ச்சியால் நிறைந்து சுடர்மிக்க விளக்குகளை எடுத்துக் கொண்டனர்.
நறுமணமிக்க எண்ணெயால் நிரப்பப்பட்ட பல விளக்குகள், திசைகளின் புள்ளிகள் மற்றும் துணைப்புள்ளிகளின் பாதுகாவலர்களிடம் {லோகபாலர்களிடம்} இருந்து விழுவது தெரிந்தது.(14) துரியோதனனுக்காகக் குறிப்பாக நாரதர் மற்றும் பர்வதரிடம் இருந்து வரும் அத்தகு விளக்குகள் பல அந்த இருளை விலக்கி ஒளியேற்றுவதாகத் தெரிந்தது [1]. அப்போது நெருக்கமாக அணிவகுக்கப்பட்ட அந்த (கௌரவப்) படையானது, அவ்விரவில், அந்த விளக்குகளின் ஒளியாலும்,(15) (போராளிகளின் மேனியில் இருந்த) விலைமதிப்புமிக்க ஆபரணங்களாலும், ஏவப்படும், அல்லது வீசப்படும் சுடர்மிக்க தெய்வீக ஆயுதங்களாலும் மிகப் பிரகாசமாகத் தெரிந்தது. ஒவ்வொரு தேரின் மீதும் ஐந்து விளக்குகள் வைக்கப்பட்டன, மேலும் மதங்கொண்ட ஒவ்வொரு யானையின் மீதும் மூன்று வைக்கப்பட்டன.(16) ஒவ்வொரு குதிரையின் மீதும் ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டது. இப்படியே அந்தப் படையானது, குரு போர்வீரர்களால் ஒளியூட்டப்பட்டது. குறுகிய காலத்திற்குள் அதனதன் இடங்களில் வைக்கப்பட்ட அந்த விளக்குகள் உமது படைக்கு விரைவாக ஒளியூட்டின.(17)
[1] கங்குலியில் “துரியோதனனுக்காக” என்று நேரடி பொருளில் வருவது, வேறொரு பதிப்பில், “கௌரவப் பாண்டவர்கள் நிமித்தமாக நாரத ரிஷியினாலும், பர்வத ரிஷியினாலும் விசேஷமாக அழைக்கப்பட்டிருக்கிற திக்குத் தேவதைகளிடமிருந்து வருகின்ற நல்ல வாசனையுள்ள தைலத்துடன் கூடின தீபங்களும் காணப்பட்டன” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “குருக்களில் முதன்மையானோருக்காக” என்றிருக்கிறது.
தங்கள் கைகளில் எண்ணெய் விளக்குகளைக் கொண்ட காலாட்படை வீரர்களால் இப்படி ஒளியூட்டப்பட்ட துருப்புகள் அனைத்தும், இரவு வானில் மின்னல் கீற்றுகளால் ஒளியூட்டப்பட்ட மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(18) அந்தக் குரு படையானது இப்படி ஒளியூட்டப்பட்ட போது, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட துரோணர், சுற்றிலும் உள்ள அனைத்தையும் எரித்தபடி தமது தங்கக் கவசத்துடன், சுடர்மிக்கக் கதிர்களைக் கொண்ட நடுப்பகல் சூரியனைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.(19) அவ்விளக்குகளின் ஒளியானது, தங்க ஆபரணங்கள், போராளிகளின் பிரகாசமான மார்புக் கவசங்கள், விற்கள், நன்கு கடினமாக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றால் பிரதிபலிக்கப்பட்டது.(20) இழைகளால் கட்டப்பட்டிருந்த கதாயுதங்கள், பிரகாசமான பரிகங்கள், தேர்கள், கணைகள், ஈட்டிகள் ஆகியன செல்லும்போது தங்கள் பிரதிபலிப்பால் விளக்குகளின் கூட்டங்களை {பல மடங்காக} மீண்டும் மீண்டும் உண்டாக்கின.(21)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குடைகள், சாமரங்கள், கத்திகள், சுடர்மிக்கப் பந்தங்கள், தங்க ஆரங்கள் ஆகியன சுழற்றவோ, அசைக்கவோ படும்போது, அவ்வொளியைப் பிரதிபலித்து மிக அழகாகத் தெரிந்தன.(22) அவ்விளக்குகளின் ஒளியால் ஒளியூட்டப்பட்டும், ஆயுதங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பால் ஒளிவீசிக் கொண்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையானது காந்தியுடன் சுடர்விட்டது.(23) நன்கு கடினமாக்கப்பட்டவையும், குருதியால் சிவப்பு நிறமடைந்தவையுமான அழகான ஆயுதங்கள், வீரர்களால் வீசப்படும்போது, கோடையின் முடிவில் வானத்தில் தோன்றும் மின்னலின் கீற்றுகளைப் போலச் சுடர்மிக்கப் பிரகாசத்தை உண்டாக்கின.(24) எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவதற்காக அவர்களை மூர்க்கமாகத் தொடர்ந்து சென்றவர்களும், அவசரமாக விரையும்போது நடுங்கியவர்களுமான போர்வீரர்களின் முகங்கள், காற்றால் தூண்டப்பட்ட மேகத் திரள்களைப் போல அழகாகத் தெரிந்தன.(25) மரங்கள் நிறைந்த காடொன்று தீப்பற்றி எரிகையில், காந்திமிக்கச் சூரியன் உக்கிரமடைவதைப் போல அந்தப் பயங்கர இரவானது கடுமையானதும், ஒளியூட்டப்பட்டதுமான அந்தப் படையால் பிரகாசமடைந்தது.(26)
நமது படை இவ்வாறு ஒளியூட்டப்பட்டதைக் கண்ட பார்த்தர்களும், தங்கள் படைமுழுவதும் உள்ள காலாட்படை வீரர்களை எழுச்சியுறச் செய்து, நம்மைப் போலவே வேகமாகச் செயல்பட்டனர்.(27) ஒவ்வொரு யானையிலும் அவர்கள் ஏழு விளக்குகளை வைத்தனர், ஒவ்வொரு தேரிலும் பத்தை {பத்து விளக்குகளை} வைத்தனர்; ஒவ்வொரு குதிரையின் முதுகிலும் அவர்கள் இரு விளக்குகளை வைத்தனர்; (தங்கள் தேர்களின்) பக்கங்களிலும், பின்புறத்திலும், மேலும் தங்கள் கொடிமரங்களிலும் அவர்கள் பல விளக்குகளை வைத்தனர்.(28) அவர்களது படையின் பக்கங்களிலும், பின்புறத்திலும், முன்புறத்திலும், சுற்றிலும், உள்ளேயும் எனப் பல விளக்குகள் ஒளியூட்டப்பட்டன. குருக்களும் இவ்வாறே செய்ததால், அந்தப் படைகள் இரண்டும் இப்படியே ஒளியூட்டப்பட்டன.(29) அந்தப் படை முழுவதும், யானைகள், தேர்கள் மற்றும் குதிரைப்படை ஆகியவற்றுடன் காலாட்படை கலந்தது. பாண்டு மகனின் படையானது, (காலாட்படை வீரர்களைத் தவிர) தங்கள் கைகளில் சுடர்மிக்கப் பந்தங்களுடன் நின்று கொண்டிருந்த பிறராலும் ஒளியூட்டப்பட்டது.(30) அந்தப் படையானது, நாளை உண்டாக்குபவனின் {சூரியனின்} கண்கவரும் கதிர்களால் ஒளியூட்டப்படுவதைப் போல அந்த விளக்குகளால் இரு மடங்கு ஒளியூட்டப்படு சுடர்மிக்க நெருப்பைப் போலக் கடுமையாகப் பிரகாசித்தது.(31)
அந்த இரு படைகளின் காந்தியும் பூமி, ஆகாயம் மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்திலும் பரவி பெருகுவதாகத் தெரிந்தது. அந்த ஒளியால் உமது படையும் அவர்களுடையதை {அவர்களது படையைப்} போலத் தனித்தன்மையுடன் காணப்பட்டது.(32) வானத்தை எட்டிய அந்த ஒளியால் விழிப்படைந்த தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்தனர்.(33) அப்போது, தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அப்சரஸ்கள், தேவலோகத்திற்குள் நுழையப்போகும் கொல்லப்பட்ட வீரர்களின் ஆவிகள் ஆகியோரால் நிறைந்த அந்தப் போர்க்களமானது இரண்டாவது சொர்க்கத்தைப் போலத் தெரிந்தது.(34) விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட தேர்கள், குதிரைகள், யானைகள், கோபக்காரப் போராளிகள், கொல்லப்பட்ட, அல்லது மூர்க்கமாகத் திரியும் குதிரைகள் நிறைந்ததும், அணிவகுக்கப்பட்ட போர்வீரர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றைக் கொண்டதுமான அந்தப் பரந்த படையானது, பழங்காலத்தில் அணிவகுக்கப்பட்ட தேவர்கள் மற்றும் அசுரர்களின் படையைப் போலவே இருந்தது.(35)
தேவர்களைப் போன்ற மனிதர்களுக்கு இடையில் நடந்ததும், சூறாவளியைப் [2] போன்றதுமான அந்த இரவு போரானது, விரையும் ஈட்டிகளைக் கடுங்காற்றாகவும், பெருந்தேர்களை மேகங்களாகவும், குதிரைகள் மற்றும் யானைகளின் கணைப்பொலிகள் மற்றும் பிளிறல்களை முழக்கங்களாகவும், கணைகளை மழையாகவும், போர்வீரர்கள் மற்றும் விலங்குகளின் குருதியையே வெள்ளமாகக் கொண்டிருந்தது.(36) அந்தப் போருக்கு மத்தியில், பிராமணர்களில் முதன்மையான அஸ்வத்தாமன், மழைக்காலத்தின் முடிவில் தன் கடுங்கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பாகப் பாண்டவர்களை எரித்துக் கொண்டிருந்தான்” {என்றான் சஞ்சயன்} [3].(37)
------------------------------------------------------------------------------------[2] வேறொரு பதிப்பில், “இரத்தமாகிற நீர்த்தாரையையுடையதுமான அத்தகைய ரதத் துர்த்தினமானது அந்த இரவில் உண்டாயிற்று” என்று இருக்கிறது. “துர்த்தினம்” என்பதற்கு “மேகங்களால் சூரியன் மறைக்கப்பட்ட தினம்” என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது.[3] “இந்தப் பகுதியில் வரும் ஒவ்வொரு சுலோகத்திலும், வங்கப்பதிப்பு மற்றும் பம்பாய்ப் பதிப்புகளின் உரைகளுக்கிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பம்பாய்ப் பதிப்பின் உரைகள் ஓரளவுக்குச் சீராகவும், சிறப்பாகவும் இருக்கின்றன. மேலும், தேவைக்குமீறிய சொற்களின் பயன்பாட்டால் பல இடங்களும், பெரும் பிழைகளால் வேறு சில இடங்களும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே பொருளைத் தரும் பல்வேறு சொற்கள் நிறைந்த மூல மொழிக்கும், இனிமையான சந்த ஓட்டத்திற்கும் மத்தியிலும் கூடச் சற்றும் கவனத்தை ஈர்க்காதவையும், சோர்வை ஏற்படுத்துபவையுமான கூறியது கூறல்களே மொழிபெயர்ப்பில் வெளிப்படையான குறைகளாகத் தெரியக்கூடும். எனினும், இந்தப் பகுதியை உரைப்பதில் நம்பிக்கை {உள்ள உண்மையைச் சொல்ல வேண்டும்} எனும் பலி பீடத்தில் உரை நேர்த்தியைத் தியாகம் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
துரோண பர்வம் பகுதி – 162-ல் வரும் மொத்த சுலோகங்கள்-37
ஆங்கிலத்தில் | In English |