The command of Duryodhana! | Drona-Parva-Section-163 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 11)
பதிவின் சுருக்கம் : கௌரவப் படையை அழிக்கத் தொடங்கிய அர்ஜுனன்; திருதராஷ்டிரன் விசாரணை; துரோணரைப் பாதுகாக்கத் தன் தம்பிகளைப் பணித்துத் தன் வீரர்களுக்கு ஆணையிட்ட துரியோதனன்; பயங்கரப் போர் தொடங்கியது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இருளிலும், புழுதியிலும் மறைக்கப்பட்டிருந்த அந்தப் போர்க்களம் இப்படி ஒளியூட்டப்பட்ட போது, ஒருவரையொருவர் உயிரை எடுக்க விரும்பிய வீரமான போர்வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் மோதிக் கொண்டவர்களும், வேல்கள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டவர்களுமான அந்தப் போராளிகள், சினத்தின் ஆளுகையால் ஒருவரையொருவர் {முறைத்துப்} பார்த்துக் கொண்டனர்.(2) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எங்கும் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்த ஆயிரக்கணக்கான விளக்குகளுடனும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கக் கொடிமரங்களில் நிறுவப்பட்டவையும், நறுமணமிக்க எண்ணெய் ஊற்றப்பட்டவையுமான தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் கண்கவரும் விளக்குகளுடனும் கூடிய அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்களால் மினுமினுக்கும் ஆகாயத்தைப்போல இருந்தது.(3,4)
பூமியானது, நூற்றுக்கணக்கான சுடர்மிக்கப் பந்தங்களால் மிக அழகாகத் தெரிந்தது. உண்மையில், அண்ட அழிவின் போது ஏற்படும் காட்டுத்தீயுடன் கூடியதாகவே அந்தப் பூமி தெரிந்தது.(5) சுற்றிலும் இருந்த அந்த விளக்குகளால் திசைப்புள்ளிகள் அனைத்தும் சுடர்விட்டெரிந்து, மழைக்காலத்தின் மாலை வேளையில் விட்டிற்பூச்சிகளால் மறைக்கப்பட்ட மரங்களைப் போலத் தெரிந்தன.(6) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப்போராளிகள் வீரப்பகைவர்களுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கடும் இரவில், உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவுக்கிணங்க யானைகள் யானைகளோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும் மகிழ்ச்சியால் நிறைந்து போரில் ஈடுபட்டனர்.(7,8) நால்வகைப் படைப்பிரிவுகளையும் கொண்டவையான அந்த இரண்டு படைகளுக்கும் இடையில் நடந்த மோதல் பயங்கரமடைந்தது. அப்போது அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரையும் பலவீனமடையச் செய்தபடியே பெரும் வேகத்துடன் கௌரவப் படைப்பிரிவுகளை அழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(9)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட இயலாதவனான அந்த அர்ஜுனன், கோபத்தால் தூண்டப்பட்டு, (குருக்களின் சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள இயலாமல் என் மகனின் {துரியோதனனின்} படைக்குள் ஊடுருவியபோது, உங்கள் மனநிலைகள் எப்படி இருந்தன?(10) உண்மையில், அந்த எதிரிகளை அழிப்பவன் {அர்ஜுனன்} தங்களுக்கு மத்தியில் நுழைந்ததும், {என்} படைவீரர்கள் என்ன நினைத்தனர்? அப்போது பின்பற்றத் தகுந்த நடவடிக்கைகள் எனத் துரியோதனன் எவற்றை நினைத்தான்?(11) அந்த வீரனை {அர்ஜுனனை} எதிர்த்துப் போரிடச் சென்ற அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள் யாவர்? உண்மையில், வெண்குதிரைகளைக் கொண்ட அந்த அர்ஜுனன் (நமது படைக்குள்) நுழைந்த போது, துரோணரைப் பாதுகாத்தவர்கள் யாவர்?(12) துரோணரின் வலது சக்கரத்தையும், இடது சக்கரத்தையும் பாதுகாத்தவர்கள் யாவர்? போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரரின் {துரோணரின்} பின்புறத்தைப் பாதுகாத்த வீரர்கள் யாவர்?(13)
உண்மையில் அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, (தன் பாதையில்) எதிரிகளைக் கொன்றபடி செல்கையில், அவருக்கு முன்னணியில் சென்றவர்கள் யாவர்? வலிமைமிக்கவரும், வெல்லப்படமுடியாத வில்லாளியும், பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவியவரும்,(14) மனிதர்களில் புலியும், பெரும் வீரம் கொண்டவரும், நர்த்தனம் செய்பவரைப் போலத் தன் தேரின் பாதையில் செல்பவரும், சீற்றமிக்கக் காட்டு நெருப்பைப் போலத் தன் கணைகளின் மூலம் பாஞ்சாலத் தேர்க்கூட்டங்களைப் பெருமளவில் எரித்தவருமான துரோணர்,(15) ஐயோ, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார்? நிதானமானவர்களாகவும், வெல்லப்படாதவர்களாகவும், உற்சாகம் நிறைந்தவர்களாகவும், போரில் வலிமையில் பெருகுபவர்களாகவும் என் எதிரிகளை நீ எப்போதும் சொல்லி வருகிறாய். எனினும், என்னுடையவர்களைக் குறித்து நீ அத்தகு வார்த்தைகளில் சொல்வதில்லை. மறுபுறம், கொல்லப்படுபவர்களாகவும், ஒளி இழந்தவர்களாகவும், முறியடிக்கப்பட்டவர்களாகவும் விவரித்து, எப்போதும் தாங்கள் போரிடும் போர்களில் என் தேர்வீரர்கள் தங்கள் தேர்களை இழப்பதாகச் சொல்கிறாய்” என்றான் {திருதராஷ்டிரன்}.(16,17)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போரில் முனைப்போடிருந்த துரோணரின் விருப்பங்களைப் புரிந்து கொண்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனக்குக் கீழ்ப்படியும் தம்பிகளான(18) விகர்ணன், சித்திரசேனன், [1] சுபார்சன், துத்தர்ஷமன், தீர்க்கபாகு ஆகியோரிடமும், அவர்களைப் பின் தொடர்ந்து வந்தோரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(19) “பெரும் வீரமிக்கவர்களே, வீரர்களே, உறுதியான தீர்மானத்தோடு போராடும் நீங்கள் அனைவரும் துரோணரைப் பின்புறத்தில் இருந்து அவரைப் பாதுகாக்க வேண்டும். ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} அவரது வலது சக்கரத்தையும், சலன் அவரது இடதையும் பாதுகாப்பார்கள்” என்றான்.(20) இதைச் சொன்ன உமது மகன் {துரியோதனன்}, முன்னோக்கி நகர்ந்து, எஞ்சியிருந்தவர்களும், துணிவும், வலிமையும் மிக்கவர்களுமான திரிகர்த்த தேர்வீரர்களை முன்னணியில் நிறுத்தியபடி, அவர்களிடம்,(21) “ஆசான் {துரோணர்} கருணைநிறைந்தவராக இருக்கிறார். பாண்டவர்களோ உறுதிமிக்கப் பெரும் தீர்மானத்தோடு போரிடுகின்றனர். போரில் எதிரிகளைக் கொல்லும்போது, ஒன்றாகச் சேர்ந்து அவரை {துரோணரை} நன்கு பாதுகாப்பீராக.(22) துரோணர் போரில் வலிமைமிக்கவராகவும், பெரும் கரநளினமும், பெரும் வீரமும் கொண்டவராக இருக்கிறார். போரில் தேவர்களையே அவரால் வெல்ல முடியும் எனும்போது, பாண்டவர்களையும், சோமகர்களையும் குறித்து என்ன சொல்வது?(23)
[1] துரோண பர்வம் 136ல் விகர்ணன், சித்திரசேனன் ஆகியோர் பீமனால் கொல்லப்பட்டதாக வருகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இவ்விடத்தில இவர்களது பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், வேறொரு பதிப்பில் இந்த இடத்தில் வெறும் தம்பியர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர அவர்களது பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
எனினும், ஒன்றாகச் சேரும் நீங்கள் அனைவரும், இந்தப் பயங்கரப் போரில் பெரும் தீர்மானத்துடன் போராடி, வெல்லப்பட முடியாத துரோணரை அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனிடம் இருந்து பாதுகாப்பீராக.(24) போரில் துரோணரை வெல்ல பாண்டவப் போர்வீரர்கள் அனைவரிலும் திருஷ்டத்யும்னனைத் தவிர, வேறு எவனையும் நான் காணவில்லை.(25) எனவே, நாம் முழு ஆன்மாவோடு பரத்வாஜரின் மகனை {துரோணரைப்} பாதுகாக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். (நம்மால்) பாதுகாக்கப்படும் அவர், ஒருவர் பின் ஒருவராகச் சோமகர்களையும், சிருஞ்சயர்களையும் நிச்சயம் கொல்வார்.(26) (பாண்டவப்) படைக்குத் தலைமையில் நிற்கும் சிருஞ்சயர்கள் அனைவரும் கொல்லப்பட்டதும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்வார் என்பதில் ஐயமில்லை.(27) அதே போலவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனும், போரில் அர்ஜுனனை வெல்வான். பீமசேனனையும், கவசம் தரித்த பிறரையும் பொறுத்தவரை, அவர்கள் அனைவரையும் போரில் நானே அடக்குவேன்.(28) சக்தியை இழப்பவர்களான பாண்டவர்களில் எஞ்சியோர், பிற போர்வீரர்களால் எளிதாக வீழ்த்தப்படுவார்கள். அதன்பிறகு என் வெற்றி எப்போதும் நீடித்திருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.(29) இந்தக் காரணங்களுக்காக, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரைப் போரில் பாதுகாப்பீராக” என்றான் {துரியோதனன்}.
ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துரியோதனன்,(30) பயங்கர இருளைக் கொண்ட அந்த இரவில் தன் துருப்புகளைப் போரிடத் தூண்டினான். ஓ! பாரதர்களின் தலைவரே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போது, வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் இயக்கப்பட்ட அவ்விரு படைகளுக்கும் இடையில் ஒரு போர் தொடங்கியது.(31) பல்வேறு விதங்களிலான ஆயுதங்களால், அர்ஜுனன் கௌரவர்களையும், கௌரவர்கள் அர்ஜுனனையும் பீடிக்கத் தொடங்கினர். அந்தப் போரில் நேரான கணைகளின் மழையால், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பாஞ்சாலர்களின் ஆட்சியாளனையும் {துருபதனையும்}, துரோணர் சிருஞ்சயர்களையும் மறைக்கத் தொடங்கினர். (ஒரு புறத்தில்) பாண்டு மற்றும் பாஞ்சாலத் துருப்புகளும், (மறுபுறத்தில்) கௌரவத் துருப்புகளும் போரில் ஒருவரையொருவர் கொன்ற போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் களத்தில் சீற்றமிக்க ஆரவாரம் எழுந்தது. அந்த இரவில் நடைபெற்ற போரானது பயங்கரமானதாகவும், எங்களாலோ, எங்களுக்கு முன் சென்றவர்களாலோ இதற்கு முன் காணப்படாத வகையில் கடுமையானதாகவும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(32-35)
------------------------------------------------------------------------------------துரோண பர்வம் பகுதி – 163-ல் வரும் மொத்த சுலோகங்கள்-35
![]() |
ஆங்கிலத்தில் | In English | ![]() |