Karna vanquished Sahadeva! | Drona-Parva-Section-166 | Mahabharata In Tamil
(கடோத்கசவத பர்வம் – 14)
பதிவின் சுருக்கம் : சகாதேவனைத் தடுத்த கர்ணன்; கர்ணனுக்கும் சகாதேவனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகாதேவனைத் தன் வில்லால் தொட்ட கர்ணன்; சகாதேவனைப் பரிகசித்த கர்ணன்; தன் உயிர்மீது கொண்ட ஆசையைக் கைவிட்ட சகாதேவன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “விகர்த்தனன் மகனான கர்ணன் {வைகர்த்தனன்} [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரை அடையும் விருப்பத்தில் முன்னேறிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சகாதேவனைத் தடுத்தான்.(1) ராதையின் மகனை {கர்ணனை} ஒன்பது கணைகளால் துளைத்த சகாதேவன், மீண்டும் அந்தப் போர்வீரனை {கர்ணனை} ஒன்பது நேரான கணைகளால் துளைத்தான்.(2) பிறகு கர்ணன், ஒரு நூறு கணைகளால் சகாதேவனைப் பதிலுக்குத் துளைத்துத் தன் கர நளினத்தை வெளிக்காட்டியபடியே, நாண்பொருத்தப்பட்ட பின்னவனின் {சகாதேவனின்} வில்லை வெட்டினான்.(3) பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட மாத்ரியின் வீர மகன் {சகாதேவன்}, கர்ணனை இருபது கணைகளால் துளைத்தான். அவனது {சகாதேவனின்} இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4)
[1] “வைகர்த்தனன் என்பதற்கு, தன் தோலையோ, இயற்கையான கவசத்தையோ உரித்துக் கொண்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். சூரியதேவனின் மகனே கர்ணன் என்பது அவனது மரணத்திற்குப் பிறகே அறியப்பட்டது என்றாலும், நாடகத் தன்மையைப் பாதுகாப்பதற்காக இந்து உரையாசிரியர்கள் இத்தகு பத்திகளில் எல்லாம் இப்படியே {சூரியனின் மகன் என்ற பொருளிலேயே} விளக்குகின்றனர்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது கர்ணன், நேரான கணைகள் பலவற்றால், சகாதேவனின் குதிரைகளைக் கொன்று, ஒரு பல்லத்தால் பின்னவனின் {சகாதேவனின்} சாரதியையும் விரைவாக யமனுலகுக்கு அனுப்பினான்.(5) தேரற்றவனான சகாதேவன் ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். சிரித்துக் கொண்டேயிருந்த கர்ணனால் அந்த ஆயுதங்களும் வெட்டப்பட்டன.(6) அப்போது வலிமைமிக்கச் சகாதேவன், அம்மோதலில், கனமானதும், பயங்கரமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கதாயுதம் ஒன்றை விகர்த்தனன் மகனின் {கர்ணனின்} தேரை நோக்கி வீசினான்.(7) பிறகு கர்ணன், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்து கொண்டிருந்ததும், சகாதேவனால் வீசப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தைத் தன் கணைகளால் விரைவாக வெட்டி, அதைப் பூமியில் விழச் செய்தான்.(8) தன் கதாயுதம் வெட்டப்படதைக் கண்ட சகாதேவன், கர்ணனின் மீது ஈட்டி ஒன்றை வீசினான். அந்த ஈட்டியும் கர்ணனால் வெட்டப்பட்டது.(9)
அப்போது தன் சிறந்த தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்த அந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துத் தன் எதிரே இருந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(10) எனினும், அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, உயர்த்தப்பட்ட காலச் சக்கரம் போலத் தன்னை நோக்கி வந்த அந்தச் சக்கரத்தைப் பல்லாயிரம் கணைகளால் வெட்டினான். அந்தச் சக்கரம் வெட்டப்பட்ட போது, கர்ணனைக் குறி பார்த்த சகாதேவன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் தேரின் அச்சு {ஏர்க்கால்}, தன் குதிரைகளின் கடிவாளங்கள், தேர்களின் நுகத்தடிகள் ஆகியவற்றையும், யானைகள், குதிரைகள் மற்றும் இறந்து கிடந்த மனித உடல்களின் அங்கங்கள் ஆகியவற்றையும் அவன் {கர்ணன்} மீது வீசினான்.(11,12) கர்ணன் அவையாவையும் தன் கணைகளால் வெட்டினான். ஆயுதங்கள் அனைத்தையும் தான் இழந்துவிட்டதைக் கண்ட மாத்ரியின் மகனான சகாதேவன், கணைகள் பலவற்றால் கர்ணனால் தாக்கப்பட்டுப் போரை விட்டகன்றான்.(13,14)
சிறிது நேரம் அவனை {சகாதேவனைப்} பின்தொடர்ந்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே},(15) சகாதேவனிடம் சிரித்துக் கொண்டே இந்தக் கொடூர வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! வீரா {சகாதேவா}, போர்க்களத்தில் உன்னைவிட மேம்பட்டவர்களுடன் போரிடாதே.(16) ஓ! மாத்ரியின் மகனே {சகாதேவா}, {உனக்கு} இணையானவர்களுடன் போரிடுவாயாக. என் வார்த்தைகளில் ஐயங்கொள்ளாதே” என்றான். பிறகு தன் வில்லின் நுனியால் அவனை {சகாதேவனைத்} தொட்ட அவன் {கர்ணன்}, மீண்டும் {சகாதேவனிடம்}(17) “அதோ அர்ஜுனன், போரில் உறுதியான தீர்மானத்தோடு குருக்களுடன் போரிடுகிறான். ஓ! மாத்ரியின் மகனே {சகாதேவா}, அங்கே செல்வாயாக, அல்லது நீ விரும்பினால் வீட்டுக்குத் திரும்புவாயாக” என்றான்.(18) அந்த வார்த்தைகளைச் சொன்னவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணன், சிரித்துக் கொண்டே, பாஞ்சாலர்களின் மன்னனுடைய துருப்புகளை எதிர்த்துச் சென்றான்.(19)
வலிமைமிக்கத் தேர்வீரனும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனுமான அந்த எதிரிகளைக் கொல்பவன் {கர்ணன்}, மாத்ரியின் மகனை {சகாதேவனைக்} கொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தும், குந்தியின் வார்த்தைகளை நினைவில் கொண்டு அவனைக் {சகாதேவனைக்} கொல்லாமல் விட்டான்.(20) பிறகு இதயம் நொந்த சகாதேவன், கணைகளால் பீடிக்கப்பட்டும், கர்ணனின் வார்த்தைகளெனும் ஈட்டிகளால் துளைக்கப்பட்டும், தன் உயிரின் மீதான ஆசையைக் கைவிட்டான்.(21) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சகாதேவன்}, பாஞ்சாலர்களின் சிறப்புமிக்க இளவரசனனான ஜனமேஜயனின் தேரில் வேகமாக ஏறிக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.(22)
------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 166-ல் வரும் மொத்த சுலோகங்கள்-22
ஆங்கிலத்தில் | In English |